ஒன்றாக சந்திக்கும் துருக்கி - பாகிஸ்தான் - சௌதி அரேபியா தலைமைகள்; ராணுவக் கூட்டணி அறிவிப்பா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை நடந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செளதி அரேபியாவை வந்தடைந்திருந்தார்.
நள்ளிரவுக்குள், துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்துவானும் செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதும் தெளிவானது.
மேற்கு ஆசியாவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டது. இந்தியா இஸ்ரேலின் நட்பு நாடு, அதே வேளையில் பாகிஸ்தான் இஸ்ரேல் என்ற ஒன்று இருப்பதையே ஏற்பதில்லை.
துருக்கியுடன் பாகிஸ்தானின் நட்பும் இந்தியாவுக்கு சாதகமாகப் பார்க்கப்படுவதில்லை. செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்கெனவே உள்ளது.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு எதிரான ஆக்கிரமிப்பை இரு நாடுகளும் தங்களுக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ளும். தற்போது இந்த ஒப்பந்தத்தில் துருக்கியும் சேருவது பற்றி பேசப்பட்டு வருகிறது.
செளதி அரேபியாவிடம் நிதி பலம் உள்ளது. பாகிஸ்தானிடம் அணுசக்தி திறன், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் மனித வளங்கள் உள்ளன, அதே நேரத்தில் துருக்கியிடம் ராணுவ அனுபவம் உள்ளது மற்றும் வளர்ச்சியடைந்த பாதுகாப்பு துறையும் உள்ளது.
துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் வெள்ளிக்கிழமை செளதி அரேபியா சென்றடைகிறார். அங்கு அவர் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோரைச் சந்திப்பார்.
ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமையே செளதி அரேபியாவை சென்றடைந்தார்.
இந்தச் சந்திப்பு, இந்த மூன்று பிராந்திய சக்திகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நேரத்தில் நடக்கிறது.
துருக்கி அதிபரின் செய்தித் தொடர்பாளர் புர்ஹானட்டின் துரான் வியாழக்கிழமை கூறுகையில், "இந்த ஒரு நாள் பயணத்தின் போது எர்துவான், முகமது பின் சல்மான் மற்றும் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருடன் முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்பார்" என்று தெரிவித்தார்.
''எங்கள் அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒருநாள் அதிகாரப்பூர்வ பயணமாக செளதி அரேபியா செல்வார்.
இந்தப் பயணத்தின் போது அதிபர் எர்துவான், செளதி அரேபியாவின் இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத் தவிர, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பையும் சந்திப்பார்" என்று துரான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
என்ன நடக்கப் போகிறது?
ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக செளதி அரேபியாவை சென்றடைந்தார். அவருடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதிநிதிகள் குழுவும் சென்றுள்ளது. அவர்களின் பேச்சுவார்த்தையில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலை துருக்கி வெளியிடவில்லை என்றாலும், மூன்று தலைவர்களும் பிராந்திய பாதுகாப்பு, கடல்சார் அச்சுறுத்தல்கள், இரான் போர் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று கருதப்படுகிறது.
கத்தாரின் லூசைல் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணர் முகமது மஜார் ஷாஹின், "பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட துருக்கி, செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ராணுவக் கூட்டணி இந்தச் சந்திப்பில் அறிவிக்கப்படலாம்" என்று நம்புகிறார்.
செளதி ஊடகங்களிலும் இதே ஊகங்கள் பரவுவதாக அவர் கூறுகிறார்.
முகமது மஜார் ஷாஹின் எக்ஸ் தளத்தில், ''இந்த ஊகங்கள் உண்மையாக நிரூபணமானால், மத்திய கிழக்கு ஒரு புதிய சகாப்தத்தில் நுழையக்கூடும், அங்கு பல விஷயங்கள் மாறக்கூடும்'' என்று எழுதியுள்ளார்.
செங்கடல், பாப் அல்-மந்தெப் நீரிணை மற்றும் ஏடன் வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பதற்காக செளதி அரேபியா ஒரு பல்தேசிய கடல்சார் பாதுகாப்பு கூட்டணியை அறிவித்த ஒரு வாரத்துக்குப் பிறகு எர்துவானின் இந்தப் பயணம் அமைகிறது. ஏமனின் இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேட்டோ (NATO) உறுப்பினரான துருக்கி மற்றும் அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் செளதி அரேபியா தலைமையிலான இந்த முயற்சிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை தெரிவித்த 14 நாடுகளில் அடங்கும்.
இந்தக் கூட்டணியில் துருக்கி நேரடிப் பங்கு வகிக்குமா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், கடந்த மாதம் ஹூதிகள் செளதி அரேபியாவுக்கு விடுத்த முற்றுகை அச்சுறுத்தல்களை துருக்கி கண்டித்ததுடன், செங்கடலில் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து ரியாத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
பயணத்தின் பின்னணிச் செய்தி
துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹாகான் ஃபிடான், ஜோர்டானில் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் பத்ர் அப்தெல்அட்டி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் மற்றும் செளதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகே இந்தப் பயணம் நடக்கிறது. இது நான்கு நாடுகளின் கூட்டணியின் ஐந்தாவது சந்திப்பாகும்.
மார்ச் மாதம் ரியாத்தில் நடந்த சந்திப்புகளுக்குப் பிறகு 'ஆர்-4 வழிமுறை' (R-4 Mechanism) தொடங்கியது. இதன் நோக்கம் அமெரிக்கா-இரான் போரின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவது, ராஜீய முயற்சிகளில் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள துருக்கி, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது ஆகும்.
இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரிக்க விரிவான பிராந்திய ஆதரவைத் திரட்ட துருக்கி முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. பிராந்தியத்தில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதன் அதிகரித்து வரும் செல்வாக்கு நிலையற்ற தன்மையை உருவாக்குவதாக துருக்கி நம்புகிறது.
வியாழக்கிழமை அங்காராவில் சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் அசாத் அல்-ஷிபானியுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஹாகான் ஃபிடான் கூறுகையில், "பிராந்திய ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் முக்கிய தரப்புகளில் இஸ்ரேலும் ஒன்று" என்றும், அது விரிவாக்க லட்சியங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
வளைகுடா நாடுகளுடன் பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்கவும் கூட்டு பாதுகாப்பு உற்பத்தியை விரிவுபடுத்தவும் துருக்கி முயன்று வரும் நேரத்தில் இந்த அதிகரித்து வரும் பிராந்திய ஒத்துழைப்பும் வெளிப்படுகிறது.
2023ஆம் ஆண்டில், துருக்கியின் பாதுகாப்பு நிறுவனமான பேகாரிடமிருந்து (Baykar) ட்ரோன்களை வாங்க செளதி அரேபியா ஒரு பெரிய ஒப்பந்தம் செய்தது. இதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே ஆளில்லா வான்வழி ஊர்தி உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் செளதி அரேபியாவில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள் துருக்கியின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதித் தொகுப்பாகக் கருதப்படுகின்றன.
துருக்கியின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள், துருக்கிக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 8.5 பில்லியன் டாலர்களை எட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வேகமான முறையில் மேம்பட்டு வரும் உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒரு முக்கியமான அடித்தளமாக உருவெடுத்துள்ளது.
எர்துவான் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் செளதி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். அந்தப் பயணத்தின்போது, அவர் ரியாத்தில் இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்தார், அடுத்த நாள் எகிப்து பயணமாகப் புறப்பட்டார்.
துருக்கி இந்தக் கூட்டணியின் உறுப்பினராகக் கையெழுத்திட்டால், அது சுன்னி முஸ்லிம் உலகின் தலைமைக்காக முன்னதாகப் போட்டியாளர்களாக இருந்த துருக்கி மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும்.
பல ஆண்டு கசப்பான உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளிய பிறகு, இரு நாடுகளும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் பணியாற்றி வருகின்றன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























