You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கார்டிசோல் ஹார்மோன் உண்மையிலேயே 'வில்லனா'? அதைக் குறைப்பது அவசியமா?
- எழுதியவர், ஆசிரியர் குழு
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சமூக ஊடகங்களில் பெரும் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வரும் இந்த 'மன அழுத்த ஹார்மோன்', தற்போது "கார்டிசோல் முகம்" மற்றும் "கார்டிசோல் உடல்" போன்ற புதிய சொற்கள் உருவாகக் காரணமாகியுள்ளது.
இணையத்தில் பகிரப்படும் பல பதிவுகளின்படி, முகத்தின் வடிவத்தை மாற்றுவது, உடல் எடையை அதிகரிப்பது மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குக் கார்டிசோல் ஹார்மோனே காரணமாகக் கூறப்படுகிறது.
மன அழுத்தம், கார்டிசோல் மற்றும் முகம்/உடல் வீக்கத்துக்கு இடையே உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்தும், இந்த ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பது எப்படி என்பது குறித்தும் பல பயனர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், உண்மையில் கார்டிசோல் என்றால் என்ன? சமூக ஊடகங்கள் சித்தரிப்பது போல அது நிஜமாகவே ஒரு வில்லன்தானா?
"கார்டிசோல் என்பது நாம் உயிர்வாழத் தேவையான ஒரு அத்தியாவசிய ஹார்மோன் ஆகும். ஆனால் அது நிச்சயமாக ஒரு வில்லன் அல்ல. மேலும் நம் உடலைப் நாம் அந்த விதத்தில் பார்க்கக்கூடாது," என்று மருத்துவ நிபுணரும் பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜாண்ட் வான் டுல்லெகன் கூறுகிறார்.
"கார்டிசோல் என்பது நமது சிறுநீரகங்களுக்கு மேல் இருக்கும் சிறிய சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை நமது மூளையின் அடிப்பகுதியில் உள்ள சுரப்பிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நம் உடல் அதனைக் கண்காணிக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வப்போது அழுத்தம் ஏற்படும் ஹார்மோன் எனக் குறிப்பிடப்படும் கார்டிசோலுக்கு மருத்துவ உலகில் ஒரு குறிப்புச் சொல் உண்டு. ஆனால், மருத்துவர் ஜாண்ட் கூறுவதைப் போல இந்த ஹார்மோன் நமது எதிரியல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியமானது.
நாம் விழிப்பதற்கும், விழிப்புடன் இருப்பதற்கும், நாள் முழுவதும் நமக்காக காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் இரவில் உறங்குவதற்கும் இந்த ஹார்மோன் தான் உதவுகிறது.
கார்டிசோலின் செயல்பாடுகள்
மன அழுத்தத்தை நமது உடல் எவ்வாறு கையாள்கிறது என்பதைக் கட்டுப்படுத்த உதவும் பல ஹார்மோன்களில் கார்டிசோலும் ஒன்றாகும். ஆனால் மற்ற உடல் செயல்பாடுகளிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக:
- நமது உடல் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இது நிர்வகிக்கிறது.
- உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
- ரத்த அழுத்தத்தை சீராக ஒழுங்குபடுத்துகிறது.
- ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது.
- தூக்கம் மற்றும் விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.
- நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொண்டு, அதன் பிறகு மீண்டும் உடலை சமநிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான ஆற்றலை இது அதிகரிக்கிறது.
கார்டிசோல் இல்லாவிட்டால் நாம் இறந்துவிடுவோம். இருப்பினும், இந்த ஹார்மோன் நம் உடலில் மிக அதிக அளவில் சுரப்பது பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.
கார்டிசோல் எவ்வாறு செயல்படுகிறது?
மூளையின் முக்கியப் பகுதிகளான ஹைபோதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி ஆகியவை ரத்தத்தில் கார்டிசோல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிகின்றன.
ரத்தத்தில் கார்டிசோலின் அளவு மிகவும் குறைவாக இருந்தால், மூளை தான் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களின் அளவை மாற்றியமைக்கிறது. அட்ரினல் சுரப்பிகள் இந்த சிக்னல்களைப் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு அவை வெளியிடும் கார்டிசோலின் அளவை முறைப்படுத்துகின்றன.
நம் உடலின் பெரும்பாலான உயிரணுக்களில் இருக்கும் கார்டிசோல் ஏற்பிகள், இந்த ஹார்மோனைப் பெற்றுக்கொண்டு பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றன.
ரத்தத்தில் உள்ள கார்டிசோலின் அளவு நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பொதுவாக, காலையில் எழுந்தவுடன் அதன் அளவு உச்சத்தில் இருக்கும், மேலும் நாள் செல்லச் செல்ல அது குறையும். இது சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த சுழற்சி தலைகீழாக மாறும். எனவே, கார்டிசோல் வெளியாகும் நேரமானது ஒருவரின் தினசரி செயல்பாடுகளோடு நேரடியாகத் தொடர்புடையது. மேலும், மன அழுத்தத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, உடல் அதற்குச் சரியாக எதிர்வினையாற்ற உதவுவதற்காகக் கூடுதல் கார்டிசோல் ஹார்மோனை சுரக்கிறது.
இவ்வாறு, உடல் அதிக எச்சரிக்கை நிலையில் இருக்கும்போது, கார்டிசோல் ஹார்மோனானது உடலின் பிற அவசியமற்ற செயல்பாடுகளை மாற்றியமைக்கவோ அல்லது தற்காலிகமாகத் தடுக்கவோ செய்கிறது. இந்தச் செயல்பாடு செரிமான மற்றும் இனப்பெருக்க மண்டலங்கள், நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் உடலின் வளர்ச்சியைக்கூட பாதிக்கலாம்.
சில சமயங்களில், கார்டிசோல் அளவுகள் சீரற்றுப் போகலாம்.
"ஏமாற்றக்கூடிய" உறவு
சமீபகாலமாக, கார்டிசோல் ஹார்மோன், அதன் அதிகப்படியான அளவு மற்றும் அதைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்கள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.
முகம் வீங்குவதற்கும், வயிறு உப்பசம் அடைவதற்கும் உங்கள் கார்டிசோல் ஹார்மோன் தான் காரணம் என்று கூறி, இன்ஸ்டாகிராமிலும் யூடியூபிலும் விதவிதமான பரிந்துரைகள் உலா வருகின்றன. "கார்டிசோல் காக்டெய்ல்" குடிப்பது, ஏகப்பட்ட ஊட்டச்சத்து மாத்திரைகளை விழுங்குவது, அல்லது நெற்றிப் பொட்டில் தைலம் தடவி மசாஜ் செய்வது எனப் பல தீர்வுகள் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கலாம்.
"இன்றைய காலகட்டத்தில் நம் உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்திருக்க அதிக வாய்ப்புள்ளது உண்மைதான்" என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் நாளமில்லாச் சுரப்பியல் பேராசிரியர் ஜான் வாஸ். "இதற்குக் காரணம், நம் நவீன காலத்து மன அழுத்தமும், அதிலிருந்து நம்மால் ஒரு கணமும் விடுபட முடியாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதுமே ஆகும்."
"ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு, ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருப்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது" என்று பிபிசி-யிடம் இந்த நிபுணர் கூறுகிறார்.
இருப்பினும், கார்டிசோல் அளவுக்கும் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் அடிக்கடி கூறப்படும் நேரடித் தொடர்பை பேராசிரியர் வாஸ் கேள்விக்குள்ளாக்குகிறார். மேலும் இந்தத் தொடர்பு முற்றிலும் "தவறாக வழிநடத்தக்கூடியது" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"உடல் எடை அதிகரிப்பு அல்லது முக வீக்கம் போன்ற இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, போதிய தூக்கமின்மை, சில குறிப்பிட்ட மருந்துகள், உணவில் அதிகப்படியான உப்பு அல்லது அதிகப்படியான மதுப்பழக்கம் போன்றவற்றைச் சொல்லலாம்," என்று அவர் விளக்குகிறார்.
"இதற்கு கார்டிசோல் அளவுகள் மட்டுமே காரணம் என்று கூறுவது சாத்தியமற்றது. இது மிகவும் சிக்கலான ஒரு பின்னணியைக் கொண்டது," என்று அந்த நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.
"ஆதாரமற்றவை"
உங்கள் உடலில் கார்டிசோல் அளவுகள் அதிகமாக இருக்கிறதா என்பதை எப்படி அறிவது?
"உங்கள் கார்டிசோல் அளவுகள் அதிகமாக உள்ளதா என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்வதற்கான ஒரே வழி, ரத்தப் பரிசோதனை அல்லது உமிழ்நீர் பரிசோதனை மட்டுமே," என்கிறார் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள 'மன அழுத்தம் மற்றும் ஆரோக்கிய ஆய்வகத்தை' வழிநடத்தும் பேராசிரியர் டேரில் ஓ'கானர்.
"நாள் முழுவதும் இந்த அளவு மாறுபடுவது இயல்பானது. காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருக்கும், இதை பெரும்பாலான மக்கள் கவனிப்பதில்லை," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
ஆனால், இணையத்தில் பேசப்படும் அந்த "கார்டிசோல் முகம்" அல்லது "கார்டிசோல் உடல்" போன்ற விஷயங்களுக்கு, நம் உடலில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரிப்பதுதான் உண்மையான காரணமா?
"இவை இரண்டுமே முற்றிலும் ஆதாரமற்றவை. இவற்றை நீங்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்," என்று டாக்டர் ஜாண்ட் வான் டல்லேகன் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
"கார்டிசோல் நம் உடலில் அப்படிச் செயல்படுவதில்லை. இன்ஃப்ளூயன்சர்கள் உங்களுக்கு அறிவியல்பூர்வமாகவும் கவர்ச்சிகரமாகவும் விளக்கமளித்து, சில ஊட்டச்சத்து மாத்திரைகளையோ அல்லது காக்டெய்ல்களையோ வாங்கிச் சாப்பிடுமாறு கூறினாலும், அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது."
அந்த நிபுணரின் கூற்றுப்படி, "கார்டிசோல் குறித்து சமூக ஊடகங்களில் நாம் காண்பது, இணையத்தில் தவறான தகவல்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏனெனில், கார்டிசோலுக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும், குறிப்பாக முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் எடை அதிகரிப்பதற்கு இடையே தொடர்பு இருப்பது உண்மைதான்."
குஷிங் சிண்ட்ரோம் போன்ற மருத்துவ நிலைகள் கார்டிசோல் அளவை நீண்ட காலத்துக்கு அதிகமாக வைத்திருக்கக்கூடும். உதாரணமாக, பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டியால் அதிகப்படியான கார்டிசோல் உற்பத்தி செய்யப்படுவது அல்லது கார்டிசோலின் விளைவுகளைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை நீண்ட காலம் உட்கொள்வது போன்றவற்றால் இது நிகழலாம்.
இத்தகைய மருத்துவச் சூழல்களில், இந்த ஹார்மோனின் அளவு நாள்பட்ட முறையில் மிக அதிகமாக இருக்கும்போது, அது உடலில் உள்ள கொழுப்பின் பரவலை மாற்றியமைக்கலாம். குறிப்பாக, முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகமாகப் படியக் கூடும்.
"அதாவது, கார்டிசோலின் அதிகப்படியான அளவுக்கும் உடலில் கொழுப்பு மறுவிநியோகம் அடைவதற்கும் இடையே நிச்சயமாக ஒரு தொடர்பு உள்ளது. ஆனால், இது ஒரு மருத்துவக் குறைபாட்டின் அறிகுறியாகும். இதற்கு முறையான பரிசோதனையும் சரியான சிகிச்சையும் அவசியமாகும்," என்கிறார் வான் டல்லேகன்.
மேலும், அதிகப்படியான மன அழுத்தத்துடன் தொடர்புடைய பிற அறிகுறிகளான பதற்றம், திடீர் மனநிலை மாற்றங்கள், எரிச்சல் உணர்வு, கவனக்குறைவு மற்றும் தூக்கக் குறைபாடுகள் போன்றவைகளும் இதனால் ஏற்படலாம்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், "உங்கள் கார்டிசோல் அளவைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்" என்று மருத்துவர் வான் டல்லேகன் அழுத்தமாகக் கூறுகிறார்.
"உடல்நலக்குறைவு அல்லது உடலில் தீவிர மாற்றங்களை உணர்ந்தால், மற்றும் 'குஷிங்ஸ் சிண்ட்ரோம்' போன்ற பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகித்தால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்," என்று அந்த நிபுணர் குறிப்பிடுகிறார்.
"உங்கள் கார்டிசோல் அளவைப் பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டியது உங்கள் மருத்துவரின் பொறுப்பு. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதிலேயே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு