ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது கடுமையான தலைவலியை உணர்வது ஏன்? எப்படி தவிர்ப்பது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எலிசபெத் ஆன் ப்ரவுன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
உங்களுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம் தலைவலிகள் ஏற்பட்டால், அது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருக்கிறதா என்று பார்ப்பதும், மூளை உறைவு (brain freeze) அல்லாத உங்களது மற்ற தலைவலிகளையும் இன்னொரு முறை கவனிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.
அது ஒரு கடுமையான கோடைக் காலம், உங்களுக்குப் பிடித்த குளிர்ச்சியான உணவு ஒன்றை நீங்கள் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; அப்போது திடீரென்று யாரோ ஒரு பனிக்கோடரியால் உங்கள் நெற்றியில் குத்துவது போல் உணர்கிறீர்கள். உங்கள் மூளையின் ஆழத்திலிருந்து ஒரு கூர்மையான, குத்துவது போன்ற வலி தோன்றுவது போல் தெரிகிறது. உங்கள் ஐஸ்கிரீம் உருகி வழிந்துகொண்டிருக்க, வலி குறையும் வரை நீங்கள் அங்கே ஏமாற்றத்துடன் அமர்ந்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
"ஐஸ்கிரீம் தலைவலி என்பது மிக, மிக சாதாரணமான ஒன்று," என்கிறார் அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள மாயோ கிளினிக்கைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான அமால் ஸ்டார்லிங். சாக்லேட் ஐஸ்கிரீம் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. "(ஐஸ்கிரீம் தலைவலி ஆபத்தில்லாதது, வரும், பிறகு அதுவே போய்விடும்."
குளிர்ச்சியான உணவுகள் அல்லது பானங்களை மிக வேகமாகச் சாப்பிடும்போதோ குடிக்கும்போதோ, ஏன் இப்படி திடீர் தலைவலி ஏற்படுகிறது? பல தலைமுறைகளாக ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான இனிப்புகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு திடீர் தலைவலியை ஏற்படுத்தி வந்த 'மூளை உறைதல்' , அறிவியல் ஆய்வுகளுக்கும் பல தசாப்தங்களாக பங்களித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இது உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் நினைப்பதை விட அதிக தகவல்களை அளிக்கக்கூடும்.
மூளை உறைவு என்றால் என்ன?
நம்மில் பலர் சிறுவயதிலிருந்தே 'மூளை உறைதல்' அல்லது 'ஐஸ்கிரீம் தலைவலி' என்று அழைக்கும் இந்த நிலையை, விஞ்ஞானிகள் 'குளிர் தூண்டல் தலைவலி' (cold-stimulus headache) என்று குறிப்பிடுகின்றனர் என ஸ்டார்லிங் கூறுகிறார்.
"வாயின் மேல் பகுதி அல்லது தொண்டையின் மிக ஆழமான பகுதியில் ஏற்படும் விரைவான குளிர்ச்சி" காரணமாக இது நிகழ்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள் என்று ஸ்டார்லிங் கூறுகிறார். இந்த குளிர்ச்சி ரத்த நாளங்களை மிக விரைவாக சுருங்கச் செய்கிறது, அதன்பின் ரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதற்காக அவை மீண்டும் வீங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றன.
இந்த ரத்த நாளங்களின் சுவர்களில் உள்ள வலி நரம்புகள், உங்கள் நெற்றி மற்றும் முகத்திலிருந்து வரும் வலி சமிக்ஞைகளைச் செயலாக்கும் நரம்பான ட்ரைஜெமினல் (trigeminal) நரம்புடன் இணைகின்றன என்று அவர் விளக்குகிறார். அதனால்தான் ஒரு ஐஸ்கிரீம் தலைவலி என்பது வாயின் உள்ளே வராமல், உங்கள் மூளையிலோ அல்லது நெற்றியிலோ ஏற்படும் அழுத்தம் மற்றும் வலி போல உணர்கிறது.
(மேலும் கவலைக்குரிய வகையில், குளிர்ச்சியான உணவுகள் அல்லது பானங்கள் இதயத் துடிப்பு வேகமாகவோ ஒழுங்கற்றதாகவோ உணரப்படும் 'இதயப் படபடப்பு' ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது 'கோல்ட் டிரிங் ஹார்ட்' (Cold Drink Heart) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர வயது ஆண்களில், இது இதயத் துடிப்பு ஒழுங்கின்மை (heart arrhythmia) ஏற்படுவதுடனும் தொடர்புடையதாக இருக்கலாம்.)
குளிர்-தூண்டல் தலைவலியைத் தவிர்க்க, குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள் என்கிறார் ஸ்டார்லிங். விரைவான குளிர்ச்சிதான் மூளை உறைவை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது, எனவே குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளும் ஒவ்வொரு இடைவெளியிலும் உங்கள் வாயின் மேல் பகுதிக்கு சற்று சூடாக மாறுவதற்குக் நேரம் கொடுத்தால் இவற்றைத் தடுத்துவிடலாம்.
ஆனால், நீங்கள் மிகவும் ஆர்வமாகி (யார் தான் அப்படி இருந்ததில்லை!) ஏற்கெனவே உங்களுக்கு ஐஸ்கிரீம் தலைவலி வந்துவிட்டால், அதன் நேரத்தைக் குறைக்கவும், வலியைக் குறைக்கவும் ஒரு சில நிரூபிக்கப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் ஸ்டார்லிங். உங்கள் நாக்கின் அடிப்பகுதியைப் பயன்படுத்தி உங்கள் வாயின் மேல் பகுதியை மீண்டும் சூடாக்க அவர் பரிந்துரைக்கிறார். அல்லது உங்கள் நாக்கின் இரு பக்கங்களும் குளிர்ந்து போயிருந்தால், அதற்குப் பதிலாக உங்கள் கட்டைவிரலையோ அல்லது ஒரு சூடான பானத்தையோ பயன்படுத்துங்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு ஆச்சர்யமான தொடர்பு
இருந்தாலும், சிலருக்கு ஏன் மூளை உறைவு ஏற்படுகிறது, மற்றவர்களால் எப்படி எந்தப் பாதிப்பும் இல்லாமல் மில்க் ஷேக்கைக் குடிக்க முடிகிறது? இதைக் கண்டறிய, இத்தாலியில் உள்ள படுவா பல்கலைக்கழகத்தின் குழந்தை நரம்பியல் மற்றும் மனநலப் பேராசிரியரான ஐரீன் டொல்டோ மற்றும் அவரது சகாக்கள், ஐஸ்கிரீம் தலைவலிகள் குறித்த நான்கு தசாப்த கால அறிவியல் ஆய்வுகளை ஆராய்ந்தனர். (இவருக்கு அதிமதுர ஜெலாட்டோ என்றால் மிகவும் பிடிக்குமாம்.)
தைவான், ஜெர்மனி மற்றும் கனடாவில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் மற்றும் பிரேசில், துருக்கி மற்றும் பிரிட்டனில் வயதுவந்த ஒற்றைத் தலைவலி நோயாளிகள் பலர் மீதான ஆய்வுகள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து, டொல்டோ பல வடிவங்களைக் கண்டறிந்தார்.
முதலாவதாக, மூளை உறைவு என்பது குடும்பங்களில் தொடர்வதாகத் தெரிகிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது – உங்கள் பெற்றோருக்கு ஐஸ்கிரீம் தலைவலி இருந்தால், உங்களுக்கும் அது இருக்க வாய்ப்புள்ளது. (இந்தக் கண்டுபிடிப்புகள் இதுவரை வெறும் தொடர்புகளை மட்டுமே காட்டுகின்றன, மேலும் இந்தத் தொடர்புக்குக் காரணமான குறிப்பிட்ட மரபணுக்களை அறிவியலாளர்கள் இன்னும் துல்லியமாகக் கண்டறியவில்லை.)
மூளை உறைவினால் ஏற்படும் வலி நபருக்கு நபர் எப்படி மாறுபடுகிறது என்பதைப் பொறுத்தவரை, மிக முக்கியமான காரணி உங்களுக்கு ஐஸ்கிரீம் அல்லாத பிற தலைவலிகள் மற்றும் ஒற்றைத் தலைவலித் தாக்குதல்கள் (பல மணிநேரங்கள் மற்றும் சில நாட்கள் கூட நீடிக்கக்கூடிய கடுமையான தலைவலிகள்) வருகிறதா என்பதுதான். "ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் வழக்கமாக இந்த வகையான தலைவலிகளை அதிக தீவிரத்துடன் எதிர்கொள்கிறார்கள்," என்கிறார் டொல்டோ. 1970-களின் ஒரு சிறிய ஆய்வில், ஒற்றைத் தலைவலித் தாக்குதல்களை எதிர்கொண்டவர்களில் 93% பேருக்கு ஐஸ்கிரீம் தலைவலியும் ஏற்பட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமானது முதல் கடுமையான அசௌகரியம் இருந்தது; அதே சமயம் ஒற்றைத் தலைவலி இல்லாதவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே ஐஸ்கிரீம் தலைவலியை எதிர்கொண்டிருந்தனர்.
ஸ்டார்லிங் கூட ஒற்றைத் தலைவலித் தாக்குதல்கள் மற்றும் மிகவும் வலிமிகுந்த ஐஸ்கிரீம் தலைவலிகள் இரண்டையும் எதிர்கொள்கிறார். "எனது ஒற்றைத் தலைவலித் தாக்குதல்களின் காரணமாக எனது ட்ரைஜெமினல் நரம்பு மிகவும் உணர்திறன் வாய்ந்தது, எனவே... அது குளிர்ச்சிக்கு ஆளாகும்போது, அது இன்னும் கணிசமாகச் செயல்படத் தொடங்கும்," என்று அவர் கூறுகிறார்.
இறுதியில், உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ மிகவும் வலிமிகுந்த மூளை உறைவு ஏற்பட்டால், அதற்கு முன்பு இத்தகைய தலைவலி எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை யோசித்துப் பார்ப்பதும், உங்களது மூளை உறைவு அல்லாத மற்ற தலைவலிகளை இன்னொரு முறை கவனிப்பதும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சாதாரணமாக ஏற்றுக்கொண்ட விஷயம், நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு தீவிரமான, ஆனால் குணப்படுத்தக்கூடிய பாதிப்பாக இருக்கலாம். "ஆறு பெண்களில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது, 11 குழந்தைகளில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது, மற்றும் 10 ஆண்களில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது," என்கிறார் ஸ்டார்லிங். "ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் 50%-க்கும் அதிகமானோர் தங்களது அறிகுறிகளைப் பற்றி ஒரு மருத்துவரிடம் கூடப் பேசியதே இல்லை. இதற்கு ஒரு நோயறிதல் உள்ளது. சிகிச்சை முறைகளும் கிடைக்கின்றன."

பட மூலாதாரம், Getty Images
ஒரு உறைந்த ஒற்றைத் தலைவலி
இந்த ஆச்சர்யமான தொடர்பைக் கருத்தில் கொண்டு, உலகளவில் உடலுறுப்பு செயல்திறன் இழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) குறைபாட்டை ஆய்வு செய்வதற்காக, குறைந்தது 1960களிலிருந்தே விஞ்ஞானிகள் தன்னார்வலர்களை வேண்டுமென்றே "மூளை உறைதல்" (brain freeze) ஏற்படுத்திக் கொள்ளச் சொல்லி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த பாதிப்பு பரவலாக இருந்தபோதிலும், தலைவலிகளை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், எம்ஆர்ஐ (MRI) மற்றும் சிடி (CT) ஸ்கேன்கள் மூலம் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்வது சவாலானது; அதுமட்டுமல்லாமல், ஒற்றைத் தலைவலி மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும் என்பதால், தனிநபர்கள் அந்த நேரத்தில் ஆய்வகத்துக்குச் செல்வதும் சிரமமாக இருக்கும்.
அங்குதான் மூளை உறைவு இந்த நிலைமையைச் சரிசெய்ய உதவக்கூடும் என்கிறார் ஸ்டார்லிங்.
ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகளைச் சாப்பிடுவதன் மூலமும் (அவ்வளவு சுவையாக இல்லாவிட்டாலும், சிறிய பனிக்கட்டித் துண்டுகள் அல்லது மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதன் மூலமும்) குளிர்-தூண்டல் தலைவலியை வேண்டுமென்றே ஏற்படுத்த முடியும். மேலும் அவை ஒற்றைத் தலைவலித் தாக்குதலைப் போன்றே அதே நரம்புத் தொகுதியான ட்ரைஜெமினல் நரம்பைப் பாதிப்பதால், அவை ஒரு ஒற்றைத் தலைவலித் தாக்குதலுக்கான அறிவியல் ரீதியான மாற்றாகச் செயல்பட முடியும்.
"தலைவலி மருத்துவத்தின் ஆரம்ப நாட்களில், ஆராய்ச்சியாளர்கள் தலைவலியின் அடிப்படை வழிமுறைகளைப் புரிந்து கொள்ள முயன்றபோது, மூளை உறைவு என்பது ஒரு வசதியான சோதனை மாதிரியாக இருந்தது," என்று விளக்கும் ஸ்டார்லிங், இது ரத்த ஓட்டம் மற்றும் பல்வேறு நரம்புத் தொகுதிகளின் பங்கைக் கண்டறிய அறிவியலாளர்களுக்கு உதவியது என்று குறிப்பிடுகிறார்.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், அடுத்த தலைமுறை ஒற்றைத் தலைவலி மருந்துகளை உருவாக்குவதற்காக மனிதர்களுக்கு ஒற்றைத் தலைவலித் தாக்குதல்களைத் தூண்டுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் நைட்ரோகிளிசரின் செலுத்துதல் உட்பட (ஆமாம், வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படும் அதே நைட்ரோகிளிசரின் தான்) மற்ற வழிகளைச் சார்ந்துள்ளனர்.
மேலும் ஒற்றைத் தலைவலி பாதிப்பு உள்ளவர்கள், மூளை உறைவு ஏற்படும் என்ற பயத்தில் குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. "நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டியதில்லை," என்கிறார் டொல்டோ. "அதை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்."
அதிர்ஷ்டவசமாக, இந்த அறிவுரை அனைவருக்கும் ஒன்றுதான் – உங்கள் ஐஸ்கிரீமைச் சாப்பிடும்போது கொஞ்சம் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மூலம் அந்தச் சுவைகளையும் உங்களால் நன்றாக ரசிக்க முடியும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












