ஐபோன், டிவி, ஃபிரிட்ஜ் என தினசரி 'அன்பளிப்பாக' குவியும் பார்சல்களை கண்டு அஞ்சும் மதுரை இன்ஃப்ளூயன்சர்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 40 முறை பொருட்கள் 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் எங்கள் வீட்டுக்கு வருகின்றன. வீட்டு உரிமையாளர், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் கோபப்படுகிறார்கள். இப்போது வீட்டை காலி செய்யவுள்ளோம். தயவுசெய்து பொதுவெளியில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை கொடுக்காதீர்கள்" என்கிறார் சுமங்கலி வீரமணி.

மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் வீரமணி என்பவர் தனது வீட்டு முகவரி மற்றும் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததால் அவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுகள் உள்ளிட்டவை அமேசான், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் அனுப்பப்படுகின்றன.

ஆனால், அனைத்துமே 'கேஷ் ஆன் டெலிவரி' முறைப்படி அனுப்பப்படுவதால், பணம் செலுத்த முடியாமல் வீரமணி குடும்பத்தால் இவை திருப்பி அனுப்பப்படுகின்றன.

"எந்நேரமும் யாராவது டெலிவரிக்காக வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். கதவைத் திறக்கவே பயமாக உள்ளது. நாங்கள் இதை ஆர்டர் செய்யவில்லை என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. இதனால் எனது கணவர் வெளியூர் சென்றுவிட்டார், குடும்ப வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது" என்கிறார் வீரமணியின் மனைவி சுமங்கலி வீரமணி.

அதேசமயம், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

பின்னணி என்ன?

மதுரையைச் சேர்ந்த வீரமணி என்பவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து காணொளிகளை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

இவர் கடந்த மாதம் வெளியிட்ட காணொளிகளில் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல தன்னை பின்தொடர்பவர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து, தனது தொலைபேசி எண்ணை பகிர்ந்திருந்தார். இதன் மூலம் தனக்கு 6,000 ரூபாய் வரை கிடைத்ததாகவும் அவர் மற்றொரு காணொளியில் கூறியிருந்தார்.

அதன் பின்னர் தன்னை பின்தொடர்பவர்கள் சிலர், தனக்கு அன்பளிப்பு அனுப்ப வீட்டு முகவரியை கேட்டதாகத் தெரிவித்து, மதுரையில் உள்ள தனது வீட்டின் முகவரியைப் பகிர்ந்திருந்தார்.

"அன்று முதல் ஏதேதோ பொருட்கள் வீட்டிற்கு வரத் தொடங்கின. ஆனால், அனைத்தும் 'கேஷ் ஆன் டெலிவரி' என்ற பணம் கொடுத்து பெறும் முறையில் வந்ததால், நாங்கள் திணறிப் போனோம்" என பிபிசி தமிழிடம் கூறினார் வீரமணியின் மனைவி சுமங்கலி வீரமணி.

"இதில் ஐபோன் 17, தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், ஃபர்னிச்சர்கள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தொடங்கி ஆடைகள், மளிகைப் பொருட்கள் என அனுப்பி வைக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு 20 கிலோ பிரியாணியை 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் யாரோ அனுப்பிவைத்தார்கள்" என்கிறார் அவர்.

இதைத் தொடர்ந்து வீரமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "தனக்கு தொடர்ந்து பொருட்கள் வருகின்றன. கொண்டுவரும் டெலிவரி ஏஜென்டுகளிடம் தன்னால் பேசி விளக்க முடியவில்லை. தயவு செய்து தனக்கு யாரும் பொருட்கள் ஆர்டர் செய்து அனுப்ப வேண்டாம்" என கோரிக்கை வைத்திருந்தார்.

பின்னர் மற்றொரு காணொளியில், "தொடர்ந்து எனது வீட்டிற்கு 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் பொருட்களை கொண்டுவருகிறார்கள், சிறுநீரக தானத்திற்கு எனது எண்ணை அளித்துள்ளார்கள், எனவே நான் வெளியூருக்கு செல்கிறேன். யாரும் பொருட்களை அனுப்பாதீர்கள்" எனக் கூறியிருந்தார்.

'100க்கும் மேற்பட்ட பார்சல்கள்'

ஆனாலும் தொடர்ந்து வீரமணியின் வீட்டிற்கு 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் பொருட்கள் வருகின்றன எனக் கூறுகிறார் அவரது மனைவி சுமங்கலி வீரமணி.

"எனது கணவர் இன்னும் மதுரைக்கு திரும்பவில்லை. வீட்டிற்கு வரவே பயப்படுகிறார். வீட்டிற்கு பொருட்கள் கொண்டுவரும் ஏஜென்டுகள் ஓடிபி கேட்கிறார்கள், யார் அனுப்புகிறார்கள் என அவர்களுக்கும் தெரியவில்லை. சிலர் சொன்னால் புரிந்துகொள்கிறார்கள், சிலர் கோபப்பட்டு சண்டையிடுகிறார்கள். இதனால் எனக்கும் வீட்டை விட்டு வெளியே வர பயமாக உள்ளது" என்கிறார் அவர்.

தனது கணவர் வீரமணி மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகக் குறிப்பிடும் சுமங்கலி, "இப்போது அவருக்கு வேலை இல்லை. இன்ஸ்டாகிராம் காணொளிகளைத் தான் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இப்படியொரு சிக்கல் வரும் என நாங்கள் நினைக்கவில்லை. இந்தப் பிரச்னையால் வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கோபப்படுகின்றனர். விரைவில் இந்த வீட்டை காலி செய்துவிடுவோம்" என்கிறார் அவர்.

வீரமணியின் பெயரில் 100க்கும் மேற்பட்ட பார்சல்கள் வந்துள்ளன என்றும், இன்னும் அவை டெலிவரி செய்யப்படாமல் உள்ளன என்றும் கூறுகிறார் தனியார் டெலிவரி நிறுவன ஊழியர் அருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

"நாங்கள் கொண்டுசெல்லும் 'கேஷ் ஆன் டெலிவரி' ஆர்டர்கள் திருப்பி அனுப்பப்படும் போது, பணியில் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த டெலிவரிக்கான உடலுழைப்பு, இருசக்கர வாகனத்திற்கான எரிபொருள் செலவுகள் ஆகியவை இழப்பு தான். ஒரே முகவரிக்கு ஒரே நாளில் 30-40 பொருட்கள் எனும்போது, அதை வீரமணி வீட்டிற்கு கொண்டு செல்லவே ஊழியர்கள் மறுக்கிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள்" என்கிறார் அவர்.

'பிரபலத்திற்காக செய்யும் தவறுகள்'

இதுகுறித்து பேசிய சைபர் பாதுகாப்பு வல்லுநரும், வழக்கறிஞருமான பாலு, "சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக யோசிக்காமல் இதுபோல செய்துவிடுகிறார்கள். இன்றைய இணைய உலகில் நாம் தெரியாமல் அளிக்கும் சிறு விவரங்கள் கூட பெரிய குற்றங்களுக்கு வழிவகுக்கும்" என்கிறார்.

"தரவுத் தனியுரிமை அல்லது தகவல் தனியுரிமை என்பது என்ன, அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நம் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது தான், இது போன்ற சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது" என்கிறார் அவர்.

"இதுபோன்ற லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் ஒருவருக்கு தொடர்ந்து அனுப்புவது என்பது உளவியல் ரீதியிலான துன்புறுத்தல் தான். இதைத் தடுக்க காவல்துறையில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கலாம். இருப்பினும், அதன் மூலம் மட்டும் இத்தகைய ஆர்டர்களை முழுமையாக நிறுத்த முடியாது. ஆனால் இதுவரை பார்சல்களை அனுப்பியது யார் என்பதைக் கண்டறியலாம்" என்கிறார் வி.பாலு.

"இவ்வாறு ஒருவர் தனது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பொதுவெளியில் கொடுப்பதால், நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும். போலியான அடையாள அட்டைகள் கூட உருவாக்கப்படலாம்" என்கிறார் இணைய தகவல் சரிபார்ப்பு நிபுணரான முரளிகிருஷ்ணன் சின்னதுரை.

"நாம் யாரிடம் என்ன தகவல்களைப் பகிர்கிறோம் என்பது மிகவும் அடிப்படையானதாக இருக்கிறது. என்ன தேவைக்காக, எதற்காகப் பகிர்கிறோம், அது அதற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது." என்கிறார் அவர்.

"உங்களிடம் இருப்பதையெல்லாம் சமூக ஊடகங்களில் அளவுக்கு அதிகமாக நீங்கள் வெளிப்படுத்தும் போது, அது எல்லா விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, நாம் சமூக வலைத்தளங்களில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக்கூடாது என்ற ஒரு சுய தணிக்கை நமக்கு வேண்டும்" எனக் குறிப்பிடுகிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு