பாங்கிபூரில் பிரசாந்த் கிஷோரின் வெற்றி 'பாஜகவின் வெற்றி' என விமர்சனம் எழுவது ஏன்?

பிரசாந்த் கிஷோர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிஹாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் வெற்றி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிஹாரின் பாங்கிபூர் தொகுதியில் பெரிதும் பேசப்பட்ட இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இந்தத் தொகுதி காலியானது.

பாட்னாவின் நகர்ப்புறப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால், இம்முறை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகின்றன.

பிரசாந்த் கிஷோர், தனது நெருங்கிய போட்டியாளரான பா.ஜ.க-வின் நீரஜ் குமாரை 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகளையும் (49.2%), நீரஜ் குமார் 44,827 வாக்குகளையும் பெற்றனர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு, பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி கைப்பற்றியது.

பாங்கிபூர் தொகுதி நீண்ட காலமாக பா.ஜ.க-வுக்கு வெற்றிக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே கருதப்பட்டது. மேலும், அந்தத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.

மிகக் குறைந்த வாக்குப்பதிவே இந்த வெற்றிக்குக் காரணம் என பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், பிரசாந்த் கிஷோருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) வாக்குகள் கைமாறியதே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் என பா.ஜ.க தெரிவித்துள்ளது.

அதே வேளையில், ஆர்.ஜே.டி எம்.பி மிசா பாரதி, பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றியை 'பா.ஜ.கவின் வெற்றி' என வர்ணித்துள்ளார்.

தனது தோல்விக்கு பா.ஜ.க என்னென்ன காரணங்களைக் கூறியது?

பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் பா.ஜ.க வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் பா.ஜ.க வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவுக்காகப் பிரசாரம் செய்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஆர்.ஜே.டி கட்சியின் ஆதரவு தளம் கணிசமாக மாறிவிட்டதாக பா.ஜ.க கூறுகிறது.

எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்ட பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, "2025ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 41.1% வாக்குப்பதிவு பதிவானது, அதில் பாஜக 63.25% வாக்குகளையும், ஆர்.ஜே.டி 29.83% வாக்குகளையும் பெற்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஆனால் இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் 8% குறைந்து 33.3% ஆனது. இதில் பா.ஜ.க 34.4% வாக்குகளையும், ஆர்.ஜே.டி 10.95% வாக்குகளையும் பெற்றன, அதே நேரத்தில் ஜன் சுராஜ் 49.23% வாக்குகளைப் பெற்றது" என்றார்.

"2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பா.ஜ.க தனது வாக்கு வங்கியில் 54 சதவிகிதத்துக்கும் அதிகமானவற்றைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது, அதே சமயம் ஆர்.ஜே.டி தனது முந்தைய வாக்கு வங்கியில் 37 சதவிகிதத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

பா.ஜ.கவின் வாக்கு 45.6% சரிந்தது, அதே நேரத்தில் ஆர்.ஜே.டியின் வாக்கு 63.3% என்ற மிகப்பெரிய அளவில் சரிந்தது. அதாவது, பா.ஜ.க-வை விட ஆர்.ஜே.டியின் ஆதரவு தளம் மிக வேகமாகச் சரிந்துள்ளது என்பது தான் இதன் பொருள்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், "ஆர்.ஜே.டி-யின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரும்பகுதி ஜன் சுராஜ் பக்கம் திரும்பியது. தேர்தல் பிரசாரத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்ளாததும் இதில் ஒரு பங்கு வகித்தது" என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க ஆதரவாளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லாததே குறைந்த வாக்குப்பதிவுக்குக் காரணம் என்று அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.ஜே.டி-க்கு எச்சரிக்கையா?

ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளில் பேரணி நடத்தினார்.

பாங்கிபூர் தேர்தல் முடிவை ஆர்.ஜே.டி-க்கான ஒரு எச்சரிக்கை என்று அமித் மால்வியா விவரித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், "பாங்கிபூரில் நடந்தது ஆர்.ஜே.டி-க்கு ஒரு எச்சரிக்கையாகும்.

பா.ஜ.க-வை தோற்கடிக்கும் முயற்சியில் அதன் வாக்குகள் ஜன் சுராஜ் கட்சிக்கு மாறியிருந்தால், இத்தகைய உத்தி முதன்மை எதிரியை விட, தன் அரசியல் களத்தை இழக்கும் கட்சியையே அதிகம் பலவீனப்படுத்தும் என்பதை வரலாறு காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை உதாரணமாக மேற்கோள் காட்டி அமித் மால்வியா கூறுகையில், "மேற்கு வங்கத்தில், இடதுசாரிகளைத் தோற்கடிப்பதற்காக 2011-ஆம் ஆண்டில், திரிணாமூல் காங்கிரஸுக்கு காங்கிரஸ் தனது அரசியல் இடத்தை விட்டுக்கொடுத்தது.

இதன் விளைவாகத் திரிணாமூல் வலுப்பெற்றது, காங்கிரஸ் ஓரங்கட்டப்பட்டது.

டெல்லியிலும் காங்கிரஸ் இதே தவறை மீண்டும் செய்தது.

பா.ஜ.க-வை தடுப்பது என்ற பெயரில், ஆம் ஆத்மி கட்சிக்கு அது இடம் கொடுத்தது, இறுதியில் அதன் வாக்கு சதவிகிதம் சுமார் 2% ஆகக் குறைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகளான ரோஹிணி ஆச்சார்யா, பாங்கிபூர் வெற்றியை "பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வெற்றி மற்றும் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெற்றி" என்று வர்ணித்துள்ளார்.

வெற்றி பெற்றவருக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்புமிக்க பதவிக்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

"தொடர்ந்து போராடுபவர்களுக்கும், மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களுக்கும், தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் மதித்து அவர்களுடன் தொடர்பும் உரையாடலும் வைத்துள்ளவர்களுக்கும் வெற்றி நிச்சயம் என்பதை பாங்கிபூர் இடைத்தேர்தல் முடிவு மீண்டும் நிரூபித்துள்ளது" என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான 'உயர் சாதியினர்' வசிக்கின்றனர், மேலும் பா.ஜ.க-வின் நிதின் நபின் தொடர்ந்து நான்கு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றாலும், இங்கு அடைந்த தோல்வி பாஜகவுக்கு ஒரு எச்சரிக்கை மணி ஆகும்.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, "அரசியல் கட்சிகளிடம் உள்ள சாதி மற்றும் சமூகம் சார்ந்த மதிப்பீடுகளின்படி, பாங்கிபூர் 14% காயஸ்தா, 8% பூமிஹார், 8% பிராமணர், 7% ராஜ்புத், 5% குர்மி, 3% குஷ்வாஹா, 12% இஸ்லாமியர் , 9% கஹார் (மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம்), 9% பனியா மற்றும் 9% பட்டியலின சமூகத்தினர் உள்ளனர்."

"இவை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மதிப்பீடுகள் மட்டுமே என்றாலும், பாங்கிபூரில் 'உயர் சாதியினர்' என அழைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 37% வரை இருக்கலாம் என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.

பிஹாரில் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கொண்ட பனியா சமூகம் இதில் சேர்க்கப்படவில்லை."

இந்த கணக்கீடே பா.ஜ.க-வின் தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

'இது பா.ஜ.க வின் வெற்றி' எனக் கூறிய மிசா பாரதி

ஆர்.ஜே.டி எம்.பி. மிசா பார்தி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆர்.ஜே.டி எம்.பி. மிசா பாரதி, பா.ஜ.க-வின் தேர்தல் வியூகத்தைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுபுறம், பாங்கிபூரில் பிரசாந்த் கிஷோரின் வெற்றியை பாஜகவின் வெற்றி என்று ஆர்.ஜே.டி விவரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, ஆர்.ஜே.டி எம்பி மிசா பாரதி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் கூறுகையில், "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது பா.ஜ.க வேட்பாளரின் தோல்வி, ஆனால் அங்கு பிரசாந்த் கிஷோர் வெற்றி பெறுகிறார் என்றால், அது பா.ஜ.கவின் வெற்றிதான்.

அங்கு வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? பிரசாந்த் கிஷோர் மக்களுக்கு சாத்தியமில்லாத பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். எந்தவொரு கட்சியின் எம்.பி அல்லது எம்.எல்.ஏ-க்களாலும் இதையெல்லாம் செய்வது மிகவும் கடினம்" என்றார்.

"இந்தப் பகுதி பா.ஜ.க-வின் பலமான கோட்டையாகும், அங்கு கடந்த 35-40 ஆண்டுகளில் எந்தப் பணியும் செய்யப்படவில்லை. பாட்னாவில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்போம், அரசுப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றெல்லாம் அவர்கள் சொல்கிறார்கள்... பிரசாந்த் கிஷோர் தான் பா.ஜ.க-வின் உண்மையான வேட்பாளர் என்ற உண்மை மக்களுக்குத் தெரியவில்லை. மக்கள் இதைப் புரிந்துகொள்ள சிறிது காலம் எடுக்கும், ஆனால் வெற்றிக்கு பிறகு இது தெரியவரும்" என்றும் அவர் கூறினார்.

பாங்கிபூரில் தனது வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் இரண்டு முக்கியக் காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது, பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கட்சிகள் மீது அதிருப்தி அடைந்த ஆதரவாளர்களின் ஆதரவு.

இரண்டாவது, ஜென் ஸி போராட்டங்களின் தாக்கம்.

இந்தத் தேர்தல் பா.ஜ.க-வுக்கான ஒரு செய்தியா?

பிகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பிரசாந்த் கிஷோர் பிகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரியை குறிவைத்துப் பேசியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பிரசாந்த் கிஷோர் கூறிய மிகவும் முக்கியமான விஷயம், 'இந்தத் தேர்தல் பா.ஜ.க-வுக்கான ஒரு செய்தி' என்பதாகும்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தத் தேர்தல் எம்.எல்.ஏ-க்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியது மட்டுமல்ல, மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலைமை மேம்படும் வகையில் ஒரு நல்லவரை பிகாரின் முதலமைச்சராக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைமைக்குச் செய்தி அனுப்புவது பற்றியது.

மக்கள் கொடுத்துள்ள செய்தி இது தான்... பிகாருக்கு ஒரு நல்ல தலைமை கிடைக்க வேண்டும் என்பதே மிக முக்கியமானது. இங்கிருந்து மக்கள் புலம்பெயர்வது தடுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

பாங்கிபூரில் பா.ஜ.க வேட்பாளரின் தோல்விக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

முதலாவது, கடைசி நேரத்தில் வேட்பாளரை மாற்றியது.

இரண்டாவது, குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி முதலமைச்சராக நியமிக்கப்பட்டதால் 'உயர் சாதியினர்' மத்தியில் நிலவிய அதிருப்தி.

கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான யு.ஜி.சி விதிகள் (தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது) மற்றும் நீட் வினாத்தாள் கசிவு ஆகிய விவகாரங்களிலும் உயர் சாதியினர் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இருப்பினும், வினாத்தாள் கசிவுக்கு எதிராக இளைஞர்கள் சமீபத்தில் நடத்திய போராட்டங்களும் இந்த முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, "சமீபத்திய ஜென் ஸி போராட்டங்களில் பெரும்பான்மையாக இந்துக்களும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உயர் சாதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் இளைஞர்களும் பங்கேற்றனர். இதுவரை பா.ஜ.க தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட பிகாரின் சாதிய கணக்குகளை, கலைக்கும் திறன் இப்போராட்டங்களுக்கு இருப்பதை இது காட்டுகிறது."

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிகார் அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் லவ் குமார் மிஸ்ரா, பிபிசி செய்தியாளர் சந்தன் ஜாஜ்வாரேவிடம் கூறுகையில், "கடந்த தேர்தலில், ஒட்டுமொத்த பிகாரிலும் ஆர்.ஜே.டி மூன்றாவது இடத்தில் தான் இருந்தது.

243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆர்.ஜே.டி-க்கு 25 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். கடந்த முறை பாங்கிபூரில் அது இரண்டாம் இடத்தில் இருந்தது, ஆனால் இந்த முறை அது டெபாசிட் இழந்துள்ளது" என்று தெரிவித்தார்.

"ஆனால் இந்த முடிவு ஆர்.ஜே.டி-யை விட பாஜ.க.வுக்குத்தான் பெரும் பின்னடைவாகும். ஜனசங்கத்தைச் சேர்ந்த தாக்கூர் பிரசாத் 1977 மற்றும் 1987-ஆம் ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தாக்கூர் பிரசாத், தற்போதைய பா.ஜ.க தலைவர் ரவிசங்கர் பிரசாத்தின் தந்தை.

அதற்குப் பிறகு, 1995 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதி பா.ஜ.க-வின் வசமே இருந்து வருகிறது.

மேலும் இது டெல்லியின் கனாட் பிளேஸ் போன்ற தூய்மையான நகர்ப்புறப் பகுதியாகும். இது அரசுச் செயலாளர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் நிறைந்த அதிகாரிகள் வாழும் நகரமாகும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ரவிசங்கர் பிரசாத் வாக்களித்த வாக்குச்சாவடியில் பிரசாந்த் கிஷோருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது தான் மிகப்பெரிய ஆச்சரியம். நிதின் நபின் வாக்காளராக இருக்கும் வாக்குச்சாவடியிலும் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருந்தார். இந்த கோணத்தில் பார்த்தால், இது பா.ஜ.க-வுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகும்" என்றும் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு