You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்தில் பள்ளி அருகே 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் தாத்தா, பாட்டி உட்பட 7 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
(இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.
தாய்லாந்தில் பள்ளி ஒன்றின் அருகே ஒரு சிறுவன் தனது தாத்தா, பாட்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சிலரை துப்பாக்கியால் சுட்டதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என, பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் "நன்கு திட்டமிடப்பட்டதாகவும்", "தெளிவான நடவடிக்கைகளுடனும் தெளிவான இலக்குகளுடனும்" நடத்தப்பட்டதாக சார்ன்விரகுல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியான நொந்தபுரியில் உள்ள பள்ளியிலிருந்து தப்பியோடிய மாணவி ஒருவர், ஒரு ஆசிரியர் சுடப்பட்டதை நேரில் கண்டதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவி, பள்ளி சீருடையுடன் இருந்தபடி, தானும் தனது நண்பர்கள் சிலரும் "தப்பிப்பதற்காக பள்ளியின் வேலியைத் தாண்ட வேண்டியிருந்தது" என்று விவரித்துள்ளார்.
டெப்சிரின் பள்ளியின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் அவசரகால மீட்புப் பணியாளர்கள் இருப்பதைப் படங்கள் காட்டுகின்றன.
இந்த ஆண்டில் தாய்லாந்தில் நிகழ்ந்த இரண்டாவது பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.
துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தாய்லாந்தில் ஒப்பீட்டளவில் எளிதாகத் துப்பாக்கிகளைப் பெற முடிகிறது என்று தென்கிழக்கு ஆசியாவுக்கான பிபிசி செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு