தமிழக சட்டப்பேரவையில் விஜய் - உதயநிதி காரசார விவாதம்: என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 07) சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

திமுக தனது ஆட்சிக் காலம் முடியும்போது நிறைய கடன் வைத்துவிட்டு சென்றுள்ளதாக, நிதியமைச்சர் மரிய வில்சன் குற்றம் சாட்டி அவையில் பேசினார்.

"ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன் வைத்துவிட்டு சென்றுள்ளீர்கள். இதில் வரலாறு படைத்தது திமுக தான், இது திமுகவின் நிர்வாக குளறுபடியே" என்று நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

இதற்கு பதிலளித்த திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடன் தவிர்க்க முடியாதது என்று அரசு செயலாளரே தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய கே.என்.நேரு, "பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிதித்துறை செயலாளரே, 50 ஆண்டுகள் ஆனாலும் கடன் இல்லாமல் நிர்வாகம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். நாங்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் வைத்துள்ளோம் என்றால், நீங்கள் (அரசு) 60 நாட்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளீர்கள். இதை குறையாக சொல்லவில்லை. அரசை நடத்துவது என்பது, மக்களின் முன்னேற்றத்துக்காக கடன் வாங்குவது என்ற நிலையில் தான் அரசு உள்ளது. ஒரு அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்று நிர்ணயிப்பது ரிசர்வ் வங்கி. வருவாய் இல்லாமல் கடன் வாங்க முடியாது. எவ்வளவு கடன் என்பதல்ல எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும்" என்றார்.

காவிரி விவகாரம் : விஜய், உதயநிதி இடையே காரசார பேச்சு

காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் எழுந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு முதல்வர் இங்கு வர வேண்டாம், தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறிவிட்டார். நான் தெளிவாக தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழக முதல்வர் கர்நாடகா செல்வதாக இருந்தாரா, அப்படி என்றால் ஏன் செல்லவில்லை, இப்போது உங்கள் நிலை என்ன என்பது என் கேள்வி" என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், "சட்டப்படி காவிரி விவகாரத்தை அணுகுவதில் உறுதியாக இருக்கிறோம். அதில் மாற்றமே இல்லை. இருந்தாலும் ஒரு முயற்சி செய்துப் பார்க்கலாம் என்று தோன்றியது தான் பெங்களூரூ பயணம். அப்படி ஒரு பெங்களூரூ பயணத்தைப் பற்றி முதலில் கேட்டதும் நான் தான். அங்கு போக வேண்டும் என்று நினைத்ததற்கு காரணம்., ஒரு வேளை இந்த பிரச்னையை தீர்க்க நேர்மறையான சமிக்ஞை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். இன்றைய காலத்தில் பகை நாடுகளே பிரச்னையை பேசி தீர்க்க பார்க்கிறார்கள், பக்கத்து மாநிலத்துடன் பேசி பார்த்தால் என்னவென்று நினைத்தேன்" என்று பதில் அளித்தார் .

"பேப்பர் படிச்சால் நாட்டு நடப்பு தெரியும்" - உதயநிதிக்கு பதில் சொன்ன விஜய்

குறுவை தொகுப்பு குறித்து திமுகவினர் அவையில் கேள்வி எழுப்பினர். பிறகு பேசிய முதல்வர் விஜய், "குறுவை சாகுபடி நிவாரணத் தொகுப்புப் பற்றி எதிர்க்கட்சியினர் கேட்டிருந்தனர். நிவாரணம் ஏற்கெனவே கொடுத்தாச்சு. அரசியலே நாங்க தான் என்று கூறுபவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை. பேப்பர் படிச்சால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும்." என்று பேசினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "சிறப்புத் தொகுப்புக்கு ரூ.134 கோடி அரசு வழங்கியுள்ளது. அது அனைத்து அரசுகளும் வழங்குவது. இப்போது வறட்சி நிவாரணத் தொகை கேட்கிறார்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பேப்பர் படிச்சா மட்டும் தெரியாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அனைத்து விவசாயிகளை கூட்டி அவர்களின் கோரிக்கைகளை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

எடப்பாடியை அமர சொன்ன அவைத்தலைவர்

சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் முடிவதற்கு முன்பே, முதல்வர் விஜய் பேச முற்பட்ட போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே சி டி பிரபாகர் குறுக்கிட்டு, எடப்பாடி பழனிசாமியை அமரும்படி கூறினார். அவர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார். எனினும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு வந்ததால், அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.

"முதல்வர் பேசியதை ரிவைண்ட் செய்ய விரும்புகிறேன்" - உதயநிதி

"தமிழக முதல்வர் விஜய் பேசியதை ரிவைண்ட் செய்ய விரும்புகிறேன்" என்று உதயநிதி ஸ்டாலின் அவையில் கூறினார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்களுக்காக கடிதம் எழுதியது குறித்து விஜய் பேசியதை உதயநிதி குறிப்பிட்டு பேசினார். "ஸ்டாலின் அவர்கள் அவ்வபோது கடிதம் எழுதிவிட்டு தூங்க போய்விடுவார், இப்படி மானே தேனே பொன்மானே என்று கடிதம் எழுதுவது இனிமேல் வேலைக்கு ஆகாது என்று முதல்வர் கூறினார்" என்று உதயநிதி பேசிய போது, அவைத் தலைவர் குறுக்கிட்டார். சம்பந்தப்பட்ட தீர்மானத்தின் மீது மட்டும் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"நீர்வளத்துறையில் 3% கமிஷன்" - திமுக உறுப்பினர் ரகுபதி எழுப்பிய புகாரினால் அவையில் கூச்சல்

சட்டப்பேரவையில் விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ரகுபதி நீர்வளத் துறையில் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுப்பினார். நீர்வளத் துறையில் 3% லஞ்சம் கொடுத்தால்தான் பில்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று அவர் குற்றம்சாட்டிய போது அவையில் காரசாரமான விவாதங்கள் தொடங்கின.

திமுக உறுப்பினர் ரகுபதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூற வேண்டும் என்றார். " அதெல்லாம் அந்தக் காலம். நாங்கள் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினாலும், இந்த இடத்தில் அமர எங்கள் முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். எந்த பில்லுக்கு, யார் பணம் கேட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள். உங்களுக்கு பழக்க தோஷம் இருப்பதால் அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் " என்று தெரிவித்தார்.

திமுக உறுப்பினர் ரகுபதியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். அவர், "லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம். அமைச்சரவைக் கூட்டத்திலேயே முதலமைச்சர் இதை தெளிவாக கூறியுள்ளார். யாராவது லஞ்சத்தில் ஈடுபட்டால், ஒருவர் கூட அமைச்சராக தொடர முடியாது என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார்" என்றார்.

மேலும், "இதுவரை எங்கள் அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. கட்சி நிதி கூட வாங்கவில்லை. பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த முறைகேடுகளை நாங்கள் ஒழித்துள்ளோம்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு