நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் விஜய் சந்திப்பு - இருவரும் என்ன பேசினர்?
ஆந்திரா சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார். அப்போது, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து புன்னமி காட் பகுதியில் நடைபெறும் 'விஜயவாடா உத்சவ்' நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். முன்னதாக, விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா கோயிலில் அவர் வழிபட்டார்.
ஆந்திரா சென்ற தமிழக முதலமைச்சர் விஜயை தெலுங்கு திரையுலகின் நட்சத்திர தம்பதியரான நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சந்தித்தனர்.
தமிழக அரசு தெரிவித்தது என்ன?
தமிழக முதலமைச்சர் விஜயின் ஆந்திர பயணம் குறித்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "ஜோசப் விஜய் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும், சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின்போது, இரு மாநிலங்களுக்கிடையேயான சிறந்த ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் இந்த நல்வாய்ப்பிற்கும், விஜயவாடாவில் அளிக்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்கும் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சருக்கு விஜய் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுவான நலன் சார்ந்த விவகாரங்கள், குறிப்பாக, நீர்ப் பாதுகாப்பு தொடர்பான பொருண்மைகளில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாக அவர் தெரிவித்தார்."
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்
தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலம் என்பதுடன், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது என்றும், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டமானது, மாநிலங்களுக்கான மேற்பரப்பு நீர் இருப்பை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நீண்டகால வாய்ப்பாக அமைகிறது என்றும் விஜய் தெரிவித்ததாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
அதன்படி, இத்திட்டம் அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் பயனளிப்பதுடன், விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து, குடிநீர்ப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று தெரிவித்த விஜய், இத்திட்ட முன்மொழிவை முன்னெடுத்துச் செல்லுமாறு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சரை கேட்டுக்கொண்டதோடு, இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்குமாறு பிரதமர் மோதியிடம் தான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவித்தல்
இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கிருஷ்ணா நதிநீரை கூடுதலாக விடுவிப்பது குறித்தும் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சருடன் விஜய் கலந்தாலோசனை மேற்கொண்டார் என்கிறது அந்த செய்திக் குறிப்பு.
கால்வாய் மூலம் வழங்கப்படும் கிருஷ்ணா நீர், சென்னையின் குடிநீர்ப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும், இன்றைய நிலவரப்படி, சென்னையின் ஐந்து குடிநீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது சுமார் 35 சதவீதமே உள்ளது என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
நடப்பு நீர் ஆண்டில், கூடுதலாகத் தண்ணீரை விடுவிக்குமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டதாக அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சருடன் இணைந்து புன்னமி காட் பகுதியில் நடைபெறும் 'விஜயவாடா உத்சவ்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றதாகவும், முன்னதாக, விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா கோயியில் விஜய் வழிபட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கனகதுர்கா கோயிலில் விஜய் வழிபாடு
ஆந்திரப் பிரதேசத்திற்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலுக்கு சென்றார்.
இந்திரகிலாத்ரிக்கு சென்ற விஜய்க்கு, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பளித்தனர். பாரம்பரிய உடையில் கோயிலுக்கு சென்ற விஜய், வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு வணக்கம் செலுத்தியவாறே சென்றார்.
பின்னர், அவர் கருவறையில் உள்ள அம்மனைத் தரிசித்தார். பாரம்பரிய உடையில் வந்து அம்மனைத் தரிசித்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, அறநிலையத் துறையின் மூத்த அதிகாரிகள் அம்மனின் திருவுருவப் படத்தையும், அம்மன் தொடர்பான புனிதப் பொருட்களையும் வழங்கினர்.
நட்சத்திர தம்பதியுடன் சந்திப்பு
ஆந்திரா சென்ற தமிழக முதலமைச்சர் விஜயை தெலுங்கு திரையுலகின் நட்சத்திர தம்பதியரான நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சந்தித்தனர்.
இதுகுறித்த விவரங்களை விஜய் தேவரகொண்டா தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துகொண்டார். விஜயுடன் செலவிட்ட நேரம் மிகவும் அருமையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். பணிச்சுமைக்கு மத்தியிலும் தங்களை மிகுந்த அன்புடன் வரவேற்ற விஜய், வாழ்க்கை, பணி மற்றும் உலகம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாக விஜய தேவரகொண்டா தெரிவித்தார். ஒரே சந்திப்பிலேயே அவர் மிகவும் பிடித்துப்போகக்கூடிய ஒரு மனிதராகத் தெரிந்தார் என்றும் அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு