ஓமன் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்: 10 இந்தியர்கள் மீட்பு, ஒருவர் மாயம்

இரான், இந்தியா, ஹோர்மூஸ், ஓமன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இன்னும் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஓமன் கடற்கரை அருகே ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி என்கிற வணிக கப்பலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஞாயிறு அன்று எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஒருவரை மட்டும் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

"ஓமனில் உள்ள இந்திய தூதரகம் சமீபத்திய நிகழ்வுகளைக் உன்னிப்பிக்காக கண்காணித்தும் ஓமன் அதிகாரிகள் உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கியும் வருகிறது," என வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

மேலும், "இந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஓமன் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகவும்." அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தப் பிராந்தியத்தில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது. பிராந்தியத்தில் உள்ள பதற்றங்களை உடனடியாக தணிக்க வேண்டும் என்றும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்த தற்போதைய பேச்சுவார்த்தைகள் ஒரு ராஜ்ஜிய தீர்வை நோக்கி நகர வேண்டும் என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது." என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின்படி, (சென்ட்காம்) சைப்ரஸ் கொடி ஏந்திய ஜிஎஃப்எஸ் கேலக்ஸி வணிக கப்பல் ஹோர்மூஸ் நீரிணையில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் (ஐஆர்ஜிசி) தாக்கப்பட்டது.

பணியாளர்களில் ஒருவரைக் காணவில்லை என சென்ட்காம் தெரிவிக்கிறது. கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் என்ஜின் அறைக்கு ஏற்பட்ட பலத்த சேதத்தால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை எனவும் கூறியுள்ளது.

இந்தநிலையில் இரானில் 140 ராணுவ நிலைகளை இலக்கு வைத்ததாக சென்ட்காம் தெரிவிக்கிறது.

மறு அறிவிப்பு வரும் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியுள்ளது.

இரான் அரசு ஊடகங்களின்படி, அந்தக் கப்பல் அதன் சிக்னல் அமைப்புகளை நிறுத்தி குறித்த வழித்தடத்திலிருந்து விலகியதால் தாக்கப்பட்டதாக ஐஆர்ஜிசி தெரிவித்துள்ளது.

"இரான் தவறான முடிவு எடுத்துவிட்டது. தற்போது அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்," என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணை முடப்பட்ட பிறகு, அமெரிக்காவின் எந்தத் "தீவிர நடவடிக்கையும்" வலுவான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும் என்றும் பிராந்தியத்தில் உள்ள புதிய இலக்குகள் குறிவைக்கப்படும் என்றும் ஐஆர்ஜிசி எச்சரித்திருந்தது.

இரான், இந்தியா, ஹோர்மூஸ், ஓமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக இரான் கூறுகிறது (கோப்புப் படம்)

ஜோர்டன் மீது தாக்குதல் நடத்திய இரான்

இரானின் தெற்குக் கரையில் உள்ள பல்வேறு தளங்கள் மற்றும் தொலைதொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு இரான் சமீபத்திய தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

ஐஆர்ஜிசியின் தாக்குதலைத் தொடர்ந்து ஜோர்டன் பிரின்ஸ் ஹசன் விமானப்படை தளத்தில் உள்ள கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் மற்றும் எம்க்யூ-8 டிரோன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டடம் அழிக்கப்பட்டதாக இரான் கோருகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஹ்ரைனும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் எச்சரிக்கை நிலையில் உள்ளன. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பியதாக பிபிசி அரேபிய மொழி சேவை தெரிவிக்கிறது.

இதற்கிடையே ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரான், இந்தியா, ஹோர்மூஸ், ஓமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை முடப்பட்ட பிறகு அமெரிக்காவின் எந்த "தீவிர நடவடிக்கையும்" வலுவான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும் என்றும் பிராந்தியத்தில் உள்ள புதிய இலக்குகள் குறிவைக்கப்படும் என்றும் ஐஆர்ஜிசி எச்சரித்திருந்தது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சில தினங்களுக்கு முன்பாக ஓமன் கடற்பரப்பில் அமெரிக்கா பரிந்துரைத்த வழித்தடத்தில் செல்ல முயன்றபோது மூன்று வணிக கப்பல்கள் தாக்கப்பட்டன.

தனது கடற்பரப்பில் உள்ள தனி வழித்தடம் தான் "பாதுகாப்பான" வழித்தடம் என இரான் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அமெரிக்கா பல தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் 115 பேர் காயமடைந்ததாகவும் இரானிய அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்குப் பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. இரானின் தாக்குதல்களின் அர்த்தம் போர்நிறுத்தம் முடிந்துவிட்டது என்பதே என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்கா தான் ஒப்பந்தத்தை மீறியதாக இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அதற்கான நடைமுறையை மீண்டும் தொடங்குவதில் மத்தியஸ்தர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க ஊடகங்களில் வந்துள்ள செய்தியின்படி, கப்பல்கள் மீது நடந்த தாக்குதல்கள் தவறானது என்றும் தங்கள் தரப்பில் ஒரு பிரிவினர் அதைச் செய்ததாதகவும் அமெரிக்க அதிகாரிகளிடம் இரான் தெரிவித்துள்ளது.

தங்களின் கோரிக்கைகளை இரானிடம் மத்தியஸ்தர்கள் மூலம் தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இரான், இந்தியா, ஹோர்மூஸ், ஓமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது ட்ரோன் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக இரான் கூறுகிறது.

டிரோன் உற்பத்தி மும்மடங்கு அதிகரித்த இரான்

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான சமீபத்திய போரின்போது இரானின் டிரோன் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மஜித் எபின் ரேஸா தெரிவித்தார்.

இரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏவின்படி, சனிக்கிழமையன்று இரானில் கடந்த ஆண்டு நடைபெற்ற 12 நாள் போர் மற்றும் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் நடைபெற்ற போர் பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எபின் அல்-ரேஸா, "எதிராளி" 150 பிரமாண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மேம்பட்ட ஆயுதங்களுடன் போர்க்களத்திற்கு வந்தார்." எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "போரில் உச்சக்கட்டத்திலும் பாதுகாப்பு துறை உற்பத்தி எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்தது. இரானின் டிரோன் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு போர் ஒரு தூண்டுதலாக இருந்தது மற்றும் எதிராளியின் பலவீனத்தை அடையாளம் காண்பதும் அவசியமாகிறது." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு