லார் கிப்பன்: வீடியோவில் விக்ரமுடன் இருந்த குரங்கு சட்ட விரோதமாக தமிழகம் கொண்டு வரப்பட்டதா? சர்ச்சை ஏன்?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

லார் கிப்பன் (Lar Gibbon) வகை குரங்குடன் விளையாடும் காணொளி ஒன்று நடிகர் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட் 10) பதிவிடப்பட்டு நீக்கப்பட்டிருந்தது.

'அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள லார் கிப்பன் குரங்கு, சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா?' என்ற கோணத்தில் தமிழ்நாடு வனத்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

"தனி நபர்கள் இதனை வைத்திருக்கலாம். ஆனால், ஆவணங்கள் முறையாக இருப்பது அவசியம்" என, தமிழ்நாடு முதன்மை வனஉயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

லார் கிப்பன் சர்ச்சை தொடர்பாக விக்ரம் தரப்பில் எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. "அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் ஊடகங்களிடம் தெரிவிக்கப்படும்" என அவரது மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகிறார்.

லார் கிப்பன் குரங்கை வைத்திருந்தால் என்ன பிரச்னை? சட்டம் என்ன சொல்கிறது?

"ஈசி சேரில் அமர்ந்திருப்பது போல உட்கார்ந்திருக்கா" - லார் கிப்பன் எனப்படும் ஒருவகையான மனித குரங்குடன் நடிகர் விக்ரம் இவ்வாறு பேசியபடியே விளையாடும் காட்சிகள் இணையத்தில் பரவியது.

'நடிகர் விக்ரமின் புதிய செல்லப் பிராணி' என்ற தலைப்பில் சில ஊடகங்கள், இந்தக் காணொளியை வெளியிட்டன. ஆனால், சில மணிநேரங்களில் குறிப்பிட்ட காணொளி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அழிந்து வரும் உயிரினங்களுக்கான சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் (CITES) முதல் இணைப்புப் பட்டியலில் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவையாக லார் கிப்பன் குரங்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காட்டு உயிர்கள் மற்றும் தாவரங்களுக்கு சர்வதேச வர்த்தகத்தின் மூலம் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஐயுசிஎன் எனப்படும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் இந்த ஒப்பந்தம் உருவாக வேண்டிய தேவை உள்ளதாக 1963-ஆம் ஆண்டில் அதன் பொதுக்குழு தீர்மானத்தில் அடையாளம் கண்டது. 1975 ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

இந்தியா உள்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் சர்வதேச வர்த்தக விதிகளுடன் இந்திய சட்டங்கள் தொடர்புடையவை.

"இந்த ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் லார் கிப்பன் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்கப்பட்ட விலங்காக மட்டுமே கையாள வேண்டும்" என்கிறார், மத்திய அரசின் வனவிலங்கு குற்றத் தடுப்பு பணியகத்தின் தென்மண்டல துணை இயக்குநர் தேன்மொழி.

'நீர்நிலைகள் என்றாலே ஆகாது' - லார் கிப்பனின் சிறப்புகள்

தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட லார் கிப்பன் குரங்குகள், சிறிய வகை மனிதக் குரங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மனிதக் குரங்குகளைப் போல இவற்றுக்கு வால் இல்லை.

இவற்றின் கைகள் மற்றும் கால்களில் மற்ற விரல்களை எதிர்கொள்ளும் வகையிலான கட்டை விரல்கள் உள்ளன. இவை அளவில் சிறியவையாக உள்ளன. நீண்ட கைகளைக் கொண்டுள்ளதால் ஊசலாடியபடியே செல்கின்றன.

இவை பெரும்பாலும் இரண்டு வகையான நிறங்களில் காணப்படுகின்றன. ஒன்று பொன்னிறத்திலும் மற்றொன்று அடர் பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிறத்திலும் உள்ளன. இவ்விரு நிற வகைகளும் ஆண், பெண் இனங்களில் காணப்படுகின்றன.

மியான்மரில் தொடங்கி தாய்லாந்து முழுவதும் லார் கிப்பன்கள் பரவிக் கிடக்கின்றன. மலேசியாவிலும் இவை காணப்படுகின்றன.

மரங்களில் வாழும் இயல்புடையதாக லார் கிப்பன்கள் உள்ளன. மூங்கில் காடுகள், சதுப்பு நிலக் காடுகளில் இவை வசிக்கின்றன. நாளின் பெரும்பகுதியை இவை மரங்களின் மேல்மட்டப் பகுதியிலேயே கழிக்கின்றன.

சிறிய வகை மனிதக் குரங்குகளைப் போல லார் கிப்பன்களும் நீர்நிலைகளைக் கடப்பதைத் தவிர்க்கின்றன. ஆறுகள், ஏரிகள், ஓடைகளில் இருந்து விலகி மரங்களில் இருக்கவே இவை விரும்புகின்றன.

இவற்றில் பொன்னிறத்தில் உள்ள குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடிய காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் காணொளி பதிவேற்றப்பட்ட சில மணிநேரங்களில் வனத்துறை இதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்தது.

முதன்மை வனஉயிரின காப்பாளர் கூறுவது என்ன?

" லார் கிப்பனை தனி நபர்கள் வைத்துள்ளதாக சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை வனஉயிரின காப்பாளர் இதனை விசாரித்து வருகிறார்" என்கிறார், தமிழ்நாடு முதன்மை வனஉயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா.

இதனை தனி நபர்கள் வளர்ப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், "சட்டப்படி தேவையான அனுமதிகள் மற்றும் ஆவணங்கள் இருந்தால், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு லார் கிப்பனை வைத்திருக்கலாம்" என்கிறார்.

நடிகர் விக்ரம் கையில் உள்ள லார் கிப்பன் குரங்கு குறித்த காணொளி வெளியான பிறகு அதன் பயணப் பாதை குறித்த விசாரணையில் வனத்துறை ஈடுபட்டது.

'மணிப்பூர் டூ பெருந்துறை'

ஈஞ்சம்பாக்கத்தில் விக்ரமின் உறவினர் வீட்டில் லார் கிப்பன் குரங்கு பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார், வனத்துறை உயர் அதிகாரி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "மணிப்பூரை சேர்ந்த லைகுராம் சிங் என்பவர் 2020 ஆம் ஆண்டு பரிவேஷ் இணையதளம் மூலமாக தன்னிடம் எட்டு லார் கிப்பன் குரங்குகள் உள்ளதாக அறிவித்திருந்தார்" என்கிறார்.

மத்திய அரசின் பரிவேஷ் (PARIVESH) இணையதளம் என்பது மத்திய, மாநில, மற்றும் மாவட்ட அளவில் சுற்றுச்சூழல், வனம், வனவிலங்கு மற்றும் கடலோர ஒழுங்குமுறை தொடர்பான அனுமதிகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பரிவேஷ் தளத்தில் உள்ள தகவலின்படி, நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் லார் கிப்பன்களை வைத்திருந்தாக லைகுராம் சிங் தெரிவித்துள்ளார்.

லார் கிப்பனின் பூர்வீகம் மலேசியா என அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறிய வனத்துறை அதிகாரி, "மணிப்பூரில் இருந்து ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஓர் ஆண் மற்றும் இரண்டு பெண் லார் கிப்பன்கள் மாற்றப்பட்டுள்ளதாக பரிவேஷ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்கிறார்.

2026 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி இவை தத்தெடுப்பு நோக்கத்துக்காக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக, ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டுக்குள் இவை வருவதாக இருந்தால் முதன்மை வனஉயிரின காப்பாளரின் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை" என அந்த அதிகாரி தெரிவித்தார்.

பெருந்துறையில் இருந்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த விக்ரமின் உறவினரும் அதிவேகமாக நுகரும் பொருட்கள் (FMCG) துறையை சேர்ந்த தொழிலதிபருமான சி.கே.ரங்கநாதனுக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் லார் கிப்பன் குரங்குகள் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வனத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் விதிகள் என்ன சொல்கின்றன?

அவ்வாறு கொண்டு வரப்பட்ட பிறகு, அவற்றைப் பராமரிப்பதற்கு உயிருள்ள விலங்கு இனங்கள் (தகவல் தெரிவித்தல் மற்றும் பதிவு) விதிகள் 2024ன் கீழ் முதன் வனஉயிரின காப்பாளரின் அனுமதி அவசியம் என மத்திய அரசின் விதிகள் கூறுகின்றன.

  • வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972ன்கீழ் அட்டவணை IV-ன் கீழ் பட்டியலிடப்பட்ட அயல்நாட்டு விலங்குகளை அறிவிப்பதற்கான கடைசி தேதி 2024 ஆகஸ்ட் 28 என மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி,
  • அயல்நாட்டு விலங்கு இனங்களுக்கான பதிவு 'PARIVESH 2.0' என்ற இணையதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • அயல்நாட்டு விலங்குகள் குறித்து சம்பந்தப்பட்ட தனி நபர்கள், அமைப்புகள் மற்றும் உயிரியல் பூங்காங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • அரசிதழில் (2024 பிப்ரவரி) அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ அல்லது விலங்கு இனங்களை அடைந்த நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள்ளாகவோ மாநில முதன்மை வனஉயிரின காப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பரிவேஸ் 2.0 இணையதளம் (https://parivesh.nic.in/parivesh-ua/hashtag/) மூலமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய ஆறு மாதகால அவகாசம் 2024 ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதே காலகட்டத்தில் தன்னிடம் உள்ள லார் கிப்பன் குறித்த தகவலை பரிவேஷ் இணையதளத்தில் லைகுராம் சிங் பதிவேற்றியுள்ளதை, தமிழ்நாடு அரசின் வனத்துறை கண்டறிந்துள்ளது.

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதா?

அதேநேரம், மணிப்பூர்-மியான்மர் வழித்தடம் என்பது வனவிலங்குகள் கடத்தலில் சர்வதேச போக்குவரத்துக்கான தடமாக உள்ளதால், லார் கிப்பன் கொண்டு வரப்பட்ட விதம் குறித்த கேள்விகளையும் வனஉயிரின ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சர்வதேச வர்த்தகம் மற்றும் விலங்கு பரிமாற்றம் தொடர்பான சைடஸின் (CITES) விதிமுறைகள் மற்றும் அனுமதிகளை ஆராயும் பணியில் தமிழ்நாடு வனத்துறை ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ராகேஷ்குமார் டோக்ராவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "அயல்நாட்டு விலங்கை இறக்குமதி செய்வதற்கு அயல்நாட்டு வர்த்தகம் தொடர்பான DGFT (Directorate General of Foreign Trade) அனுமதி, தடையில்லா சான்று ஆகியவற்றை சமர்ப்பித்த பிறகு வனஉயிரின காப்பாளர் சான்று வழங்குவது அவசியம்" என்கிறார்.

"இந்த விவகாரத்தில் லார் கிப்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்பிறகே சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதா என்பதைக் கூற முடியும்" என்கிறார் ராகேஷ்குமார் டோக்ரா.

சமூக வலைதளங்களில் வெளியான லார் கிப்பன் காணொளியைத் தொடர்ந்து, மத்திய அரசின் வனவிலங்கு குற்றத் தடுப்பு பணியகமும் (WCCB) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அதன் தென்மண்டல துணை இயக்குநர் தேன்மொழியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"லார் கிப்பனை வைத்திருந்தது தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை வனஉயிரின காப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை சென்னை வனஉயிரின காப்பாளர் விசாரித்து வருவதாகவும் அதன்பிறகே சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

லார் கிப்பன் குறித்து நடிகர் விக்ரம் தரப்பின் கருத்தை அறிய அவரது மக்கள் தொடர்பு அலுவலர் யுவராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. "அவரது தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்படும்போது ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு