அவைக்குறிப்பு என்பது என்ன? அதிலிருந்து நீக்கியவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் என்னவாகும்?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதன் காணொளிகள் சமூக ஊடகங்கள் முழுவதும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

சட்டப்பேரவை நிகழ்வுகள் ரீல்ஸ்களாகப் பகிரப்படுவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியது விவாதப் பொருளானது.

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுக்கள் கூட ரீல்ஸ்களாகப் பகிரப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் இந்த விவகாரம் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக செல்லக்கூடிய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் அவை பரவுவதைக் கட்டுப்படுத்துவது சவாலான ஒன்று என்றும் அதனை பகிரும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறுகிறார், சைபர் சட்ட வழக்கறிஞர் என்.கார்த்திகேயன்.

சட்டப்பேரவை விதிகள் வலுவாக இருக்கிறது எனக் கூறும் முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் பூபதி அவை சமீப ஆண்டுகளில் முழு வீச்சில் அமல்படுத்தப்படவில்லை என்கிறார்.

ஆனால், சமூக ஊடகங்களையும் கண்காணித்து விதிகளை அமல்படுத்துவதற்கான கட்டமைப்பு அரசாங்கத்திடம் இருப்பதாகக் கூறுகிறார், முன்னாள் பேரவைத் தலைவரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார்.

கேள்வியும் பதிலும்

சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பி பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுக ஆட்சிக் காலத்தில் கேள்வி நேரத்துக்கு ஒவ்வொரு நாளும் 1.5 மணி, 10 கேள்விகள் எடுக்கப்பட்டு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது நேரலை செய்யப்பட்டது. இப்போது அனைத்து நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படுகிறது. அதனால் என்னென்ன பிரச்னைகள் வருகிறது என்பதை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்." என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ரீல்ஸாக மாற்றப்பட்டு போய்க் கொண்டிருக்கிறது." என்றார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரபாகர், "ஏற்கெனவே திமுக சார்பில் ஒரு ஊடகம் இங்கு நீக்கப்பட்டதை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதை உரிமை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். அப்படி நீக்கப்பட்ட பிரச்னைகள் குறித்து எந்தெந்த ஊடகங்களில் வந்திருக்கிறது என்பதை கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். அவர்கள் மீது உரிமைக் குழுவுக்கு அனுப்பி நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறினார்.

இந்தச் சூழலில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் பகுதிகள் ஊடகங்களால் மட்டுமல்லாது தனிநபர்களாலும் பகிரப்படுவதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவைக்குறிப்பு மற்றும் உரிமைக் குழு என்றால் என்ன?

'ஒரு வார சிறை தண்டனை விதிக்கப்படலாம்'

அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களை எந்த ஊடகத்திலும் பிரசுரிக்கவோ ஒளிபரப்பவோ கூடாது என்ற விதி, சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்கிறார் சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் பூபதி.

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மற்றும் உரிமைக் குழுவின் நடைமுறை குறித்து அவர் மேலும் விவரித்தார்.

"சட்டப்பேரவையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகள், பேச்சுக்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்படும். அது தான் அவைக் குறிப்பு என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் இருந்தால் பேரவைத் தலைவரே அதனை நீக்குவதாக அறிவிப்பார். இல்லையென்றால் உறுப்பினர்கள் அவரின் கவனத்துக்கு கொண்டு வருவார்கள். ஆனால் இறுதி முடிவு பேரவைத் தலைவருடையது."

"உரிமைக் குழுவுக்கு துணை பேரவைத் தலைவர் தான் தலைவராக இருப்பார். ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். பேரவைத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வரும் விஷயங்களை மதிப்பிட்டு அவற்றை உரிமைக் குழுவுக்கு அனுப்பலாமா அல்லது வேண்டாமா என்பதை பேரவைத் தலைவர் முடிவு செய்வார்." என்றார்.

மேலும் பேசிய அவர், "அந்த புகார்கள் மீது உரிமைக் குழு தான் நடவடிக்கை எடுக்கும். உரிமைக் குழுவிடம் அனைத்து விதமான புகார்களும் செல்லும். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுபவை பிரசுரமாவது அதில் ஒன்று மட்டுமே. கடந்த காலத்தில் சட்டப்பேரவைக்குள் கைப்பேசி பயன்படுத்தி காணொளி எடுத்தது, குட்கா பொருட்களைக் காண்பித்தது உள்பட பல புகார்கள் சென்றுள்ளன." என்றார்.

ஆனால், புகாரின் அடிப்படையில் மட்டுமே உரிமைக் குழு நடவடிக்கை எடுக்கும் என்று கூறும் பூபதி, அந்தக் குழுவால் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "நேரலை என்பது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது தான் இது போன்ற சிக்கல்கள் எழுந்துள்ளன. கடந்த காலங்களில் உரிமைக் குழு நடவடிக்கை எடுத்த சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. ஆனால், சமீப ஆண்டுகளில் அது குறைந்துவிட்டது. இது போன்ற குற்றச்சாட்டுகளில் கடும் எச்சரிக்கை என்பது தொடங்கி ஒரு வார சிறை தண்டனை வரை விதிக்கக்கூடிய அதிகாரம் உரிமைக் குழுவுக்கு உள்ளது." என்றார்.

'தெளிவற்ற நிலை உள்ளது'

சட்டப்பேரவை விதிகள் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் என்றாலும் ஆனால் அவற்றை வைத்து சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே என்கிறார், வழக்கறிஞர் கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகள் தான் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் அருவருப்பான உள்ளடக்கம், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பகிர்ந்தால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியும்.

இந்தக் காணொளிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது அல்லது பரவிய காணொளிகளை எவ்வாறு நீக்குவது என்பதில் தெளிவில்லை. சட்டப்பேரவைக் காணொளிகளைப் பகிர்ந்து சமூக ஊடக விதிகளுக்கு எதிரானது இல்லை. சமூக ஊடக விதிகளை மீறினால் மட்டுமே நீக்க முடியும். ஆனால் பேரவை விதிகளை இங்கு எவ்வாறு அமல்படுத்துவது என்பதை ஆராய வேண்டும்." என்றார்.

இதனை சமூக ஊடகங்களிலும் அமல்படுத்த வேண்டுமென்றால் அதற்குத் தனி அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"இதிலுமே தனிநபர் தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு காணொளியைப் பகிர்வது என்பது வேறு ஊடக நிறுவனங்கள் பகிர்வது என்பது வேறு. இதனைக் கையாள்வதில் தெளிவற்ற நிலை உள்ளது," என்றும் அவர் கூறினார்.

'குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்'

இந்த நிலையில் பேரவைத் தலைவருக்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் இருப்பதாகக் கூறுகிறார், அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் பேரவைத் தலைவருமான ஜெயக்குமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பேரவை விதிகளின்படி அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துக்களைப் பகிர்வது மீது நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அது தனிநபர்களாக இருந்தாலும் சரி, ஊடக நிறுவனங்களாக இருந்தாலும் சரி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பேரவை உறுப்பினர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும். வேறு யாரும் நேரடியாக புகார் அளிக்க முடியாது. அந்த புகார்களின் மீது தகுதியின் அடிப்படையில் உரிமைக் குழுவுக்கு அனுப்பலாமா என்பதை பேரவைத் தலைவர் முடிவு செய்யலாம். ஊடகங்களுக்கான விதிகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்." என்றார்.

அதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் அவர், "புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை முடியும் என்றால் யாரும் தாமாக முன்வந்து புகார் அளிக்க மாட்டார்கள். சட்டப்பேரவை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து தினசரி கண்காணிக்க வேண்டும். விதிகள் தெளிவாக உள்ளன, அதன் அமலாக்கத்தில் தான் இடைவெளிகள் இருக்கின்றன. நடவடிக்கை எடுக்காதவரை பேரவைத் தலைவரின் அறிவிப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்கும்." என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு