'எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு, தனிக் கட்சித் தொடக்கம்' - கே.பாக்யராஜ் கடந்து வந்த பாதை

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்த் திரை உலகின் மூத்த கலைஞரான கே.பாக்யராஜ் இன்று காலமானார். இயக்குநர், நடிகர், எழுத்தாளர் மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் பன்முகத் தன்மை கொண்டவராக அவர் செயல்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாக்யராஜை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாக்யராஜ் உடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

எழுத்தாளராக, உதவி கதாபாத்திரமாக தொடங்கிய பாக்யராஜின் பயணம் 'தற்செயல் ஹீரோ' ஆக பரிணமித்து தனித்துவமான இயக்குநர், குணச்சித்திர நடிகர் என்கிற நிலை வரை உயர்ந்தது.

திரை உலகம் என்பதையும் தாண்டி அரசியல் களத்திலும் தனிக் கட்சித் தொடங்கி பயணித்த பாக்யராஜ் இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

கோவை ராஜா பாக்யராஜ் ஆன கதை

ஈரோடு மாவட்டம் (அப்போது ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக இருந்தது) வெள்ளாங்கோவில் கிராமத்தில் பிறந்தவர் பாக்யராஜ். சினிமா கனவோடு சென்னைக்கு வந்தவர் இயக்குநர் பாரதிராஜாவிடம் அறிமுகமாகி உதவி இயக்குநராக வேலை செய்யத் தொடங்கினார்.

16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் பாக்யராஜ். சினிமாவில் பணியாற்றத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தனது இயற்பெயரை வெளிப்படுத்தாமல் 'கோவை ராஜா' என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார் பாக்யராஜ். அவருடைய குருவான பாரதிராஜாவுக்கும் இவரை 'கோவை ராஜா' என்றே தெரிந்திருந்தது.

படத்தின் பணிகள் முடிந்து இறுதியில் வரும் பெயர் பட்டியலில் அவரின் இனிஷியல் என்ன வர வேண்டும் எனக் கேட்கப்பட்டபோது தான் தனது முழு பெயரை வைக்குமாறு கூறியிருக்கிறார்.

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக சென்னையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய பாக்யராஜ் அதனை விவரித்துப் பேசினார்.

"நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக என் அம்மா என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். படம் வெற்றிகரமாக முடிந்ததால் என் அம்மா வைத்த 'பாக்யம்' அதாவது அதிர்ஷ்டம், என்பதையும் ராஜா உடன் சேர்த்து வைக்கச் சொன்னேன். படத்தின் இறுதி பதிப்பைப் பார்துவிட்டு பாரதிராஜாவும் யார் இந்த பாக்யராஜ் எனக் கேட்டார். அப்போது பாக்யராஜ் என்கிற எனது இயற்பெயர் அனைவருக்கும் தெரியவந்தது," என்றார்.

அதன்பிறகு கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பாரதிராஜா உடன் இணைந்து பணியாற்றினார்.

கிழக்கே போகும் ரயில்' படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடித்தார்.

கிழக்கே போகும் ரயில் படத்தின் படப்பிற்காக ஒரு கழுதையை அழைத்து வருமாறு தான் பணிக்கப்பட்டிருந்ததாக கூறிய பாக்யராஜ், அந்தப் படம் போஸ்டர்களில் வந்ததைத் தொடர்ந்து தனது உறவினர்கள் எள்ளி நகையாடியதாகத் தெரிவித்தார்

"அந்த நேரத்தில் எனது இயக்குநர் (பாரதிராஜா) என்னை ஒருநாள் கதாநாயகன் ஆக்குவார் என அம்மா கூறினார். அவர் கூறியவாறே நடந்தது. ஆனால் அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே என் அம்மா காலமானார்," என நிகழ்ச்சி ஒன்றில் உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டார் பாக்யராஜ்

கிழக்கே போகும் ரயில் படத்தைத் தொடர்ந்து, 'எனக்குப் பிறகு நீ தான்' என பாரதிராஜா கூறியதாக நிகழ்ச்சி ஒன்றில் பாக்யராஜ் நினைவுகூர்ந்து பேசினார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்தவர், அப்படத்திற்கு வசனமும் எழுதினார்.

16 வயதினிலே தொடங்கி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாக்யராஜ் 'புதிய வார்ப்புகள்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

மூன்றாவது நாள் வசனகர்த்தா, நான்காவது நாள் ஹீரோ

புதிய வார்ப்புகள் படத்திற்கு முதலில் செல்வராஜ் என்பவர் வசனம் எழுதியிருந்தார். அந்த வசனங்களால் பெரிதும் ஈர்க்கப்படாத இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜை அழைத்து வசனம் எழுதுமாறு கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் விகடன் வலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

"புதிய வார்ப்புகள் கதை தெரியுமா என முதலில் பாக்யராஜிடம் பாரதிராஜா கேட்டார். அதற்கு வசனம் எழுத வேண்டும் என முதலில் தெரிவித்தபோது தயக்கத்துடனே ஒப்புக் கொண்டார். 50 ரூபாய் வாடகைக்கு அறை எடுத்துக் கொடுத்து கைச் செலவிற்கு 50 ரூபாய் கொடுத்துவிட்டு வந்தேன். மூன்றாவது நாளிலே அறையை காலி செய்துவிடலாம் எனக்கூறி விட்டார். இரண்டே நாட்களில் முழு படத்திற்குமான வசனங்களை எழுதி கொடுத்தார். அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த பாரதி ராஜா, இதைத் தான் எதிர்பார்த்ததாகக் கூறினார்," எனத் தெரிவித்தார் ஜெயராஜ்.

அதற்கு அடுத்தநாள் மேக்கப் டெஸ்டிற்கு வந்துவிடுமாறு பாக்யராஜிடம் பாரதிராஜா கூறியுள்ளார். ஆனால் கதாநாயகன் பாத்திரத்தில் தான் நடிக்கப் போவதாக அவர் நினைத்திருக்கவில்லை.

"கடைசியில் யாருமே எதிர்பார்த்தைப் போல பொருந்தி வராததால் 'நீ தான் கதாநாயகன்' என பாக்யராஜிடம் பாரதிராஜா கூறிவிட்டார். மிகவும் தயக்கதுடனே நடிக்கவும் ஆரம்பித்தார்," என்றார் ஜெயராஜ்.

"சுவர் இல்லாத சித்திரங்கள்" படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதோடு 75க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

பாக்யராஜ் தனது எழுத்திலும் சரி, இயக்கத்திலும் சரி நாயகனுக்கு என்று இருந்த பிம்பந்தை வெகுவாக மாற்றியமைத்தார். அதுநாள் வரையில் கதாநாயகன் என்றால் நல்ல உடல்வாகு கொண்டவராக இருக்க வேண்டும் என்பது போன்ற இலக்கணத்தை தனது எழுத்தின் மூலம் மட்டுமல்லாது தனது நடிப்பின் மூலமும் மாற்றியமைத்தார்.

அவரது படங்களில் வரும் கதாநாயகர்கள் நம்மை சுற்றி இருக்கும் சாதாரண மனிதர்களாக தோன்றியிருப்பார்கள். அவர்களின் ஆசைகள், தோல்விகள், காதல், குடும்ப பிரச்னைகள் என வாழ்க்கைக்கு நெருக்கமான, யதார்த்தமான விஷயங்களை கதைகளாக மாற்றினார்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு போன்ற படங்களை இதற்கு சிறந்த உதரணங்களாக சொல்லலாம்.

அழகான, சாகச நாயகன் என்ற பிம்பத்தை உடைத்தவர் பாக்கியராஜ் என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் திரை விமர்சகருமான சுகுணா திவாகர்.

"அவரது திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் இருந்தாலும் நாயகன் இயல்பான பலவீனங்களும் அசட்டுத்தனங்களும் நிரம்பியவன். அனேகமாக கண்கண்ணாடியுடன் ஒரு ஹீரோ தொடர்ந்து நடிக்க முடியும் என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் பாக்யராஜ்தான். அவரது குரலில் வழக்கமான ஹீரோக்களுக்கான கம்பீரம் இருக்காது. இப்படி பல புதிய விஷயங்களைத் தன் திரைப்படத்தில் கொண்டுவந்தவர்," என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பாக்யராஜின் நடனத்திற்கு, விமர்சனங்கள் இருந்திருக்கின்றன. அது பற்றி அவரிடம் கேட்டபோது, "அதை நான் பொருட்படுத்துவதேயில்லை. அதனால் இருப்பதை வைத்துத்தான் சமாளிக்க வேண்டியிருந்தது. என்றைக்குமே எனக்கு நடனம் வரவில்லை என்று நான் கவலைப்பட்டதேயில்லை. நடனமாடி கைதட்டல் வாங்க வேண்டுமென்பதை நான் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டதேயில்லை. என்னுடைய பலம் என்னவோ, அதை சிறப்பாகச் செய்வோம் என்று நினைத்தேன். ஒவ்வொரு காட்சி அமைப்பிலும், இயக்கத்திலும் மக்களை ஈர்க்க வேண்டுமென்றே பணியாற்றினேன்." எனக் கூறியிருந்தார்.

ஒரு கால கட்டத்தில் குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய இவர், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன், வாகை சூட வா என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

திரை உலகில் உயர்ந்து வந்த காலகட்டதிலே எம்.ஜி.ஆர் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார் பாக்யராஜ்.

1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், பாக்யராஜை தனது 'கலையுலக வாரிசு' எனக் குறிப்பிட்டிருந்தார். பாக்யராஜின் திருமணத்திலும் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டிருந்தார்.

1977-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நடிப்பில் 'அண்ணா நீ என் தெய்வம்' என்கிற படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் பாதியிலே கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அந்தப் படத்தின் படமாக்கப்பட்ட காட்சிகளை வைத்து புதிய திரைக்கதையை உருவாக்கி "அவசர போலீஸ் 100" என இயக்கி நடித்தார் பாக்யராஜ்.

பாக்யராஜின் அரசியல் பிரவேசம்

1988-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரு தரப்பாக செயல்பட்ட நிலையில் ஜானகி அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் பாக்யராஜ். அதன்பிறகு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கினார்.

தனிக்கட்சி அத்தியாயம் பெரிய பலன்களைக் கொடுக்காத நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நீண்டகாலம் கட்சியில் செயல்பட்டாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2006-இல் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்து திமுகவிற்கு பிரசாரம் கூட மேற்கொண்டார். அதன் பின்னர் நீண்ட காலம் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகினார் பாக்யராஜ்.

இந்த நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பாக்யராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ் அதிமுகவில் மீண்டும் இணைவேன் என்று கூறியிருந்தார். அதோடு அதிமுகவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தற்காலிகமானது என்று கூறிய அவர் "கட்சியின் நலனுக்காக என்னால் முடிந்தவற்றை செய்யத் தயாராக இருக்கிறேன்." என்றும் தெரிவித்திருந்தார்.

ஒன்றுபட்ட அதிமுகவிற்காகவும் கட்சியையும் வலுப்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்றும் பாக்யராஜ் பேசியிருந்தார். அதற்காக எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதாக கூறியிருந்த அவர், "அனைவரும் ஒன்றாக வருவார்கள். அதற்குச் சில காலம் எடுக்கும். அவ்வளவு தான்," என்றும் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு