You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
7 நிமிடம் 'இறந்த' கால்பந்து வீரர் பயிற்சியாளராகி பிரேசிலை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றிய கதை
- எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"என் தாய் எனது இறுதிச் சடங்கிற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்."
இன்னும் உயிரோடு இருக்கக்கூடிய,சமீபத்தில் சரித்திரம் படைத்த ஸ்டால் சோல்பக்கனின் வார்த்தைகள் இவை.
58 வயதான சோல்பாக்கன், நார்வே தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில், அவரது அணி ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலை ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தில் வீழ்த்தி, மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
போட்டி முடிந்த பிறகு, சோல்பாக்கன் தனது குடும்பத்தினரைக் கட்டிப்பிடித்தார். அதற்கான காரணம் மிகவும் விசேஷமானது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு, 2001 மார்ச் 13 அன்று, அவரது இதயம் ஏழு நிமிடங்களுக்குத் துடிப்பதை நிறுத்தியிருந்தது.
அவர் 26 மணி நேரம் கோமா நிலையிலும் இருந்தார்.
இத்தாலிய நாளிதழான 'லா காசெட்டா டெல்லோ ஸ்போர்ட்' க்கு அளித்த பேட்டியில், "என் தாய் என்னிடம் வரும்போது, அவருக்கு என் உண்மையான நிலை தெரியாது.வரும் வழி நெடுகிலும் எனது இறுதிச் சடங்கு எப்படி நடக்கும் என்பதைப் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்" என்று சோல்பாக்கன் கூறினார்.
ஆனால் மரணத்தை வென்று, நார்வேயின் மிகத் திறமையான கால்பந்து தலைமுறையை வழிநடத்தச் சென்றார் சோல்பாக்கன் .
அவரது அணியில் மார்ட்டின் ஒடேகார்ட் (ஆர்சனல்), அலெக்சாண்டர் சோர்லோத் (அத்லெட்டிகோ மாட்ரிட்) மற்றும் மிகப்பெரிய நட்சத்திரமான எர்லிங் ஹாலாண்ட் (மான்செஸ்டர் சிட்டி) போன்ற வீரர்கள் உள்ளனர்.
பிரேசிலுக்கு எதிரான போட்டியில் ஹாலாண்ட் இரண்டு கோல்களை அடித்தார். அவர் இப்போது இந்த உலகக் கோப்பையில் ஏழு கோல்களை அடித்து, லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோரின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.
"நார்வே கால்பந்து வரலாற்றில் இது தான் மிகப்பெரிய நாள்" என்று பிரேசிலுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு சோல்பாக்கன் கூறினார்.
ஆனால் அவரது இந்த அசாதாரணமான கதை, பிரேசில் சம்பந்தப்பட்ட மற்றொரு மறக்க முடியாத வெற்றியுடன்தான் தொடங்குகிறது.
மிடில் பீல்டர்
1990-களில் நார்வேயின் முன்னணி மிட்பீல்டராக ஸ்டால் சோல்பாக்கன் இருந்தார். அப்போது , தோரே ஆண்ட்ரே ஃப்ளோ மற்றும் ஓலே குன்னர் சொல்ஷேயர் போன்ற வீரர்களுடன் நார்வே அணி தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளுக்கு (1994 மற்றும் 1998) தகுதி பெற்றது.
1998 உலகக் கோப்பையில், குரூப் சுற்றின் இறுதிப் போட்டியில் அப்போதைய உலக சாம்பியனான பிரேசிலை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்த அணியில் சோல்பாக்கனும் இடம் பெற்றிருந்தார்.
அந்த வெற்றியின் மூலம் நார்வே முதன்முறையாக உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
இருப்பினும் பின்னர் அவர்கள் இத்தாலியிடம் தோல்வியடைந்தனர். அதுவரை, இதுவே நார்வேயின் கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.
2000-ஆம் ஆண்டில், தனது 33-ஆவது வயதில், சோல்பாக்கன் டென்மார்க் கிளப்பான எஃப்சி கோபன்ஹேகனில் சேர்ந்தார்.
2001ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அன்று, பயிற்சி அமர்வின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
அணியின் மருத்துவர் ஃபிராங்க் ஒடேகார்ட் உடனடியாக முதலுதவி அளிக்கத் தொடங்கி, ஆம்புலன்ஸை அழைத்தார்.
அவரது இதயம் ஏழு நிமிடங்களுக்குத் துடிப்பதை நிறுத்தியதுடன், அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மருத்துவர்கள் அவரை மீட்டெடுத்தனர், ஆனால் சோல்பாக்கன் 26 மணி நேரம் கோமா நிலையில் இருந்தார்.
"நான் ஒரு நீல ஒளியையும், பின்னர் ஒரு சுரங்கப்பாதையையும் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் இன்னும் சிறிது நேரம் அங்கேயே இருக்க வேண்டும் என்று தோன்றியது" என்று அவர் பின்னர் ஒரு பாட்காஸ்ட்டில் கூறினார்.
அவரது தாய் அந்த நேரத்தில் நார்வேயில் இருந்து கோபன்ஹேகனுக்கு வந்திருந்தார்.
தன் மகன் உயிர் பிழைக்கவில்லை என்றால் அவரது இறுதிச் சடங்கை எவ்வாறு கையாள்வது என்றும், ஒருவேளை உயிர் பிழைத்தாலும் மூளை பாதிப்பு ஏற்பட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
பரிசோதனைகளில் அவருக்குப் பிறவியிலேயே இதயக் கோளாறு இருந்தது தெரியவந்தது, மேலும் தொழில்முறை கால்பந்து விளையாடுவதைக் கைவிட வேண்டும் என்று மருத்துவர்கள் அவரிடம் கூறினர்.
அவரது உடலில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு, சோல்பாக்கனின் விளையாட்டு வாழ்க்கை 33 வயதில் முடிவுக்கு வந்தது.
விளையாட்டு வீரராக இருந்து வெற்றிகரமான பயிற்சியாளராக மாறிய சோல்பாக்கன்
இதற்குப் பிறகு சோல்பாக்கன் பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
கடந்த 26 ஆண்டுகளில், அவர் டென்மார்க், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார், அதிலும் குறிப்பாக எஃப்சி கோபன்ஹேகன் கிளப்பில் பெரும் வெற்றியைப் பெற்றார்.
டிசம்பர் 2020-இல், அவர் நார்வே தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அதே காலகட்டத்தில், எர்லிங் ஹாலாண்ட் மற்றும் மார்ட்டின் ஒடேகார்ட் போன்ற இளம் நட்சத்திரங்கள் உருவாகி வந்தனர்.
அவரது அணி 2022 உலகக் கோப்பை மற்றும் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தகுதி பெறத் தவறினாலும், நார்வே கால்பந்து சங்கம் அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்தது.
2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இத்தாலி உட்பட பல வலுவான அணிகளை நார்வே எதிர்கொண்டது.
அந்த அணி தங்களின் குரூப் சுற்றின் எட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.
உலகக் கோப்பையிலும் நார்வே தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தது.
குரூப் சுற்றில் பிரான்சுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்த அவர்கள், நாக் அவுட் சுற்றுகளில் ஐவரி கோஸ்ட் மற்றும் பிரேசிலைத் தோற்கடித்து முதன்முறையாக உலகக் கோப்பையின் கால் இறுதிக்கு முன்னேறினர்.
"இந்த வீரர்கள் நார்வே கால்பந்து வரலாற்றை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் வரலாற்றையுமே மாற்றியமைத்துள்ளனர்" என்று நார்வே கால்பந்து சங்கம் பகிர்ந்துள்ள வீடியோவில் சோல்பாக்கன் தெரிவித்துள்ளார்.
"இன்று நாம் உணரும் இந்த மகிழ்ச்சி நார்வே முழுவதும் உணரப்படுகிறது. உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று சோல்பாக்கன் கூறுகிறார்.
இப்போது நார்வே முதன்முறையாக உலகக் கோப்பையின் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
கூடவே, இந்த சாதனைக்கு பின்னால் இருக்கும் அதன் பயிற்சியாளரின் அசாதாரணமான பயணமும் சம அளவில் ஊக்கமளிப்பதாக உள்ளது.
"நான் அந்த நாளில் இருந்து உயிர் பிழைத்ததால், இப்போது என்னால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும்" என்று சோல்பாக்கன் ஒருமுறை கூறியிருந்தார்.
இன்று இந்த கூற்று அவரது வாழ்க்கை மற்றும் அவரது கால்பந்து பயணம் ஆகிய இரண்டிற்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு