இரான் மீது அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதல்' - இரானின் எதிர்வினை என்ன?

    • எழுதியவர், ஏமி வாக்கர் மற்றும் டேபி வில்சன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா "சக்திவாய்ந்த" தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

இந்த நீரிணையில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததுடன், தெஹ்ரான் "தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்" என்றும் எச்சரித்தார்.

கெஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய இடங்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கு சிதறிய குண்டுத் துகள்களால் மக்கள் காயமடைந்துள்ளதாகவும் இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்குவதற்கு காரணமான, மூன்று டேங்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இரான் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

அந்த 60 சிறிய படகுகளுடன் சேர்த்து, இரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டளை மையங்களையும் தான் தாக்கியுள்ளதாக சென்ட்காம் கூறியுள்ளது. அது தனது இலக்குகளின் இடங்களை வெளியிடவில்லை.

மூன்று டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத" என்று விவரித்த தாக்குதல்களுக்கு விளைவுகள் இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருந்தது.

"ஒரு சர்வதேச நீர்வழியில் அப்பாவி நபர்களால் இயக்கப்படும் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்கியதற்காகக் கடுமையான விலையை கொடுக்க வைக்கவே" அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சென்ட்காம் கூறியுள்ளது.

தாக்குதல்களுக்கு முன்னதாக, இரான் மீதான எண்ணெய் தடைகளை தற்காலிகமாக நீக்கியிருந்த ஒரு விலக்கு ஆணையை அமெரிக்க நிதித்துறை ரத்து செய்தது. இது கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இரான் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இந்த நடவடிக்கையைப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் அழைத்ததுடன், இது அமெரிக்க அரசின் "கெட்ட எண்ணம், முரண்பாடு மற்றும் நம்பகத்தன்மையற்ற நிலையை" நிரூபிப்பதாகக் கூறியது.

மேலும், இரான் "தனது தேசிய நலன்களையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கு அவசியமாகக் கருதும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கும்" என்றும் அது மேலும் கூறியது.

கத்தாரும் செளதி அரேபியாவும் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளன, மேலும் தங்களது நாட்டைச் சேர்ந்த ஒரு டேங்கர் இந்த நீரிணையிலோ அல்லது அதற்கு அருகிலோ கடந்து செல்லும்போது தாக்கப்பட்டதாக தனித் தனியாக கூறி, இரான் மீது குற்றம்சாட்டின.

ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகே 'அல்-ரெகாயத்' என்று அழைக்கப்படும் கப்பல் கடந்து சென்றபோது, அதன் மீது நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதலுக்கு இரானே "முழுப் பொறுப்பு" என்று கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாஜெத் அல் அன்சாரி கூறினார்.

வேறு தனியான ஒரு சமூக ஊடகப் பதிவில், செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், செளதி டாங்கரான 'வடியான்' இந்த நீரிணையைக் கடக்கும்போது இரான் அதை இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.

கத்தாரின் குற்றச்சாட்டுகளை "நல்ல அண்டை நாட்டு உறவுக் கொள்கைக்கு எதிரானது" என்று இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் விவரித்தார்.

இரான் உடன் ஒருங்கிணைக்கப்படாத வழிகளைப் பயன்படுத்தும் அல்லது தங்களின் கப்பல் கண்காணிப்பு அமைப்பை மாற்றியமைக்கும் வணிகக் கப்பல்கள், மற்ற கப்பல்களுடன் மோதுவதற்கான அபாயத்தை எதிர்கொள்வதுடன், நீரிணையில் "பாதுகாப்பான போக்குவரத்தை எளிதாக்குவதற்கான" இரானின் முயற்சிகளையும் சீர்குலைக்கின்றன" என்றும் அவர் மேலும் கூறினார்.

திங்கட்கிழமை ஒரு டேங்கர் இந்த நீரிணை வழியாகச் செல்லும்போது, அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று இயந்திர அறையை தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக யுகேஎம்டிஓ தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில், ஒரு டேங்கர் இந்த நீரிணையை விட்டு வெளியேறும்போது தாக்கப்பட்டதாகப் புகாரளித்தது, ஆனால் அது தனது அடுத்த நிறுத்தத் துறைமுகத்துக்குத் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. அதே நேரத்தில் மற்றொரு டேங்கர் தாக்கப்பட்ட பிறகு சிறிய அளவிலான கட்டமைப்புச் சேதத்தைச் சந்தித்ததாகப் புகாரளித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

புதிய தாக்குதல்கள் குறித்த சென்ட்காமின் அறிவிப்புக்கு முன்னதாக, பெயர் குறிப்பிட கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், இரானுடனான இறுதி ஒப்பந்தத்தை நோக்கி அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்ந்து "நல்லெண்ணத்துடன்" பணியாற்றுவார்கள் என்று உறுதியளித்தார்.

போர்நிறுத்தத்தை நீட்டிப்பதையும் "அனைத்து முனைகளிலும்" மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டிருந்த 14 அம்சப் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு கடந்த மாதம் அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டபோது அதை நோக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது.

ஹோர்மூஸ் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரானும் ஓமனும், மற்ற வளைகுடா நாடுகளுடன் இந்த நீர்வழியில் "எதிர்கால நிர்வாகம் மற்றும் கடல்சார் சேவைகளை வரையறுக்க" பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி.

இந்த மோதலின் போது, 'பாதுகாப்பான பயண அனுமதிகளை' நிர்வகிக்கும் 'பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்தை' நிறுவியது உட்பட நீரிணையின் மீதான தனது இறையாண்மையை நிலைநாட்ட இரான் முயன்றது.

அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்த நீரிணை இறுதியில் ஓமான் உடன் ஒருங்கிணைந்து இரானால் நிர்வகிக்கப்படும் என்றும், அதில் கப்பல்கள் அந்த நீர்நிலையைக் கடந்து செல்வதற்கான 'சேவைக் கட்டணங்கள்' வசூலிக்கப்படும் வாய்ப்புகளும் அடங்கும் என்றும் இரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு