கரூர் கூட்ட நெரிசல் பற்றி முதல்வர் விஜய் பேசியது என்ன?

விஜய் கரூர் பயணம், அரசுப் பணி வழங்க தடையில்லை

பட மூலாதாரம், TVK

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் சென்றுள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் கரூர் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், "கரூரில் அன்று எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வரவேண்டாம் என காவல்துறை சொல்லியிருக்கலாம் அல்லவா? அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்" என்று கூறினார்.

"என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. கரூரில் ஒரு நினைவுச் சின்னம் நமது தவெக சார்பாக அமைக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

புதிய தொழிற்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி சென்ற முதல்வர் விஜய், பின்னர் சாலை மார்க்கமாக காரில் கரூர் சென்றார். செல்லும் வழியில் ஆங்காங்கே இருபுறமும் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டிருந்து அவரை வரவேற்றனர்.

விஜய் கரூர் பயணம், அரசுப் பணி வழங்க தடையில்லை

கரூர் கூட்ட நெரிசல் பற்றி விஜய் பேசியது என்ன?

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் சில காயங்களை வலிகளை மறக்க முடியாது. எல்லாவற்றையும் விட எனக்கு மிகப்பெரிய வலி என்றால் அது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தான்"

"மக்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகளை கேட்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பிரசாரங்களில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என பயணம் செய்தோம். அதேபோல, அரியலூர் கூட்டம் முடித்து பெரம்பலூர் செல்ல ஆயுத்தம் ஆன போது, பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக உள்ளது, செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறினார்கள். எனவே நாங்கள் பெரம்பலூர் கூட்டத்திற்கு செல்லவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்."

"அதேபோல நாமக்கல் பிரசார கூட்டம் முடித்துவிட்டு கரூர் வரும்போது, கரூர் காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா? கரூரில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வரவேண்டாம் என சொல்லியிருக்கலாம் அல்லவா?" எனக் கேள்வியெழுப்பினார்.

"பிறகு ஏன் என்னை காவல்துறையே வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்." என்றும் அவர் கூறினார்.

விஜய் கரூர் பயணம், அரசுப் பணி வழங்க தடையில்லை

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், "இதற்கு எல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செய்யப்பட்டது? அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கியது யார்? அங்கு நாம் இழந்தது எனது சகோதரிகளின் குழந்தைகள். என் குடும்ப உறவுகளை இழந்து வலியோடு இருக்கும் என் மீது பழி போடுகிறீர்களா?" என்றார்.

"அன்று இருந்த கூட்டத்திற்கு ஏற்ற காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதா? ஒரு காவல்துறை அதிகாரி நாங்கள் தான் சம்பவம் நடந்த இடத்தைக் கேட்டோம் எனக் கூறினார். இப்படி எங்கள் மீது தான் பழி போட்டார்கள். நமக்கு பல வலிகளையும், காயங்களையும் கொடுத்தவர்களுக்கு மக்கள் நீங்கள் பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது போதாது அவர்களுக்கு நிரந்தர பதிலடியை நீங்கள் கொடுக்க வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

"முந்தைய அரசின் பல ஊழல்களை நாங்கள் வெளிப்படுத்திவருகிறோம். எங்களால் ஊழலை ஒழிக்க முடியாது என்றார்கள், ஆனால் நாங்கள் அதை செய்துகாட்டியுள்ளோம். எந்த அரசு அலுவலகத்திலும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்குவதில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்று அவர் பேசினார்.

விஜய் கரூர் பயணம், அரசுப் பணி வழங்க தடையில்லை

'கரூரில் நினைவுச் சின்னம்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வந்தாலும், அதை நாம் உறுதியாக எதிர்ப்போம்" என முதலமைச்சர் விஜய் கூறினார்.

"என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. நமக்கு ஏற்பட்ட இந்த வேதனையான சம்பவத்தை அடுத்து வரக்கூடிய தலைமுறைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, இனி இப்படியொரு அரசியல் சதியை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காக, கரூரில் ஒரு நினைவுச் சின்னம் நமது தவெக சார்பாக அமைக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

"இது என்றுமே மக்களுக்கான அரசு தான், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். தேர்தலில் பணம் கொடுக்கும் கலாசாரத்தை நாங்கள் அழித்துள்ளோம். எங்களைப் பார்த்து 'குதிரை பேரம் செய்கிறோம்', 'சோஃபா மாடல் அரசு' எனக் கூறுகிறார்கள். திமுக அரசு செய்த ஊழல்களை நாங்கள் தோண்டி எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இன்னும் பலர் மாட்டுவார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்று கூறினார் முதலமைச்சர் விஜய்.

இந்த கரூர் நிகழ்வில், கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கரூர் பயணம், அரசுப் பணி வழங்க தடையில்லை

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் (கோப்புப் படம்)

கரூர் கூட்ட நெரிசல்

தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் வேலுசாமிபுரம் என்ற இடத்தில் வாகன பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.

தனது பரப்புரைக் கூட்டத்தில் பெரும் துயரம் நடந்ததும், அப்போது மருத்துவமனைக்கு செல்லாமல் விஜய் விமானத்தில் சென்னை திரும்பியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

விஜய் அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததே நடந்த துயரத்திற்கு காரணம் என்று திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு காணொளி வெளியிட்ட விஜய், அதன் பின்னர் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் அழைத்துப் பேசி, இழப்பீடு வழங்கிய விஜய், அதன்பின்பு கரூருக்கு செல்லவில்லை. இதுவும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காகவும் விஜய் கரூருக்கு செல்லவில்லை.

இந்நிலையில் ஒன்பது மாதங்கள் கழித்து இன்று அவர் கரூர் சென்றுள்ளார்.

'அரசுப் பணி வழங்க தடையில்லை'

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் நிகழ்வை தமிழக அரசு தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த நியமனங்கள் தற்காலிகமானவை என்றும் நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டவை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நியமனங்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்தும், இந்த வழக்கில் அவை பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விளக்கி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசுப் பணி வாய்ப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், நியாயமான காரணம் இல்லாமல் அதை மறுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் டிஎன்பி எஸ்சியையும் நீதிமன்றமே தாமாக முன்வந்து இணைத்துள்ளது குறிப்பிடதக்கது.

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு