மனிதர்களுடன் வாழ்ந்து வந்த கிர் சிங்கங்கள் இப்போது ஏன் தாக்க தொடங்கியுள்ளன?

    • எழுதியவர், கோபால் கடேஷியா
    • பதவி, பிபிசி குஜராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கிர் காட்டைச் சுற்றியுள்ள அம்ரேலி, பாவ்நகர் போன்ற மாவட்டங்களின் கிரேட்டர் கிர் என்று அழைக்கப்படும் பகுதியில், கடந்த ஆறு வாரங்களில் சிங்கங்கள் மனிதர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வளவு குறுகிய காலத்தில் சிங்கங்களின் தாக்குதல் என கூறப்படும் சம்பவங்களில் இத்தனை எண்ணிக்கையிலான மனித மரணங்கள் நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.

சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக அவை உணவு மற்றும் வாழ்விடத்தைத் தேடி காடுகளை விட்டு மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மனிதர்களுடன் அவை இணக்கமாக வாழ்வது பெரும்பாலும் சாத்தியமாகவே இருந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கிரேட்டர் கிர் பகுதியில் சிங்கங்கள், சிறுத்தைகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளும் மனிதர்களும் இணைந்து வாழும் முறை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு தனித்துவமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

இந்த ஆறு சம்பவங்களின் சூழ்நிலைகள், விலங்குகள் மற்றும் இடங்கள் வெவ்வேறானவை என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இந்த சம்பவங்கள் சிங்கங்களின் நடத்தையிலோ அல்லது கிரேட்டர் கிர் பகுதியின் சூழ்நிலைகளிலோ திடீரென ஏற்பட்ட ஏதேனும் பெரிய மாற்றத்தின் அறிகுறி அல்ல என்று வாதிடுகின்றனர்.

சிங்கங்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னணி என்ன?

இந்தச் சம்பவங்களின் தொடக்கம் மே 25ஆம் தேதி அம்ரேலி மாவட்டத்தின் ஜஃப்ராபாத் தாலுகா கடற்கரையில் அமைந்துள்ள வராஹ் ஸ்வரூப் கிராமத்தில் இருந்து தொடங்கியது.

வராஹ் ஸ்வரூப் கிராமத்தைச் சேர்ந்த பரத் பரையா என்ற இளைஞர் இரண்டு நாட்களாக காணாமல் போன நிலையில், மே 25ஆம் தேதி வராஹ் ஸ்வரூப் மற்றும் அருகிலுள்ள பகோதர் கிராமங்களுக்கு இடையேயான அடர்ந்த சீமைக் கருவேல புதர்ப்பகுதியில் அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பரத் பரையா சிங்கங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 12ஆம் தேதி மாலை, வராஹ் ஸ்வரூப்பில் இருந்து சுமார் 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்ரேலி மாவட்டத்தின் கான்டியன் கிராமத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. திறந்தவெளியில் மலம்கழிக்கச் சென்ற மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர் குடும்பத்தின் ஏழு வயது சிறுவன் நானுராம் தினேஷ் மங்கர் மீது சிங்கங்கள் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 16 அன்று, பகோதரிலிருந்து மூன்று கிலோமீட்டர் கிழக்கே அம்ரேலியின் கடற்கரை கிராமமான கோவாயாவில் சிங்கங்கள் தாக்கியதாகக் கூறப்பட்டதில் பிரகாஷ்சந்திர ஹர்கோவிந்த் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, பிரகாஷ்சந்திரா கோவாயாவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். தனது சொந்த ஊரான உத்தராகண்டிற்குச் செல்வதற்காக ஏதேனும் வாகனத்தைப் பிடிப்பதற்காக நள்ளிரவுக்குப் பிறகு சாலையில் நடந்து சென்றபோது, கிராமத்தின் எல்லையில் சிங்கங்கள் அவரைத் தாக்கின.

அதே நாளில் கோவாயாவிலிருந்து வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்ரேலியின் ஜுனா சவர் கிராமத்தில் திலீப் தேசாய் என்ற 61 வயது விவசாயியின் உடலின் சில பகுதிகள் அவரது விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. அதன் அருகில் சிங்கத்தின் கால்தடங்கள், முடிகள் போன்றவையும் காணப்பட்டன.

திலீப் தேசாயின் மரணமும் சிங்கங்களின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினரும் வனத்துறையினரும் சந்தேகிக்கின்றனர்.

ஜூன் 18 அன்று, கோவாயாவிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தின் கடற்கரை கிராமமான கடாடாவில் நாகஜிபாய் குஜரியா என்ற இளைஞர் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில், அவரது விவசாய நிலத்தின் குடிசைக்கு அருகில் இருந்த கருவேல மரப் புதரிலிருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் அந்த நேரத்தில் சிங்கங்கள் நடமாட்டம் இருந்தது. சிங்கங்களின் தாக்குதலால்தான் நாகஜிபாய் உயிரிழந்தார் என்று காவல்துறை கூறுகிறது.

ஜூன் 25 அன்று, கோவாயாவிலிருந்து வடமேற்கு திசையில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்ரேலியின் சதுரி கிராமத்தில் ஜியான் சிந்தா என்ற ஐந்து வயது சிறுவன் அவனது தாத்தாவுடன் பால் பண்ணைக்கு பால் ஊற்றச் சென்றபோது, சிங்கங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சம்பவம் நடந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு, வனத்துறையின் செய்திக் குறிப்பின்படி, ஜூலை 4 அன்று ஜுனா சவரில் இருந்து தென்மேற்கே சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சவர்குண்ட்லாவின் தவி கிராமத்தில் ஆடுகள் மற்றும் நாய்களுடன் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜுபாய் வஹேலா என்ற இளைஞர் சிங்கங்களின் தாக்குதலில் காயமடைந்தார்.

அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 6 அன்று தவியிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவ்நகரின் பாலிதானா தாலுகாவில் கராஜியா கிராமத்தில் காலுபாய் பார்மார் என்ற நபர் காலை நேரத்தில் வீட்டின் முற்றத்தில் கட்டப்பட்டிருந்த பசுக்களுக்குப் புல் போடச் சென்றபோது, ஒரு இளம் சிங்கம் தாக்கியதில் காயமடைந்தார்.

ஜூலை 8 மாலையில் ஜுனா சவரில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்ரேலியின் அந்தாலியா கிராமத்தில் லுவாரியா காப்புக்காடு அருகே ஒரு சிங்கம் தாக்கியதில், அம்ரேலி நகரில் வசித்து வந்த சோஹில் முன்ஜாவர் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஷேத்ருஞ்ஜி வனவிலங்கு பிரிவின் துணை வனப் பாதுகாவலர் சிராக் அமீன் ஊடகங்களிடம், அந்தாலியாவில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் இனப்பெருக்கச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது ஏற்பட்ட ஏதேனும் தூண்டுதல் அல்லது தொந்தரவு காரணமாகச் சிங்கம் தாக்கியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கிர் பகுதியில் சிங்கங்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றனவா?

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழின் செய்தி ஒன்றின்படி, 2020-21 ஆம் ஆண்டில் குஜராத்தில் சிங்கங்களின் தாக்குதலால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த செய்தியின்படி, 2024-25 இல் இந்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது, ஆனால் 2025-26 இல் ஐந்தாகக் குறைந்தது.

தற்போது மார்ச் 2026 இல் தொடங்கிய 2026-27 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே குறைந்தபட்சம் ஆறு மரணங்கள் பதிவாகிவிட்டன.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி 2024-25 இல் சிங்கங்களின் தாக்குதலால் மனிதர்கள் காயமடைந்த சம்பவங்கள் 42 ஆகவும், 2025-26 இல் 13 சம்பவங்களாகவும் பதிவாகியிருந்தன.

காட்டு விலங்குகள் மனிதர்களின் தொந்தரவு இன்றி வாழ்வதை உறுதி செய்வதற்காக, காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பாலைவனங்கள், கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களை தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் என அறிவித்து, அங்கு மனித நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இத்தகைய பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதற்கு மாறாக, தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், அரசின் தரிசு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிலங்களும் தனிநபர்கள், குடும்பக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்துகள் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இத்தகைய நிலங்களுக்கு அரசு வரி வசூலிப்பதால், இத்தகைய பகுதிகள் வருவாய்ப் பகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

எனினும், சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காட்டு விலங்குகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை விட்டு வெளியேறி வருவாய் நிலப்பகுதிகளுக்குள் நுழைந்தாலும், அவற்றுக்கு 1972ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு தொடர்ந்து அமலில் இருக்கும். அந்தப் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவது அரசின் பொறுப்பாகும்.

அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களின் வருவாய் நிலப்பகுதிகளில் சுற்றித் திரிந்து வாழும் சிங்கங்கள் மற்றும் பிற காட்டு விலங்குகளை முறையாகப் பாதுகாப்பதற்காக, குஜராத் அரசு 2019ஆம் ஆண்டு ஷேத்ருஞ்ஜி வனவிலங்கு பிரிவை உருவாக்கியது.

இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பதிவான எட்டு சம்பவங்களில் ஆறு சம்பவங்கள் ஷேத்ருஞ்ஜி வனப் பிரிவில் பதிவாகியுள்ளன.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, வனத்துறை குறைந்தபட்சம் 19 சிங்கங்களைப் பிடித்துக் கூண்டில் அடைத்துள்ளது.

சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் சம்பவங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன?

கிரேட்டர் கிர் பகுதியில் மனிதர்களும், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பெரிய வேட்டை விலங்குகளும் இணக்கமாக வாழ்வதற்கு இணையாக உலகில் வேறு எந்த ஓர் உதாரணமும் இல்லை என்று சிராக் அமீன் கூறுகிறார்.

"கிரேட்டர் கிர் பகுதியில் சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கும் அளவிலான வனவிலங்கு மற்றும் மனிதர்களுடனான தொடர்பு உலகில் வேறு எங்கும் இல்லை."

"புலிகள் மற்றும் யானைகள் வாழும் பகுதிகளில்கூட இதுபோன்ற நிலை காணப்படுவதில்லை. சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக அவை வருவாய் நிலப்பகுதிகளில் அதிகமாகச் சுற்றித் திரிகின்றன."

"அதே நேரத்தில் மனிதர்களின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. எனவே, சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய தொடர்புகள் சில நேரங்களில் மோதலில் முடிகின்றன."

நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

1980களில் கிர்ரில் துணை வனப் பாதுகாவலராக இருந்த குஜராத்தின் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அசோக்குமார் சர்மா, இந்தத் தாக்குதல்கள் சிங்கம்-சிறுத்தை போன்ற பெரிய அளவிலான வேட்டை விலங்குகள் மனித நடமாட்டம் உள்ள வருவாய்ப் பகுதிகளில் வாழத் தொடங்கினால் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்பதற்கான உதாரணங்கள் என்கிறார்.

"ஏறத்தாழ 2000-ஆம் ஆண்டிலிருந்து சிங்கங்கள் வருவாய்ப் பகுதிகளில் வாழத் தொடங்கியுள்ளன, அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது," என அவர் பிபிசியிடம் கூறினார்.

"வருவாய்ப் பகுதிகளிலும் சிங்கங்களும் மனிதர்களும் அமைதியான முறையில் இணைந்து வாழ்க்கை நடத்துவது சாத்தியம் என்பது ஒரு கற்பனைக் கதை, சிங்கங்கள் மனிதர்களைத் தாக்காது என்பதும் ஒரு கற்பனைக் கதைதான்."

"சமீபத்திய சம்பவங்கள் இதற்கு உதாரணங்கள். அசையும் எந்தவொரு உயிரினமும் சிங்கங்கள் இயற்கையாக வேட்டையாடும் இரைதான். அதில் மனிதர்களும் அடங்குவர்."

"சிங்கங்கள் பசியுடன் இருக்கும்போது அவற்றுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவை மனிதர்களைத் தாக்குவது இயல்பான நடத்தை என்றே கருதப்படுகிறது. மனிதர்களைத் தாக்காமல் இருப்பதே அவற்றின் இயல்பு என்று கூற முடியாது."

ஆனால் சட்டவிரோதமாக நடத்தப்படும் லயன் ஷோக்கள் அதிகரித்து வருவதுதான் இந்தத் தாக்குதல்களுக்கு மிகப் பெரிய காரணம் என்கிறார் கடந்த நான்கு தசாப்தங்களாகச் சிங்கங்களைக் கவனித்து வரும் பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பூஷண் பாண்டியா.

"25 ஆண்டுகளாகச் சிங்கங்கள் மனிதர்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றன, மோதல் சம்பவங்கள் மிகவும் குறைவாகவே நடந்துள்ளன," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பொதுவாகச் சிங்கங்கள் மனிதர்களைத் தாக்குவதில்லை. சமீபத்தில் நடந்துள்ள சம்பவங்களின் பின்னணியில் சட்டவிரோதமாக நடத்தப்படும் லயன் ஷோக்கள் உள்ளன."

"இத்தகைய ஷோக்களின் போது மக்கள் இரவில் சிங்கங்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுகிறார்கள், அவற்றின் பின்னால் வாகனங்களை ஓட்டுகிறார்கள், அவை வேட்டையாடும் நேரத்தில் வேட்டையாட விடுவதில்லை."

"அப்படியென்றால் சிங்கங்கள் என்ன செய்யும்? இந்த முறையில் லயன் ஷோக்களில் வம்புக்கு இழுக்கப்படும் சிங்கங்கள், பின்னர் சில சமயங்களில் மற்ற மனிதர்களை தாக்குகின்றன."

"சமீபத்தில் நடந்துள்ள சம்பவங்கள் ஒரே இரவில் நிகழ்ந்தவை அல்ல. அவை ஒரு செயல்முறையின் பகுதியாகவே நடக்கின்றன, அதன் தொடக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கலாம்," என்கிறார் சிராக் அமீன்.

தாக்குதல்கள் அதிகரிப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன என்றும், நிலத்தைப் பயன்படுத்தும் முறை மாறி வருவது அதில் ஒரு காரணம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறுகிறார்.

"செயற்கைக்கோள் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கிராமங்களின் புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் ஒரு பெரிய வித்தியாசம் தெரியும்."

"கிராமங்கள் பெரியதாகிவிட்டன. விவசாயம் செய்யப்படாத இடங்களில் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்தன. அந்தப் பகுதிகளை சிங்கங்கள் தங்களின் வாழ்விடமாகப் பயன்படுத்தின."

"அம்ரேலியின் லிலியா பகுதி இதற்கு ஒரு உதாரணம். ஆனால் மக்களின் பொருளாதார வசதி அதிகரித்துள்ளதால், இப்போது அவர்கள் அந்த கருவேல மரங்களை அகற்றிவிட்டு விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனர்."

"சட்டரீதியாக இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதே நேரத்தில், சிங்கங்களுக்குக் கிடைக்கும் வாழ்விடப் பரப்பளவு குறைந்துள்ளது என்பதும் உண்மை" என்கிறார் சிராக் அமீன்.

அம்ரேலி - பாவ்நகரில் எத்தனை சிங்கங்களும் மனிதர்களும் வாழ்கிறார்கள்?

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களின் பரப்பளவு முறையே 6,760 சதுர கிலோமீட்டர் மற்றும் 7,034 சதுர கிலோமீட்டர் ஆகும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மனிதர்களின் மக்கள் தொகை முறையே 15.14 லட்சம் மற்றும் 24.10 லட்சமாக இருந்தது. மக்கள் தொகை அடர்த்தி முறையே ஒரு சதுர கிலோமீட்டருக்கு 270 மற்றும் 757 ஆக இருந்தது.

குஜராத் வனத்துறை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை சிங்கங்களின் கணக்கெடுப்பை நடத்துகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2001ஆம் ஆண்டில் 327 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை, 2010ஆம் ஆண்டில் 411 ஆக உயர்ந்தது.

2015ஆம் ஆண்டில் அது 523 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 674 ஆகியது. அதன்பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் 33 சதவீதம் உயர்ந்து, 2025ஆம் ஆண்டில் 891 ஆக பதிவானது.

2025ஆம் ஆண்டில் பதிவான 891 சிங்கங்களில், 339 சிங்கங்கள் அம்ரேலி மாவட்டத்திலும், 116 சிங்கங்கள் பாவ்நகர் மாவட்டத்திலும் இருந்தன.

அதாவது, இந்த இரண்டு மாவட்டங்களிலும் மொத்தம் 455 சிங்கங்கள் பதிவாகியிருந்தன. இது குஜராத்தின் மொத்த சிங்க மக்கள் தொகையில் 51 சதவீதமாகும்.

2015 இல் அம்ரேலியில் 174 சிங்கங்களும், பாவ்நகரில் வெறும் 37 சிங்கங்களும் பதிவாகியிருந்தன, இது அப்போதைய மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் ஆகும்.

2025ஆம் ஆண்டின் சிங்கக் கணக்கெடுப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக, மொத்தம் பதிவான 891 சிங்கங்களில் 497 சிங்கங்கள் மட்டுமே தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்தன.

394 சிங்கங்கள் வருவாய்ப் பகுதிகளில் பதிவாகியிருந்தன. இவ்வாறு, சிங்கங்களின் மொத்த எண்ணிக்கையில் 44 சதவீத சிங்கங்கள் வருவாய்ப் பகுதிகளில் வாழ்கின்றன.

2015 இல் 356 சிங்கங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லது அதன் அருகில் பதிவாகியிருந்தன. மேலும் 167 அதாவது சுமார் 32 சதவீத சிங்கங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே பதிவாகியிருந்தன.

இவ்வாறு, பத்து ஆண்டுகளில் வருவாய்ப் பகுதியில் வாழும் சிங்கங்களின் எண்ணிக்கை 227 அதாவது சுமார் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு