ராணுவ வீரரின் கொலைக்காக பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹ்ரங் பலோச் யார்?

    • எழுதியவர், முகமது காசிம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
    • இருந்து,
    • எழுதியவர், ஃபெலன் சாட்டர்ஜி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், கட்டாயக் கடத்தல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னணி மனித உரிமை ஆர்வலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷபீர் அகமது என்ற துணை ராணுவப் படை வீரர் மீதான கொடூரத் தாக்குதலுக்கும், அவரது மரணத்திற்கும் காரணமான வன்முறைக் கும்பலைத் தூண்டியதாக இவர்கள் இருவர் மீதும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பலோச் யக்ஜேதி கமிட்டியின் தலைவரான டாக்டர் மஹ்ரங் பலோச் மற்றும் சக ஆர்வலர் சிப்கத்துல்லா ஆகியோர் மீதான கொலை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனினும், இக்குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த ஆர்வலர்கள், நீதிமன்ற விசாரணையைப் புறக்கணித்தனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்கள், ஜூன் 12 முதல் மாவட்டச் சிறையிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு துறைமுக நகரான குவாடரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மஹ்ரங் பலோச் 'ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றினார்' என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து, 30 முதல் 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது தடிகளாலும் கற்களாலும் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலின்போது ஷபீர் அகமது என்ற பாதுகாப்புப் படை வீரர் மற்றவர்களிடமிருந்து தனித்துவிடப்பட்டதாகவும், பின்னர் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பான வழக்கில் குவெட்டாவின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், "டாக்டர் மஹ்ரங் பலோச் மற்றும் சிப்கத்துல்லா ஆகியோர் பலோச் யக்ஜேதி கமிட்டியின் சட்டவிரோதக் கூட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டதுடன், அதிகாரியைக் கொலை செய்வதில் இருவருக்கும் ஒரே மாதிரியான உள்நோக்கம் இருந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன், உயிரிழந்த ஷபீர் அகமதுவின் வாரிசுகளுக்கு 2 லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, டாக்டர் மஹ்ரங் பலோச் மற்றும் சிப்கத்துல்லா ஆகியோர் ஏற்கனவே வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் மஹ்ரங் பலோச்சை விடுவிக்கக் கோரிக்கை

இந்தத் தீர்ப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பலுசிஸ்தானில் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடிப்படை உரிமைகளுக்காக வாதிடுவதையும், தீவிரவாதத்தையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கும் கொள்கையை அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன் விளைவாக, நிர்வாக மற்றும் நீதித்துறை முடிவுகள் ஒருதலைப்பட்சமாகவும், பாரபட்சமாகவும் அமைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.

மஹ்ரங் பலோச்சின் சகோதரியும் வழக்கறிஞருமான நாதியா பலோச் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் சட்டக் குழுவினர் கூறுகையில், தங்களுக்கு சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கான உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, இந்தத் தீர்ப்பை நிராகரித்துள்ளனர்.

மேலும் இந்த விசாரணையை, "முழு ரகசியத்தன்மையுடன்" நடத்தப்பட்ட "நீதியின் கேலிக்கூத்து" என்று அவர் வர்ணித்தார். காணொளி இணைப்பு மூலம் சாட்சியம் அளித்த நேரில் கண்ட சாட்சிகளை பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்களால் முறையாகக் குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பர்க்கும் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கு விசாரணை 'முற்றிலும் ரகசியமாக' நடத்தப்பட்ட ஒரு 'நீதிக்கேடு' என்று சாடியுள்ளார். மேலும், பாகிஸ்தான் அரசு மாற்றுக்கருத்துடைய குரல்களைக் குற்றமாகச் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், பலுசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அரசுத் தரப்பிடம் இதற்கான 'மறுக்க முடியாத ஆதாரங்கள்' உள்ளதாகவும், இந்த வழக்கு அரசியல் காரணங்களால் தூண்டப்பட்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

டாக்டர் மஹ்ரங் பலோச் மற்றும் சிப்கத்துல்லா ஷா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சர்வதேச மனித உரிமைகள் அறக்கட்டளை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தீர்ப்பு நீதியை வெளிப்படையாக மீறும் செயலாகும் மற்றும் பாகிஸ்தானின் சட்டத்தின் ஆட்சிக்கு விழுந்த பலத்த அடியாகும்" என்று கூறியுள்ளது.

"BYC அமைப்பின் தலைவரான டாக்டர் மஹ்ரங் பலோச், நீண்ட காலமாக பலோச் மக்களின் அச்சமற்ற மற்றும் அமைதியான குரலாக விளங்கி வருகிறார். பலுசிஸ்தானில் நிகழும் கட்டாயக் கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் துணிச்சலுடன் பிரசாரம் செய்து வருகிறார்" என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டாக்டர் மஹ்ரங் பலோச்சை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் அறக்கட்டளை பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

யார் இந்த டாக்டர் மஹ்ரங் பலோச்?

மஹ்ரங் பலோச் கடந்த 2024ஆம் ஆண்டிற்கான பிபிசியின் '100 செல்வாக்குமிக்க பெண்கள்' பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டில், பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகளால் மஹரங் பலோச்சின் தந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அதில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்தே, மஹ்ரங் பலோச் தனது போராட்டப் பிரசாரத்தைத் தொடங்கினார்.

2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அவர் நூற்றுக்கணக்கான பெண்களுடன் இணைந்து பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு 1,600 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகப் பயணம் செய்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தப் பேரணியின் போது அவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டார்.

அவரது அமைப்பான பிவொய்சி (BYC - Baloch Yakjehti Committee), பலுசிஸ்தானில் நிகழும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதற்கும், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

எனினும், பிவொய்சி அமைப்பிற்கு பலோச் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகப் பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை பிவொய்சி அமைப்பு முற்றிலும் மறுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தங்களது உறவினர்களைக் கடத்திக் கொலை செய்துவிட்டதாகப் பலுசிஸ்தான் மாகாண போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.

அதன் பிறகு, அவர் பலூச் யக்ஜெஹ்தி கமிட்டி (BYC) என்ற தனது சொந்த மனித உரிமைக் குழுவின் கீழ் ஒரு முக்கிய மனித உரிமை ஆர்வலராக உருவெடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு