கொசு மருந்து புகை உயிருக்கு ஆபத்தாகுமா? அன்னூர் சம்பவம் உணர்த்தும் பாடம் என்ன?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கோவை மாவட்டம் அன்னூரில் கொசு மருந்து புகை காரணமாக இருவர் உயிரிழந்ததாகப் பரவிய தகவல் பற்றி, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் களஆய்வு மேற்கொண்டனர். இருவரும் உடல் நலக்குறைவுடன் இருந்தவர்கள் என்றாலும், அவர்களின் திடீர் உயிரிழப்புக்கு, வீட்டுக்குள் அடிக்கப்பட்ட புகை மருந்துதான் காரணமென்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்பு தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் காவல்துறையில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

இருவரும் மிகவும் உடல்நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்த புகையினால் அவர்கள் உயிரிழக்கவில்லை என்றும் பேரூராட்சி செயல் அலுவலரும், ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரும் பிபிசியிடம் விளக்கினர். கொசு மருந்தில் கலக்கப்படும் ரசாயனம், நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் மருந்து அடிக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

டெங்கு பரவியதால் அடிக்கப்பட்ட கொசு மருந்து

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தியமங்கலம் சாலை உப்புத்தோட்டம் என்ற பகுதியில், கடந்த வாரத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் கொசு ஒழிப்புக்கான பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி அன்னூர் நகரின் பல பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வையில், பேரூராட்சி அலுவலர்கள் கொசு மருந்து அடித்தபோது, சில பகுதிகளில் வீட்டுக்குள் புகை வரும் வகையில் அடிக்க வேண்டாமென்று அங்குள்ள மக்கள் சிலர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் மக்கள் சொன்னதைக் கேட்காமல் வீடுகளுக்குள் சென்றும், கதவைத் திறந்தும் புகை மருந்தை அவர்கள் அடித்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, சில மணி நேரங்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன் (வயது 65) என்பவரும், அதே வார்டில் மற்றொரு பகுதியில் வசிக்கும் ராணி என்ற பிரேமா (வயது 75) என்பவரும் உயிரிழந்ததாகத் தகவல் பரவியது. இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து கலந்து அடர்த்தியான புகையுடன் கொசு மருந்து அடித்ததே அவர்களின் உயிரிழப்புக்குக் காரணமென்று அப்பகுதியைச் சேர்ந்த பலரும் ஊடகங்களில் பேசினர்.

பைரெத்ரம் (Pyrethrum) என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலந்த புகை மருந்தை அதிகமாக அடித்தததால்தான், இறந்து போன மோகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர், வீட்டிடுக்குள் புகை மருந்து அடிக்க வேண்டாமென்று தடுத்த பின்னும் அடித்த காரணத்தால்தான் அவர்கள் மூச்சுத்திணறலால் இறந்து விட்டதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் அந்தத் தகவல்களை பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மறுத்திருந்தனர். அதற்குப் பின்பு இறந்தவர்களின் குடும்பத்தினர் மீண்டும் சில ஊடகங்களில் பேசும்போது, அவர்கள் இயற்கையாக உடல்நலமின்றி இறந்ததாகத் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு பயந்தே அவர்கள் இப்படி மாற்றிப் பேசியிருப்பதாக அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் சேகர் குற்றம்சாட்டினார். இந்த விவாதம் இப்போது வரை தொடர்கிறது.

பிபிசியிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் மோகனின் உறவினர் மகேந்திரன், ''என் அண்ணன் மோகன் ஏற்கெனவே உடல் நலக்குறைவுடன் இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடித்து வீட்டுக்கு வந்த பின்புதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைக்கு வீட்டில் நோயாளி இருப்பதாகக் கூறி, வீட்டுக்குள் புகை அடிக்க வேண்டாமென்று முன் கதவைச் சாத்தியுள்ளனர். ஆனால் பின்புறம் திறந்திருந்த கதவுக்கு அருகில் வந்து புகை அடித்ததால் வீடு முழுவதும் புகை பரவியுள்ளது.'' என்றார்.

''ஒரு புறத்தில் கதவை மூடியிருந்த காரணத்தால் வீட்டுக்குள் வந்த புகை வெளியே செல்லவும் வாய்ப்பின்றி, உள்ளே இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியிருக்கலாம். நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களுக்கே இந்த புகையால் சற்று மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில், உடல்நலக்குறைவுடன் இருப்பவர்களுக்கு இதனால் நிச்சயம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அது மட்டும்தான் காரணமென்று கூறமுடியாது.'' என்றார் மகேந்திரன்.

அதே நாளில் அதே வார்டில் உயிரிழந்த ராணி என்ற பிரேமாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பிரேம்தேவா என்பவரிடம் பிபிசி தமிழ் பேசியது. இதுபற்றி விளக்கிய அவர், ''ஏற்கெனவே அவரை உடல் நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். கவலைக்கிடமாக இருந்த அவர், அதன்பின்பு சில நாட்களில் உயிரிழந்தார்.'' என்றார்.

''ஏற்கெனவே அவருக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்துள்ளது. ஆனால் கொசு மருந்து அடித்ததற்கும், அவருடைய இறப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனெனில் எங்கள் பகுதியிலேயே முதியவர்கள், குழந்தைகள் பலரும் உள்ளனர். அவர்கள் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதால் கொசு மருந்து அடித்தது அவருடைய இறப்புக்குக் காரணமாக இருக்குமென்று கருதவில்லை. அதனால்தான் அவர்களின் குடும்பத்தினர் புகார் எதுவும் தெரிவிக்காமல் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர்.'' என்றார் பிரேம்தேவா.

அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்த தகவல்கள்

அதேபோன்று மோகனின் குடும்பத்தினரும் இதுபற்றி காவல்துறையிலும் வேறு எங்கும் புகார் தெரிவிக்காமல் அவருடைய சடலத்தை எரியூட்டியுள்ளனர். இவ்விரு உயிரிழப்புகள் தொடர்பாக, அன்னூர் காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் யாரும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியானது.

பிபிசியிடம் பேசிய அன்னூர் 7வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சேகர், ''பேரூராட்சி அதிகாரிகள் மக்கள் சொல்வது எதையும் கேட்பதில்லை. அன்றைக்கு வீடுகளுக்குள் கொசு மருந்து அடிக்க வேண்டாமென்று எங்கள் வார்டிலுள்ள மக்கள் பலரும் கூறியும் கேட்காமல் வீட்டுக்குள் சென்று மருந்து அடித்துள்ளனர். இறந்த இருவரும் உடல்நலக் குறைவுடன் இருந்தவர்கள் என்றாலும், அளவுக்கு அதிகமாக அடித்த கொசு மருந்து புகைதான் அவர்களின் திடீர் மரணத்துக்குக் காரணமாகியுள்ளது. அவருடைய குடும்பத்தினரே அப்படித்தான் முதலில் ஊடகங்களில் தெரிவித்தனர்.'' என்றார்.

''ஒரு பகுதியில் வீடுகளுக்குள் கொசு மருந்து அடித்தபோது, அப்பகுதி பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து சென்று விட்டு வேறு பகுதியில் சென்று அதேபோன்று அடித்துள்ளனர். அதில் காட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஏற்கெனவே ஆஸ்துமா தொந்தரவில் இருந்த பிரேமா, மருந்து அடித்த அரை மணி நேரத்தில் இறந்துவிட்டார். முதலில் இதை ஊடகங்களிடம் பேசிய அவர்களின் குடும்பத்தினர், பின்பு புகார், வழக்கு பிரச்னைகளுக்கு பயந்து ஒதுங்கிக் கொண்டனர். மாவட்ட நிர்வாகம் இதில் விசாரணை நடத்தி, பேரூராட்சி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார் முன்னாள் கவுன்சிலர் சேகர்.

இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார் அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன். பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய அவர், ''அந்தப் பகுதியில் கடந்த மாதத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கை வந்தது. கொசு மருந்து அடிக்குமாறு அப்பகுதி மக்கள்தான் கேட்டிருந்தனர். அதனால் தெருக்களில்தான் மருந்து அடித்தோம். எந்த வீட்டுக்குள்ளும் நாங்கள் புகை மருந்து அடிக்கவில்லை. ஆனால் கதவு, ஜன்னல்கள் திறந்திருந்த வீடுகளுக்குள் புகை சென்றிருக்க வாய்ப்புள்ளது.'' என்றார்.

''அதேபோன்று அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்து அடித்ததாகக் கூறுவதும், காலவாதியான மருந்து என்று கூறும் தகவல்களிலும் உண்மையில்லை. இதுபற்றி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் இருவரும் வந்து ஆய்வு செய்துள்ளனர். அந்த மருந்துக்கு 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலும் காலஅவகாசம் உள்ளது. மருந்தும் உரிய அளவில்தான் கலக்கப்பட்டது. அதே தெருவில் 200 வீடுகளுக்கு முன்பாக அடித்தும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.'' என்றார் செயல் அலுவலர்.

ஆட்டோ ஓட்டுநர் மோகன், பிரேமா இருவரும் ஒரே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறிய அவர், மோகனுக்கு இருதய செயலிழப்பு இருந்ததாகவும், பிரேமாவுக்கு நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா பிரச்னை இருந்ததாகவும் அந்த மருத்துவர்கள் சான்றளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதே கருத்தையே பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அபுபக்கரும் ஊடகங்களிடம் விளக்கினார். கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி, மண்டல பூச்சியியல் வல்லுநர் (பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அன்னூரில் ஆய்வு மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.

பிபிசியிடம் அதுபற்றி விளக்கிய மருத்துவர் பாலுசாமி, ''நாங்கள் ஆய்வு செய்ததில், மோகனுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. நுரையீரலில் நீர்கோர்த்து அதற்கும் சிகிச்சை எடுத்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் சொல்லியே வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.'' என்றார்.

''ராணி என்பவருக்கு COPD (chronic obstructive pulmonary disease) எனப்படும் நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. வீட்டிலும் CPAP (Continuous Positive Airway Pressure) வெண்டிலேட்டர் உதவியுடன்தான் இருந்துள்ளார். அன்று காலை 7 மணிக்கு கொசு மருந்து அடிக்க பேரூராட்சி ஊழியர்கள் வந்தபோது, குடும்பத்தினர் இதைக் கூறி வேண்டாமென்று சொன்னதும் அங்கிருந்து சென்று விட்டனர். புகை தெருவில்தான் அடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இறப்பும், புகை அடித்ததும் தற்செயலாக ஒன்றாக நிகழ்ந்துள்ளதே தவிர, இரண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அளவுக்கு அதிகமான மருந்தும் கலக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளோம். விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.'' என்றார் துணை இயக்குநர் பாலுசாமி.

டெங்குவை பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி' (Aedes Aegypti) கொசுக்கள் பரவலைத் தடுக்க புகை மூட்டம் அடிக்கும் முறையை இந்தியாவின் 'தேசிய வெக்டர் மூலம் பரவும் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்' (National Vector Borne Disease Control Programme) பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வெளிப்புறங்களில் புகை மூட்டம் அடிக்க, 'மெலாத்தியான்' (Malathion) போன்ற பல்வேறு பூச்சிக்கொல்லிகளை உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மெலாத்தியான் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட 'ஆர்கனோபாஸ்பேட்' (organophosphate) வகையைச் சேர்ந்த ஒரு பூச்சிக்கொல்லி என்று ஆய்வுக்குறிப்புகள் கூறுகின்றன.

கொசு மருந்தில் இருப்பது என்ன? அதை அடிக்கும்போது மக்கள் செய்ய வேண்டியது என்ன?

கொசு மருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காவிட்டாலும், அதற்கான புகை அடிக்கும்போது கண்டிப்பாக அனைவருமே அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்துகிறார் பொது மருத்துவர் ஆதித்யன் குகன்.

பிபிசியிடம் பேசிய அவர், ''நம் நாட்டில் மழைக்காலத்தில் உருவாகும் கொசுக்களை அழிக்க, பைரித்ராய்டு (Pyrethroids) மற்றும் மெலாத்தியன் பூச்சிக்கொல்லிகள்தான், மண்ணெண்ணெய் அல்லது டீசலில் கலந்து புகையடிக்கும் இயந்திரத்தில் (Fogging Machine) பயன்படுத்தப்படுகிறது. இந்த புகை, ரசாயனம் கலந்த காற்றாகத்தான் பரவுகிறது. அதனால் நுரையீரல், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், முதியவர்கள் இந்த புகையை அதிகமாக சுவாசித்தால் நுரையீரலே செயலிழக்கும் ஆபத்து இருக்கிறது.'' என்றார்.

அளவுக்கு அதிகமான கொசு மருந்து புகையைச் சுவாசிக்கும்போது, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு வரும், தலைவலி, நடுக்கம் வரும் என்று கூறிய மருத்துவர் ஆதித்யன் குகன், மிக அதிகமான சுவாசத்தின்போது சிலருக்கு வலிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்கிறார். ஏற்கெனவே காய்ச்சல் உள்ளவர்கள், புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் வரலாம் என்கிறார் அவர்.

''அன்னூரில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. ஏற்கெனவே ஆக்சிஜன் அளவு அவர்களுக்கு 85–88 என்ற அளவில் இருக்கும்போது இந்த புகையை சுவாசித்தால் கண்டிப்பாக பெரும் பாதிப்பு ஏற்படும். மேலை நாடுகளில் இந்த கொசு மருந்தை அதற்கென உள்ள பிரத்யேக கலவையில் சேர்த்து அடிப்பார்கள். இங்கு மண்ணெண்ணெய், டீசலுடன் கலக்கும்போது அதன் வாசமும் சேர்ந்து சுவாசத்தை மேலும் கடினமாக்கும். மண்ணெண்ணெயின் வாசம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்.'' என்றார் அவர்.

மருத்துவர்கள் மற்றும் ஆய்வுகள் கூறுவதன்படி, கொசு மருந்து அடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:

  • கொசு மருந்து அடிக்கப்படும் நேரத்தை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
  • வெளிப்புறங்களில் மட்டுமே கொசு மருந்து அடிக்க வேண்டும்; வீட்டுக்குள் அடிக்கக்கூடாது.
  • தெருக்களில் கொசு மருந்து அடிக்கும்போது வீடுகளின் கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
  • மருந்து அடிக்கப்படும் நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சாலைகளில் நடமாடக்கூடாது.
  • உணவுப் பொருட்களை எடுத்து பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.
  • குழந்தைகளை அந்த நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அரை மணி நேரம் கழித்தே அவர்களை வெளியில் அனுப்ப வேண்டும்.

கொசுக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் புகைமூட்டத்தால் மனிதர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதாக தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான ஸ்வாதி ஆர்.அய்யர். அதில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியின் அளவு மிகக்குறைவு என்று கூறும் அவர், அது கொசு போன்ற மிகச்சிறிய உயிரினங்களை மட்டுமே கொல்லக்கூடிய அளவில் பரப்பப்படுகிறது என்கிறார்.

அதேநேரத்தில் மும்பையைச் சேர்ந்த நுரையீரல் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் லான்செலாட் பின்டோ இந்தப்புகையைச் சுவாசிப்பது தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும், சிலருக்குக் கவலைக்குரிய அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார். ஏற்கெனவே நுரையீரல் தொடர்பான பாதிப்பு உள்ளவர்களுக்கு நிலைமை இன்னும் மோசமாகலாம் என்கிறார் மருத்துவர் பின்டோ.

மேடை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றுபவர்கள், தங்களைச் சுற்றி அதிக அளவில் புகைமூட்டம் உருவாக்கப்படும் சூழலில் தொடர்ந்து பணிபுரியும்போது, அவர்களுக்கும் நீண்டகால அடிப்படையில் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதாக முந்தைய ஆய்வுகள் காட்டுவதை மருத்துவர் பின்டோ சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் சுவாசிக்கும் புகையின் அளவு பாதிப்புக்கு உள்ளாகும் அளவுக்கு அதிகம் என்கிறார் அவர்.

நுரையீரல் பாதிப்பு மற்றும் ஒவ்வாமை (allergy) கொண்டவர்களுக்கு, கொசு ஒழிப்புப் புகைமூட்டத்துக்கு ஆளான பிறகு அவர்களின் அறிகுறிகள் தீவிரமடையக்கூடும் என்று குறிப்பிடுகிறார் பெங்களூரு தனியார் மருத்துவ மனையின் நுரையீரல் மற்றும் தூக்கக்கோளாறு சிகிச்சை நிபுணத்துவ மையத்தின் நிறுவனர் இயக்குநரும், நுரையீரல் மருத்துவத்துறைத் தலைவருமான ரவீந்திர மேத்தா. ஒரு முறை பெரிய பாதிப்பு ஏற்படாவிட்டாலும் நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து ஆளாகும்போது பாதிப்புகள் ஏற்படும் என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு