அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு - கைது செய்யப்பட்ட 8 பேர் யார்?

அயோத்தி ராமர் கோவில், அயோத்தி, ராமர் கோவில், காணிக்கை திருட்டு, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரேர்ணா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருட்டு வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள எட்டு பேரில் 27 வயதான ரமாசங்கரும் ஒருவர்.

ரமாசங்கரின் தந்தை சத்து லால் மிஸ்ரா ஒரு பூசாரி ஆவார், அவர் அயோத்தியின் பழமையான ஹனுமன் கோவிலில் கீர்த்தனை பாடுகிறார். இந்த சர்ச்சைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார்.

ரமாசங்கரின் குடும்பத்தின் சார்பில் அவருடைய அண்ணி சாதனா மிஸ்ரா மட்டுமே ஊடகங்களுடன் பேசி வருகிறார். இப்போது ஒரே மாதிரியான கேள்விகளுக்குத் திரும்பத் திரும்பப் பதிலளிப்பது அவருக்கும் கடினமாகவேவுள்ளது.

ராமர் கோவிலில் ரமாசங்கருக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அவர், "சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அங்கு கிடைத்தது. அதற்கு முன்பு வீடியோகிராஃபராக இருந்தார். கோவிலில் ரூபாய் நோட்டுகளை எண்ணும் வேலை கிடைத்தபோது, அதற்காக மாதம் சுமார் 16,000 முதல் 17,000 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. ஆனால் கேமரா வேலை மூலம் அவருக்கு நான்கைந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது" என்று குறிப்பிடுகிறார்.

மேலும், "நாங்களோ அல்லது அவரது தந்தையோ அவரிடமிருந்து ஒருபோதும் பணம் வாங்கவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சொந்த உழைப்பில் வாழவேண்டும் என்றும், எதிர்காலத்திற்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்றுதான் அவரது தந்தை எப்போதும் அவரிடம் கூறுவார்" என்றார்.

ரமாசங்கர் நிரபராதி என்றும், இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் கீழ்நிலை ஊழியர்களை மட்டுமே பலிகடா ஆக்க முயற்சி நடப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், கோவிலின் பணத்தை எண்ணும் அறையில் உள்ள சிசிடிவி காட்சிகளில் ரமாசங்கர் மிஸ்ராவும் பணத்தைத் திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பதிவுகளின்படி, விசாரணையின் போது ராமசங்கர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், அந்தப் பணத்தை அறக்கட்டளைக்கு திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கூறினார்.

அதன்பிறகு, அந்தப் பணம் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஒரு லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த லாக்கரில் இருந்து ₹7,32,170 பணமும் சில நகைகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அறக்கட்டளையின் உறுப்பினர் கிருஷ்ண மோகன் என்பவர் மொத்தம் எட்டு பேர் மீது புகார் அளித்திருந்தார். போலீஸார் இவர்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு, இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

ராம் சங்கர் யாதவ் (எ) டின்னு யாதவ், மனீஷ் யாதவ், அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, கருணேஷ் பாண்டே, சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா, அவினாஷ் சுக்லா மற்றும் ராம் சங்கர் மிஸ்ரா ஆகிய எட்டு பேர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

'மிகவும் செல்வாக்கு மிக்க டின்னு யாதவ்'

டின்னு யாதவ், சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, அயோத்தி ராமர் கோவில், அயோத்தி, ராமர் கோயில், காணிக்கை திருட்டு, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி
படக்குறிப்பு, டின்னு யாதவ் மற்றும் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரிலும் மிக அதிகமாகப் பேசப்படும் பெயர், ராம் சங்கர் யாதவ் என்ற டின்னு யாதவ். அயோத்தி பகுதி மக்களும் பத்திரிகையாளர்களும் கூறுவதன்படி, கோவில் நிர்வாகத்தின் மீது இவரே மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார்.

அயோத்தியின் மூத்த பத்திரிகையாளர் இந்து பூஷண் பாண்டே, டின்னு யாதவின் செல்வாக்கைப் பற்றிக் கூறும்போது, "அனில் மிஸ்ரா, சம்பத் ராய், கோபால் ராவ் ஆகியோருக்கு அடுத்தபடியாக, வளாகம் முழுவதும் டின்னுவின் செல்வாக்குதான் தெரிந்தது. இது இன்று நேற்றல்ல, கோவில் கும்பாபிஷேகத்தில் இருந்தே தொடர்கிறது. யார் உள்ளே நுழையலாம், யாரை வெளியேற்ற வேண்டும் என்பதை அவரே தீர்மானித்தார். கையில் வாக்கி-டாக்கியை வைத்துக்கொண்டு அங்கிருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பிப்பார். பணம் எண்ணுபவர்களுக்கும், தனியார் செக்யூரிட்டிகளுக்கும், இவர்தான் உத்தரவிடுவார். அந்த அளவுக்கு டின்னு செல்வாக்கு மிக்கவராக இருந்தார்."

டின்னுவின் குடும்பம் அயோத்தியின் ஸ்வர்கதுவார் பகுதியில் வசித்து வருகிறது. அவரைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள தகவல்களின்படி, அவர் முதலில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராயின் ஓட்டுநராக இருந்தார். பின்னர் கோவிலின் காணிக்கை மேலாண்மைப் பிரிவைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினார்.

டின்னு யாதவின் குடும்பத்தினரிடம் பேசுவதற்காக நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றோம். டின்னுவின் வீட்டிற்கு அடுத்ததாக அவரது மற்ற மூன்று சகோதரர்களின் வீடுகள் உள்ளன. இந்த வழக்கில் டின்னுவின் உறவினர் மனிஷ் யாதவ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதால், நாங்கள் இரண்டு குடும்பத்தினரிடமும் பேச முயன்றோம். அரை மணி நேரம் காத்திருந்தும் அங்கியிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அக்கம் பக்கத்தினரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பதாகவே தோன்றுகிறது. எனினும், பிற தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக முதலில் டின்னு யாதவும், பின்னர் அவரது மனைவி பூனம் யாதவும், அதன் பிறகு அவரது சகோதரரும் ஊடகங்கள் முன் தோன்றி, தங்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளனர்.

சுபாஷ் ஸ்ரீவஸ்தவா எந்தவித கௌரவ ஊதியமும் பெறாமல் பணியாற்றினார்

சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, வாரணாசி, சைனிக் செக்யூரிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், அயோத்தி ராமர் கோயில், அயோத்தி, ராமர் கோயில், காணிக்கை திருட்டு, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி
படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் வாரணாசியைத் தளமாகக் கொண்ட 'சைனிக் செக்யூரிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்டனர்

டின்னு யாதவ் அறக்கட்டளையின் சம்பளம் பெறும் ஊழியராக இருந்தார். அதே சமயம், கனரா வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற காசாளரான சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, எந்தவித ஊதியமும் பெறாமல் பணம் எண்ணும் ஊழியர்களின் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

காணிக்கைப் பெட்டிகளில் இருந்து எடுக்கப்படும் ரொக்கப் பணத்தைப் பணம் எண்ணும் அறைக்குக் கொண்டு செல்வது, பணம் எண்ணும் செயல்முறையைக் கண்காணிப்பது மற்றும் இறுதியாக அந்தப் தொகையை எஸ்பிஐ வங்கியிடம் ஒப்படைப்பது ஆகியவை இவருடைய பணியாக இருந்தது.

தனது மேற்பார்வைப் பணியில் அவர் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும், இத்திருட்டுச் சம்பவத்தில் அவருக்குப் பங்கு இருப்பதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது. நாங்கள் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயன்றோம், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

பெயர் குறிப்பிட விரும்பாத அண்டை வீட்டார் ஒருவரின் கூற்றுப்படி, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மிக நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடையவர். சுமார் 71 வயதான அவர், தனது ஓய்வுக்குப் பிறகு இக்கோவிலில் பணியாற்றத் தொடங்கினார்.

மீதமுள்ள ஆறு குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வாரணாசியைச் சேர்ந்த 'சைனிக் செக்யூரிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் மூலமாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அந்நிறுவனத்தின் இயக்குநர் கௌரவ் சிங் பிபிசியிடம், "பாரத ஸ்டேட் வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க நாங்கள் மொத்தம் 22 ஊழியர்களை வழங்கியிருந்தோம். அவர்கள் யார், அவர்கள் எப்போது பணியில் சேர்ந்தார்கள், அவர்களின் சம்பளம் எவ்வளவு... போன்ற அனைத்துத் தகவல்களும் எஸ்பிஐ வங்கியிடம்தான் உள்ளன. எங்களிடம் இருந்த தகவல்களை நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டோம். இது குறித்து நான் மேலும் எதுவும் பேச முடியாது" என்றார்

உண்மையில், கைது செய்யப்பட்ட எட்டு பேரில் நால்வர் ஒருவருக்கொருவர் உறவினர்களாக உள்ளனர். உதாரணமாக, மனிஷ் யாதவ் என்பவர் டின்னு யாதவின் உறவினர் ஆவார். அதேபோல் அனுகல்ப் மிஸ்ரா என்பவர் லவ்குஷ் மிஸ்ராவின் உறவினர் ஆவார். இதன் விளைவாக, இவர்கள் அனைவரின் நியமனங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வருமான ஆதாரங்களை ஆய்வு செய்தல்

அயோத்தி ராமர் கோயில், அயோத்தி, ராமர் கோயில், காணிக்கை திருட்டு, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி
படக்குறிப்பு, உத்தரப் பிரதேச மாநில அரசு, இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது

குற்றஞ்சாட்டப்பட்ட அனுகல்ப் மிஸ்ரா முன்பு ராமர் கோவிலில் பணிபுரிந்தவர். அதே சமயம், கார் மெக்கானிக்காகப் பணியாற்றிய லவ்குஷ் மிஸ்ரா அங்கு நீண்ட காலம் பணிபுரியவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

நாங்கள் அனுகல்ப் மற்றும் லவ்குஷ் மிஸ்ரா ஆகிய இருவரின் வீடுகளுக்கும் சென்றோம், ஆனால் அவர்களின் குடும்பத்தினர் பேசுவதற்குத் தயாராக இல்லை. நாங்கள் பலமுறை கோரியும், அனுகல்ப்பின் குடும்பத்தினர் கதவை மூடிவிட்டனர். எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

இருவருடைய பொருளாதார நிலையிலும் திடீரென ஏற்பட்ட மாற்றத்தை தாங்கள் கவனித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். போலீஸாரும் இவர்களின் சொத்துக்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஜூன் 26 அன்று நடத்தப்பட்ட சோதனையில், அனுகல்ப் மிஸ்ரா கொடுத்த தகவலின்படி அறக்கட்டளையின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ₹16,82,400 ரொக்கத் தொகையையும், லவ்குஷ் மிஸ்ரா கொடுத்த தகவலின்படி ₹14,25,000 ரொக்கத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தாங்கள் இந்தப் பணத்தை அறக்கட்டளையிடமே திருப்பி அளித்துவிட்டதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், அவினாஷ் சுக்லா காட்டிய இடத்திலிருந்து 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் சில தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றொரு நபரான கருணேஷ் பாண்டேயிடமிருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவினாஷ் சுக்லாவின் குடும்பத்தினர் பிரதாப்கரைச் சேர்ந்தவர்கள். அவர் தனது மூத்த சகோதரருடன் அயோத்தியின் கௌசல்பூர் பகுதியில் உள்ள ஒரு யோகா மையத்தில் தங்கியிருந்தார். அவினாஷ் அயோத்திக்குச் சென்று ஒரு வருடம் தான் ஆகிறது என்றும், ஆனால் அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவரது தந்தை தெரிவித்தார்.

அதே சமயம், அயோத்தியின் ஜெய்ராஜ்பூர் கண்டாசா பகுதியைச் சேர்ந்த கருணேஷின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. நாங்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேச முயன்றோம், ஆனால் யாரும் இந்த விவகாரம் குறித்துப் பேச முன்வரவில்லை.

ருதௌலியில் உள்ள அனுகல்ப் மிஸ்ராவின் கிராமத்திலும் எங்களுக்கு இதே போன்ற அனுபவமே ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சமீபத்திய ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோயில், காணிக்கை திருட்டு வழக்கு, ஆலயம், விசாரணை அமைப்புகள், நிதி முறைகேடு

பட மூலாதாரம், Deepak Gupta/Hindustan Times via Getty Images

புல்டோசர் நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள்?

அயோத்தியாவின் கௌஷல்புரி பகுதியில் உள்ள அனுகல்ப் மிஸ்ராவுக்குச் சொந்தமான ஒரு வீடு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஊடகச் செய்திகளின்படி, இந்த வீட்டை அவர் ஒரு வருடத்திற்கு முன்பு போஜ்புரி மற்றும் அவத் மொழி பாடகரான திவாகர் திவேதியிடமிருந்து வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக கூடுதல் தகவல்களை அறிய, திவாகர் திவேதியை தொடர்புகொண்டபோது, "இந்த சொத்து எனது மனைவி வந்தனா திவேதியின் பெயரில் இருந்தது. இடைத்தரகர் ஒருவர் மூலமாக இதனை நாங்கள் ரவீந்திர குமார் மிஸ்ரா என்பவருக்கு விற்றோம். இந்த ரவீந்திர மிஸ்ரா என்பவர் லவ்குஷ்ஷின் தந்தை ஆவார். நிலம் தோராயமாக 800 சதுர அடி பரப்பளவு கொண்டது" என்று தெரிவித்தார்.

அந்த நிலம் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்று கேட்டபோது, தாம் தற்போது வெளியூரில் இருப்பதாகவும், அதனால் துல்லியமான தகவலை வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், லவ்குஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமான ஒரு வீட்டுக்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், வீட்டின் கட்டட வரைபடம் தொடர்பாக ஆணையம் எழுப்பியுள்ள ஆட்சேபனைகளுக்கு குடும்பத்தினர் உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில், அயோத்தி, ராமர் கோயில், காணிக்கை திருட்டு, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி
படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தினர் வெளிமனிதர்களுடன் பேசுவதைத் தவிர்க்கின்றனர்

இந்த நடவடிக்கை கீழ்மட்ட ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அயோத்தியில் பொதுமக்களிடம் பேசினாலும் இதேபோன்ற கேள்விகளையே கேட்க முடிகிறது.

"அறக்கட்டளை நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும். ஏன் கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது?" என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

பைசாபாத் வழக்கறிஞர்கள் சங்கமும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், உறுப்பினர்கள் அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளது. மேலும், இந்தச் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் கைது செய்யப்பட்டுள்ள அந்த எட்டு நபர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடக் கூடாது என்ற தீர்மானத்தையும் சங்கம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால், பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, ''வரும் நாட்களில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணையின் எல்லையும் விரிவடையக்கூடும். ஆனால் தற்போது, திருட்டு மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த வழக்கில் எட்டு பேரே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

இனி வரும் நாட்களில், சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களும்தான் இந்த வழக்கின் பொறுப்பு இந்த எட்டு பேரோடு மட்டுமே முடிகிறதா அல்லது யாருடைய ஆதரவு மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த முழு அமைப்பும் இயங்கி வந்ததோ என்பதைத் தீர்மானிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு