You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எம்.எல்.ஏக்களுக்கு அரசு வாகனம்; விவாதப் பொருளான விஜயின் அறிவிப்பு - பொதுமக்கள் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வாகனம், வாகனப் படி வழங்குவது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பு அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், விசிக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி மணி வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, 110 விதியின் கீழ் வாகன அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. அரசு வாகனம் வழங்கப்படுவது குறித்து பேசிய அவர்கள், தங்களிடம் சொந்த வாகனம் இருந்தாலும், அரசு வாகனத்தில் செல்லும்போது முக்கியத்துவமும், உரிய மரியாதையும் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியும், இந்த விவகாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அரசு வாகனம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கலாம் என்பதே தனது நிலைப்பாடு என்றும், தனக்கு ஏற்கனவே சொந்தமாக கார் இருப்பதால், தற்போது அரசு வாகனம் தேவையில்லை எனத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இதே விவகாரம் குறித்து சௌமியா அன்புமணி மற்றும் சிபிஐ சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்துவிடமும் பிபிசி தமிழ் பேசியது.
இதனிடையே, பத்திரிகையாளர் குபேந்திரன், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அவசியமற்றது எனக் கருத்து தெரிவித்துள்ளார். சில சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் சொந்தமாக கார் இல்லாமல் இருக்கலாம் என்றாலும், கார் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விவகாரம் இவ்வளவு பேசுபொருளாக மாறியிருக்காது என அவர் கூறுகிறார்.
மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
மறுபுறம், திமுகவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் பேசியுள்ளனர்.
கட்சி தலைமையின் முடிவுகளுக்கு தாங்கள் கட்டுப்படுவதாகக் கூறிய அவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், தொகுதிகளில் கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பயணம் செய்து மக்களைச் சந்திக்க வேண்டிய சூழலில், அரசு வாகனங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, சட்டப்பேரவையில் கார் வழங்குவது தொடர்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்க அளித்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாகனம் வழங்குவது தொடர்பான இந்த அறிவிப்பு குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.