"இதுபோன்று ஒருபோதும் அனுபவித்ததில்லை" - கொலம்பியா நிலநடுக்கத்தில் குறைந்தது 132 பேர் உயிரிழப்பு

    • எழுதியவர், ஜோஸ் கார்டோஸ் குவேட்டோ
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ செய்தியாள்ர், போகட்டா
    • எழுதியவர், வனேசா புஷ்ஷ்லூட்டர்
    • பதவி, லத்தீன் அமெரிக்கா ஆன்லைன் ஆசிரியர்
    • எழுதியவர், மைக்கேல் ஷீல்ஸ் மெக்நாமி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கொலம்பியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றில் குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோகோ மாகாணத்தில் 103 கிமீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி 07:34 மணிக்கு (12:34 ஜிஎம்டி) 7.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கொலம்பியாவின் நூற்றுக்கணக்கான மைல்கள் பரப்பளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

கொலம்பியாவின் காபி உற்பத்தி பிராந்தியமான பெரெய்ரா நகரத்தில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் வாலே டெல் காவ்கா பிராந்தியமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சோகோ மாகாணத்தில் உள்ள சான் ஹோசே டெல் பல்மார் கிராமத்துக்கு அருகில் இருந்தது. எனினும், அங்கிருந்து செல்லும் மற்றும் வரும் சாலைகள் சேதமடைந்த போதிலும் உயிரிழப்புகளோ காயமடைந்தவர்களோ இல்லாதது ஆச்சர்யமாக இருப்பதாக அப்பகுதி மேயர் லியோன் ஃபாபியோ மாரின் மொன்காடா தெரிவித்தார்.

நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 55 கிமீ (34 மைல்) தொலைவில் உள்ள பெரெய்ரா நகரம் கடுமையாக சேதமடைந்த பகுதிகளில் ஒன்றாகும்.

நகரத்தின் பிரதான சதுக்கமான பிளாசா பொலிவரில் குறைந்தது ஒரு கட்டடமாவது இடிந்து விழுவதையும், பலர் கூடியிருந்த திறந்தவெளி முழுவதும் இடிபாடுகளும் தூசிகளும் சிதறிக் கிடப்பதையும் பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன.

உள்ளூர் அதிகாரிகளின் தகவலின்படி, பெரெய்ரா பெருநகரப் பகுதியில் மட்டும் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றில் 15 கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

நகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 05:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெரெய்ராவிலிருந்து சுமார் 160 கிமீ தெற்கிலும், நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 200 கிமீ தொலைவிலும் உள்ள காலி நகரில் 32 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த 29 வயதான டேன் கட்லர், தனது துணையுடன் நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த இரண்டு மாதங்களாக கொலம்பியாவில் தங்கியுள்ளார். தற்போது அவர் காலி நகரில் உள்ளார்.

நிலநடுக்கத்தால் தூக்கத்திலிருந்து எழுந்த அவர், "இதைப் போன்ற ஒன்றை நான் இதற்கு முன் ஒருபோதும் அனுபவித்ததில்லை" என்று பிபிசியிடம் கூறினார்.

"நாங்கள் இரவு உடையிலேயே ஓடிச்சென்று வெளியில் நின்றோம். ஹோட்டலில் பெரிய கட்டமைப்பில் சேதமில்லை. ஆனால் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. வண்ணப்பூச்சும் சுண்ணாம்புப் பூச்சும் உரிந்துவிழுந்துள்ளன" என்றார்.

சோகோ மற்றும் வாலே டெல் காவ்கா பகுதிகளிலும், மனிசாலெஸ், கிப்டோ, மற்றும் மெடெலின் நகரங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிசாலெஸ் நகரில் மட்டும் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிபிசி உலக சேவையிடம் பேசிய ஏஞ்சலிகா அவிலா, தாம் மனிசாலெஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறினார்.

"நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுவர்களில் விரிசல்கள் தோன்றின" என்று அவர் கூறினார்.

"எல்லோரும் அலறிக் கொண்டிருந்தனர். அண்டை கட்டடங்களிலிருந்து தூசி வெளியேறுவதையும், சுவர்களிலிருந்து செங்கற்கள் உதிர்வதையும் நான் பார்த்தேன்," என்றார்.

மனிசாலெஸைச் சேர்ந்த செய்தியாளரும் வானிலை ஆய்வாளருமான லூயிஸ் பெலிபே மொலினா, நிலநடுக்கம் ஏற்பட்டபோது தனது வீட்டில் இருந்தார். அப்போது அவர் நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் இருந்தார்.

முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அனுபவத்தால், மனிசாலெஸ் நகரில் "நிலநடுக்கத்தைக் தாங்கக்கூடிய கடுமையான கட்டட விதிமுறைகள்" பின்பற்றப்படுகின்றன. அதனால் தான் அவர் வசிக்கும் கட்டடம் இந்த அதிர்வைத் தாங்கியதாக அவர் விளக்கினார்.

"என்னிடம் 450 புத்தகங்கள் உள்ளன. அவற்றில் சில மட்டுமே அலமாரியில் இருந்தன. கண்ணாடிகள் உடையும் சத்தமும், மக்கள் அலறும் சத்தமும் கேட்கப்பட்டது" என்று அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

"அது மிகவும் பயங்கரமானதும் அச்சமூட்டுவதாகவும் இருந்த ஒரு அனுபவம்" என்றார்.

நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, பெரெய்ரா, மனிசாலெஸ், கிப்டோ, ஆர்மீனியா, கார்டகோ மற்றும் புவெனாவென்துரா ஆகிய நகரங்களிலுள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் போகோட்டாவில், மரங்களும் போக்குவரத்து சிக்னல்களும் கடுமையாக அதிர்ந்தன. சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், நகரின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான வெனிசுவேலா, இக்வடார் மற்றும் பனாமா வரை உணரப்பட்டன.

இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கு முன்பு வட வெனிசுவேலாவை சிதைத்த இரட்டை நிலநடுக்கங்களில் 6,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கொலம்பியாவின் அதிபர் அபெலார்டோ டெ லா எஸ்ப்ரியெல்லா, தேசிய பேரிடர் நிலையை அறிவித்துள்ளார். இதன் மூலம் அவசரநிலையை எதிர்கொள்ள தேவையான சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நிதி ஒதுக்கீடுகளை மறுசீரமைப்பதும் அடங்கும்.

கடந்த வெள்ளிக்கிழமையில் தான் பதவியேற்ற புதிய அதிபர், தனது தலைமைக் காலத்தை வரையறுக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சவாலை உடனடியாக எதிர்கொண்டுள்ளார்.

உயிரிழப்புகளுக்கு அப்பாற்பட்டு, 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

சேதத்தின் உண்மையான அளவு வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, நிலநடுக்க நிலவரத்தை "உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும், தேவையான உதவிகளை வழங்க "தயாராக உள்ளோம்" என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மீட்புப் பணிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்னிக்கஸ் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

எல் சால்வடோரின் அதிபர் நயீப் புகேலே, கொலம்பியா மக்களுக்கு ஒற்றுமைச் செய்தி அனுப்பியதுடன், மீட்புப் பணிகளுக்காக மனிதவளத்தையும் உபகரணங்களையும் வழங்க முன்வந்தார்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மதிப்பீட்டின்படி, சுமார் 15 லட்சம் பேர் 7 என்ற அளவுக்குச் சமமான அதிர்வுகளை உணர்ந்துள்ளனர்.

திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் போன்ற ஆழமான நிலநடுக்கங்கள், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் போல பொதுவாக அதிக ஆபத்தானவை அல்ல என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இத்தகைய நிலநடுக்கங்கள் கட்டங்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடும். மேலும், பின் அதிர்வுகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவை ஒப்பீட்டளவில் அதிக வலிமையுடன் இருக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு