ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை சீனாவில் விமர்சிக்கப்படுவது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் மீது சீனாவும் தனது பார்வையை வைத்திருந்தது.

இருதரப்பு ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது நாட்டை இலக்காகக் கொண்டோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என்று சீனா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சனாய் டகாயிச்சியின் இந்த பயணத்தின் போது, இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான மற்றும் அனைவரும் அணுகத்தக்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இதனை இப்பிராந்திய நாடுகளின் பொதுவான விருப்பங்களுக்கு எதிரானது என்று சீனா குறிப்பிட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சீன செய்தித் தொடர்பாளர் யு ஜிங், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜிகுனின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.

ஜப்பான் பிரதமர் டகாயிச்சியின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த குவோ, "சுதந்திரமான மற்றும் அனைவரும் அணுகத்தக்க இந்தோ-பசிபிக் என்று கூறப்படும் இந்த கருத்துரு, அமைதி, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான பிராந்திய நாடுகளின் பொதுவான அபிலாஷைகளுக்கு எதிராகச் செல்கிறது, இதற்கு ஒருபோதும் உண்மையான அங்கீகாரம் கிடைக்காது" என்று கூறியிருந்தார்.

"போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் இலக்குகளைப் பாதுகாப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் செழுமை மற்றும் ஸ்திரத்தன்மையின் அடித்தளமாகும், மேலும் இது பிராந்திய நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும்" என்றும் அவர் கூறினார்.

குளோபல் டைம்ஸ் கருத்து

சீனாவின் அதிகாரப்பூர்வ எதிர்வினை தவிர, அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குரலாகக் கருதப்படும் ஆங்கில நாளிதழான 'குளோபல் டைம்ஸ்' ஜப்பான் பிரதமரைக் கடுமையாகச் சாடியுள்ளது.

''இந்தியப் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை புன்னகையுடன் வாழ்த்தி, அவரைத் தனது "மூத்த சகோதரர்" என்று அழைத்தார். இருப்பினும், உள்ளூர் குழாய் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்ட பின்னர், ஜப்பானிய தூதுக்குழு அரசு விமானத்தில் பாட்டில் தண்ணீரை எடுத்து வந்ததாக ஜப்பானிய ஊடக நிறுவனம் ஒன்று பின்னர் செய்தி வெளியிட்டது. சில பார்வையாளர்களின் பார்வையில், இந்த முரண்பாடான நடத்தை இந்தியாவின் மீதான ஜப்பானின் உணர்வற்ற, முறையான மற்றும் அவமதிக்கும் மனப்பான்மையைக் காட்டுகிறது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.

''இந்தியாவில் தூதுக்குழு தங்கியிருந்தபோது ஜப்பான் அரசு சுகாதாரம் தொடர்பான கடுமையான வழிகாட்டுதல்களை பிறப்பித்ததாக ஜப்பானிய ஊடகமான அபெமா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில் எந்தவொரு சூழ்நிலையிலும் குழாய் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது, வாய் கொப்பளிப்பதற்குக் கூட அதைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. குடிப்பதற்கும் வாய் சுத்தத்துக்கும் தேவையான அனைத்துத் தேவைகளுக்கும் பாட்டில் மினரல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்தது. புறப்படுவதற்கு முன்பு அரசு விமானத்தில் பெருமளவில் மினரல் வாட்டர் ஏற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது,'' என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.

''சுதந்திரமான மற்றும் அனைவரும் அணுகக்கூடிய இந்தோ-பசிபிக் குறித்து ஜப்பான் முக்கியமாக வலியுறுத்தி வருகிறது. இந்த கருத்துரு ஜப்பானின் மறைந்த பிரதமர் ஷின்ஜோ அபேயால் முன்வைக்கப்பட்டது, இது பின்னர் அமெரிக்காவின் பிராந்திய மூலோபாயத்தின் மைய அடித்தளமாக மாறியது. இன்று, அமெரிக்கா "இந்தோ-பசிபிக்" என்பதிலிருந்து "இந்தோ" என்ற வார்த்தையை நடைமுறையில் கைவிட்டுவிட்ட நிலையிலும், ஜப்பான் இன்னும் "இந்தோ-பசிபிக்" சொல்லாடலையும் "சுதந்திரமான மற்றும் அனைவரும் அணுகத்தக்க இண்டோ-பசிபிக்" என்ற கருத்துருவையும் உறுதியாகப் பிடித்துக் கொண்டுள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற 16-வது ஜப்பான்-இந்திய வருடாந்திர உச்சிமாநாட்டுக்கான தனது சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது ஜப்பான் பிரதமர் இதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்'' என மூலோபாய விவகாரங்களின் புகழ்பெற்ற நிபுணர் பிரம்மா செல்லானி எழுதியுள்ளார்.

இந்திய-ஜப்பான் நட்பு சீனாவுக்கு எதிரானதா?

ஜப்பான் பிரதமரின் பயணம் ஏற்கெனவே சீனாவின் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டு வந்தது, மேலும் அங்குள்ள ஊடகங்களிலும் இது குறித்துத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது.

''இந்த மூன்று நாள் பயணத்தின் பரந்த நோக்கம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்து கவலைகொண்டுள்ள நாடுகளின் கூட்டணியை வலுப்படுத்துவதாகும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், சாதாரண ஜப்பானிய குடிமக்களின் பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக உள்நாட்டில் சனாய் டகாயிச்சிக்கான ஆதரவு குறைந்து வருவதால், அவருக்கு ஒரு "எளிதான வெற்றியை" வழங்குவதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது'' என ஹாங்காங்கின் செய்தி இணையதளமான சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது செய்தி ஒன்றில் எழுதியுள்ளது.

எஸ்சிஎம்பி தனது செய்தியில், ''டோக்கியோவின் வாஸிடா பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் உதவிப் பேராசிரியர் பென் ஆஷியோன் 'திஸ் வீக் இன் ஏசியா'விடம் கூறுகையில், பாதுகாப்பும் பொருளாதாரமும் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே முக்கியமானவை. டகாயிச்சி "ஜப்பானின் பாதுகாப்பு மாற்றத்தை விரைவுபடுத்த விரும்புகிறார் மற்றும் இந்தியா அதன் ஒரு முக்கிய கூட்டாளி என்பதைக் காட்ட விரும்புகிறார். ஆனால் இந்தியா இந்த கருத்துக்களை எந்த அளவுக்கு ஏற்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.'' என எழுதியுள்ளது.

''ஆசிய-பசிபிக் பிராந்திய எல்லையைத் தாண்டி, சீனாவுக்கு எதிரான ஒரு சமநிலைப்படுத்தும் சக்தியாக இந்தியாவை இன்னும் வலுவாகத் தங்களுடன் இணைத்துக் கொள்வதுதான் ஜப்பானின் "சுதந்திரமான மற்றும் அனைவரும் அணுகத்தக்க இந்தோ-பசிபிக்" ராஜீய பிரசாரத்தின் பின்னணியில் உள்ள சிந்தனை. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த பங்கை ஆற்ற இந்தியா எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறது என்பது அந்த நேரத்தில் சீனாவுடன் அதற்கு இருக்கும் உறவுகளைப் பொறுத்தது" என ஆஷியோன் தெரிவித்தார்.

"இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மோதல்கள் ஏற்பட்டபோது, இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஒத்துழைக்க அதிகத் தயாராக இருந்தது. ஆனால் உறவுகள் மிகவும் சீராக இருக்கும்போது, ஜப்பானின் பாதுகாப்பை ஆதரிக்கும் தரப்பினர் எதிர்பார்க்கும் பங்கை ஆற்ற இந்தியா அவ்வளவாக விரும்புவதில்லை" என்றார்.

சீனா மற்றும் ஜப்பான் உறவுகளில் பதற்றம் ஏன்?

சீனா மற்றும் ஜப்பான் உறவுகள் பதற்றமாகவே இருந்துள்ளன. தைவான் விவகாரத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்குக் காணப்படுகிறது.

சீனா தைவானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போரிட்டால், அது ஜப்பானின் இருப்புக்கே ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்று ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி நவம்பர் 7, 2025 அன்று கூறியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவின் ஒப்புதலுடன் ராணுவத்தை களமிறக்குவதற்கான சட்டப்பூர்வப் பாதுகாப்பை ஜப்பான் பெற்றுவிடுகிறது.

சீனா உண்மையில் தைவானைத் தனது ஒரு பகுதியாகக் கருதுகிறது. உலகில் 'ஒரே சீனா கொள்கையை' ஏற்கும் எந்தவொரு நாட்டுக்கும் தைவானுடன் சுதந்திரமான தூதரக உறவு கிடையாது.

ஜப்பானிய பிரதமரின் இந்த கருத்தால் சீனா ஆத்திரமடைந்து, தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது.

சீன அரசு, டகாயிச்சி தங்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டியதுடன், அந்த கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் ஜப்பானிய பிரதமர் தனது கருத்தை நியாயப்படுத்தியிருந்தார்.

சீனாவும் ஜப்பானும் ஆசியாவின் இரு மிகச்சக்திவாய்ந்த நாடுகள் ஆகும், மேலும் இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன.

சர்ச்சைக்குரிய தீவுக்கூட்டங்களைச் சுற்றி சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கைகள், வர்த்தகம் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தைவான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த கவலைகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையே பல விவகாரங்கள் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன,

இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கவில்லை, ஆனால் சீனக் கப்பல்கள் ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குரிய தீவுகளைச் சுற்றி வருகின்றன. ஜப்பானிய கப்பல்கள் அவற்றைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.

சீனா மற்றும் ஜப்பான் இடையிலான பகையின் வரலாறு

ஜப்பான் மற்றும் சீனாவின் பகை நிறைந்த உறவுகள் மற்றும் வரலாற்றைப் பற்றி பேசும்போதெல்லாம், 1937 டிசம்பரில் சீன நகரமான நாஞ்சிங்கில் தொடங்கிய படுகொலைகளை நிச்சயம் அனைவரும் நினைவுகூர்கின்றனர்.

ஜப்பானிய ராணுவத்தினர் நாஞ்சிங் நகரத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றத் தொடங்கினர்.

இந்த படுகொலைகள் 1937 டிசம்பர் மாதத்தில் தொடங்கி 1938 மார்ச் மாதம் வரை தொடர்ந்தது.

அன்றைய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கணிப்பின்படி நாஞ்சிங்கில் இரண்டரை முதல் மூன்று லட்சம் மக்கள் வரை கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

1931-இல் ஜப்பான் சீனாவின் மஞ்சூரியாவின் மீது படையெடுத்தது. ஜப்பானிய கட்டுப்பாட்டில் இருந்த ரயில் பாதையின் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஜப்பான் இந்தத் தாக்குதலை நடத்தியது.

இந்த காலகட்டத்தில் ஜப்பானிய ராணுவத்தினரை சீன ராணுவத்தினரால் எதிர்கொள்ள முடியவில்லை, மேலும் ஜப்பான் பல சீனப் பகுதிகளைத் தன் வசப்படுத்தியது.

சீனாவின் மீது ஜப்பான் தனது பிடியை வலுவாக்கிக் கொண்டே சென்றது. மறுபுறம் சீனா, கம்யூனிஸ்டுகள் மற்றும் தேசியவாதிகளுக்கு இடையேயான உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்தது. சீனாவின் தேசியவாதத் தலைவர் சியாங் கே-ஷேக் நாஞ்சிங் நகரைத் தேசியத் தலைநகராக அறிவித்திருந்தார்.

சீனாவில் ஜப்பான் நடத்திய அத்துமீறல்கள் அங்குள்ள பாடப்புத்தகங்களில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகப் பல ஜப்பானியர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், 1931-இல் ஜப்பான் மிகுந்த ஆக்ரோஷத்துடன் சீனாவின் மஞ்சூரியாவைக் கைப்பற்றியது ஒரு வரலாற்று உண்மையாகும்.

இதன் விளைவாக 1937-இல் ஒரு பரந்த போர் தொடங்கியது, மேலும் லட்சக்கணக்கான சீனர்களின் மரணத்துக்குப் பிறகு 1945-இல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது இதுவும் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலகப் போரில் கிழக்கு ஆசியா ஒரு போர்க்களமாக மாறியிருந்தது. இப்பிராந்தியத்தில் தேசிய அடையாளத்தை மையத்திற்குக் கொண்டு வருவதில் இரண்டாம் உலகப் போருக்கு முக்கியப் பங்கு உண்டு.

சீனா இன்றைய தேதியில் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையில் மிகவும் முன்னோக்கிச் சென்றுவிட்டது, ஆனால் இந்த பயணத்தில் அதன் கடந்த காலத்துக்கும் பெரும் பங்கு உள்ளது.

1839 ஆம் ஆண்டின் முதலாவது அபின் போரிலிருந்து இரண்டாம் உலகப் போர் வரை தான் எவ்வாறு கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பதை சீனா தனது குடிமக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது.

ஜப்பான் மற்றும் மேற்கத்திய காலனியாதிக்கவாதிகள் தங்களை எவ்வாறு அவமதித்தார்கள் என்பதை சீன குடிமக்கள் மறந்துவிட அனுமதிக்கப்படுவதில்லை.

நாஞ்சிங்கில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 13 ஆம் தேதியைப் பொது விடுமுறையாக சீனா 2014 இல் அறிவித்தது. நாஞ்சிங் படுகொலைக்காக ஜப்பான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.