You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகின் வண்ணமயமான 8 கட்டடங்கள் பட்டியலில் உள்ள தமிழக கோயில் எது தெரியுமா?
- எழுதியவர், கிளேர் டௌடி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கற்பனைத்திறன் மிக்க கட்டடக் கலைஞர்கள் நீண்ட காலமாகவே தங்களது படைப்புகளை மேலும் சிறப்பாக்க வண்ணங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பிரமிக்க வைக்கும் பழமையான கோயில் முதல் வண்ணமயமான நூலகம் வரை, வண்ணம் கட்டடக் கலையின் முக்கிய அங்கமாக விளங்கும் எட்டு கட்டடங்கள் இவை.
மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வண்ணங்களைப் பயன்படுத்தத் தொடங்கி பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பகால நியாண்டர்தால் மனிதர்கள் பூமியிலிருந்து கிடைத்த இயற்கை நிறமிகளைப் பயன்படுத்தி குகைச் சுவர்களை அலங்கரித்தனர். அதைத் தொடர்ந்து பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கத்தின் பல வண்ணக் கோயில்களும், பண்டைய ரோமின் பல வண்ணப் பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்களும் தோன்றின. அந்தக் காலகட்டங்களில், எங்கு பார்த்தாலும் வண்ணத்துக்கு முக்கியத்துவம் இருந்தது.
இடைக்கால தேவாலயங்களின் வண்ணக் கண்ணாடி வேலைப்பாடுகளிலும், இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட மேற்கூரைகள் மற்றும் சுவர்களிலும் வண்ணம் முக்கியப் பங்கு வகித்தது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 21ஆம் நூற்றாண்டின் பிரகாசமான, பளபளப்பான கட்டடங்களிலும் வண்ணம் முக்கியத்துவம் பெற்றது. இதற்கு ஓர் உதாரணம், டேனியல் புரென் வடிவமைத்த மலாகாவில் உள்ள பொம்பிடூ (Pompidou) மையத்தின் கனசதுர வடிவ நுழைவாயில். இது வண்ணமும் ஒளியும் இணைந்த ஓர் இசைக்கோவை போன்றது.
"ஒரு கட்டடத்தை வேறு எந்த வகையிலும் அடைய முடியாத அளவுக்கு ஆழமான தாக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் உயரத்துக்கு கொண்டு செல்வதில் வண்ணமே முக்கியக் கூறு" என்கிறார்கள் வடிவமைப்பாளர் ஆடம் நதானியல் ஃபர்மன் மற்றும் எழுத்தாளர் கேட் மசாடே. இவர்கள் எழுதிய 'வண்ணக் கட்டடக்கலை – வடிவமைப்பில் வண்ணக் கலைத்திறன்' (Chromatic Architecture – the Craft of Colour in Design) என்ற நூலில் இதைக் குறிப்பிடுகின்றனர்.
அவர்களின் புதிய நூலில் இடம்பெற்றுள்ள வண்ணமயமான எட்டு கட்டடங்கள் இவை. வண்ணத்தை அதிக துடிப்புடனும் துணிச்சலுடனும் பயன்படுத்த கட்டடக் கலைஞர்களுக்கு இந்தக் கட்டடங்கள் அழைப்பு விடுக்கின்றன. அதேபோல், வண்ணம் எத்தகைய சாத்தியங்களை உருவாக்க முடியும் என்பதையும் நாம் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்.
1. ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில், தமிழ்நாடு, இந்தியா
இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாடு, வண்ணங்களைப் பயன்படுத்தும் பழமையான கட்டடக் கலை மரபுக்காக அறியப்படுகிறது. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் கி.பி. 1ஆம் நூற்றாண்டில் தொடங்கி, பல்வேறு வம்சங்களின் ஆட்சிக் காலங்களைக் கடந்து 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தொடர்ந்தன. இதன் விளைவாக 150 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மத வளாகங்களில் ஒன்றாக இது உருவானது.
21 கோபுரங்களால் சூழப்பட்டுள்ள இந்தக் கோயிலின் முப்பரிமாணச் சிற்பங்கள் பிரகாசமான நிறமிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
"இந்தத் தலம் ஆன்மிக வாழ்வின் அளவற்ற செழுமையால் நிரம்பியுள்ளது. அழகான நிறமிகளின் பயன்பாடு இதை நேரடியாக வெளிப்படுத்துகிறது. அவை பார்வையாளர்களையும் வழிபடுவோரையும் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றி, சிந்தனை மற்றும் வியப்பின் உலகத்துக்குள் அழைத்துச் செல்கின்றன" என்கிறார் ஃபர்மன்.
2. பலாவ் டி லா மியூசிகா கட்டலானா, பார்சிலோனா, ஸ்பெயின்
1908ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இசை அரங்கின் தோற்றம், வேகமாக தொழில்மயமாகி வந்த, செல்வச் செழிப்பும் தனித்துவமான கலாசாரமும் கொண்ட ஸ்பெயினின் கேட்டலோனியா (Catalonia) பிராந்தியத்தின் அடையாளமாக மாறியது.
லூயிஸ் டொமேனெக் இ மொன்டானர் வடிவமைத்த இந்தக் கட்டடத்தில் ஆர்ட் நவீ, ரோமானெஸ்க் மற்றும் கோதிக் மறுமலர்ச்சி ஆகியவற்றின் தாக்கங்களுடன், மூரிஷ் வடிவமைப்பு மற்றும் வலென்சிய மரபுகளும் கலந்துள்ளன.
ஃபர்மனின் பார்வையில், இந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு அம்சமும் குறியீடுகளால் நிறைந்துள்ளது. இது ஒரு தேவதைக் கதைகளில் வரும் மாயாஜாலக் காட்டுக்குள் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
"ஒவ்வொரு கல்லும், கைப்பிடித் தூணும், வளைவுக் கல்லும், தூணும், தூணின் மேற்பகுதியும், விளக்குப் பொருத்தும் இடமும், கைப்பிடியும் வண்ணங்களாலும் அலங்கார வடிவங்களாலும் நிரம்பியுள்ளன. அவை மாயாஜாலம் போல உயிர்பெறுகின்றன" என்கிறார் அவர்.
3. கார்டியன் கட்டடம், டெட்ராய்ட், மிச்சிகன், அமெரிக்கா
1929ஆம் ஆண்டு விர்ட் சி. ரோலண்ட் வடிவமைத்த இந்த அலுவலகக் கட்டடத்தை உள்ளூர் மக்கள் "நிதி பேராலயம்" (Cathedral of Finance) என்று அழைக்கின்றனர். உலகின் முக்கியமான ஆர்ட் டெகோ கட்டடக் கலை பாணியிலான வானளாவிய கட்டடங்களில் இதுவும் ஒன்று.
"20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் இருந்த கைவினைத் திறன்களின் பரந்த அளவை வெளிப்படுத்துவதற்காக ரோலண்ட் இங்கு வண்ணத்தைப் பயன்படுத்தினார்" என்கிறார் மசாடே.
கட்டடத்தின் வெளிப்புறம் ஆரஞ்சு நிறச் சாயல் கொண்ட சுமார் 20 லட்சம் செங்கற்கள் மற்றும் டெரகோட்டா ஓடுகளால் மூடப்பட்டுள்ளது. உள்ளே, பிரதான முகப்புக் கூடத்தில் மூன்று மாடி உயரமுள்ள வளைந்த மேற்கூரை உள்ளது. அது முதன்மை நிறங்களில் அமைந்த ஓடுகளின் "போர்வை" போன்ற வடிவமைப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
"அந்தக் காலகட்டத்தில் டெட்ராய்ட்டின் வணிக வெற்றியை இந்தக் கட்டடம் துணிச்சலுடன் வெளிப்படுத்தியது. இன்றும் அந்த வெற்றியை உற்சாகமாக நினைவூட்டுகிறது" என்கிறார் அவர்.
4. டி பைன்கார்ஃப் பல்பொருள் அங்காடி, ஐன்ட்ஹோவன், நெதர்லாந்து
1969ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கட்டடத்துக்காக, விமான ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தெரிந்த பசுமையான, பல்வேறு நிறங்களைக் கொண்ட டச்சு விவசாய நிலங்களின் கட்டமைப்பிலிருந்து இத்தாலிய கட்டடக் கலைஞர், வடிவமைப்பாளர் மற்றும் கலைஞர் ஜியோ பொன்டி உத்வேகம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பெரிய ஜன்னல்கள் இல்லாத இந்தக் கட்டடத்தை அழகாக உருவாக்குவது பல கட்டடக் கலைஞர்களுக்கு சவாலாக இருந்திருக்கும். ஆனால், லெ கொர்பூசியே மற்றும் மிஸ் வான் டெர் ரோஹே ஆகியோருக்கு இணையாக நவீனத்துவக் கட்டடக் கலையில் பங்களித்த பொன்டிக்கு அது சவாலாக இருக்கவில்லை.
அவர் இந்தக் கட்டடத்தை "பச்சை மரகத நிறத்தில் மின்னும் பிரமாண்டமான அதிசயக் களமாக" மாற்றினார் என்கிறார் ஃபர்மன்.
அதன் மூலம், அந்தக் காலகட்டத்தின் வழக்கமான வெற்று கான்கிரீட் முகப்பை, நகரத்துக்கான நவீனக் கலையின் தலைசிறந்த படைப்பாக அவர் மாற்றினார்.
5. ரிவர்சிபிள் டெஸ்டினி லாஃப்ட்ஸ், டோக்கியோ, ஜப்பான்
2005ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வாடகைக் குடியிருப்புத் திட்டம், அமெரிக்க மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆதரவாளரும் எழுத்தாளருமான ஹெலன் கெல்லரின் நினைவாக வடிவமைக்கப்பட்டது.
ஷுசாகு அரகவா மற்றும் மேட்லின் ஜின்ஸ் வடிவமைத்த இந்த ஒன்பது குடியிருப்புகள், பிரகாசமான நிறங்களைக் கொண்ட உருளைகள், கனசதுரங்கள், கோளங்கள் மற்றும் நவீன கட்டடக் கூறுகள் இணைந்த எதிர்கால உலகைக் காட்சிப்படுத்துகின்றன.
ஒவ்வொரு மேற்பரப்பும், ஒவ்வொரு பொருத்தப்பட்ட அம்சமும் தீவிரமான வண்ணங்களால் நிறைந்திருக்கும் வகையில், முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைச் சூழலை உருவாக்குகின்றன.
அரகவாவும் கவிஞரான ஜின்ஸும், குடியிருப்பவர்களுக்கு ஒருவித சமநிலையின்மையை ஏற்படுத்தும் வகையிலேயே வண்ணங்களைத் தேர்ந்தெடுத்தனர்.
"சுற்றுச்சூழல் மக்களை அவர்களின் சோம்பலான, வீட்டுக்குள் முடங்கிய வாழ்க்கை முறையிலிருந்து வெளியே வரத் தூண்டினால், அவர்கள் நீண்ட காலம் வாழ முடியும் என்று அவர்கள் நம்பினர்" என்கிறார் மசாடே.
வளைவுகளைக் கொண்ட தரைகளையும் கோள வடிவ அறைகளையும் இணைத்து, தீவிரமான வண்ணங்களால் அவற்றை அலங்கரித்தனர். இது குடியிருப்பவர்களின் உணர்வுகளைத் தீவிரமாகத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டது என்கிறார் அவர்.
6. மைஷிமா கழிவு எரியூட்டும் ஆலை, ஒசாகா, ஜப்பான்
ஆஸ்திரிய காட்சிக் கலைஞரும் கட்டடக் கலைஞருமான ஃப்ரீடென்ஸ்ரைக் ஹுண்டர்ட்வாசர் 2000ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வடிவமைத்த இந்தக் கட்டடம் அதற்கு அடுத்த ஆண்டு நிறைவடைந்தது.
நவீனத்துவக் கட்டடக் கலையின் தட்டையான, ஒரே மாதிரியான வடிவங்களை அவர் எதிர்த்தார். கட்டடக்கலை என்பது குறிப்பிட்ட செயல்பாடுகளை நிறைவேற்றும் இயந்திரமாக இல்லாமல், தொடர்ந்து பரிணமிக்கும் ஓர் உயிரினமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வீடுகளுக்கு மட்டுமல்ல, தொழிற்சாலைக் கட்டடங்களுக்கும் இதே கொள்கையை அவர் பயன்படுத்தினார்.
மைஷிமா ஆலை, டாக்டர் சியூஸ் கதைகளில் வரும் விசித்திரமான கோட்டையைப் போலத் தோற்றமளிக்கிறது. பொழுதுபோக்குப் பூங்கா என்று பலர் இதைத் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்.
மஞ்சள் நிறத்தில் கையால் வரையப்பட்டது போன்ற கோடுகள் அதன் தாழ்வான பகுதிகளில் வழிந்தோடுவது போலத் தெரிகின்றன. நீண்டு நிற்கும் உருளை வடிவ கோபுரத்திலும் சிவப்பு நிறத்தில் இதேபோன்ற கோடுகள் காணப்படுகின்றன. இந்த வளாகத்தில் உள்ள அனைத்து கட்டமைப்புகளும், நீட்டிக்கப்பட்ட பகுதிகள் உட்பட, வண்ணத் தொகுதிகளால் அலங்கரிக்கப்பட்ட தாழ்வான, வட்டமான தூண்கள் போன்ற ஆதாரங்களின் மீது நிற்கின்றன.
"இந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. நீலப் பச்சை நிற புகைக்குழாய், கட்டம் போன்ற சுவர்கள், சூரியகாந்தி மற்றும் செந்நிறக் கோடுகளைக் கொண்ட ஒரு குப்பை எரியூட்டும் நிலையைக் காட்டிலும் புரட்சிகரமானது வேறு என்ன இருக்க முடியும்?" என்கிறார் மசாடே.
7. லெகனெஸ் மத்திய நூலகம், லெகனெஸ், ஸ்பெயின்
2019ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பொது நூலகமும் நகராட்சி ஆவணக் காப்பகமும் பிஎன் அசோசியேடோஸ் ஆர்குவிடெக்டோஸ் (BN Asociados Arquitectos) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
இந்தக் கட்டடம் அதன் உள்ளடக்கங்களுக்கான ஒரு காட்சிப் பிரதிபலிப்பாக உள்ளது. பெரிய அளவிலான மென்மையான வெளிர் நிற பீங்கான் ஓடுகள், கட்டடத்தின் வளைந்த பக்கங்களில் ஒட்டியிருக்கும். உள்ளே வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கையையும் பல்வேறு வகைகளையும் அவை உள்ளூர் மக்களுக்கு உணர்த்துகின்றன.
கலாசார அடையாளங்கள் குறைவாக இருந்த மாட்ரிட்டின் புதிய குடியிருப்புப் பகுதியில், இந்த வடிவமைப்பு நகரத்தின் முக்கிய அடையாளமாகவும் உருவெடுத்துள்ளது.
"சூரிய ஒளி இந்த அலைவடிவ பீங்கான் ஓடுகளின் மீது நகரும்போது, மென்மையான வெளிர் நிறங்களும் பளபளப்பில்லாத அதன் தன்மையும் காகிதத்தைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன" என்கிறார் மசாடே.
8. க்ராய்டன் கொலனேட், லண்டன், பிரிட்டன்
கட்டடக் கலைச் சிறப்புகள் குறைவாகக் காணப்படும் க்ராய்டனில் பாதசாரிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த 50 மீட்டர் நீளமான பகுதி, 16 பிரமாண்டமான தூண்களையும் இரண்டு பெரிய சுவர்களையும் கொண்டுள்ளது.
ஆடம் நதானியல் ஃபர்மன் வடிவமைத்த இந்த 2023ஆம் ஆண்டு கட்டமைப்பு, ஆயிரக்கணக்கான முப்பரிமாணக் கையால் தயாரிக்கப்பட்ட பீங்கான் ஓடுகளால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓடும் அடர்த்தியான, செழுமையான, ஒளி ஊடுருவும் பூச்சால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கீழ்பகுதி ஆழமான கடல்நீல நிறத்தில் இருந்து, மேலே செல்லச் செல்ல கிரீமி வெள்ளை நிறமாக மாறுகிறது.
உலகின் பல்வேறு காலகட்டங்களிலும் இடங்களிலும் காணப்படும் வண்ணமயமான கட்டடக் கலையின் சிறப்பம்சங்களை கிழக்கு க்ராய்டன் ரயில் நிலையத்துக்குக் கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
"வண்ணம், அந்த வழியாகச் செல்வோரை செழுமையான, உணர்வுகளைத் தூண்டும் சூழலுக்குள் ஆழ்த்துகிறது. பண்டைய எகிப்து முதல் போர்ச்சுகல், துருக்கி, சஃபாவித் இரான், பாபிலோன் என உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நினைவுச் சின்னக் கட்டடங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கட்டடப் பீங்கான் வேலைப்பாடுகளை இது நினைவுபடுத்துகிறது" என்கிறார் இதன் வடிவமைப்பாளர் ஃபர்மன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு