You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரூரில் முதல்வர் விஜய்: கூட்ட நெரிசலை நினைவுகூர்ந்து அவர் பேசியது என்ன?
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் சென்றுள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, விஜய் பரப்புரையில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் கரூர் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், "கரூரில் அன்று எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வரவேண்டாம் என காவல்துறை சொல்லியிருக்கலாம் அல்லவா? அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்" என்று கூறினார்.
புதிய தொழிற்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி சென்ற முதல்வர் விஜய், பின்னர் சாலை மார்க்கமாக காரில் கரூர் சென்றார். செல்லும் வழியில் ஆங்காங்கே இருபுறமும் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டிருந்து அவரை வரவேற்றனர்.
முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் சில காயங்களை வலிகளை மறக்க முடியாது. எல்லாவற்றையும் விட எனக்கு மிகப்பெரிய வலி என்றால் அது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தான்"
"மக்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகளை கேட்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பிரசாரங்களில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என பயணம் செய்தோம். அதேபோல, அரியலூர் கூட்டம் முடித்து பெரம்பலூர் செல்ல ஆயுத்தம் ஆன போது, பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக உள்ளது, செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறினார்கள். எனவே நாங்கள் பெரம்பலூர் கூட்டத்திற்கு செல்லவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்."
"அதேபோல நாமக்கல் பிரசார கூட்டம் முடித்துவிட்டு கரூர் வரும்போது, கரூர் காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா? கரூரில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வரவேண்டாம் என சொல்லியிருக்கலாம் அல்லவா?" எனக் கேள்வியெழுப்பினார்.
"பிறகு ஏன் என்னை காவல்துறையே வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்." என்றும் அவர் கூறினார்.
'அரசுப் பணி வழங்க தடையில்லை'
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் நிகழ்வை தமிழக அரசு தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த நியமனங்கள் தற்காலிகமானவை என்றும் நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டவை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நியமனங்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்தும், இந்த வழக்கில் அவை பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விளக்கி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசுப் பணி வாய்ப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், நியாயமான காரணம் இல்லாமல் அதை மறுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் டிஎன்பி எஸ்சியையும் நீதிமன்றமே தாமாக முன்வந்து இணைத்துள்ளது. குறிப்பிடதக்கது.
கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு