'சரசர சார காத்து' - ஜிப்ரானுக்கு தனது இசையில் பிடித்த 10 பாடல்கள்

பட மூலாதாரம், X/Ghibran
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். அந்தப் படத்தில் இடம் பெற்ற சர சர சாரக்காத்து, போறானே போறானே, ஆனா ஆவன்னா, செங்க சூலைக்காரா உள்ளிட்ட பாடல்கள் வெற்றியடைய, முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார். நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களிலும் அவரது பாடல்கள் பிரபலமாகின.
கமல்ஹாசனின் 'பாபநாசம்', 'தூங்காவனம்', உத்தமவில்லன் மற்றும் 'விஸ்வரூபம் 2' ஆகிய நான்கு படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றினார் ஜிப்ரான்.
இந்தப் படங்களை தவிர குட்டிப்புலி, தீரன் அதிகாரம் ஒன்று, அறம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தார். தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்திக்கும் சென்றார்.
பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் முத்திரை பதித்தார் ஜிப்ரான்.
குறிப்பாக, ராம்குமார் இயக்கிய ராட்சசன் படத்தில் அவரின் தீம் மியூசிக் வெகு பிரபலம். பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் ஜிப்ரான் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது.

பட மூலாதாரம், ghibranofficial
7 வயது முதல் இசை ஆர்வம்
ஜிப்ரானுக்கு 7 வயதிலேயே இசை மீது ஆர்வம் வந்துள்ளது. 8 ஆவது வயதில் கிரேக்க இசைக்கலைஞர் யன்னியின் கின்னரப்பெட்டி வாசிப்பைக் கேட்டு அதில் அதிக நாட்டம் கொண்டார்.
இசைப்பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருசில தடங்கல்களால், கின்னரப்பெட்டி வகுப்பிற்குச் செல்லாமல் மாறாக பால் அகஸ்த்தின் என்பவரிடம் கிளபம் வாசிக்கக் கற்றுக் கொண்டார்.
பின்னர் சென்னையில் சொந்தமாக ரிக்கார்டிங் ஸ்டூடியோ உருவாக்கினார். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார். தான் சம்பாதித்த பணத்தை இசைக்கருவிகள் வாங்கவும், இசைக்காகவுமே அதிகம் செலவழித்து இருக்கிறார்.
அவர் இசையமைத்த பல விளம்பரங்கள் ஹிட்டாக, நூற்றுக்கணக்கான விளம்பரங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருந்தார்.
அந்தச் சமயத்தில் இன்னும் இசை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இசை படிக்க சிங்கப்பூர் சென்றார். பின்னர் சென்னை திரும்பியவர் தனது நண்பரான சற்குணம் மூலமாக வாகை சூடவா படத்தில் இசையமைப்பாளர் ஆனார்.
தான் இசையமைப்பாளர் ஆனது குறித்து ஒரு பேட்டியில் ஜிப்ரான் இப்படி குறிப்பிடுகிறார்.
''நானும் சாதாரண மனிதன்தான். சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்த கோயம்புத்தூர்காரன். இங்கே சாதிக்க திறமையும், திறமையை வெளிப்படுத்த சரியான இடமும்தான் அவசியம். பத்தாவது படிக்கும்போது, அப்பாவுடைய பிசினஸ் நஷ்டமாகிடுச்சு.
கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு வந்துட்டோம். படிப்பு 10-ஆம் வகுப்புடன் நின்றுபோனது. ஒரளவு இசை தெரியும் என்பதால் விளம்பரம், ஜிங்கிள்ஸ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். ஐந்து வருடங்களுக்குள் 800-க்கு மேற்பட்ட விளம்பரங்களுக்கு மியூசிக் பண்ணினேன். நிறைய சம்பாதித்தேன்.
சொந்தமாக வீடு வாங்கினேன். அதன்பிறகு தான் கல்வியின் தேவை புரிந்தது . அப்புறம், பிரைவேட்ல ப்ளஸ் டூ படிச்சேன். மீண்டும் இசை படிக்கணும்ங்கிற ஆர்வத்துல சொந்த வீட்டை வித்து, சிங்கப்பூர் போய் மியூசிக் படிச்சேன்.
இந்தியா வரும்போது, முன்பு இருந்த என் கிளையன்ட்ஸ் யாருமே, என் தொடர்பில் இல்லை. அப்புறம் மீண்டும் கஷ்டப்பட்டு போராடி வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனேன்." எனக் கூறியிருக்கிறார்.
இதுவரை 50-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிப்ரானுக்கு இன்று பிறந்தநாள்.
சிரிக்கும் புத்தரைப் போல இருந்தார் - கார்த்திக் நேத்தா

பட மூலாதாரம், karthiknetha_official/instagram
ஜிப்ரான் இசை, பாடல்கள் குறித்து அவருடன் பல படங்களில் பணியாற்றிய கவிஞர் கார்த்திக் நேத்தா பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இயக்குநர் சற்குணம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். வாகை சூட வா படப் பாடலுக்காக அவரைச் சந்தித்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அப்போது "சிரிக்கும் புத்தரைப்" போல இருந்தார். 2010 வாக்கில் இரைச்சலைத் தவிர ஏதும் இல்லாத பாண்டி பஜாரில் அவரது ஒலிப்பதிவுக் கூடம் இருந்தது. அங்குதான் அவரை முதன்முதலில் பார்த்தேன்.
வாகை சூட வா படத்திற்கு முன் ஆறு அல்லது ஏழு படங்களில் பாடல் எழுதியிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற என் பாட்டு "போறானே போறானே". அன்றிலிருந்து இன்று வரை அவரது இசைக்கு நான் எழுதிய பாடல்களின் முதல் வரி பெரும்பாலும் அடுக்குத் தொடராக அமைந்தே வந்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால்,என் தாரா என் தாரா, ரோ ரோ ரோசினி, இனிக்க இனிக்க, பேசுகிறேன் பேசுகிறேன், சட்ட சட்ட, வீரா வீரா. இப்படி நிறையப் பாடல்கள். ஏ.ஆர். ரகுமான் - வாலி கூட்டணியில் இப்படி அமைந்து வந்திருப்பதைக் கவனிக்கலாம். நாங்கள் முடிவெடுத்துக்கொண்டு செய்ததில்லை. அதுவாகவே அமைந்தது'' என்கிறார்.
உலக இசை காதலர்
கார்த்திக்நேத்தா மேலும் கூறுகையில் ''அண்ணன் ஜிப்ரானின் இசையைப் பற்றிக் கூறவேண்டுமென்றால் மிக மிக எளிமையான மெட்டாக அமைப்பார். குழந்தைகள் பாடக் கூடிய ரைம்ஸ் போல என்று சொல்லலாம்.
ஆனால் அந்த எளிமையைக் கொண்டு வர அவர் எதிர்கெள்ளும் அகப்பயணம் கடினத்திலும் கடினமானது. ஆழத்திலும் ஆழமானது. இந்துஸ்தானிய இசை, சுஃபி இசை, அரேபிய இசையின் தாக்கம் ஜிப்ரான் அவர்களின் இசையில் தொனிக்கும். உலக இசையின் காதலர் அவர்.
நல்ல கவிதைகளின் ரசிகரும் அவர். புதிது புதிதாக எதையேனும் கற்றுக்கொண்டே இருப்பவர். இசையைத் தாண்டிப் பிற துறைகளின் அறிவும் கொண்டவர்.
பின்னணி இசையமைப்பதில் கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைப்பதாகத் தெரிகிறது. அவரது பின்னணி இசையைக் கேட்கும்போது நீங்களும் நான் உணர்ந்ததையே உணரலாம்.
பழகிய நாள் தொடங்கி இன்று வரை ஆகஸ்டு 12-ஆம் தேதி வந்ததும் என்னிடம் இருந்து அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து செல்லும். அவரிடமிருந்து எனக்கு வாழ்த்து வரும். ஆம். நான் பிறந்ததும் ஆகஸ்ட் 12 தான்.'' என்கிறார்
'லேட்டஸ்ட் இசைக்கருவிகள் வாங்குவது வழக்கம்'

பட மூலாதாரம், ranjithkg/instagram
பாடகர் ரஞ்சித் பிபிசி தமிழிடம் பேசுகையில் '' அவரின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு நெருங்கிய நண்பர். 1998, 1999 காலகட்டத்தில் தான் முதலில் அவரைச் சந்தித்தேன். ஒரு சின்ன பையன், அவரை விட ஒரு மூணு மடங்கு, நாலு மடங்கு பெரிய கீபோர்டை தூக்கிட்டு போகிறவராக அவரைக் கவனித்து இருக்கிறேன். நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பேண்ட்-இல் வாசித்துக்கொண்டு இருந்தோம். நீளமான முடி எல்லாம் வைத்துக் கொண்டு, மிகவும் அமைதியாக இருப்பார், பேசவே மாட்டார்.
கிட்டத்தட்ட அவரைப் பார்க்கும்போது, ரஹ்மான் சாரோட ஒரு பயங்கரமான, வலுவான இன்ஃபுளூயன்ஸ் இருக்கிற ஒரு நபராக தெரிந்தார். அதற்குப் பிறகு பேண்ட்-இல் ஒன்றாக வாசிக்க ஆரம்பித்தபோது தான், அவருடைய உண்மையான திறமை என்னவென்று எனக்குத் தெரிய வந்தது. அவர் ஒரு அற்புதமான கீபோர்ட் கலைஞர். எங்க இசைப் பயணம் கிட்டத்தட்ட ஒன்றாகத் தான் ஆரம்பித்தது என்று சொல்லலாம். அவர்தான் என்னை ஒரு பாட்டு பாட வைத்து முதலில் ரூ. 500 சம்பளமாக கொடுத்தார்.'' என்கிறார்
தொடர்ந்து பேசிய ரஞ்சித், ''நிறைய ஹிட் ஜிங்கிள்ஸ் எல்லாம் நாங்க சேர்ந்து பாடி இருக்கோம் 'வாகை சூடவா' படத்தில் இசையமைப்பாளர் ஆனபோது போறானே பாடலை பாட வைத்தார். நான் எங்க மேடை கச்சேரின்னு சொல்லி போனாலும் இந்தப் பாடலை பாடாம அவர்கள் என்னை விடுவதே இல்லை. அந்த அளவுக்கு இன்னும் பிரபலமான பாடல் சற்குணம் இயக்கிய நையாண்டி, அமரகாவியம் உட்பட பல படங்களில் அவருக்காகப் பாடியிருக்கிறேன்'' .என்கிறார்
இப்ப கூட இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது: நடிகை இனியா

பட மூலாதாரம், iam_ineya
ஜிப்ரான் இசையில் வெற்றி பெற்ற சரசர சாரக்காத்து பாடலில் நடித்த கதாநாயகி இனியா பிபிசி தமிழிடம் பேசுகையில் ''அந்தப் படத்தில் இந்த மாதிரி ஒரு ஹீரோயின் சம்மந்தப்பட்ட பாட்டு வந்து அமைந்தது பெரிய விஷயம். அருமையான பாடலாக அதை ஜிப்ரான் கொடுத்திருந்தார்.
1960 காலகட்டத்தில் சொல்கிற கதை என்பதால், அந்தக் கதைக்கு ஏத்த மாதிரி அவ்வளவு இன்பமா, அந்த டைம்ல இருக்குற அந்த ஹிஸ்டாரிகல், பீரியாடிகல் டைம்ல உள்ள அந்தச் சூழலுக்கு ஏத்த மாதிரி உள்ள அதே உணர்வு கிடைக்கிற மாதிரி டியூன்ல அந்தப் பாட்டை கம்போஸ் பண்ணினார்.
சமீபத்தில் கூட அந்தப் பாட்டு இன்ஸ்டாகிராம்ல வைரல் ஆனது. பாடலுக்கு வரிகளும் பிளஸ். ஒரு திட்டத்தோட அந்தப் பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. ஆக்சுவலா சீன்ஸ் எடுத்துட்டு இருக்கும்போதும், திடீர்னு ஒரு மழை வந்துருச்சுன்னா அந்த மழையில போய் நாங்க இறங்கி ஒரு ஷாட் எடுப்போம். வெயில் வரும்போது எடுப்போம். இயல்பாக வந்த வானவில்லில் எடுத்தோம்.
அந்த ஊரில் என்னென்ன அழகு இருக்கிறதோ, அந்தக் கிராமத்தில் என்னென்ன லைவா இருக்கோ, அத வச்சு ஒரு மாண்டேஜ் மாதிரி, ஒரு சாங் மாண்டேஜ் மாதிரி ஒரு சாங் எடுத்தார்கள், பாடல் சூப்பர் ஹிட்டானது. 'காட்டு மல்லிக பூத்திருக்கு' என்ற வரிகளில் கிளாசிகல் டான்ஸராக மூவ்மென்ட் கொடுத்தேன். தலையை அழகாக அசைத்தேன்.
அதற்குக் காரணம், அந்த இசைதான். அந்த படத்தால், பாடலால் எனக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது. எனக்கு 60 வயதானாலும், நான் சினிமாவை விட்டுப் போனாலும், அந்தப் பாட்டை, இசையை, காட்சிகளை யாரும் மறக்கமாட்டார்கள்.
'மரணமே இல்லாம இந்தப் பாட்டு இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் கூட ஜிப்ரான் கவனம் செலுத்தியிருப்பார். பல்லவி, சரணம், அனுபல்லவி எல்லாம் கேட்கும்போது கூட பீல் இருக்கும்'' என்கிறார்.
ஜிப்ரானுக்கு பிடித்த 10 பாடல்கள்
நீங்கள் இசையமைத்த பாடல்களில், உங்களுக்குப் பிடித்த பத்து பாடல்களைச் சொல்ல முடியுமா என்று இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
1) சர சர சாரக்காத்து (வாகை சூடவா)
நான் இசையமைப்பாளராக அறிமுகமான படத்தில் ஹிட்டான பாடல். சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா நடித்த வாகை சூடவா படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. சின்மயி பாடிய இந்தப் பாடலை ரசித்தவர்கள் அதிகம்.
2) என் தாரா என் தாரா(திருமணம் எனும் நிக்காஹ்)
என்தாரா என்தாரா… நீயே என் தாரா… கண்ணாளே காண்கிறேன் பூரா என கார்த்திக் நேத்தா வரிகளில், ஷதாப் ஃபரிடி & சின்மயி குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் என் மனதிற்கு நெருக்கமானது.

பட மூலாதாரம், Think Music India
3) கண்ணுக்குள் பொத்தி வெச்சேன் (திருமணம் எனும் நிக்காஹ்)
சில பாடல்கள் கவித்துவமாக அமையும், விஷூவலும் நன்றாக இருக்கும். அப்படி விஜய் பிரகாஷ், சாதனா சர்கம், சாருலதா மணி & ஆர்.கணேஷ் குரலில் வந்த மெலோடி பாடல். கொலு பின்னணியில் உருவான இந்தப் பாடலை எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காது.
4) யார் அழைப்பது (மாறா)
எனக்குப் பிடித்த சித்ஸ்ரீராம் மெஸ்மரிச குரலில், தாமரை அழகான வரிகளில் உருவான பாடல். இந்தப் பாடலில் ஒரு விதமான ஃபீல் இருக்கும். யார் அழைப்பது, யார் அழைப்பது, யார் குரல் இது என தொடங்கும் வரிகளே இன்னும் அழகு.

பட மூலாதாரம், Think Music India
5) லாலி லாலி (தீரன் அதிகாரம் ஒன்று)
எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ராஜூமுருகன் எழுத, நான் சத்யபிரகாஷ் & பிரகதி குருபிரசாத் இணைந்து பாடினோம்.
6) தாரமே தாரமே(கடாரம் கொண்டான்)
கடாரம்கொண்டான் படத்திற்காக விவேகா எழுத, சித்ஸ்ரீராம் பாடிய அற்புதமான பாடல். நாசர் மகன் அபியும், கமல்ஹாசன் மகள் அக் ஷராவும் நடித்து இருப்பார்கள். அப்பா படத்திலும், மகள் படத்திலும் பணியாற்றியது மகிழ்ச்சி.
7) ஏய்யா என் கொட்டிக்கார (பாபநாசம்)
நா. முத்துக்குமார் வரிகளில் சுந்தர் நாராயண ராவ் & மாளவிகா அனில்குமார் பாடிய பாடல். கமல்ஹாசன் அகல விழிகள் பேசுவதாக பாடல் ஆரம்பிக்கும். ஓர் அன்பான குடும்பத்தின் ஆனந்தத்தை சொல்லும் பாடல்.

பட மூலாதாரம், Think Music India
8) குறு குறு கண்ணாலே (வத்திக்குச்சி)
குறு குறு கண்ணாலே… காதலை சொன்னாளே… சிறு சிறு சொல்லாலே… சிறகுகள் தந்தாளே… என நா.முத்துகுமார் வரிகளில் தொடங்கும் பாடல். திலீபன், அஞ்சலி நடித்த துள்ளலான காதல் பாடல்.
9) தோரணம் ஆயிரம் (அறம்)
நயன்தாரா நடித்த அறம் படத்தில் வைக்கம் விஜயலட்சுமி குரலில் கணீர் என ஒலிக்கும் பாடல். உமாதேவி எழுதியிருக்கும் இந்தப் பாடல் ஒரு எளிய குடும்பம், அவர்களின் அன்பு, வாழ்க்கை எனப் பல விஷயங்கள் காட்சியாக விரியும்.
10) இரணியன் நாடகம் (உத்தமவில்லன்)
சினிமாவில் நாடக பாணியில் பாடல்களை உருவாக்குவது கடினம். அதிலும் தெய்யம் என்ற கேரள கலை வடிவ பின்னணியில் இருந்த பாடல் இருக்கும்.
கமல்ஹாசன் நடிப்பு, அவரின் நடன அசைவுகள், பாடல் வரிகள், அதில் வரும் சில குறும்புகள் என எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.

பட மூலாதாரம், Sony Music South Vevo
ஜிப்ரான் இசையமைத்த படங்களில் ராட்சசனுக்கு தனி இடமுண்டு. குறிப்பாக, வில்லனுக்கு அவர் உருவாக்கிய அந்த பியானோ தீம் மியுசிக் பரபரப்பாக பேசப்பட்டது. ராட்சசன் பட இயக்குனர் ராம்குமாரிடம் ஜிப்ரான் பற்றி பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
''ராட்சசனை பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னாடியே நான் அவருக்கு ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன். அதனால் இசையில் பிளான் செய்வதற்கு எளிதாக இருந்தது. என்ன மாதிரி இசை வர வேண்டும் என்று தெளிவாக இருந்தோம். குறிப்பாக, மிகவும் வணிக பாணியில் செய்ய வேண்டாம் என நினைத்தோம். அதிக இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் குறைவாகவும், ஆனா அதே நேரம் மிகவும் ஆழமாகவும் செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தோம். அதனால் சிறந்த இசையைக் கொண்டு வர முடிந்தது. இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்த பியானோ இசை தனித்துவமானது. அது ரசிகர்களை பயமுறுத்தும் விதத்தில் அமைத்திருந்ததது. அந்த அளவுக்கு அந்த நுட்பமா அதுல வேலை செஞ்சிருந்தார் ஜிப்ரான்'' என்கிறார் ராம்குமார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































