தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்: வெற்றி வான்மகள் திட்டம் அறிவிப்பு

பட மூலாதாரம், TN Assembly
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதன் விவரம்:
- சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதன் பாதிப்பை குறைக்க வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாவட்ட வாரியான திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மண்வள பாதுகாப்பு இயக்கம் ரூ.600 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- 1 லட்சம் விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் செலவில் மண்நல அட்டைகள் வழங்கப்படும்.
- ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும். இதற்காக 63.5 கோடி ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
- மண்வளத்தை பாதுகாக்கவும் ரசாயன பயன்பாட்டை குறைக்கவும் ஒரு லட்சம் ஏக்கருக்கு தேவையான திரவ உரங்கள் வழங்கப்படும். இதற்காக 4.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- உயிர்ம வேளாண்மையை பரவலாக்க, 20 ஆயிரம் ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐந்து விவசாயிகளுக்கு "நம்மாழ்வார் விருது". பாராட்ட பத்திரம் மற்றும் தலா ரூ.2 லட்சம் விருது பெறுபவருக்கு வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தென்னை விவசாயிகளின் நலனுக்காக மொத்தம் ரூ.16 கோடி ஒதுக்கப்படுகிறது. தென்னை நோய் தடுப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது. நிலையான சந்தைவாய்ப்பை உருவாக்க ரூ.22.30 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழக்கம் அமைக்கப்படும்.
- ப்ளூ பெர்ரி, ட்ராகன் ப்ரூட், பேசன் ப்ரூட், கிவி, அவகாடோ போன்ற பழங்களை மக்கள் தற்போது உட்கொள்வதால் இந்த பழங்களை விவசாயிகள் தனி பயிர்களாகவும், ஊடு பயிர்களாகவும் 930 ஏக்கரில் பயிர் செய்ய ரூ.1.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- விவசாயத்தில் பெண்களை ஊக்குவிக்க, வெற்றி வான்மகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 மகளிர் உட்பட 500 பேருக்கு, ட்ரோன் மூலம் உரம் தெளித்தல் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்காக 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சிப் பெற்றவர்களில் 50 பெண்களுக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கிட 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- வேளாண் இயந்திரங்களை பழுது பார்க்க 15 மையங்கள் ரூ.1.12 கோடி செலவில் அமைக்கப்படும்.
- வேளாண் நடைமுறைகளை தொடக்கம் முதல் இறுதி வரை முழுமையாக இயந்திரப்படுத்தும் நோக்கில் 225 ஏக்கரில் மக்கா சோளம், வேர்கடலை உள்ளிட்ட பயிர்ககளை வளர்க்க துறை சார்ந்த நிபுணர்களால் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு 46.3 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
- வேளாண் இயந்திர கண்காட்சி தஞ்சாவூரில் நடத்தப்படும். இதில் நவீன வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும், அதன் பயன்பாட்டை விவசாயிகள் அறிந்து கொள்ளவும், அதை பெறுவதற்கும் கண்காட்சி வாய்ப்பை வழங்கும் என்று அமைச்சர் வினோத் கூறினார்.
- 59 உழவர் சந்தைகளில் மின்னணு விலை பட்டியல் ரூ.2.4 கோடியில் அமைக்கப்படும்.
- உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், தஞ்சாவூர் சாக்கோட்டையில் நம்மாழ்வார் உயிர்ம வேளாண்மை பட்டய படிப்பு கல்லூரி ரூ.15 கோடியில் தொடங்கப்படும். இதற்கு முதல்கட்டமாக 2026-27ம் ஆண்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்படும். இதில் உயிர்ம வேளாண் நடைமுறைகள் செயல்வழி மூலம் கற்றுத்தரப்படும் என்று அமைச்சர் வினோத் கூறினார்.
- சர்வதேச ஏற்றுமதி சந்தையுடன் 1000 விவசாயிகளை இணைக்க, தமிழ்நாட்டில் நான்கு மையங்கள் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த மையங்களின் மூலம் மா, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட ஏற்றுமதிக்கு உகந்த பயிர் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான வசதிகள் செய்து தரப்படும் என்று அமைச்சர் வினோத் அறிவித்தார்.
- இலவச மின்சாரத்துக்கு ரூ.7432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images
தலைவர்கள் கருத்து
உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்
"முதல்வருக்கு தைரியம் இருந்தால் அவையில் பதில் சொல்லட்டும்" என்று வேளாண் பட்ஜெட் குறித்து தனது கருத்துகளை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி விவகாரம் குறித்து அவையில் பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், தைரியம் இருந்தால் முதல்வர் அவையில் தங்களுக்கு பதில் சொல்லட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " திமுக அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தற்போது தவெக அரசு அறிவித்திருக்கிறது. முதல்வருக்கு புகழ் பாடும் விதமாக, மரபை மீறி அமைச்சர் முதல்வரை புகழ்ந்து பேசியுள்ளார்.
"5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி என்று முதல்வர் சென்று பேசிய கூட்டங்களில் எல்லாம் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.75 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி என அறிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். காவிரி விவகாரம் குறித்து அவையில் பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டுள்ளோம். முதல்வர் வாய் திறந்து பேசுவார் என்று விவசாய மக்களை போல நாங்கள் காத்திருக்கிறோம். தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்" என்று உதயநிதி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Udhay/Twitter
எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்
தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் இரண்டரை மணி நேரம் வாசித்தார். ஆனால் முக்கிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு ஒரு குவின்டால் நெல்லுக்கு ரூ.3500, கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ஆதார விலை ரூ.4500 வழங்கப்படும் என்று தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் இவை எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
இனிக்க இனிக்க விவசாயிகளிடம் பேசி, தற்போது அவர்களை ஏமாற்றுகின்றனர்.
கடந்த ஆட்சியைப் போலவே இந்த அரசும் வேளாண் பட்ஜெட் என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளது." என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் உட்பட பல திட்டங்கள் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டன, ஆனால் தற்போது விவசாய மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் எந்த அறிவிப்பும் இல்லை என குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சியை போலவே, தவெக அரசும் மக்களை ஏமாற்றுகிறது என்றும் இந்த பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
"காவிரி விவகாரம் குறித்து முதல்வர் வாய் திறந்து பேசுவதில்லை. ஜூன், ஜூலை மாதத்தில் கிடைக்க வேண்டிய நீர் வரவில்லை. இப்போது உபரி நீரை தான் தருகின்றனர். அது தவிர ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் விதத்தில், முதல்வர் கர்நாடகாவுக்கு செல்வேன் என்கிறார், ஆனால் கர்நாடக முதல்வர் வேண்டாம் என்று கூறுகிறார். எந்த அளவுக்கு இது தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் எண்ணிப் பார்க்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச் செயலாளர்
வேளாண் பட்ஜெட் குறித்து தனது கருத்தை தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, "முதல்வர் அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளாக இருந்து தான் இன்று தேமுதிக பொதுச் செயலாளராக உள்ளேன். முதல்வர் நினைத்தால் இந்த ஜென்மத்திலேயே விவசாயிகளுக்கு நல்லது செய்ய முடியுமே.
பட்ஜெட்டில் வாசிக்கப்பட்ட அனைத்தும் செயல் வடிவம் பெற வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் குறித்து அறிவிப்பு இல்லை. நெல் கதிர்கள் கிடங்குகள் இல்லாமல் திறந்தவெளியில் உள்ளன. இது குறித்த அறிவிப்பு இல்லாததை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. மேலும் உப்பளங்கள் குறித்தும் அவர்களின் பாதிப்பு குறித்தும் பேசவே இல்லை" என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























