'ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்ட பயணியின் காலை பிடித்த மனைவி' - விமான பயணிகளின் திகில் அனுபவம்

    • எழுதியவர், யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் தியோ லெகெட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ரயன்ஏர் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ​​அதன் ஜன்னல் வழியாக ஒருவர் தலைகீழாக வெளியே இழுக்கப்படும் நிலைக்குச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு சுமார் 10 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென 9,000 அடி (2,700 மீட்டர்) கீழே இறங்கியதாக கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.

அப்போது "ஏதோ ஒரு வெடிப்புச் சத்தம்" கேட்டதாக பயணிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

61 வயதான செர்பிய நாட்டவர் ஒருவர் சிராய்ப்புக் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கிரேக்க மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"அவர் வெளியில் இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக அவருடைய மனைவி சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அவரது கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்" என்று மிஹாலிஸ் கியானகோஸ் கூறினார்.

இதுகுறித்து ரயன்ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரேக்க நகரமான தெசலோனிகியிலிருந்து ஜெர்மனியின் மெம்மிங்கனுக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட விமானம், "பறந்து கொண்டிருந்த போது பயணியின் ஜன்னல் ஒன்று பெயர்ந்ததால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே" மீண்டும் திரும்பியதாகக் கூறியுள்ளது.

"விமானம் சாதாரணமாகத் தரையிறங்கியது, பயணிகள் விமான நிலைய முனையத்திற்குத் திரும்பினர். ஒரு பயணி தரையிறங்கியவுடன் தெசலோனிகியில் மருத்துவ உதவியைக் கோரி பெற்றார்" என்று அயர்லாந்தைச் சேர்ந்த இந்த பட்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு "பயணிகளை மெம்மிங்கனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது" என்றும் அந்நிறுவனம் கூறியது.

மற்ற பயணிகள் அவரை மீண்டும் உள்ளே இழுப்பதற்கு முன்பு, அந்த நபர் தோள்பட்டை வரை ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததாக பயணிகள் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

விமானத்தின் என்ஜின் பாகங்கள் மோதியதால் ஜன்னல் உடைந்ததாக விமானத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். ரயன்ஏர் நிறுவனம் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

"அங்கு காற்றழுத்தம் குறைந்ததை நாங்கள் உடனடியாக உணர்ந்தோம். அலறல் சத்தங்கள் கேட்டன... யாரோ தவறுதலாக அவசர கால கதவைத் திறந்துவிட்டார்களோ என்று ஒரு கணம் நினைத்தேன்" என்று கிறிஸ்டினா என்ற சக பயணி ரேடியோ தெசலோனிகியிடம் தெரிவித்தார்.

"முகக்கவசங்கள் கீழே விழுந்தன, கடுமையான துர்நாற்றம் வீசியது. ஒரு பயணியின் தலை மற்றும் தோள்பட்டை ஜன்னலுக்கு வெளியே இருந்தன. அதிர்ஷ்டவசமாக, அவர் தனது சீட் பெல்ட்டை கழற்றாமல் இருந்தார்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு பயணியான சோபியா, ரேடியோ தெசலோனிகியிடம் கூறுகையில், "ஆக்ஸிஜன் முகக்கவசங்கள் கீழே வந்த போது, என்ன நடக்கப் போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் மீண்டும் பத்திரமாகத் திரும்புவோமா என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் விமானத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தோம், ஏதோ ஒரு வெடிப்பு ஏற்பட்டதை உணர்ந்தோம்"என்றார்.

"விமானம் கீழே விழுந்து நொறுங்கப் போகிறது என்று நினைத்தோம். காற்றழுத்தம் மிகக் குறைவாக இருந்தது. எங்களால் சுவாசிக்க முடியாதது போல் தோன்றியது. காயமடைந்த மனிதருக்கு ரத்தம் வழிந்தது, பின்னர் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் அதிர்ச்சி காரணமாக அவர் பலமுறை நினைவிழந்தார்" என்று சோபியா குறிப்பிட்டார்.

பொது மருத்துவமனை ஊழியர்களின் பான்ஹெலெனிக் கூட்டமைப்பின் தலைவர் மிஹாலிஸ் கியானகோஸ் பின்னர் கூறுகையில், 61 வயதான செர்பிய மனிதர் சிராய்ப்புக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

"அவர் அதிர்ச்சியில் உள்ளார், ஆனால் சுயநினைவோடு இருக்கிறார்" என்றும் அவர் கூறினார்.

18 ஆண்டுகள் பழமையான விமானம் என நம்பப்படும் இந்த விமானம், ரயன்ஏர் நிறுவனத்தின் துணை நிறுவனமான மால்டா ஏர் மூலம் இயக்கப்பட்டது.

"இந்தச் சம்பவம் குறித்து தற்போது ஹெலெனிக் வான் மற்றும் ரயில் பாதுகாப்பு விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது" என்று தெசலோனிகி விமான நிலையத்தை இயக்கும் பிராபோர்ட் கிரீஸ் தெரிவித்துள்ளது.

"சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும், விமானம் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து நிறுவப்பட்ட அவசரகால உதவி நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளதாகவும்" ஃப்ராபோர்ட் கிரீஸ் கூறியது.

அயர்லாந்து விமான போக்குவரத்து ஆணையம் இந்தச் சம்பவம் குறித்து தாங்கள் அறிந்துள்ளதாகவும், புலனாய்வு அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் முன்னதாக பிபிசியிடம் தெரிவித்தது.

ஓய்வு பெற்ற விமானியான கிறிஸ் பிராடி பிபிசியிடம் பேசுகையில், சீட் பெல்ட் அணியாமல் இருந்திருந்தால் இந்தச் சம்பவம் "இன்னும் மோசமாகி இருக்கலாம்" என்று கூறினார்.

"விமானக் கேப்டன்களாகிய நாங்கள் எப்போதும் பயணிகளிடம் கூறுவது என்னவென்றால், விமானம் பறக்கும் போது முன்னெச்சரிக்கையாக உங்களது சீட் பெல்ட்களைக் கட்டி வைத்திருங்கள், நாங்கள் சீட் பெல்ட் குறியீடுகளை அணைத்திருந்தாலும் கூட இதைப் பின்பற்றுங்கள் என்றுதான்"என அவர் குறிப்பிட்டார்.

மேலும்,"இதுபோன்ற ஒரு சம்பவத்திற்காக அல்லது திடீர் காற்றுக் கொந்தளிப்பு போன்றவற்றை எதிர்கொள்வதற்காகத்தான் நாங்கள் இதைக் கூறுகிறோம். எனவே, உங்களது சீட் பெல்ட்களைக் அணிந்திருப்பது ஒரு நல்ல நடைமுறையாகும்" என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சேதமடைந்த என்ஜினின் பாகங்கள் மோதி ஜன்னல் உடைந்ததில், ஒரு பயணி வெளியில் இழுக்கப்பட்டு உயிரிழந்தார்.

கூடுதல் அறிக்கை: மார்க் அலிசன் மற்றும் நிகோஸ் பாபனிகோலாவ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு