விஜய் அரசின் முதல் 100 நாட்கள் எப்படி இருந்தது? 7 விஷயங்கள் பற்றிய பகுப்பாய்வு

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளதாக, அரசு சார்பில் பல்வேறு தளங்களிலும் விளம்பரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த அரசு 100 நாட்களில் எதையும் சாதிக்கவில்லை என்றும், அதனால் மக்கள் வேதனையே அடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், ஓர் ஆட்சியை மதிப்பிடுவதற்கு ஓராண்டு தேவைப்படும் என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். விஜய் எதற்குமே பேசாமல் இருப்பதும், அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதும் சரியான போக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

உண்மையில் தவெக அரசின் முதல் 100 நாட்கள் ஆட்சி நல்ல மாற்றத்தைத் தந்துள்ளதா, ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறதா?

தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி '100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என்று தமிழ்நாட்டின் முக்கிய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் விளம்பரம் வெளியாகின. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட "மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்" மற்றும் "ஒரு புதிய தொடக்கம்" என்ற காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். சமூக ஊடகங்களில் ஏராளமான ரீல்ஸ்களும் வலம் வருகின்றன.

தவெக வெளியிட்டுள்ள 100 நாள் ஆட்சி சாதனைப் பட்டியலில், சிங்கப்பெண் அதிரடிப்படை, விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, 717 மதுக்கடைகள் மூடல், போதைப் பொருள் ஒழிப்புக்கான 65 சிறப்பு அதிரடிப்படைகள், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீர், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஆகிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை. இதன் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், ''இது தன் மனதுக்கு நெருக்கமான நிகழ்வு.'' என்று கூறியிருந்தார். இதற்காக 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 2,545 புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில் தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி விமர்சித்தது. ஏற்கெனவே காவல்துறையில் ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இருக்கின்ற பெண் காவலர்களையே இதில் நியமித்துள்ளதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு நேரடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்த படையின் ஐ.ஜி. பவானீஸ்வரி, ''இது குற்றங்களைத் தடுக்கும் படை. சட்டரீதியான நடவடிக்கை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு தொடர்பாக உள்ளூர் காவல்துறையினரும் குழந்தைகள் நலக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்" என்று ஊடகங்களிடம் விளக்கினார்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி

தவெக ஆட்சி அமைந்த பின்பு, 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, அரசு விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கையின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ளவர்களின் கடனில் 50% மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் அரசு முதலில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுத் தள்ளுபடி அறிவித்தது. அதை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. பின்னர் மறுபரிசீலனை செய்து ரூ.75,000 வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடியும், ரூ.75,000-க்கு மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடியும் அறிவித்தது.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம், ''தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு பெரிய மாற்றம் வருமென்று விவசாயிகள் நினைத்தனர். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையே நிறைவேற்றாமல் தவெக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது.'' என்று கூறியிருந்தார்.

இதே குற்றச்சாட்டை திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. வழக்கமாக, ஜூன் 12-ஆம் தேதி திறக்கும் மேட்டூர் அணையை இந்த ஆண்டில் திறக்க இயலாத நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலும் விவசாயிகளின் அதிருப்தியை எதிர்கொண்டது தவெக அரசு.

717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

ஆட்சிக்கு வந்ததும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூடுவதற்கு தவெக அரசு நடவடிக்கை எடுத்தது. அதேநேரத்தில், அதே பகுதிகளில் செயல்படும் மனமகிழ் மன்றங்களைச் செயல்பட அனுமதித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோன்று, டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவதாக குற்றம் சாட்டிய விஜய், அவர் முதலமைச்சரான பின்னும் அதற்குத் தீர்வு காணவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், பாட்டிலுக்கு தலா 20 ரூபாய், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரியாக விதிக்க அரசு முடிவு செய்து மசோதா நிறைவேற்றியுள்ளது.

மேலும், ஒரு குறிப்பிட்ட மதுபான நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களை விற்கக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் உத்தரவிட்டார். அந்த உத்தரவு மறுநாளே வாபஸ் பெறப்பட்டது.

அறிவிக்கப்படாத மின்வெட்டு; அதீதமான மின் கட்டணம்

தவெக அளித்த 200 யூனிட் கட்டணமில்லாத மின்சாரம் வாக்குறுதியின்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் குறையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அறிவிக்கப்படாத மின் வெட்டு, திடீரென அதிகரித்த மின்கட்டணம் என்று பரவலாக புகார்கள் தொடர்கின்றன.

மின்வெட்டை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் சிலர் வேண்டுமென்றே பியூசை எடுத்துச் செல்வதாகவும் மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். மேலும், அதிக மின்கட்டணம் தொடர்பான புகார்கள் சரிபார்க்கப்பட்டு அடுத்த மின்கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இவற்றைத் தவிர்த்து, தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடியும், அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடியும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்துக்கு ரூ.710 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு சிஎம்டிஏ அளவிலேயே திட்ட அனுமதி, நேரடி தொடர்பற்ற பத்திரப்பதிவு போன்ற திட்டங்களால் நேர்மையான நிர்வாகத்தைக் கொண்டு வந்துள்ளளதாகவும் தவெக அரசு தெரிவித்துள்ளது.

100 நாள் ஆட்சி - தலைவர்கள் கருத்து

ஆனால், 100 நாட்களில் மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போடுவதையே பிரதான வேலையாக தவெக அரசு செய்து வந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது மக்களுக்கு வேதனையான நாட்களாகத்தான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

போதை பொருள் பிரச்னையா?

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தார்.

கஞ்சா பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகிகள் கேட்டதன்பேரில் தகவல் கொடுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக மாணவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

அதே போன்று, சென்னை திருவொற்றியூரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி பிளஸ் 2 மாணவரான தனுஷ் குமார் கொல்லப்பட்ட விவகாரத்திலும், மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியதைத் தட்டிக் கேட்டதால் தன் மகன் கொல்லப்பட்டதாக, இறந்த மாணவரின் தந்தை வெங்கடேசன் கூறியுள்ளார்.

"ஆனால், மாணவரின் இறப்புக்கு போதைப் பயன்பாடு காரணமாக இல்லை" என, திருவொற்றியூர் உதவி ஆணையர் (பொறுப்பு) பிரம்மானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பள்ளி வளாகங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தொடரும் காவல் மரணங்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள காணொளியில், ''நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் மாநிலத்தையே உலுக்கியது. அந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீள்வதற்குள் தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர் அருணாச்சலம் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த பாலாஜி என்பவர் மரணமடைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ஓட்டுனர் வெங்கடேசன் காவல்துறையின் சித்ரவதையால் உயிரிழந்துள்ளார். லாக்கப் மரணங்களை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பி வந்த முதல்வர் விஜய், இந்த 100 நாட்களில் தன்னுடைய ஆட்சியில் லாக்கப் மரணங்களுக்கு வாய் திறக்க மறுப்பது ஏன்? '' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் காவல் மரணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இதே காவல் மரணங்களைச் சுட்டிக்காட்டி, எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே நீதிமன்றங்கள் மரண தண்டனை தரும் நிலையில், காவல்துறை எதேச்சதிகாரப் போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரை அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியின் முதல் 100 நாட்களில் பெரிதாக எந்தத் தவறும் நடக்கவில்லை என்று கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மணி. இதற்கு முன்பு தமிழகத்தில் வேறு எந்த அரசுக்கும் 100 நாட்களில் இவ்வளவு விமர்சனங்கள் முன் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

''எந்த ஓர் அரசையும் கணிப்பதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு தேவை. அதிலும் தவெக அரசில் செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் தவிர முதல்வர் விஜய் உட்பட பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு கூடுதல் அவகாசம் தர வேண்டியது அவசியம்.'' என்கிறார் மணி.

ஆனால் இந்த 100 நாட்களில் பல குளறுபடிகள் இந்த ஆட்சியில் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன்.

பிபிசியிடம் பேசிய அவர், ''அறிவிக்கப்படாத மின் வெட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா ஊர்களிலுமே மின்வெட்டு பரவலாக இருக்கிறது. மின் கட்டணம் எனது வீட்டுக்கே ஒன்றரை மடங்கு அதிகமாகியுள்ளது. மக்களைப் பாதிக்கின்ற பல விஷயங்களும் முதல்வர் விஜயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இவையெல்லாமே அரசின் நிர்வாகக் குளறுபடியைக் காட்டுகின்றன. இவற்றை சரி செய்ய வேண்டிய பொறுப்பு, முதல்வருக்கு உள்ளது.'' என்றார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

ஓர் ஆட்சியைப் பற்றி மதிப்பிடுவதற்கு ஓராண்டு தேவை என்றாலும், ஒரு பார்வை கிடைப்பதற்கு100 நாட்கள் போதும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன். பிபிசியிடம் இதுபற்றி விரிவாகப் பேசிய அவர், ''தேர்தலின்போது எல்லா கட்சிகளும் வாக்குறுதிகள் தருவது வழக்கம்தான். ஆட்சி துவங்கியதுமே அதை நிறைவேற்ற முடியாது. ஐந்தாண்டு வரை அதை நிறைவேற்றாவிட்டாலும் தவறு. இருந்தாலும் நிதி நிலைமை சரியான பின்பு கொடுப்போம் என்ற வாக்குறுதியையாவது இப்போதே தரவேண்டும்.'' என்றார்.

ஆட்சியைப் பற்றி மதிப்பிட ஓராண்டு தேவையென்ற நிலை இருக்கும்போது, 100 நாட்களுக்குள்ளேயே முதல்வர் விஜய் பெரிய சாதனை படைத்தது போல அவருடைய அமைச்சர்கள் பேசுவது எந்த வகையில் சரியானது என்று கேள்வி எழுப்புகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

''ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் முதல்வர் விஜயின் செயல்பாடுகளைப் புகழ்ந்து, அடுத்து அவர்தான் பிரதமராக வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார். அதை வழிமொழிவது போல அமைச்சர் சரத் பேசுகிறார். இது விஜய்க்கு மட்டுமின்றி, தவெகவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட நல்லதல்ல.'' என்றார் அவர்.

முதலமைச்சர் விஜய் பேசாமல் இருப்பது ஏன்?

முதலமைச்சர் விஜய் சட்டமன்றம் உட்பட பேச வேண்டிய இடங்களில் பேச வேண்டிய நேரங்களில் அவர் பேசாமல் இருப்பதும் மிகப்பெரிய பலவீனம் என்றும் குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

''கோவையில் கல்லூரி மாணவர் கொலையில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பது காவல்துறை உள்ளிட்ட உள்துறையை வைத்திருக்கும் முதல்வர் விஜய்தான். ஆனால் அதுகுறித்து அவர் பேசாமல் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கிறார். இதை யாராலும் ஏற்க முடியாது. எங்கே பேச வேண்டுமோ அங்கே அவர் பேச வேண்டியது அவசியம்.'' என்றார் குபேந்திரன்.

இதை மறுக்கும் பத்திரிக்கையாளர் மணி, ''விதிப்படி அவர் பேசாமல் இருப்பது தவறில்லை. இதற்கு முன்பும் சட்டம்–ஒழுங்கு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோது, முதல்வராக ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது, மற்ற அமைச்சர்கள் அதற்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சட்டம்–ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் விஜய் ஏன் பேச மறுக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறுவது கவனிக்கத்தக்க குற்றச்சாட்டுதான். தேவையான நேரத்தில் முதல்வர் பேச வேண்டும்.'' என்றார்.

அமைச்சர்களே அனைத்துக்கும் பதில் சொன்னால் அது விஜய்க்கு நல்லதல்ல என்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.

போதை ஒழிப்பில் இந்த அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என கூறும் எஸ்.பி.லட்சுமணன், "அதற்கான பணிகளை முதல் நாளிலிருந்தே துவக்கி, இரு மாதங்களாக அதற்கான படைகளை கூர்மைப்படுத்தி, வாரம் ஒரு முறை அவர்களைக் கண்காணித்து கலந்துரையாடியிருந்தால், 61வது நாளிலிருந்து 100 நாட்களுக்குள் இந்த போதைப் புழக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்க முடியும்" என்றார்.

தவெக அரசு மிக மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மிக நன்றாகச் செயல்படுகிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை என்கிறார் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான இரா.முருகவேள்.

பிபிசியிடம் பேசிய இரா.முருகவேள், ''திமுக குற்றம் சாட்டிய அளவுக்கு பாஜகவுடன் தவெக அரசு இணக்கமாகப் போகவில்லை. வெளிப்படையாகக் கண்டிக்காவிட்டாலும் ஒரு மாநில கட்சி, எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டுமோ அந்த தூரத்தில்தான் இருக்கிறது. நீட் எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை போன்ற விஷயங்களில் திமுகவின் நிலையை பின்பற்றுவதே இதற்கு சான்று.'' என்றார் இரா.முருகவேள்.

தவெக கூறுவது என்ன?

சட்டப்பேரவையில் விஜய் பதிலளிக்காமல் இருப்பது, பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது குறித்து, தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை பிபிசி தமிழ் முன் வைத்தது.

அதற்கு பதிலளித்த அவர், ''சட்டப்பேரவையில் புதன்கிழமை பேசிய முதலமைச்சர் விஜய், பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன் என்று கூறியிருக்கிறார். அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. அதில் அரசின் சார்பில் யார் யார் பேச வேண்டுமென்பதை முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கூடி முடிவெடுத்திருப்பார்கள். அதன் அடிப்படையில்தான் பல முக்கிய கேள்விகளுக்கு சில அமைச்சர்கள் பதில் தருகின்றனர்.'' என்றார்.

மேலும் பேசிய அவர், ''அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்ஸி இடையே ஹட்சன் ஆற்றில் கப்பல் போக்குவரத்து நிகழ்வது போல, கூவத்தை சீரமைத்து வாட்டர் மெட்ரோ துவங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு படகில் வந்ததை பாரதிதாசன் பாடியிருக்கிறார். இப்போது அந்த நிலையை மீட்டெடுக்க தவெக அரசு முயல்கிறது. இதுபோல சாதனைகளை நிகழ்த்தப்போகும் ஒருவர், பேச வேண்டிய அவசியமில்லை.'' என்றார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு