செல்போன், சிம் கார்டை விட்டு ரயிலேறி உத்தரபிரதேசம் சென்றவரை 5 மாநிலங்களில் தேடி கண்டுபிடித்தது எப்படி?

    • எழுதியவர், கரிகிபாட்டி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆந்திராவை உலுக்கிய பித்தாபுரம் பஞ்சாயத்து ராஜ் உதவி பொறியாளர் நூகராஜு குடும்பத்தின் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷேக் சாதிக் கானை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளதாக காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 24, திங்கள்கிழமை காக்கிநாடாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், உதவி பொறியாளர் நூகராஜு எழுதிய மரண வாக்குமூலம், அவரது மகள் சௌஜன்யா எழுதிய கடிதம் மற்றும் சௌஜன்யாவின் உறவினர் பாஸ்கர் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சாதிக் கைது செய்யப்பட்டதாக விளக்கினார்.

சௌஜன்யாவின் கணவர் ஜகதீஷ் ரெட்டியின் மரணத்திற்கான காரணங்கள், மதம் மாறும்படி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தம், மிரட்டல் மூலம் கட்டுப்படுத்தல் (பிளாக்மெயில்), உயிரிழந்தவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுத்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இன்னும் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

உண்மையில் என்ன நடந்தது?

கிழக்கு கோதாவரி மாவட்டம் பித்தாபுரம் பஞ்சாயத்து ராஜில் உதவி பொறியாளராக பணியாற்றிய கொல்லிபூடி நூகராஜு, அவரது மனைவி மீனா, மகள் சௌஜன்யா மற்றும் பேரன் ரியாஞ்ஷ் கார்த்திகேய ரெட்டி ஆகியோர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ராஜமகேந்திரவரம் சாலை-இரயில் பாலம் அருகே தற்கொலைக்கு முயன்றனர்.

(தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், இந்திய அரசின் 'ஜீவன் சாத்தி' உதவி எண்ணான 18002333330-ஐ தொடர்புகொள்ளலாம்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகமும் 13 மொழிகளில் 18005990019 என்ற உதவி எண்ணை நடத்துகிறது.

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) உதவி எண்: 08026995000.)

10 வயதான கார்த்திகேய ரெட்டிக்கு நீந்தத் தெரிந்திருந்ததுடன் அருகிலிருந்த மீனவர்கள் அவரை காப்பாற்றியதால் அவர் உயிருடன் தப்பினார்.

மற்ற மூவரும் காணாமல் போன நிலையில், ஆகஸ்ட் 19 அன்று நூகராஜுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மற்ற இருவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக இந்த வழக்கை விசாரித்து வரும் ராஜமகேந்திரவரம் டூ டவுன் வட்ட ஆய்வாளர் கணேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

நூகராஜு, ஆகஸ்ட் 16 அன்று இரவு தற்கொலை முயற்சிக்கு முன் 11.27 மணிக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தை தனது சக அதிகாரிகள் இருந்த வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதாகவும் அவர் கூறினார்.

காக்கிநாடா மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருந்த அந்தக் கடிதத்தில், காக்கிநாடா ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சாதிக் கானின் தொல்லைகளால்தான் தங்களது குடும்பம் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக நூகராஜு குறிப்பிட்டிருந்தார்.

தனது மருமகன் இந்த ஆண்டு ஜூலை 2 அன்று இறந்துவிட்டதாகவும், அதன்பிறகு தனது மகளை சாதிக் கான் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரது செயல்களால் தன் மகளுக்கும் பேரனுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் மனவேதனை அடைந்து தாம் இவ்வாறு முடிவு செய்ததாகவும் அந்தக் கடிதத்தில் நூகராஜு எழுதியிருந்ததாக ஆய்வாளர் கணேஷ் தெரிவித்தார்.

வெளிச்சத்துக்கு வந்த சௌஜன்யாவின் கடிதம்

ஆகஸ்ட் 16 அன்று நூகராஜுவின் கடிதம் வெளிவந்த நிலையில், அதற்கு மறுநாள் 17ஆம் தேதி அவரது மகள் சௌஜன்யா எழுதிய கடிதம், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் கிடைத்ததாகவும், அதில் தங்கள் நிலைக்குக் காரணம் சாதிக் கான்தான் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சௌஜன்யாவின் உறவினர் பாஸ்கர் ரெட்டி காக்கிநாடா அருகிலுள்ள சர்பவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சௌஜன்யாவின் கணவர் ஜகதீஷ்வர் ரெட்டி இந்த ஆண்டு ஜூலை 2 அன்று இறந்ததாகவும், அவரும் சாதிக்கின் தொல்லைகளால்தான் உயிரிழந்தார் என்று சௌஜன்யாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பிபிசியுடன் பேசிய பாஸ்கர் ரெட்டி, தனது மகன் ஜகதீஷ்வர் ரெட்டியின் மரணத்திலும் சாதிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

"இந்த ஆண்டு ஜூலை 2 அன்று என் மகன் இறந்தான். அப்போது அது இயல்பான மரணம் என்று நினைத்தோம். ஆனால் என் மருமகள் சௌஜன்யா, பேரன், சம்பந்தி நூகராஜு மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்கொலைக்கு முயன்றபோது, பேரன் கார்த்திக் ரெட்டி மட்டும் உயிருடன் மீண்டான். பேரன் கூறிய தகவலின் அடிப்படையில், சௌஜன்யாவின் வாகனத்தில் இருந்த மூன்று உறைகளை காவல்துறையினர் முன்னிலையில் திறந்து பார்த்தோம். அதில், என் மகன் ஜகதீஷ்வர் ரெட்டிக்கு ஏதோ மருந்து கொடுத்து சாதிக் கொன்றுவிட்டதாக சௌஜன்யா தனது கடிதத்தில் எழுதியிருந்தாள்," என்று அவர் கூறினார்.

சௌஜன்யாவின் தனிப்பட்ட விஷயங்களை பயன்படுத்தி சாதிக் அவரை மிரட்டி கட்டுப்படுத்தியதாகவும், தமக்குச் சாதகமாக நடக்காவிட்டால் நூகராஜுவின் முழுக் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக தனது மகனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் பாஸ்கர் ரெட்டி கூறினார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியபோது சாதிக் ஏற்கனவே தலைமறைவாகிவிட்டதாக ஐந்து நாட்களுக்கு முன்பு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கடிதங்கள் குறித்து தாங்கள் எதுவும் கூற முடியாது என்றும், தங்களிடம் உள்ள உறுதியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் சாதிக்கை எவ்வாறு கைது செய்தார்கள்?

இந்த வழக்கில் 10 காவல் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16-ஆம் தேதி தலைமறைவான சாதிக்கை ஆகஸ்ட் 22-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட்டில் கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

"இந்த சம்பவத்திற்குப் பிறகு காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக குற்றம்சாட்டப்பட்ட சாதிக் கான் பல்வேறு முயற்சிகள் செய்தார். தான் கண்காணிக்கப்படுவதைத் தடுக்க மொபைல் போன்களை அவர் பயன்படுத்தவே இல்லை. அவரைக் கைது செய்வதற்காக 10 சிறப்பு காவல் குழுக்களை களமிறக்கினோம். ஐந்து மாநிலங்களில் தேடுதல் நடத்தினோம். இறுதியில் உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் அவரை கைது செய்தோம். அவரைப் பிடிக்க எங்கள் குழுக்கள் மிகவும் கடுமையாக உழைத்தன," என்று எஸ்.பி. பிந்து மாதவ் தெரிவித்தார்.

அவரை எவ்வாறு கைது செய்தனர் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினரான ஒரு காவல் அதிகாரி பிபிசியிடம் விளக்கினார்.

"இந்த மாதம் 16ஆம் தேதி இரவு நூகராஜு குடும்பம் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் அறிந்த சாதிக், அதே இரவு 12.45 மணியளவில் சமர்லகோட் ரயில் நிலையத்தில் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார்.

மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் அனைத்தையும் காக்கிநாடாவிலேயே விட்டுவிட்டு பயணம் செய்தார்.

ரயிலில் ஒரு நபருடன் அறிமுகமாகி, அவருடைய தொலைபேசியைப் பயன்படுத்தி தனது குடும்ப உறுப்பினருக்கு அழைத்தார். விசாரணையின் போது போலீஸார் அந்த குடும்ப உறுப்பினரின் தொலைபேசியை கண்காணித்து, எந்த எண்ணிலிருந்து சாதிக் அழைத்தார் என்பதை கண்டறிந்து, அந்த நபரை விசாரித்தனர்.

அவர், சாதிக் யார் என்று தெரியாது, ரயிலில் தான் அறிமுகமானவர் என்றும், கர்நாடகாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் அவர் இறங்கிவிட்டார் என்றும் கூறினார்.

அதன்பிறகு சாதிக் அங்கிருந்து ஷோலாப்பூருக்கு சென்று ஒரு விடுதியில் ஒரு நாள் தங்கி, பின்னர் உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்குச் சென்றார். அவரது நண்பர்கள் குறித்து காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்தியிருந்ததால், சாதிக் மீரட்டுக்குச் சென்றவுடன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழுவினர் உள்ளூர் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ஆகஸ்ட் 22ஆம் தேதி நௌசண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அவரைக் கைது செய்தனர்," என்று அந்த அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

அங்கு அவரைக் கைது செய்த பிறகு, மீரட்டிலுள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இடமாற்ற வாரண்ட் பெற்று காக்கிநாடாவுக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் காக்கிநாடா சிறப்பு மொபைல் நீதித்துறை முதல் வகுப்பு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதாகவும் சர்பவரம் வட்ட காவல் ஆய்வாளர் பிரகாஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

அதன்பின் அவரை காக்கிநாடா துணைச் சிறைக்கு மாற்றியதாகவும், வழக்கில் உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ், சாதிக்கை காவல் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெளிவுபடுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு