மெஸ்ஸி புதிய சாதனை: கடும் சவால் தந்த சுவிட்சர்லாந்தை அர்ஜென்டினா வெல்ல வித்திட்ட 'திருப்பு முனை' நிகழ்வு

பட மூலாதாரம், Tullio Puglia - FIFA/FIFA via Getty Images
- எழுதியவர், எம்மா ஸ்மித்
- பதவி, பிபிசி ஸ்போர்ட்ஸ் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
உலகக்கோப்பை காலிறுதியில் கடும் வெப்பம் நிலவிய கான்சாஸ் சிட்டியில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஒரு பரபரப்பான வெற்றியை அர்ஜென்டினா பெற்றுள்ளது. 2026 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை அர்ஜென்டினா எதிர்கொள்ளும். இந்தப் போட்டி பிபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
சர்ச்சைக்குரிய ஒரு போட்டியை கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் தனது அபாரமான திறமையால் முடிவுக்குக் கொண்டு வந்தார். 25 கஜ தூரத்திலிருந்து அவர் அடித்த பந்து, சுவிஸ் கோல்கீப்பர் கிரெகர் கோபலை ஏமாற்றி கோலானது.
இரண்டாம் பாதியில் பரபரப்பான சூழலில், 10 வீரர்களுடன் ஆடிய போதிலும் சிறப்பாக தற்காப்பில் ஈடுபட்ட சுவிட்சர்லாந்துக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
வீடியோ உதவி நடுவர் மறுபரிசீலனையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் நட்சத்திர முன்கள வீரர் பிரீல் எம்போலோ டைவிங் செய்ததற்காக இரண்டாவது மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
முதலில், மைதானத்தின் நடுக்கோட்டிற்கு அருகே லியாண்ட்ரோ பரேடெஸ், எம்போலோ மீது ஃபவுல் செய்தது போல் தோன்றியது, அதற்காக அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இருப்பினும், வீடியோ உதவி நடுவரின் பரிசீலனையில், சுவிஸ் வீரர் நடித்தது தெரியவந்தது.
பரேடெசுக்கு அளிக்கப்பட்ட மஞ்சள் அட்டை ரத்து செய்யப்பட்டது. அதேநேரத்தில், ஏற்கெனவே ஒரு மஞ்சள் அட்டை பெற்றிருந்த எம்போலோ, தனது மன உளைச்சலுக்கும் சுவிஸ் மக்களின் சீற்றத்திற்கும் மத்தியில் வெளியேற்றப்பட்டார்.
எம்போலோ வெளியேற்றப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை, நடப்பு உலக சாம்பியனுக்கு எதிரான இந்த ஆட்டத்தின் பெரும்பகுதியில் சிறந்த அணியாக சுவிட்சர்லாந்து விளங்கியது.

பட மூலாதாரம், Lars BaronGetty Images
ஆட்டம் தொடங்கி 10 நிமிடங்களே ஆன நிலையில், லியோனல் மெஸ்ஸியின் கார்னர் கிக்கை அலெக்சிஸ் மக் அலிஸ்டர் கோல் கம்பத்தின் அருகே தட்டிவிட்டபோது, அர்ஜென்டினா அரையிறுதிக்கு எளிதாக முன்னேறிவிடும் என்று எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம்.
ஆனால், அர்ஜென்டினா வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த இந்த அனுகூலத்தைப் பயன்படுத்தத் தவறினர். 67-வது நிமிடத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியின் விங்கரான டான் என்டோயே கோல் அடிக்கும் வரை, சுவிட்சர்லாந்து ஆட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது.
என்டோயே இடதுபுறத்திலிருந்து உள்ளே நுழைந்து, ரிக்கார்டோ ரோட்ரிக்ஸுடன் ஒன்றிரண்டு பாஸ் விளையாடி, அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸின் கால்களுக்கு இடையில் பந்தை செலுத்தி கோலாக்கினார்.
ஆனால், எம்போலோ வெளியேற்றத்திற்குப் பிறகு சுவிட்சர்லாந்து 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த இந்த நிகழ்வு பிறகு, ஆட்டத்தில் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அல்வாரெஸ் அடித்த அபாரமான கோலால் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
ஆட்டத்தை மீண்டும் சமன் செய்ய சுவிட்சர்லாந்து இரண்டாவது கோலுக்காகப் போராடியது. ஆனால் அர்ஜென்டினாவின் எதிர் தாக்குதலில் சுவிட்சர்லாந்து சிக்கிக்கொண்டது. லௌதாரோ மார்டினெஸ் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பந்தை வலைக்குள் தள்ள அர்ஜென்டினா மூன்றாவது கோலைப் பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் தனது முயற்சியை அர்ஜென்டினா உயிர்ப்புடன் வைத்துள்ளது.

பட மூலாதாரம், Odd ANDERSEN / AFP via Getty Images
அர்ஜென்டினா ஆட்டம் எப்படி?
ஆட்டத்தின் தொடக்கத்தில் தெளிவான வெற்றி வாய்ப்புடன் அர்ஜென்டினா இருந்தது. ஆனாலும், அர்ஜென்டினா ஒரு ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் குழப்பமான வெற்றியைப் பெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அணியால், மேக் அலிஸ்டரின் தொடக்க கோலுக்கும், இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தின் இறுதியில் மார்டினெஸின் கோல் முயற்சியை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் கோபெல் சிறப்பாகத் தடுத்ததற்கும் இடையில் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் இலக்கை நோக்கி வேறு எந்த ஷாட்டையும் அடிக்க முடியவில்லை.
அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டார். என்டோயே நெருக்கமாக அடித்த ஷாட்டை அவர் தடுத்தார். கோல் வாய்ப்பு உருவாவதற்கு முன்பு எம்போலோ ஆஃப்சைடு என்று அறிவிக்கப்பட்டார், இருப்பினும் என்டோயே கோல் அடித்திருந்தால் இந்த முடிவு மாற்றப்பட்டிருக்கலாம் என்று மறு ஒளிபரப்புகள் காட்டின.
எம்போலோ மற்றும் என்டோயே இருவரும் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்ற ஷாட்களையும், கிரானிட் ஷாகாவின் நீண்ட தூர ஷாட்டையும் மார்டினெஸ் சிறப்பாக தடுத்தார்.
இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக மெஸ்ஸியால் கோல் அடிக்க முடியாமல் போனபோதிலும், அர்ஜென்டினாவிடம் தாக்குதல் திறன் அபரிமிதமாக இருந்ததால் சுவிட்சர்லாந்து அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
அர்ஜென்டினா தொடர்ந்து 15 உலகக் கோப்பை ஆட்டங்களில் கோல் அடித்துள்ளது, கடந்த 11 ஆட்டங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது இரண்டு கோல்களையாவது அடித்துள்ளது. இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட கோல்களை அடித்ததன் மூலம், 1930 மற்றும் 1954-க்கு இடையில் உருகுவேயின் சாதனையை அர்ஜென்டினா முறியடித்துள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக பல கோல்களை அடித்ததற்கான புதிய சாதனையை அர்ஜென்டினா படைத்துள்ளது.
மெஸ்ஸி தனது சாதனை மணிமகுடத்தில் மேலும் ஒரு சாதனையைச் சேர்த்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் 10 கோல் வாய்ப்புகளை உருவாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Kevin C. CoxGetty Images
சுவிட்சர்லாந்து ஆட்டம் எப்படி?
அர்ஜென்டினாவுக்கு எதிரான காலிறுதியில் நீண்ட நேரம் சிறந்த அணியாக இருந்த பிறகு என்ன நடந்திருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து யோசிக்கும். இந்தப் போட்டியில் எம்போலோவின் வெளியேற்றம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பரேடெஸிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லாமல் எம்போலோ கீழே விழுந்தார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அர்ஜென்டினா வீரர்கள் முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் இருந்ததால், அவர் மற்றொரு கடுமையான சவாலை எதிர்பார்த்திருக்கலாம்.
மொத்தத்தில், ஆட்டத்தில் 32 ஃபவுல்கள் நிகழ்ந்தன, அவற்றில் 14 அர்ஜென்டினா வீரர்களால் செய்யப்பட்டன. ஆனால் கூடுதல் நேரம் வரை அர்ஜென்டினா வீரர் யாருக்கும் மஞ்சள் அட்டை எதுவும் வழங்கப்படவில்லை.
இதன் விளைவாக, சுவிட்சர்லாந்தால் தங்களது காலிறுதியுடன் வெளியேறும் சாபத்தை முறியடிக்க முடியவில்லை. இந்தத் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய முக்கிய நடுக்கள வீரரான ஜோஹான் மன்சாம்பி இல்லாததும் சுவிட்சர்லாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. அவர் முழங்கால் காயம் காரணமாக கடைசி இரண்டு ஆட்டங்களில் விளையாடவில்லை.

பட மூலாதாரம், Lars Baron/Getty Images
அடுத்தது என்ன?
அட்லாண்டாவில் ஜூலை 15, புதன்கிழமை இரவு 8:00 மணிக்கு (BST) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
அந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அல்லது ஸ்பெயினை எதிர்கொள்ளும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































