விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா

முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய மனுவை திரும்பப் பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இதுவரை மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஒருமுறைகூட விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா பிரபலமானவர்கள் என்பதால் காணொளி வாயிலாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் கோரப்பட்டது, இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இன்று நடைபெற்ற விசாரணைக்கு சங்கீதா காணொளி வாயிலாக ஆஜரான நிலையில். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவதால் முதலமைச்சர் விஜய் ஆஜராக முடியவில்லை.
இந்நிலையில், சங்கீதா தரப்பில் இந்த வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்து அதற்கான காரணங்களையும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சங்கீதாவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்
விவாகரத்து வழக்கை வாபஸ் பெற சங்கீதா கோரியுள்ள நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட குடும்பநல நீதிபதி சுஜாதா, வழக்கை வாபஸ் பெறுவதற்கான மனுவை தாக்கல் செய்த மனுதாரர், இந்த வழக்கை மேலும் தொடர விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்மனுதாரர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் இந்த மனுவை நீதிமன்றம் பதிவு செய்துகொள்கிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மனுதாரருக்கு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் புதிய மனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்த நீதிபதி வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























