You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கைதானவர் சிறையில் உயிரிழப்பு... சிகிச்சையில் அதிகாரி' - பழனி நில விவகாரத்தில் என்ன நடக்கிறது?
பழனியில் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமாக 1.35 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த 1888-ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமி என்பவருக்குக் குப்புசாமி மணியக்காரர் என்பவர் தானமாக இந்த நிலத்தை வழங்கியுள்ளார்.
'நிலத்தில் மடம் கட்டவும் இந்துமதக் கோட்பாடுகளை பரப்பவும் இவை எழுதிக் கொடுக்கப்பட்டது' என, பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியுள்ளார்.
மலையின் அடிவாரத்தில் பூங்கா சாலையில் அமைந்துள்ள இந்த நிலத்தில் பக்தர்கள் தங்குவதற்கும் வாகன நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தைக் கடந்த சில ஆண்டுகளாக தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்வதற்கான முயற்சிகள் நடப்பதை அறிந்து சார்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் கோவில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, மடத்தின் சொத்துகளை பாதுகாக்கும் வகையில் தக்காராக பழனி கோவிலின் இணை ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 'நீதிமன்ற உத்தரவுப்படி மடத்துக்குத் தொடர்பில்லாத நபர்கள் மூலம் எந்தவித பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம்' என, மாவட்ட இணைப் பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில் கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், கடந்த ஜூலை 6 ஆம் தேதி மடத்துக்குச் சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் தனி நபர்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பழனி தண்டாயுதபாணி கோவிலின் கண்காணிப்பாளர் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. "நிலத்தை வாங்கிய நபர்கள், விற்றவர்கள், சார் பதிவாளர் உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன" என, பிபிசி தமிழிடம் முன்பு பேசிய பழனி டி.எஸ்.பி செல்வகுமார் குறிப்பிட்டார்.
மடத்தின் நிலம் தனி நபர்களுக்கு விற்கப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சிகள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
'மின்னணு ஆதாரங்கள் கிடைத்துள்ளன'
ஆகஸ்ட் 6-ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
'விசாரணையில், சொத்து தொடர்பான சர்ச்சைக்குரிய விற்பனை ஆவணம் ஜூலை 3 ஆம் தேதி பழனி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்காக தாக்கல் செய்யப்பட்டதும் அப்போது பொறுப்பில் இருந்த அலுவலரால் ஆவணம் நிலுவையில் வைக்கப்பட்டதும் தெரியவந்தது' என, காவல்துறை தெரிவித்துள்ளது.
'சார்-பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பில் ஜஸ்டின் மணிகண்டன் வந்தபோது ஜூலை 6 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். விசாரணையில் சேகரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், பதிவுத்துறை ஆவணங்கள், இதர மின்னணு ஆதாரங்கள் கிடைத்துள்ளன' என்கிறது காவல்துறை.
அந்தவகையில், ஜஸ்டின் மணிகண்டனின் பங்கு மற்றும் சர்ச்சைக்குரிய ஆவணப் பதிவுடன் தொடர்புடைய பிற நபர்கள் உடனான அவரது தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
மருத்துவ சிகிச்சையில் சார்-பதிவாளர்
வழக்கில் ஏற்கெனவே முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி மற்றும் அன்வர்தீன் ஆகியோர் கடந்த ஜூலை 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
இவர்களை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு சிபிசிஐடி போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததால் திண்டுக்கல் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மூன்று பேரையும் மதுரை சிறையில் அடைத்தனர்.
கைதான ஜஸ்டின் மணிகண்டனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு திண்டுக்கல் ஜே.எம் 1 நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், தலை சுற்றல், ரத்த அழுத்தம், நெஞ்சுவலி ஆகியவை காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக சிறைத்துறை நிர்வாகம் கூறியுள்ளது.
"சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன" - டி.டி.வி.தினகரன்
ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதும் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கறிஞர் உயிரிழந்ததும் அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய நபர் உயிரிழந்துவிட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன" என, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
"சிபிசிஐடி காவல் முடிந்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்த பின்னணியில் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்தாரா... உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன" எனவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும் த.வெ.க அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், 'அன்வர்தீன் சிறையில் உயிரிழந்தது சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த வழக்கில் சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளைத்துக்குக் கொண்டு வரவேண்டும்' எனக் கோரியுள்ளார்.
'உடல்ரீதியான பிரச்னைகள் இருந்தன'
"வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிறையில் இருந்து போன்கால் வந்தது" என்கிறார் முத்துக்கருப்பன்.
இவர் வழக்கறிஞர் அன்வர்தீனிடம் குமாஸ்தாவாக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அன்வர்தீனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அன்வர்தீனின் மனைவி மும்தாஜிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றபோது அதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து மேலதிக விவரங்களை பிபிசி தமிழிடம் முத்துக்கருப்பன் பகிர்ந்தார்.
" 2018 ஆம் ஆண்டில் இருந்து பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அவருக்கு இருந்தன. நரம்பியல் பிரச்னைக்காக மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார்" என்கிறார் அவர்.
அன்வர்தீனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்குத் திருமணம் நடந்துவிட்டது. மற்றொருவர் சட்டம் படித்து வருகிறார்.
"வழக்கைப் பொறுத்தவரை, அறக்கட்டளைக்கான பத்திரம் தொடர்பான பணிகளில் மட்டுமே அவர் ஈடுபட்டார். நிலத்தைக் கிரயம் செய்யும் விவகாரத்துக்குள் அவர் செல்லவில்லை. இதனால் எந்தப் பிரதிபலனும் அவர் அடையவில்லை" என்கிறார் முத்துக்கருப்பன்.
அடித்து துன்புறுத்தவில்லை... ஆனால்?'
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிபிசிஐடி காவல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அன்வர்தீன், வெள்ளைத்துரை, முருகதாஸ் ஆகிய மூவரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். இதனைக் குறிப்பிட்டுப் பேசும் முத்துக்கருப்பன், "திங்கள்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு போடுவதற்குத் திட்டமிட்டிருந்தோம். அதற்குள் அவர் இறந்துவிட்டார்" என்கிறார்.
"காவலில் அவரை அடித்துத் துன்புறுத்தியதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறும் அவர், "அவர் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. அதனால் உடலைப் பெற்றுக் கொள்ளலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தனர்" எனக் கூறுகிறார்.
"அதேநேரம், நீதிமன்றக் காவலில் கடந்த பத்து நாள்களாக முறையான மருந்து, மாத்திரைகளை அவர் எடுத்திருப்பாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது" என்கிறார்.
இதனை முழுமையாக மறுக்கிறார், மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சதீஷ்குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த 29 ஆம் தேதி மத்திய சிறைக்கு அவர் வந்தார். அன்றைய நாளில் இருந்து நான்கு நாட்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார்" என்கிறார்.
"ஆகஸ்ட் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்களும் சிபிசிஐடி காவலில் இருந்தார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்குப் படுக்கை ஒன்றை சிபிசிஐடி போலீசார் ஏற்பாடு செய்து தந்துள்ளனர். அவருடன் இருந்த குற்றம் சுமத்தப்பட்ட நபரிடம் விசாரிக்கும்போது இதனைக் கூறினார்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "பால் உள்பட அவர் கேட்டவற்றை சட்டத்துக்குட்பட்டு வாங்கிக் கொடுத்தோம். நேற்று (ஆகஸ்ட் 7) மாலை 6 மணிக்கு சிறைக்குள் வந்தார்." எனத் தெரிவித்தார்.
"பக்கவாதத்தால் அவரது வலது கை செயல்பாட்டில் இல்லை" எனக் கூறிய சதீஷ்குமார், "அவர் சற்று தாங்கியே நடப்பார். பத்து ஆண்டுகளாக சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தேவையான மாத்திரைகளை வழங்கினோம். அதற்கான ஆதாரங்கள் உள்ளன" என்கிறார்.
"வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் படபடப்பு இருப்பதாகக் கூறினார். உடனே அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்" என அவர் குறிப்பிட்டார்.
"நீண்டகால நோய்கள் மற்றும் வழக்கு தொடர்பான மனஅழுத்தம் போன்றவை இறப்புக்குக் காரணமாக இருக்கலாம். அவர் சிறைக்குள் மாலை ஆறு மணிக்கு வந்தது முதல் இரவு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றது வரையிலான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன" என்கிறார் எஸ்.பி சதீஷ்குமார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு