You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஞ்சா விற்பனை பற்றி கூறியதால் கோவை கல்லூரி மாணவர் கொல்லப்பட்டாரா? 6 மாணவர்கள் கைது
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அதே கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கஞ்சா பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகிகள் கேட்டதன்பேரில் தகவல் கொடுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக மாணவனின் தந்தை கென்னடி ஊடகங்களில் பேசியுள்ளார். இதே கருத்தை அவருடைய உறவினரும் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழு மோதல்தான் இந்த கொலைக்குக் காரணமென்று மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி பிபிசியிடம் தெரிவித்தார்.
போதைப்பொருள் பற்றி தகவல் சொன்னதால் மகன் கொல்லப்பட்டதாக தந்தை குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கென்னடி–சுமதி தம்பதியரின் இரண்டாவது மகன் அமுதன் (வயது 19) கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து கல்லூரி நிர்வாகத்தால் சமீபத்தில் வெளியேற்றப்பட்டு வெளியில் தங்கியிருந்த அவர், கடந்த 10-ஆம் தேதியன்று சக மாணவர்கள் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
செட்டிபாளையம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அமுதன் தாக்கப்பட்டபோது, அவருடன் இருந்த சக மாணவரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (வயது 19) என்பவர்தான் புகார்தாரராக பதிவு செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று காலை 8:30 மணியளவில், இவர்களிருவரும் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அதே கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர், பல்வேறு டூ வீலர்களில் வந்து, அமுதனையும், ஸ்ரீமனையும் கட்டாயப்படுத்தி, மிரட்டி டூ வீலரில் ஏற்றிச் சென்றுள்ளனர். கல்லூரியின் பின்புறமுள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்று, ''அதிகாலையில் எங்கள் அறைக்கு வந்து எங்களையும் எங்கள் நண்பர்களையும் அடித்தது நீங்கள்தானே'' என்று கூறி இருவரையும் தாக்கியுள்ளனர்.
அரிவாள், கத்தி, தென்னை மட்டை மற்றும் இரும்பு ராடுகளால் இருவரையும் அவர்கள் தாக்கியபோது, தான் அவர்களின் அறைக்கு வரவில்லை என்று ஸ்ரீமன் கூறியுள்ளார். அதனால் அவரை அடித்துத் துரத்திவிட்டு, அமுதனை மற்ற எல்லோரும் சேர்ந்து கைகளாலும், கால்களாலும் தாக்கி, பின்பு அவரை டூ வீலரில் அழைத்துச் சென்று, அமுதனின் நண்பர் அறையில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
ஸ்ரீமன் இதுபற்றி தனது நண்பர்களிடம் தகவல் கூறிவிட்டு கல்லூரிக்குச் சென்றுள்ளார். அன்று மாலை 4 மணியளவில் அமுதன் இறந்துவிட்டதாக தனக்கு தன் நண்பன் சிவபிரகாஷ் போனில் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் அதே கல்லூரியில் படிக்கும் 14 மாணவர்களின் பெயர்களுடன் மற்றும் சிலர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
மாணவர் அமுதனின் சடலத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாங்குவதற்காக அமுதனின் பெற்றோர் கென்னடி–சுமதி, அண்ணன் ஜெபருல்லா உள்ளிட்ட ஏராளமான உறவினர்கள் வந்திருந்தனர்.
அமுதனின் தந்தை கென்னடி, அரசுப்பள்ளி தலைமையாசிரியராக உள்ளார். ஊடகங்களிடம் பேசிய கென்னடியும், சுமதியும் கல்லூரி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர்.
''என் மகன் அமுதன் 3-ஆம் ஆண்டு படித்து வந்தான். முதலாண்டில் கல்லூரி விடுதியில் இருந்தான். அங்கு சாப்பாடு சரியில்லை என்று சொல்லி இரண்டாவது ஆண்டில் வெளியில் அறை எடுத்துத் தங்கினான். ஆனால் வெளியில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, மீண்டும் மூன்றாம் ஆண்டில் விடுதியில் தங்கியிருந்தான்.
சில நாட்களுக்கு முன்பு, விடுதியில் சமையல் பணி செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதை எனது மகனும், அவனுடைய நண்பனும் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதுபற்றி என் மகனை கல்லூரியில் விசாரித்துள்ளனர்.'' என்றார் கென்னடி.
''போதைப் பொருள் பயன்படுத்திய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் 1500 பேருக்கு சமையல் செய்பவர்கள் என்று கூறி, என் மகனை விடுதியை விட்டு வெளியேற்றினர். கால அவகாசம் கேட்டதற்குத் தரவில்லை.
அதற்கு முன் கல்லூரியில் கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களைப் பற்றி என் மகனிடம் தகவல் கேட்டு எழுதி வாங்கியுள்ளனர். அதை அந்த மாணவர்களிடம் அவர்கள் சொன்னதால்தான் கோபத்தில் என் மகனை 20 பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.'' என்றும் அவர் தெரிவித்தார்.
கல்லூரியில் தன் மகனுக்கு வருகைப்பதிவு குறைவாக இருந்தது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாகவும், விடுதிக்குக் கட்ட வேண்டிய கட்டண பாக்கி வைத்திருந்ததாலும் கல்லூரி விடுதியை விட்டு, அவரை அவசரமாக வெளியே அனுப்பியதாகவும் கென்னடி மேலும் விளக்கினார்.
கஞ்சா விற்றவர்களைப் பற்றி தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட கோபத்தில்தான் என் மகனைக் கொன்றுள்ளனர் என்பதே அவரின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது.
அமுதனின் தாயார் சுமதி, ''என் மகன் மருந்து குடித்துவிட்டான். தற்கொலை செய்து கொண்டான் என்று தகவல் சொல்லித்தான் எங்களை வரவழைத்தார்கள். இங்கே வந்து பார்த்தபோதுதான், என் மகனை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.'' என்று கூறி கதறியழுதார்.
பிபிசியிடம் பேசிய அமுதனின் உறவினர் பாலகுரு, ''எனது தாய்மாமாதான் கென்னடி. அமுதன் இறப்பதற்கு முன்னால் அங்கே நடக்கின்ற எல்லா விஷயத்தையும் என்னுடைய மாமாவிடம் கூறியிருக்கிறான். அவர் சொன்னது போல, போதைப்பொருள் பற்றி அவன் தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட பகையில்தான் அவனைக் கொலை செய்துள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.'' என்றார்.
ஆனால் அமுதனின் பெற்றோர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் எதிலுமே உண்மையில்லை என்று தெரிவித்தார் செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன்.
கடந்த சில நாட்களாக, அந்தக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் நடந்த பல்வேறு மோதல் சம்பவங்கள் நடந்ததாக அவர் கூறினார்.
பிபிசியிடம் பேசிய காவல் ஆய்வாளர் செல்வராகவன், ''மொத்தம் 14 மாணவர்கள் மற்றும் சிலர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைப் பிடிக்க எஸ்.பி. 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். இதுவரை 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மாணவர் வெளியூரில் பிடிபட்டு அழைத்து வரப்படுகிறார்.
மற்ற மாணவர்களையும் விரைவில் கைது செய்துவிடுவோம். இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் சேர்ந்து 3 ஆம் ஆண்டு மாணவரான அமுதனும், நான்காம் ஆண்டு மாணவர்களை தாக்கியதாக நினைத்தே அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.'' என்றார்.
மாணவர் அமுதன் சக மாணவர்களால் கடுமையாகத் தாக்கி கொல்லப்பட்ட அதே நாளில், அதே செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கு மண்டலத்திலுள்ள 3 மாநகர காவல் துறை, 7 மாவட்ட காவல்துறை சார்பில் மொத்தம் 1036 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
மேற்கு மண்டலக் காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, 2112 கிலோ கஞ்சாவும், வேறு சில வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 கிராம் மெத்தபெட்டமைன், 4268 போதை மாத்திரைகள், 1200 ஆம்பியூல்கள், 30 சிரிஞ்சுகள் ஆகியவையும் செட்டிபாளையம் தனியார் நிறுவனத்தில் அழிக்கப்பட்டன.
சட்டப்பேரவையில் எதிரொலித்த கோவை கல்லூரி மாணவர் கொலை!
ஏராளமான போதைப்பொருட்களை அழித்த அதே நாளில், அதே பகுதியில் போதைப் பொருளால் ஏற்பட்ட மோதலில் ஒரு கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டதாகப் பரவிய தகவல், சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.
சட்டப்பேரவையிலும் இந்த கொலைச் சம்பவம் எதிரொலித்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், ''கோவையில் நடந்துள்ள கல்லூரி மாணவர் கொலை, தனிநபர் சார்ந்த சம்பவமல்ல. அமுதனை போதைப் பொருள் வழக்கு பற்றி விசாரிப்பதற்காக செட்டிபாளையம் போலீசார் வரவழைத்து விசாரித்து, அவரிடம் தகவல் வாங்கியுள்ளனர். அந்தத் தகவல்களை ரகசியமாக வைத்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறை, புகார் தெரிவித்த நபர் பற்றி தகவல் தெரிவித்துள்ளனர். அந்த கோபத்தால்தான் அவரை அடித்துக்கொன்றதாக பெற்றோர் பேட்டி கொடுத்துள்ளனர். அமுதன் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோல 3 நாட்களில் 4 சம்பவங்கள் நடந்துள்ளன.'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ''கோவை மாவட்டத்தில் நடந்த அந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான உடனடி விளக்கமாக இதை விளக்குகிறேன். அந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட மாணவருக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஏற்கெனவே இருந்த கோஷ்டி மோதலின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது.'' என்றார்.
சட்டப்பேரவையில் இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, விவாதம் நடந்த சிறிது நேரத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை சார்பில் ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டது.
பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, ''அந்த மாணவர் கொலைக்கும், போதைப் பொருள் பயன்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இறந்த மாணவரின் பெற்றோரை முதலில் கல்லூரி நிர்வாகத்தினர் யாரும் சென்று பார்க்கவில்லை. அதனால் அவர்கள் பெரும் கோபத்தில் இருந்தனர். குழந்தையை இழந்த பெற்றோரின் வேதனையும், கோபமும் நியாயமானது.
ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. அந்த மாணவருக்கும், சீனியர் மாணவர்களுக்கும் இடையில் ஏற்கெனவே மோதலும், முன் விரோதமும் இருந்தது. அதனால் ஏற்பட்ட குழு மோதலால்தான் கொலை நடந்துள்ளது.'' என்றார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஆகஸ்ட் 12 மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயா, ''அமுதன், அஜீஸ் இருவரும் கல்லூரி விடுதியில் இருந்தனர். சென்ற மாதம் 21 ஆம் தேதியன்று, இரவில் வெளியே சென்றபோது மெஸ் ஊழியர் மனோஜ் என்பவர், எங்கே போகிறீர்கள் என்று அவர்களிடம் விசாரித்துள்ளார். அவரை அவர்கள் தாக்கியதில் அவருக்குக் காயமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் மெஸ் ஊழியர்கள் சமையல் செய்ய மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.'' என்றார்.
''இருவரையும் அழைத்து விசாரித்தபோது, தவறை ஒப்புக்கொண்டனர். தகவல் தெரிவித்தபின் இருவரின் பெற்றோரும் வந்தனர். கேமரா பதிவுகளைக் காண்பித்து, அவர்களிடம் விளக்கினோம். மன்னிப்பு கடிதம் கொடுத்தனர். விசாரணை கமிட்டி, இருவரையும் சஸ்பெண்ட் செய்ய அறிவுறுத்தியது. நாங்கள் அமுதனின் தந்தையிடம் ஜூலை 24 அன்று கடிதம் பெற்று, அழைத்துச் செல்லுமாறு கூறி அவரை ஒப்படைத்து விட்டோம். அதற்குப் பின்பு அவர் விடுதியில் இல்லை.'' என்றார் கல்லூரி முதல்வர் ஜெயா.
''பின்பு அமுதனின் தாயார் 31-ஆம் தேதியன்று மீண்டும் வந்து விடுதியில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டார். அவரிடம் ஆகஸ்ட் 11 அன்று மீண்டும் அழைத்து வந்தால் மேடத்திடம் (சேர்மன்) பேசி சேர்த்துக் கொள்கிறோம் என்றோம். அவரும் அழைத்துச் சென்று விட்டார். அமுதன் அவருடைய ஊரில் இருப்பதாக நினைத்திருந்தோம். ஆனால் ஆகஸ்ட் 10 அன்று அவர் தாக்கப்பட்டதாகத் தகவல் வந்தபின்பே, அவர் இங்கேயிருந்தது தெரிந்தது. வெளியில் அந்த மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் பற்றி எதுவும் தெரியாது. இதுதொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராகவுள்ளோம்.'' என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு