தொகுதி மறுவரையறை தீர்மானம் மூலம் தவெக சாதிக்க நினைப்பது என்ன? அரசியல் தாக்கம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், YouTube/Assembly
தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் (ஆகஸ்ட் 12) முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது த.வெ.க அரசின் தீர்மானத்தால் என்ன நடக்கும்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை புதன்கிழமையன்று த.வெ.க அரசு கொண்டு வந்தது.
"நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். உறுப்பினர்களின் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்" என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
அதேபோல, "வரும் மக்களவை, சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனை பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை த.வெ.க அரசு நடத்தியது. கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.
இதைக் குறிப்பிட்டு பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்கள் அடையக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன" எனக் கூறினார்.

பட மூலாதாரம், TN DIPR
முதலமைச்சர் பேசியது என்ன?
மேலும், "இந்தியாவில் 1952ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவை, மாநிலங்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்யப்பட்டது" என்று பேசினார்.
அந்த வகையில், 1976ஆம் ஆண்டு வரை தேர்தல்கள் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், "1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி தொகுதி மறுவரையறை கொண்டு வரத் திட்டமிட்டபோது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது" என முடிவெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.
அதன்படி, "அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வைக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது."
இதை முன்னிறுத்தி 84 மற்றும் 87வது திருத்தத்தின்படி மக்களவைத் தொகுதிகள் நிலைநிறுத்தப்பட்டதாகக் கூறிய முதலமைச்சர், "இந்தத் திருத்தங்களின் நோக்கம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் உரிமையைப் பாதுகாப்பதுதான்" எனக் குறிப்பிட்டார்.
கடந்த 1976ஆம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகள் கடந்து 2001ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறைக்கான நேரம் வந்தபோது மத்தியில் அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தன. சில மாநிலங்கள் கட்டுப்படுத்துவதில் சுணக்கமாக இருந்தன. ஆகவே, தொகுதி மறுவரையறையைத் தொடங்கினால் பிரச்னை ஏற்படும் எனக் கருதினார்கள். ஆகவே, அதே நிலையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
"கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வந்த தொகுதி மறுவரையறை தடையை அகற்றி 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கு ஏப்ரல் மாதம் மக்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TN DIPR
'தென் மாநில தொகுதிகள் குறையும்' - முதலமைச்சர்
ஆனால், இந்த மசோதா தோல்வியில் முடிவடைந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், "மீண்டும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரித்து தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு உத்தேசித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி த.வெ.க அரசு நடத்திய கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், " மாநிலத்துக்கு தலா 50% உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கும். இதனால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
"மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் அநீதி நடக்கும்" எனவும் தனது பேச்சில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டார்.
அத்துடன், "சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. அந்த அதிகாரம் நாடாளுமன்றத்திடமே கொடுக்கப்பட வேண்டும் என அரசு நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக" அவர் குறிப்பிட்டார்.
கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாகக் கூறிய முதலமைச்சர், "மாநிலங்களுக்கு இடையிலான பகிர்வை நிரந்தரமாக வைக்கவும் மக்களவை மற்றும் மாநிலங்களவை விகிதம் 2:2:1 என்ற அளவில் வைக்கவும் வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TN DIPR
'அமித் ஷா உறுதியளித்தார்' - எடப்பாடி பழனிசாமி
அரசின் தீர்மானத்துக்கு அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது" எனக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் 543 இடங்களில் 1971 மக்கள்தொகை அடிப்படையில் 7.18% என்ற தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதைத் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்ததாகக் குறிப்பிட்டார்.
"தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் பாதுகாக்கப்படும் என மத்திய உள்துறை அமித் ஷா நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். 7:18 என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுவதால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 என்ற அளவில் கூடி தமிழ்நாட்டுக்கு 59 உறுப்பினர்கள் கிடைப்பார்கள்" எனக் கூறினார்.
"மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, "நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரித்துள்ளோம். புதுச்சேரி மக்கள்தொகையைவிட அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளன" என்றார்.
அதேநேரம், "நிர்வாக வசதிக்காக வாக்காளர் அதிகமுள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை" எனவும் வலியுறுத்தினார்.
'தி.மு.க-வின் எதிர்ப்பே காரணம்' - உதயநிதி
த.வெ.க அரசின் தீர்மானத்தை வரவேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "தொகுதி மறுவரையறை என்ற பெயரில் எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையைக் கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்பதை முதன்முதலில் தி.மு.க கூறியது" என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய உதயநிதி, "தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கான உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதிக்க மாட்டோம். தற்போதுள்ள விகிதாச்சாரம் குறையக் கூடாது" எனத் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறையின் ஆபத்தை விளக்கி ஏழு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் விளக்கமாக கடிதம் ஒன்றை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், "2026ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி தொகுதிகளை நிர்ணயித்தால் தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத வட மாநிலங்களின் தொகுதிகள் அதிகரித்துவிடும்" என்று கூறியதுடன், "தொகுதி மறுவரையறை திட்டத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். 1971 மக்கள்தொகை அடிப்படையில் நிலைமை தொடர வேண்டும் என்பதை சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் விளக்கிக் கூறியதாகவும்" உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்படுவதற்கு தி.மு.க காட்டிய எதிர்ப்புதான் காரணம் எனக் கூறிய உதயநிதி, "தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்" எனக் கூறினார்.

பட மூலாதாரம், ADMK/X
'நடைமுறையில் சாத்தியமில்லாத கற்பனை'
"மத்திய அரசு கொண்டு வரக்கூடிய மசோதாவில் என்ன உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை. அதற்கு முன்னரே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
"அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 81(2)(a), மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்படும் எண்ணிக்கையும் அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கு இடையிலான விகிதம் இயன்றவரை சமமாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதை மாற்றுவதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
மேலும், "2027ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த உறுப்பு தானாக நடைமுறைக்கு வந்துவிடும். அவ்வாறு வந்தால் தமிழ்நாட்டில் எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்" என்று குறிப்பிடுகிறார் மாலன்.
அவரது கூற்றுப்படி, "அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. வட மாநிலங்களுக்கு இந்தத் திருத்தத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த மாநில எம்.பி.க்களின் ஆதரவு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை."
தொகுதிகளை மறுவரையறை செய்யாமல் 543 தொகுதிகளே இருக்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத கற்பனையாக உள்ளதாகக் கூறும் அவர், "எல்லா மாநிலங்களின் இடமும் 50% அதிகரிக்கப்படும் என்பதே சாத்தியமான தீர்வு. இதனால் தமிழ்நாட்டுக்கு தற்போதுள்ள 7.18 என்ற பிரதிநிதித்துவத்தில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை" என்றார்.
'தி.மு.க நிலைப்பாட்டை அறியவே தீர்மானம்'
த.வெ.க அரசு கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம் குறித்துக் கேட்டபோது, "அரசியலமைப்புச் சட்டரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தும் தீர்மானம் கொண்டு வருகிறார்கள் என்றால் அரசியல் காரணங்களுக்காக கொண்டு வருவதாகவே பார்க்க முடியும்" என்கிறார் மாலன்.
அதோடு, "அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றை மாற்ற வேண்டுமெனில் இவர்கள் நாடாளுமன்றத்தில்தான் போராட வேண்டும். சட்டப்பேரவையில் தீர்மானம் போடுவதால் எந்தப் பலனும் இல்லை" எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி த.வெ.க அரசு நடத்திய தொகுதி மறுவரையறை கூட்டத்தில் தி.மு.க எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து தி.மு.க எம்.பி கனிமொழி சோமுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, " ஒரு எம்.பி.கூட இல்லாத தவெக இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே இல்லை. தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ அதை ஆமோதித்து வரவேற்போம். தொகுதி மறுவரையறையில் அதிகப்படியான இடங்களைக் கேட்டு வாங்குவோம்" எனத் தெரிவித்தார்.
இதைத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், "இப்போதுதான் உண்மை வெளியில் வருகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, 'தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு சாதகமாக தி.மு.க நடந்து கொள்ளலாம்' என்ற தொனியில் இந்த விவகாரம் பேசப்பட்டது. இதை மேற்கோள் காட்டிப் பேசிய மாலன், "தி.மு.க-வின் நிலைப்பாடு மாறுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக தீர்மானம் கொண்டு வரப்பட்டதா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று" என்றார்.
"இதே தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியும் தி.மு.க நிறைவேற்றியது. அதுவே போதுமானது. சட்டப்பேரவைத் தீர்மானம் என்பதால் மட்டும் அதற்கென தனியாக வலு கிடைக்காது" என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Udhayanidhi Stalin/X
'தீர்மானத்துக்கு கிடைத்த வெற்றி' - த.வெ.க
இதை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் சத்தியகுமார், "காங்கிரஸ் மட்டுமின்றி தி.மு.க-வும் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதில்லை என்பதால் பா.ஜ.க பின்வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் தீர்மானத்தின் வெற்றியாக இதைப் பார்க்கலாம்" என்றார்.
மேலும், "சாதகமான தொகுதி வரையறை (Fair Delimitation) என்பதை முன்னிறுத்தி தி.மு.க பேசி வந்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கு தொகுதி மறுவரையறையே தேவையில்லை என்பது த.வெ.க அரசின் முடிவாக உள்ளது" என்றார்.
"தமிழ்நாட்டுக்கு 7.18 என்ற விகிதாச்சாரம் குறையக்கூடாது எனக் கூறினாலும், கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களுக்கும் அதன் விகிதாச்சாரம் குறையக்கூடாது என்ற உறுதி கொடுக்கப்பட வேண்டும். இதுதான் த.வெ.க-வின் நிலைப்பாடு" என சத்தியகுமார் தெரிவித்தார்.
"தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்டால் தென் மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறும் அவர், "நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் குரல் வலுவாக முன்வைக்க வாய்ப்பில்லை என்பதால் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது" என்கிறார்.
'தி.மு.க, த.வெ.க எதிர்ப்பு முக்கியமானது'
"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது. தி.மு.க, த.வெ.க என இரு கட்சிகளும் எதிர்ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும்" என்கிறார், அரசியல் ஆய்வாளர் ஆர்.எஸ்.நீலகண்டன்.
இவர் தொகுதி மறுவரையறை குறித்த தெற்கு vs வடக்கு: இந்தியாவில் பெரும் பிளவு (South Vs North : India's Great Divide) என்ற நூலின் ஆசிரியராக இருக்கிறார். மேலும் பேசிய ஆர்.எஸ்.நீலகண்டன், "நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதாக இந்த விவகாரத்தை அணுகக்கூடாது. மாநிலவாரியாக எவ்வளவு விகிதம் உள்ளது என்பதுதான் முக்கியம்" என்றார்.
"தற்போதுள்ள தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் (7:18) தொடர்ந்து பின்பற்ற வேண்டும்" எனக் கூறிய அவர், "உத்தர பிரதேசம் உள்பட சில வட மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்துள்ளதால் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாக வேண்டுமெனில் அது சரியானதாக இருக்காது" எனக் கூறுகிறார்.
"இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மாநில சுயாட்சியை முன்வைப்பதே தீர்வாக இருக்கும்" என அவர் குறிப்பிட்டார்.
"வட மாநிலங்களுக்கு எதிரான மனநிலையில் யாரும் இல்லை. அதேநேரம், தொகுதி மறுவரையறையுடன் மாநில சுயாட்சியை இணைத்துப் பேசுவது முக்கியமான நகர்வாக இருக்கும்" எனவும் ஆர்.எஸ்.நீலகண்டன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































