You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஆலைக்குள் விடுதி... அனுமதி கொடுத்ததா அரசு?' - அமோனியா வாயு கசிவு குறித்து எழும் கேள்விகள்
திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக, ஜூன் 25 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் 11 பேர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பேர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசு கூறியுள்ளது.
"விபத்து நடந்த ஆலையில் கடந்த டிசம்பர் மாதம் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதன்பிறகு முறையாக ஆய்வு நடத்தாததே விபத்துக்குக் காரணம்" என சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் விமர்சித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் என்ற பெயரில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வந்தது.
கடந்த ஞாயிறுன்று (ஜூன் 21) ஆலையில் பனிக்கட்டி தயாரிக்கும் இயந்திரத்துக்கு செல்லும் பாதையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையிலும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
'வாயு கசிவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூச்சுத் திணறல், கண்கள் மற்றும் சுவாசப் பாதையில் எரிச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்பட்டனர்' என, அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.
அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் ஆலையின் உரிமையாளர்கள் உள்பட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த திங்கள்கிழமையன்று பிபிசி தமிழ் அங்கு சென்றபோது ஆலையில் உள்ள அமோனியாவை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
ஆலையில் குழந்தைத் தொழிலாளர்கள்?
பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலரும் சிறுமிகளாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. எனினும், அவர்களின் வயது விவரங்களை அறிய முடியவில்லை.
ஒடிஷா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து முகவர் ஒருவர் மூலமாக அவர்கள் பணியில் சேர்ந்திருந்தனர். சக பணியாளர்கள் இறந்த தகவலை அறிந்து பலரும் அழுது கொண்டிருந்தனர்.
அங்கிருந்த தொழிலாளர் நலத்துறை அதிகாரி பிபிசி தமிழிடம் இதுகுறித்து கூறியபோது, "கடந்த ஞாயிறன்று இதுதொடர்பாக ஆய்வு நடந்தபோது சிறார் தொழிலாளர் இல்லை எனத் தெரியவந்தது. இருப்பினும் அவர்களின் வயது தொடர்பாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இந்தநிலையில், வாயு கசிவில் இறந்துபோன சிறுமிகளில் இரண்டு பேர் 16 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
"குழந்தைத் தொழிலாளர்கள் ஆலையில் பணிபுரிந்ததாக செய்தி வெளியானது. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக இருக்கும் மாவட்ட ஆட்சியர், தொழிற்சாலைகளில் எந்த ஆய்விலும் ஈடுபடுவதில்லை. ஆலைகளில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை" எனக் கூறுகிறார், சி.ஐ.டி.யு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன்.
"புலம்பெயர் தொழிலாளர்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு ஆகியவற்றை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை" எனவும் அவர் விமர்சித்தார்.
இதற்கு ஊடகங்களிடம் விளக்கம் அளித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, "குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிந்தார்களா என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார்.
உடல்களை அடையாளம் கண்டறிவதில் சிக்கலா?
திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடம் ஊடகங்கள் பேசுவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அமோனியா வாயு வெளியேறிய பயத்தில் அவர்கள் உள்ளனர்" எனக் கூறினார்.
"தொழிலாளர்களுக்கு உடல்நலப் பரிசோதனைகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தங்களின் உறவினர்களுடன் அவர்கள் பேசி வருகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க் கிழமையன்று அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், 'ஓர் உடலை அடையாளம் காண முடியவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தது. இது விவாதப் பொருளாக மாறியது. எனினும், மறுநாள் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் அவரது பெயர் விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அளித்த ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுகளில் சில போலியானவை எனவும் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும் நாளேடுகளில் செய்தி வெளியானது.
"உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதா?" என, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அலுவலர் (RMO) உமாபதியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுடன் பணிபுரிந்தவர்கள் யாரும் உடன் இல்லை. அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்" என்கிறார்.
"இதன் காரணமாக இறந்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. பிறகு அவர்கள் யார் என்பதை குழு வந்து கண்டறிந்தது. அதில் எந்தவித சிரமமும் ஏற்படவில்லை" எனப் பதில் அளித்தார்.
'டிசம்பர் மாதம் ஆய்வு... ஆனால்?'
அமோனியா வாயு கசிவு சம்பவம் அரசின் தொழிலாளர் நலத்துறை மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
"தொழிற்சாலைக்குள் கேம்ப் கூலி முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி முடிந்த பிறகு வளாகத்துக்குள்ளேயே தங்கியிருந்துள்ளனர். இது தவறானது" எனக் கூறுகிறார், சி.ஐ.டி.யு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன்.
ஆலைக்குள் விடுதி செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுமதி பெற்றதா என்ற கேள்வி எழுவதாகக் கூறும் எஸ்.கண்ணன், "இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் ஆலையில் அனுமதியைப் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்கிறார்.
"ஆலை வளாகத்துக்குள் தங்கியிருந்ததால் எட்டு மணிநேரத்துக்கு மேல் வேலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த விவகாரத்தில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்" என்கிறார் அவர்.
"கடந்த 2025 டிசம்பர் மாதம் தொழிற்சாலையை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதன்பிறகு ஆய்வை நடத்தவில்லை" என்கிறார் எஸ்.கண்ணன்.
தொடர்ந்து பேசிய அவர், "புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களை பணியில் அமர்த்தும்போது 25 ஆயிரம் ரூபாய் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என புலம்பெயர் தொழிலாளர் சட்டம் கூறுகிறது. அவர்களின் பெயர்ப் பட்டியல் வைக்கப்பட வேண்டும்" என்கிறார்.
"அதனை தொழிற்சாலைகள் முறையாகப் பின்பற்றுவதில்லை. அரசு அதிகாரிகளும் அதனைக் கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக பல்வேறு துயரங்களை புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்" என்கிறார் எஸ்.கண்ணன்.
எச்சரிக்கையைப் பின்பற்றவில்லையா?
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் (DISH) மறுத்துள்ளது. 'தி இந்து' ஆங்கில செய்தித்தாளிடம் பேசிய அந்த இயக்ககத்தின் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அதிகாரி ஒருவர், "ஆலையில் முறையான எச்சரிக்கை அமைப்பு இல்லாதது குறித்து முந்தைய ஆய்வில் எச்சரித்தும் அதனை சம்பந்தப்பட்ட ஆலை பின்பற்றவில்லை" எனக் கூறினார்.
ஆலையில் சரிசெய்யப்பட வேண்டிய குறைபாடுகளை ஆய்வின் போது தெரிவித்ததாகக் கூறும் அவர், "அமோனியா வாயு கசிவுக்கு இவை காரணமாக இருந்ததா என்பது குறித்து முழுமையான விசாரணையில் தெரியவரும்" என்கிறார்.
தமிழ்நாட்டில் அமோனியா வாயு கசிவு தொடர்பான சில சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் என்னும் உர உற்பத்தி ஆலையில் நள்ளிரவில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
ஆலை அமைந்துள்ள கடல் பகுதியில் இருந்து திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயில் அமோனியா கசிந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 29 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரி ஒருவர், "கோரமண்டல் ஆலை விபத்தைத் தொடர்ந்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தோம். அமோனியாவை பயன்படுத்தும் ஆலைகள் பின்பற்றியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
இதேபோன்று அபாயகரமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் ஆறாயிரம் நிறுவனங்களில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான குழுவை அரசு அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியது என்ன?
திருவள்ளூர் தனியார் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு தொடர்பாக சில பரிந்துரைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
* பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள் அனைவரும் விரிவான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
* இவர்களுக்கு பிற்காலத்தில் ஏற்படக் கூடிய சுவாசக் கோளாறுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
* ஆலை வளாகத்தில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
* தொழிலக பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அவசர கால செயல்முறைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
* மாவட்டத்தில் உள்ள இதேபோன்ற பிற நிறுவனங்களில் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
"ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தாமல் மாதம்தோறும் இதுபோன்ற தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தான் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்" என்கிறார், சி.ஐ.டி.யு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு