அலாரம் கடிகாரம் வரும் முன் அதிகாலையில் வீட்டிற்கே வந்து மக்களை எழுப்பிய 'மனித கடிகாரம்'

    • எழுதியவர், ஜோஸ்லின் டிம்பர்லி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஒவ்வோர் மணிநேரத்திலும் உலோக தட்டில் ஊசிகளை விழுமாறு வடிவமைக்கப்பட்ட மெழுகுவர்த்திகளில் இருந்து, தொழில் புரட்சிக் கால பிரிட்டனில் மக்களை அதிகாலையில் எழுப்பும் பணியைச் செய்த சிறப்பு நபர்கள் வரை, சரியான நேரத்தில் விழித்தெழச் செய்வதற்காக மனித சமூகம் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற புத்திசாலித்தனமான முறைகளை உருவாக்கியுள்ளது.

பிரிட்டனில் தொழில் புரட்சி ஏற்பட்டபோது, புதிதாக உருவான தொழிற்சாலைகள் நேரத்தை மிகவும் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டிய நேரம் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு தொழிலாளர் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தால்கூட, முழு உற்பத்திச் சங்கிலியும் பாதிக்கப்படும். அதனால் முதலாளிகளுக்குக் கிடைக்கும் லாபமும் குறையும். எனவே, குறிப்பாக குளிர்காலத்தின் இருண்ட அதிகாலைகளில், மக்கள் நேரத்துக்கு எழுந்திருக்க ஒரு வழி தேவைப்பட்டது. அக்காலத்தில் அலாரம் கடிகாரங்கள் இருந்தாலும், அவை சாதாரண தொழிலாளர்களால் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்தவையாக இருந்தன.

சில தொழிற்சாலைகள் தொழிலாளர்களை எழுப்புவதற்காக விசில்களையும் மணிகளையும் பயன்படுத்தின. ஆனால் அவை பெரும்பாலும் நம்பகமானதாக இருக்கவில்லை. இதன் விளைவாக, மக்களை அதிகாலையில் எழுப்புவதை மட்டுமே தொழிலாகக் கொண்ட ஒரு புதிய பணிப்பிரிவு உருவானது. இவர்கள் "நாக்கர்-அப்பர்கள்" (Knocker-uppers) என்று அழைக்கப்பட்டனர்.

இவர்கள் மனித அலாரம் கடிகாரங்களைப் போன்றவர்கள். தெருக்களிலும், சில நேரங்களில் முழு குடியிருப்புப் பகுதிகளிலும் சுற்றி வந்து, ஜன்னல்கள் அல்லது கதவுகளைத் தட்டுவதன் மூலம் தொழிலாளர்களை எழுப்புவார்கள். சிலர் பட்டாணி விதைகளை சிறிய குழாய்கள் மூலம் ஜன்னல்களில் எறிந்து எழுப்புவார்கள். அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் அருணிமா தத்தா , "தொழிலாளர்கள் பதிலளிக்கும் வரை அவர்கள் அங்கேயே காத்திருப்பார்கள்; ஒருவர் விழித்திருப்பதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த வீட்டுக்குச் செல்வார்கள்." என்று விவரிக்கிறார்.

உண்மையில், இத்தகைய பணிகள் உலகின் பல சமூகங்களிலும் காணப்பட்டுள்ளன என்று தத்தா கூறுகிறார். குறிப்பாக ரமலான் மாதத்தின் போது, அதிகாலையில் தொழுகை செய்யவும் விடியற்கால உணவை உட்கொள்ளவும் எழுந்திருக்க வேண்டிய இஸ்லாமிய சமூகங்களில் இதே போன்ற பணியாளர்கள் இருந்துள்ளனர்.

ஆனால் மனிதர்கள் விழித்தெழுவதற்காக பயன்படுத்திய முறைகள் இதுமட்டுமல்ல. சேவல்களை வளர்ப்பதிலிருந்து, ஒவ்வொரு மணிநேரத்திலும் சிறிய உலோகத் தட்டில் ஊசிகள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்ட மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதுவரை பல புதுமையான வழிமுறைகள் இருந்தன.

முன்னோர் எப்படி தூங்கினர், எப்படி விழித்தெழுந்தனர் என்பதை அறிதல், நவீன காலத்தில் நமது தூக்கப் பழக்கங்களையும் விழிப்புணர்வு முறைகளையும் மேம்படுத்த உதவக்கூடும்.

சேவலின் கூக்குரல்

ஆஸ்திரேலியாவின் சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக தூக்க ஆரோக்கிய நிபுணர் ஃபாத்திமா யாகூத் கூறுவதன்படி, தனிப்பட்ட அலாரம் கடிகாரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, மக்கள் இயற்கைச் சைகைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளையே நம்பியிருந்தனர்.

"பகல் ஒளிதான் மிக முக்கியமான சைகையாக இருந்தது," என்கிறார் அவர். " தொழில்மயமாதலுக்கு முந்தைய பல சமூகங்களில், மக்களின் அன்றாட வாழ்க்கை சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. அதுவே அவர்களின் உடலின் இயற்கை நேரச் சுழற்சியை ஒழுங்குபடுத்தியது."

மனித உடலின் இயற்கை உயிரியல் நேர அமைப்பான சர்கேடியன் ரிதம் தூங்கும் நேரத்தையும் விழிக்கும் நேரத்தையும் நிர்ணயிக்கிறது. இதனுடன், நாள் முழுவதும் மெதுவாக அதிகரிக்கும் "தூக்க அழுத்தம்" இணைந்து செயல்படுகிறது.

"இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து, நாம் ஏன் இரவில் தூங்குகிறோம், ஏன் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறோம், ஏன் காலையில் விழித்தெழுகிறோம் என்பதை விளக்குகின்றன," என்கிறார் யாகூத்.

பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சாஷா ஹாண்ட்லி, "தொழில்மயமாதலுக்கு முன்பிருந்த உலகில் மக்கள் அனைவரும் ஒளி மற்றும் இருள் சுழற்சியைக் கொண்டே வாழ்ந்தனர் என்ற பொதுவான கருத்தை நான் ஏற்க மாட்டேன்" என்கிறார்.

அவரது கருத்துப்படி, குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய தொழில்கள் காரணமாக மக்கள் இரவிலும் உழைத்தனர், பல வேலைகள் இரவு நேரங்களிலும், சில நேரங்களில் விடியற்காலை வரையிலும் நீடித்தன.

"அதற்குப் பதிலாக, மக்கள் தங்களின் வேலை நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்காக உடலின் இயற்கையான பழக்கவழக்கங்களையும், நேரத்தைக் கண்காணிக்க உதவும் பல்வேறு கருவிகளையும் இணைத்தே பயன்படுத்தினர்," என்று ஹாண்ட்லி கூறுகிறார்.

விவசாயச் சமூகங்களில் குளிர்காலத்தில் தூக்க நேரம் சற்று அதிகமாக இருந்திருக்கலாம். காரணம், இலையுதிர் காலம் முடிவடையும் நேரத்திற்குள் அதிகாலைப் பணிகள் குறைந்துவிடும். இருந்தபோதிலும், மக்கள் அதிகாலையில் எழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

"மத நம்பிக்கைகள் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று," என்கிறார் ஹாண்ட்லி. "ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவாலயத்துக்குச் செல்ல வேண்டும், அல்லது அதிகாலையில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் இருந்தது. அது தங்களை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்று அவர்கள் நம்பினர்."

இதில் சிறிய போட்டி மனப்பான்மையும் இருந்ததாக அவர் கூறுகிறார். மற்றவர்களை விட யார் முதலில் எழுந்து பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதைப் பற்றிய பெருமையும் சமூகத்தில் காணப்பட்டது.

அந்தக் காலத்தில் மக்களின் தூக்க முறைகளும் இன்றிலிருந்து மாறுபட்டிருந்தன.

இரவில் ஒரு முறை தூங்கி, நடுவில் விழித்து, பின்னர் மீண்டும் தூங்கும் "இரு கட்டத் தூக்கம்" குறித்து சில ஆய்வுகள் பேசுகின்றன. இருப்பினும், அதற்கான ஆதாரங்கள் குறித்து வரலாற்றாளர்கள் இடையே விவாதம் நீடிக்கிறது.

விலங்குகளும் மணியோசைகளும்

மனிதர்களின் முதல் இயற்கை அலாரம் கடிகாரமாக விலங்குகளின் ஒலிகளை கருதலாம்.

விடியற்காலையில் சேவல் கூவும் வழக்கம், நாள் தொடங்கியதற்கான முக்கிய அறிகுறியாக இருந்தது என்று ஹாண்ட்லி குறிப்பிடுகிறார். ஆர்வமூட்டும் விஷயம் என்னவெனில், சேவல்கள் வெறும் சூரிய ஒளிக்கு ஏற்ப கூவுவதில்லை, அவற்றுக்கும் தனித்த இயற்கை நேரச் சுழற்சி உள்ளது.

அதேபோல், அதிகாலையில் பறவைகள் கூட்டமாக எழுப்பும் ஒலிகளும் நாளின் தொடக்கத்தைக் குறிக்கும் இயற்கையான சைகைகளாக இருந்தன என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக வரலாற்றாய்வாளர் மேத்யூ சாம்பியன் கூறுகிறார்.

மணி ஒலிகளும் மக்கள் விழித்தெழுவதற்கான முக்கிய கருவியாக இருந்தன.

குறிப்பாக இடைக்கால மற்றும் ஆரம்ப நவீனகால மேற்கு, மத்திய ஐரோப்பாவில், கிராம தேவாலயங்களை மையமாகக் கொண்டு சமூக வாழ்க்கை அமைந்திருந்தது. மணியடிப்பவர் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மணி அடிப்பார். அவரது நேரக் கணக்கீட்டுக்கு மணல் கடிகாரம் பயன்படுத்தப்பட்டது.

செல்வந்த வீடுகளில் வீட்டுக்குள்ளும் மணிகள் இருந்தன. படுக்கையறைகளின் வெளியே கூட அவை பொருத்தப்பட்டிருந்தன.

"வீட்டில் முதலில் எழுவது பெரும்பாலும் பணியாளர்கள்தான். பின்னர் அவர்கள் வீட்டு உரிமையாளர்களையும் குடும்பத்தினரையும் தேவையான நேரத்தில் எழுப்புவார்கள்," என்கிறார் ஹாண்ட்லி.

பண்டைய அலாரம் கருவிகள்

"அலாரம் இல்லாத உலகம் எப்போதும் இருந்ததில்லை," என்று ஹாண்ட்லி கூறுகிறார். "நீர், நெருப்பு அல்லது பிற இயற்கை இயங்குமுறைகள் மூலம் மக்களை எழுப்பும் ஏற்பாடுகள் தொன்றுதொட்டு இருந்தன. காலப்போக்கில் சமுதாயத்தின் மேல்தட்டு மக்களிடையே இக்கருவிகள் மேலும் அலங்காரமானவையாகவும் சிக்கலானவையாகவும் மாறின" என்கிறார்.

பண்டைய சீனாவில், காலப் போக்கை அளவிடும் குறியீடுகளுடன் கூடிய மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட இடைவெளிகளில் உலோக ஆணிகள் பொருத்தப்பட்டிருக்கும். மெழுகு உருகும்போது அந்த ஆணிகள் கீழே உள்ள உலோகத் தட்டில் விழுந்து சத்தம் எழுப்பும்.

"செலவைச் சேமிக்க மக்கள் தாங்களே இந்த வகை மெழுகுவர்த்திகளைத் தயாரிப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் எழுப்பும் ஒலிச் சைகையாக அவை செயல்பட்டன," என்கிறார் ஹாண்ட்லி.

நறுமணப் புகையூட்டிகளும் இதே நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன. சில நேரங்களில் அவைகளுடன் சிறிய ஒலிக்கருவிகளும் இணைக்கப்பட்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டில் சீனாவைப் பற்றிய ஒரு அமெரிக்க ஆய்வாளர் எழுதிய குறிப்பில் சீனாவில் மக்கள் தங்கள் கால்விரல்களுக்கு இடையில் ஊதுபத்திகளை வைத்திருந்தது இடம்பெற்றுள்ளன.

பண்டைய கிரேக்கத்தில் கிளெப்சிட்ரா (Clepsydra) எனப்படும் நீர்க் கடிகாரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. கிமு 5ஆம் நூற்றாண்டில் தத்துவஞானி பிளாட்டோ, இதன் அடிப்படையில் அலாரம் செயல்பாட்டை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவர் ஒரு பாத்திரத்துக்குள் காற்றை அடைத்து வைத்தார். அந்த பாத்திரத்தில் நீர் நிரம்பும்போது காற்றழுத்தம் அதிகரிக்கும். குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் கெட்டிலின் விசில் போன்ற ஓசை எழும். அதுவே அலாரமாகச் செயல்படும்.

சில கிராமங்களில் தானியங்கி மணியடிக்கும் அமைப்புகளும் நீர்க் கடிகாரங்களின் அடிப்படையிலேயே இயங்கின என்று சாம்பியன் கூறுகிறார். பெரிய நீர்த்தொட்டிகளில் இருந்து நீர் வெளியேறும்போது, அதனுடன் இணைக்கப்பட்ட அமைப்பு மணியை அடிக்கும். 12ம் நூற்றாண்டு பதிவேடு ஒன்று, இது போன்ற நீர்த்தேக்கம் நெருப்பை அணைக்க பயன்படுத்தப்பட்டது குறித்து கூறுகிறது.

13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில், ஊசலாடும் இயந்திர இயக்கத்தின் மூலம் நேரத்தைக் கணக்கிடும் இயந்திரக் கடிகாரங்கள் வரத் தொடங்கின.

"மிக ஆரம்ப காலத்திலேயே சில கடிகாரங்கள் மணி அடிப்பதற்கு முன் இசையையும் ஒலிக்கச் செய்தன," என்று சாம்பியன் கூறுகிறார்.

15ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுவரில் மாட்டப்படும் கடிகாரங்களிலும் அலாரங்கள் கொண்டிருந்தன.

"முதலில் மணி ஒலியும், பின்னர் சிறிய மணிகளை மீண்டும் மீண்டும் அடிக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டது." என்று அவர் கூறுகிறார்.

நாக்கர்-அப்பர்கள்

17ஆம் நூற்றாண்டில் கடிகார உற்பத்தித் தொழில் பெரிதும் முன்னேறியது. மக்கள் பயணங்களின்போது கூட தாங்களாகவே அலாரம் அமைப்புகளை உருவாக்கியதாக ஆதாரங்கள் உள்ளன.

1787ஆம் ஆண்டில் முதல் இயந்திர அலாரம் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் 1876-ல் காப்புரிமைகள் வழங்கப்பட்ட பிறகே உற்பத்தி அதிகரித்தது. இருந்தபோதிலும், அவை விலையுயர்ந்ததும் நம்பகத்தன்மை குறைவானதுமாக இருந்தன.

இதனால்தான் தொழில்துறைப் புரட்சிக் காலத்தில் நாக்கர்-அப்பர்களின் தேவை அதிகரித்தது.

லீட்ஸ், மான்செஸ்டர், ஷெஃபீல்டு மற்றும் கிழக்கு லண்டன் போன்ற வளர்ந்து வந்த தொழில் நகரங்களில், குச்சிகள், நீளமான கம்பிகள் மற்றும் பட்டாணி விதைகளைச் சுடும் குழாய்களுடன் அவர்கள் தெருக்களில் வலம் வந்தனர்.

அவர்கள் பெரும்பாலும் முழு இரவும் விழித்திருந்து, சில நேரங்களில் அதிகாலை 3 மணிக்கே மக்களை எழுப்பத் தொடங்குவார்கள்.

தத்தா கூறுவதுபோல், அவர்கள் வெறும் எழுப்புபவர்கள் மட்டுமல்ல; சமூகத்தின் அமைதியான காவலர்களாகவும் இருந்தனர்.

"மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் வெளியில் இருந்ததால், ஏதாவது அசாதாரணம் நடந்தால் அதை கவனிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது," என்கிறார் அவர்.

1876ஆம் ஆண்டு, நாக்கர்-அப்பர் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை கவனித்து, உள்ளே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குடும்பத்தினரை எழுப்பி அவர்களது உயிரைக் காப்பாற்றியதாகப் பதிவுகள் கூறுகின்றன.

இங்கிலாந்தின் பிரபல தொடர்கொலை வழக்குகளில் ஒன்றான "ஜாக் தி ரிப்பர்" சம்பவத்துடன் தொடர்புடைய, முதலில் பாதிக்கப்பட்ட மேரி நிக்கல்ஸின் உடலையும் கண்டுபிடித்தவர் ஒரு நாக்கர்-அப்பர்தான்.

சில நேரங்களில் அவர்கள் அளவுக்கு அதிகமாகத் தொடர்ந்து தட்டுவதால், அண்டை வீட்டாரிடையே தகராறுகளும் ஏற்பட்டன.

"எழ வேண்டாம் என்று நினைத்தவர்கள்கூட எழுந்துவிடுவதால் சண்டைகள் ஏற்பட்டதாக காவல்துறை பதிவுகளிலும் பத்திரிகைச் செய்திகளிலும் உள்ளது," என்கிறார் தத்தா.

இதேபோன்ற தொழில்கள் 19ஆம் நூற்றாண்டில் பிற ஐரோப்பிய நாடுகளிலும் காணப்பட்டன. இத்தாலியில் குரல் எழுப்பும் கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் இருந்தனர். பிரான்சில் மக்களை எழுப்பும் சிறப்பு பணியாளர்கள் செயல்பட்டனர். இவர்கள் நாக்கர்-அப்பர்களை விடவும் அதிக சத்தத்துடன் செயல்பட்டனர். மிகவும் சத்தத்துடன் விசில் அடித்து மக்களை எழுப்பினர்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1920களுக்குள் நாக்கர்-அப்பர் தொழில் பெருமளவில் மறைந்துவிட்டது. அலாரம் கடிகாரங்கள் மலிவானவையாகவும் பொதுமக்கள் எளிதாக வாங்கக்கூடியவையாகவும் மாறிவிட்டன.

"19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தனிப்பட்ட அலாரம் கடிகாரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கின," என்கிறார் யாகூத். "தொழில்மயமாதலும் செயற்கை ஒளியின் பயன்பாடும் அதிகரித்ததுடன், ஒருகாலத்தில் நெகிழ்வானதாக இருந்த அன்றாட வாழ்க்கையின் நேர ஒழுங்கு மேலும் கடுமையானவையாக மாறின."

கடந்த காலத்தின் தூக்க முறைகள் அனைத்தும் ஆரோக்கியமானவையாக இருந்தன என்று சொல்ல முடியாது. நெரிசலான வீடுகள், அதிக உடல் உழைப்பு, சத்தமுள்ள சூழல் போன்றவை அக்கால மக்களின் தூக்கத்தையும் பாதித்திருக்கலாம்.

ஆனால் சில அம்சங்கள் இன்றும் பொருத்தமானவை.

குறிப்பாக அதிகாலை சூரிய ஒளியை அதிகம் பெறுவது மிகவும் முக்கியம்.

"காலை நேர ஒளி, உடலின் இயற்கை நேரச் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் மிக வலுவான காரணிகளில் ஒன்று என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன," என்கிறார் யாகூத்.

மாறாக, இரவு நேரங்களில் அதிக செயற்கை ஒளிக்கு உட்படுவது உடலின் உயிரியல் கடிகாரத்தை தாமதப்படுத்தி, தூங்குவதை கடினமாக்கும்.

மக்கள் முன்னொரு காலத்தில் தூங்கும் நேரத்தையும் விழிக்கும் நேரத்தையும் ஒழுங்காகப் பின்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

"இது பண்டைய கிரேக்க மருத்துவ நூல்களிலிருந்தே 18ம் நூற்றாண்டிலும் கூட வலியுறுத்தப்பட்டுவரும் ஆரோக்கியக் கொள்கை," என்று ஹாண்ட்லி கூறுகிறார். "தூக்கத்தைப் பாதுகாத்து, ஒரே நேர ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வை மக்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டனர். ஒருவேளை நம்மைவிட அதிகமாகவே எடுத்துக் கொண்டிருக்கலாம்."

இன்றைய ஆய்வுகளும் இதையே வலியுறுத்துகின்றன. ஒழுங்கான தூக்க நேரம் நல்ல தூக்கத் தரத்தையும், உடல் மற்றும் மனநலத்தையும் மேம்படுத்துகிறது.

படுக்கையறை சூழல் அமைதியானதா, நல்ல தூக்கத்திற்கு ஏற்றதா என்பதை கவனிப்பது, இரவு உணவை எப்போது சாப்பிடுகிறோம் என்பதைப் பரிசீலிப்பது, தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கு வகையில் சர்க்கரை அதிகமான உணவுகளை தூங்கும் முன் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது போன்ற நடைமுறைகளையும் நாம் மீண்டும் நினைவுகூர வேண்டும்.

"நூற்றாண்டுகளாக மனிதர்களின் தூக்க முறைகளுடன் நெருக்கமாக இணைந்திருந்த அன்றாட பழக்கங்கள் இவை. ஆனால் சமீபகாலத்தில் அவற்றைப் பற்றி நாம் கொஞ்சம் மறந்துவிட்டோம்," என்று ஹாண்ட்லி நினைவூட்டுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு