'40 ஆண்டுக்கு முன் கூறியிருந்தால், நான் வெளியேறியிருப்பேன்': மகாராஷ்டிர அரசின் புதிய உத்தரவு பற்றி இவர்கள் கூறுவது என்ன?

தானேவில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான கன்ஹையாலால் சுக்லா, மராத்தி மொழியில் செயல்முறை அறிவு கட்டாயம் என்ற முடிவின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்

பட மூலாதாரம், Shardul Kadam

படக்குறிப்பு, தானேவில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான கன்ஹையாலால் சுக்லா, மராத்தி மொழி அறிந்திருப்பது கட்டாயம் என்ற முடிவின் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்
    • எழுதியவர், அல்பேஷ் கர்காரே
    • பதவி, பிபிசி மராத்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை இப்படி இருக்கவில்லை. அப்போது யாராவது எங்களிடம், 'நீங்கள் மராத்தி மொழியைக் கற்காவிட்டால், இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்' என்று சொல்லியிருந்தால், நாங்கள் இங்கு தங்கியிருக்கவே மாட்டோம். இப்போது ஆட்சியாளர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள், அந்த முடிவைச் செயல்படுத்தி உரிமங்களை ரத்து செய்யுங்கள்."

தானே நகரில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான கன்ஹையாலால் சுக்லா, ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்ற மகாராஷ்டிர அரசின் முடிவு பற்றி பேசும் போது இவ்வாறு கூறினார்.

மகாராஷ்டிராவில் உள்ள ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் மராத்தி மொழியைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் கூடியவர்களாக இருக்க வேண்டுமென மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு பிறகு மராத்தி தெரியாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டுநர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில், மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரை ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான மராத்தி வகுப்புகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதுவரை சுமார் 1.65 லட்சம் ஓட்டுநர்கள் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு மராத்தியை கற்றுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும், பயிற்சிக் காலம் முடிவடையும் நிலையிலும், பல ஓட்டுநர்கள் இன்னும் மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை. எனவே, அரசின் இந்த முடிவு மீது பல ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமெனவும், ஓட்டுநர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாமெனவும் ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர் சங்கங்களும் சில அரசியல் தலைவர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், ஆகஸ்ட் 14 அன்று ஊடகங்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்னைக், மராத்தி பேசத் தெரியாத ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்று கூறினார். ஆகஸ்ட் 18 முதல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 17க்கு பிறகு மராத்தி மொழி தெரியாத ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

பட மூலாதாரம், Shardul Kadam

படக்குறிப்பு, ஆகஸ்ட் 17க்கு பிறகு மராத்தி மொழி தெரியாத ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

மராத்தி கற்க வேகம் காட்டும் சில ஓட்டுநர்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தானே மற்றும் மும்பையில் உள்ள சில ஓட்டுநர்களிடம் பேசினோம்.

மகாராஷ்டிர அரசின் போக்குவரத்துத் துறை, மராத்தி மொழித் துறை ஆகியவை ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு இலவச மராத்தி மொழிப் பயிற்சியை வழங்கி வருகின்றன. கொங்கண் மராத்தி சாகித்ய பரிஷத், மும்பை மராத்தி சாகித்ய சங், மாநில மராத்தி விகாஸ் சன்ஸ்தா உள்ளிட்ட அதிகாரபூர்வ அமைப்புகளும் இதில் ஈடுபட்டுள்ளன. சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளும் இந்தத் திட்டத்திற்கு உதவி வருகின்றன.

தானேவில் உள்ள ஒரு மராத்தி பள்ளியில், மும்பை மற்றும் தானேவை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் தினமும் மராத்தி வகுப்புகளில் கலந்துகொண்டனர். மகாராஷ்டிரா முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் இதேபோன்ற பயிற்சி நடைபெற்று வருகிறது. தானேவின் சில பகுதிகளில், ஓட்டுநர்கள் வகுப்புகளில் சேர ஆர்வத்துடன் விரைந்து செல்வதைக் காண முடிந்தது.

மும்பை மராத்தி சாகித்ய சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளித்தனர். நான்கு மணிநேர "மராத்தி மொழித் தொடர்புப் பயிற்சி" நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை முடித்த பிறகு, நான்காம் நாளில் ஓட்டுநர்கள் வாய்மொழித் தேர்வை எழுதுகிறார்கள். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரை பயிற்சியை வழங்க மகாராஷ்டிரா முழுவதும் சுமார் 1,600 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாநிலத்தில் சுமார் 1.65 லட்சம் ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் இந்தத் திட்டத்திற்காகப் பதிவு செய்துள்ளனர். மராத்தி பேசாத 1.35 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் இதுவரை பயிற்சியை முடித்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தானேவில் நடைபெற்ற மராத்தி வகுப்பில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் அப்துல் ஷேக்கை நாங்கள் சந்தித்தோம். மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்ட பிறகு அவர் இந்தத் திட்டத்தில் இணைந்தார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், "இதற்கு முன் எங்களுக்கு யாரும் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை. மக்கள் எங்களிடம் ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். நாங்கள் இங்கு ரிக்ஷா ஓட்டுவதால், இப்போது மராத்தி கற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்தோம். இப்போது நாங்கள் கொஞ்சம் கற்றுக்கொண்டோம், பிறகு முழுமையாகக் கற்றுக்கொள்வோம்," என்று கூறினார்.

கல்வாவை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநரான சஞ்சய் குப்தா, கடந்த 32 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். அவரும் அந்த வகுப்பில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில், "இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். கற்றுக் கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது, நாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வேலை செய்யும் இடத்தின் மொழியைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு? இதற்கு முன் யாரும் எங்களுக்கு இதைக் கற்றுக் கொடுக்கவில்லை, ஆனால் இப்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது." என்றார்.

மும்பை, தானே பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள், தானேவில் உள்ள ஒரு மராத்தி பள்ளியில் தினமும் மராத்தி மொழிப் பயிற்சியைப் பெறுவதைக் காண முடிந்தது

பட மூலாதாரம், Shardul Kadam

படக்குறிப்பு, மும்பை, தானே பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள், தானேவில் உள்ள ஒரு மராத்தி பள்ளியில் தினமும் மராத்தி மொழிப் பயிற்சியைப் பெறுவதைக் காண முடிந்தது

அதிருப்தியை வெளிப்படுத்தும் சில ரிக்‌ஷா ஓட்டுநர்கள்

பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் சில ஓட்டுநர்கள் மராத்தி மொழியைக் கற்க ஆர்வமாக இருந்தாலும் தானே, முலுண்ட் போன்ற பகுதிகளில் நாங்கள் சந்தித்த பல ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அரசின் இந்த முடிவில் அதிருப்தி கொண்டிருந்தனர்.

சில ஓட்டுநர்கள் தங்களுக்கு மராத்தி மொழியைக் கற்றுக்கொள்வது கடினமாக இருப்பதாகக் கூறினர். அவர்களில் பலருக்கு முறையான கல்வி அறிவு மிகக் குறைவாகவே உள்ளது அல்லது இல்லவே இல்லை. வயதான ஓட்டுநர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் மராத்தியை பயன்படுத்தாத நிலையில், ஒரு புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வது கடினம் என்கின்றனர்.

தானேவில் வசிக்கும் 60 வயதான ரிக்ஷா ஓட்டுநர் கன்ஹையாலால் சுக்லா, மராத்தி மொழி அறிவை கட்டாயமாக்கும் முடிவு குறித்துப் பேசியபோது, "நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. அப்போது, 'மராத்தி கற்காவிட்டால் இங்கிருந்து வெளியேறுங்கள்' என்று யாராவது எங்களிடம் சொல்லியிருந்தால், நாங்கள் இங்கே தங்கியிருக்க மாட்டோம். இப்போது ஆட்சியாளர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள், முடிவை அமல்படுத்தி உரிமங்களை ரத்து செய்யட்டும். இந்த வயதில் நான் எங்கே சென்று கற்றுக்கொள்வது? எனக்கு எதுவும் நினைவில் இருப்பதில்லையே" என்று கூறினார்.

"பல ஆண்டுகளாக மராத்தி மொழியைக் கற்றுக்கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. வயதான காலத்தில் நான் இப்போது என்ன கற்றுக்கொள்ள முடியும்? ஏன் ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மட்டும் இது கட்டாயமாக்கப்பட வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார் கோப்ரியில் வசிக்கும் 49 வயதான ரிக்ஷா ஓட்டுநர் முன்னலால் குப்தா.

இதை அனைவருக்கும் கட்டாயமாக்குமாறும் வலியுறுத்தும் அவர், "கற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் நடவடிக்கை எடுப்போம்' எனக் கூறுவது தவறு."

முலுண்டை சேர்ந்த 45 வயதான ரிக்ஷா ஓட்டுநர் அஜய் சிங், "இன்று 50-60 வயதுடைய ரிக்ஷா ஓட்டுநர்கள் மராத்தி கற்கச் செல்கிறார்கள், மக்கள் அவர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். அரசியல்வாதிகள் ஏதேதோ முடிவுகளைக் கொண்டு வருகிறார்கள். சாமானிய மக்கள் இதுபோன்ற விஷயங்களை கேட்பதில்லை" எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பேசிய கஞ்சூரில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநர் வசந்த் சர்மா, "நாங்கள் இன்னும் இந்த வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. எங்களுக்குச் சிறிது மராத்தி தெரியும். நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கச் செய்யாதீர்கள். எங்கள் வாக்குகளால் பதவியைப் பெற்றுவிட்டு, இப்போது மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். எந்த அரசியல் கட்சி தலைவரும் ரிக்ஷாவிலோ அல்லது டாக்சியிலோ பயணம் செய்வதில்லை. இந்த முடிவுக்குப் பின்னால் அரசியல் இருப்பதாக நான் நினைக்கிறேன்" எனக் கூறினார்.

மாநிலம் முழுவதும் முன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தானேவில், சில இடங்களில் ரிக்ஷா ஓட்டுநர்கள் மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் செல்வதைக் காண முடிந்தது

பட மூலாதாரம், Shardul Kadam

படக்குறிப்பு, மகாராஷ்டிரா முழுவதும் முன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தானேவில், சில இடங்களில் ரிக்ஷா ஓட்டுநர்கள் மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் செல்வதைக் காண முடிந்தது

கால அளவை நீட்டிக்குமாறு எழும் கோரிக்கை

மகாராஷ்டிரா தங்கள் பணித்தளம் என்பதால் ஓட்டுநர்கள் மராத்தி மொழியைக் கற்க வேண்டுமென ரிக்‌ஷா மற்றும் டாக்சி சங்கங்களும் சில அரசியல் தலைவர்களும் கூறுகின்றனர்.

அதேவேளையில், மொழியைக் கற்க ஓட்டுநர்களுக்குக் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மராத்தி தெரியாதவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மகாராஷ்டிராவில் சுமார் 15 லட்சம் ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் உள்ளனர். இதில் மும்பையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் சுமார் 75% முதல் 80% வரையிலானோர் மராத்தி பேசாதவர்கள். இவர்கள் பல ஆண்டுகளாக மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

உடனடியாக மராத்தி பேசும்படி கட்டாயப்படுத்தி இந்த ஓட்டுநர்களை தண்டிப்பது நியாயமற்றது என்று ரிக்ஷா-டாக்சி சங்கத் தலைவர் ஷஷாங்க் ராவ், சிவசேனாவின் ஷிண்டே பிரிவுத் தலைவர் சஞ்சய் நிரூபம் ஆகியோர் கூறுகின்றனர்.

"பயிற்சிக்கான கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். ஒருவேளை அவர் மராத்தி கற்கவில்லை என்றால், அவரது உரிமம் ரத்து செய்யப்படும் என்பது தவறான முடிவு. எனவே, அவரது வாழ்வாதாரம் அழிக்கப்படக் கூடாது. இது தொடர்பாக அனைத்து சங்கங்களின் கூட்டத்தை நடத்தி, பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்," என்று ரிக்ஷா-டாக்சி சங்கத்தைச் சேர்ந்த ஷஷாங்க் ராவ் கூறினார்.

இதற்கிடையில், சிவசேனாவின் ஷிண்டே பிரிவுத் தலைவர் சஞ்சய் நிரூபம், "ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மீது மராத்தி மொழியைக் கட்டாயமாக்கியது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. ஏழைகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது" என்றார்.

"எந்தவொரு மொழியைக் கற்பதும் அந்தந்த நபரின் திறனைப் பொறுத்தது. அதற்கென அவகாசம் அளிப்பது அவசியம். பிழைப்புக்காக மும்பைக்கு வரும் கடின உழைப்பாளிகள் மராத்தி கற்பதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது."

கோப்ரியில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான முன்னலால் குப்தா, "இத்தனை ஆண்டுகளாக மராத்தி மொழியைக் கற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை. வயதான காலத்தில் நான் என்ன கற்றுக் கொடுக்கப் போகிறேன்?" என்று கேள்வி எழுப்பினார்

பட மூலாதாரம், Shardul Kadam

படக்குறிப்பு, கோப்ரியில் வசிக்கும் ரிக்ஷா ஓட்டுநரான முன்னலால் குப்தா, "இத்தனை ஆண்டுகளாக மராத்தி மொழியைக் கற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை. வயதான காலத்தில் நான் என்ன கற்றுக் கொடுக்கப் போகிறேன்?" என்று கேள்வி எழுப்பினார்

'40 ஆண்டுகள் வாழ்ந்தும் மராத்தி தெரியாமல் இருப்பது அவமானம்'

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டை மராத்தி மொழி அறிஞர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய மராத்தி ஆய்வு மையத்தைச் சேர்ந்த தீபக் பவார், "இங்கு 40 ஆண்டுகளாக வசிப்பவர்களால் மராத்தி பேச முடியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அவர்கள் மராத்தியை சரளமாகக் கற்றுக்கொள்வது கூட மராத்தி மொழிக்கு எந்தப் பயனையும் அளிக்காது" என்றார்.

மேலும் பேசிய பவார், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்கள் எப்படி இங்கு இரண்டு நாட்களில் தங்கள் ஆவணங்களைப் பெறுகிறார்கள்? அவர்களுக்கு இங்குள்ள மொழி மீது அக்கறை இல்லை. அவர்கள் பழங்குடியினருக்கான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு இங்கு குடியேறுகிறார்கள்" என்றார்.

அத்துடன், "அடிப்படையில், அவர்கள் அரசியலமைப்பின் 19வது பிரிவை தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு தங்கள் வாக்கு வங்கியை உருவாக்குகிறார்கள். அவர்கள் இந்த மாநிலத்தில் மராத்தி மக்களைச் சிறுபான்மையினராக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தீபக் பவார் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என இரு தரப்பினரின் பங்கு குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார்

பட மூலாதாரம், Shardul Kadam

படக்குறிப்பு, தீபக் பவார் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என இரு தரப்பினரின் பங்கு குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார்

'கால நீட்டிப்பு எதுவும் வழங்கப்படாது'

புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக், "1989ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறை அமலுக்கு வந்து இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகின்றன. மகாராஷ்டிராவில் தொழில் செய்யும் ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். இதற்காக வழங்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 15ஆம் தேதி என்ற காலக்கெடுவே இறுதியானது" என்றார்.

இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். மராத்தி மொழிப் பயிற்சியை நிறைவு செய்த ஓட்டுநர்களுக்கு ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் பேசிய சர்நாயக், "ஆகஸ்ட் 18 முதல், வட்டாரப் போக்குவரத்து அலுவலக (RTO) அதிகாரிகள் களத்தில் இறங்கி ஓட்டுநர்களிடம் மராத்தி மொழியில் உரையாடுவார்கள். ஓட்டுநரால் எளிய மராத்தியைக் கூட பேச முடியவில்லை என்றால், அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் (நோட்டீஸ்) வழங்கப்படும்."

"அதன் பிறகு, ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும், மீண்டும் நடத்தப்படும் தேர்வில் மராத்தி மொழியில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பேட்ஜ் (batch), வாகன அனுமதிச் சீட்டு (permit) ஆகியவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு