துருக்கியை போரில் வெல்லும் வலிமை இஸ்ரேலுக்கு உள்ளதா? மத்திய கிழக்கில் உருவாகும் புதிய சூழல்

    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இஸ்ரேல் 1948 மே 14 அன்று உருவாக்கப்பட்டது. அதிலிருந்து ஓர் ஆண்டுக்குள், 1949 மார்ச் 28 அன்று, துருக்கி அந்த நாட்டை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

இஸ்ரேலை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடு துருக்கிதான். ஆனால் கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அந்த உறவு முற்றிலும் வேறுபட்ட திசையில் நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் இரான் இடையே 12 நாட்கள் நீடித்த போர், மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை கணிசமாக மாற்றியது. அந்த மோதலுக்குப் பிறகு இஸ்ரேல் அதிக தாக்குதல் திறன் கொண்ட சக்தியாக வெளிப்பட்ட நிலையில், இரான் பல துறைகளில் பாதிப்புகளைச் சந்தித்தது.

அமெரிக்கா, இரானுடன் நீண்டகால மோதலில் சிக்கிக் கொள்ள விரும்பாதது போல் தோன்றினாலும், இஸ்ரேலுக்குள் தற்போது ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது. இரான் பலவீனமடைந்தாலும், அந்த இடத்தை துருக்கி நிரப்பக்கூடும் என்ற பேசப்படுகிறது.

ஆகஸ்ட் 18 அன்று சிரியாவின் அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலும், அதையடுத்து இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விடுத்த எச்சரிக்கைகளும், ஒரு முக்கியமான கேள்வியை மீண்டும் முன்வைத்துள்ளன.

சிரியாவில் துருக்கி மற்றும் இஸ்ரேல் நேரடி மோதல் நடத்த வாய்ப்பு அதிகரித்து வருகிறதா?

சிரியாவைச் சுற்றியுள்ள துருக்கி - இஸ்ரேல் போட்டி ஒரு தற்காலிக அரசியல் முரண்பாடு அல்ல. இரு நாடுகளும் அந்நாட்டின் எதிர்காலம் குறித்து முற்றிலும் மாறுபட்ட பார்வைகளைக் கொண்டிருப்பதால் அது கட்டமைப்பு ரீதியான மோதலாகக் கருதப்படுகிறது.

சிரியாவில் ஏன் நேரடி போட்டி?

மெர்சின் பல்கலைக்கழக சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியர் புக்க்ரா சாரி, மிடில் ஈஸ்ட் மானிட்டர் இதழில் எழுதிய கட்டுரையில், துருக்கியின் நோக்கத்தை விளக்குகிறார்:

"துருக்கி ஒன்றுப்பட்ட சிரியாவை விரும்புகிறது. தனது எல்லைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய, ஆயுதக் குழுக்களை அரச அமைப்புக்குள் இணைக்கக்கூடிய, ஐ.எஸ். மற்றும் பி.கே.கே. சார்ந்த அச்சுறுத்தல்களை அடக்கக்கூடிய, அகதிகள் திரும்பிச் செல்லும் சூழலை உருவாக்கக்கூடிய ஒருங்கிணைந்த சிரியாவை விரும்புகிறது. சிரியாவுடன் சுமார் 900 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், சிரியா மீண்டும் சிதைந்தால் அதன் மிகப்பெரிய விலையை துருக்கிதான் செலுத்த வேண்டியிருக்கும்."

அதே நேரத்தில், இஸ்ரேலின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

"தனது பாதுகாப்பை நோக்கில் கொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறைந்த ராணுவத் திறன் கொண்ட சிரியாவையே இஸ்ரேல் விரும்புகிறது. பலவீனமான வான் பாதுகாப்பு, குறைந்த ஆயுத இருப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் மலைப் பகுதியில் எதிரி சக்திகள் இல்லாத நிலை மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கான முழு சுதந்திரம் ஆகியவையே இஸ்ரேலின் விருப்பங்கள்."

பஷார் அல்-அசத் ஆட்சிக் காலத்தில் சிரியாவில் இரானின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. ஆனால் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய அரசியல் சூழலுக்குப் பிறகு துருக்கியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், சிரியாவில் இஸ்ரேலின் முக்கியப் போட்டியாளர் இப்போது இரான் அல்ல, துருக்கி எனக் கருதப்படுகிறது.

இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கலண்ட், இஸ்ரேலிய 103 எஃப்எம் வானொலிக்கு அளித்த பேட்டியில் "இரான் பலவீனமடைந்தால் அந்த வெற்றிடத்தை மற்றொரு நாடு நிரப்பும். மத்திய கிழக்கில் அதற்கான இயல்பான வாய்ப்பை பெற்றுள்ளது துருக்கியே" என்றார்.

"துருக்கி ஒரு வலிமையான நாடு. அதற்கு பேரரசு மரபு உள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அமெரிக்காவைத் தவிர்த்து பார்க்கும்போது, நேட்டோவில் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடாகும். அதன் பாதுகாப்புத் தொழில்துறை வலுவாக உள்ளது. அதன் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். நடைமுறையில் அது ஐரோப்பாவின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. பல துறைகளில் அது தனது தாக்கத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது" என்றார்.

புவிசார் அரசியலைத் தாண்டிய கருத்தியல் மோதல்

புரூகிங்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அஸ்லி அய்தின்தாஷ்பாஷ், கடந்த ஆண்டு ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழில் எழுதிய கட்டுரையில், துருக்கி - இஸ்ரேல் முரண்பாடு வெறும் புவிசார் அரசியல் போட்டி மட்டுமல்ல கருத்தியல் மோதலும் கூட என்று குறிப்பிடுகிறார்.

"துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் கருத்தியல் மற்றும் புவிசார் அரசியல் என இரு அடுக்குகளைக் கொண்டது. எர்துவான் தலைமையிலான அரசு, சுன்னி இஸ்லாமிய மக்கள் சார்ந்த அரசியலை துருக்கிய தேசியவாதத்துடன் இணைத்துள்ளது."

"மறுபுறம், இஸ்ரேலின் வலதுசாரிக் கூட்டணி அரசும் நாட்டின் எதிர்காலத்தை மிகவும் கடுமையான தேசிய பாதுகாப்பு அணுகுமுறையுடன் பார்க்கிறது. லெபனான், காஸா மட்டுமல்லாது சிரியாவிலும் ராணுவ ஆதிக்கத்தை உறுதிப்படுத்த கோருகிறது. இரு தரப்பினரின் அரசியல் கண்ணோட்டங்களும் எதிர்மறையானவை. அதனால் சமரசத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன." என்று அவர் எழுதுகிறார்.

2024-இல் அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, சிரியாவின் எதிர்காலத்தைத் தங்களுக்கேற்ற வகையில் வடிவமைக்க இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன என்று குறிப்பிடும் அவர், "துருக்கி தனது கூட்டாளிகளின் மூலம் சிரியாவில் செல்வாக்கை அதிகரித்து வருகிறது. துருக்கிக்கு ஒத்த நிலைபாடுகள் உடைய ஸ்திரமான அரசை துருக்கி விரும்புகிறது. துருக்கி ஏற்கெனவே வட சிரியாவின் பல பகுதிகளைக் கட்டுக்குள் வைத்துள்ளது. நாடு முழுவதும் தனது பொருளாதார, ராணுவ செல்வாக்கை விரிவுப்படுத்த முயல்கிறது," என்கிறார்.

"இஸ்ரேல் வான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. குர்து மற்றும் ட்ரூஸ் சமூகங்களின் தன்னாட்சிக் கோரிக்கைகளுக்கும் ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் ஜிஹாதி பின்னணி காரணமாக அவர்களை சந்தேகத்துடனேயே இஸ்ரேல் பார்க்கிறது. பல ஆண்டுகளாக துருக்கி மற்றும் இஸ்ரேலை மத்திய கிழக்கின் முக்கிய கூட்டாளிகளாக அமெரிக்கா கருதி வந்தது.

ஆனால் தற்போது, அந்த இரண்டு சக்திகளும் நேரடியாக ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுகின்றன. இரான் பலவீனமடைவதால், மத்திய கிழக்கில் எழும் அடுத்த முக்கிய சவால் தனது நெருங்கிய கூட்டாளிகள் இரண்டு பேருக்கும் இடையில் தான் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும்." என்று எழுதுகிறார்.

இஸ்ரேலால் துருக்கியை வெல்ல முடியுமா?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மைய பேராசிரியர் அஷ்வினி மகாபாத்ரா கூறுகையில், "இரானுடன் போர் செய்வதற்கும் துருக்கியுடன் மோதுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் பிராந்திய நடுத்தர சக்திகள். இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது. ஆனால் துருக்கி நேட்டோ உறுப்பினர். நேட்டோ உறுப்பினர் மீது நடக்கும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இதுவே மிகப்பெரிய சிக்கல்." என்கிறார்.

கடந்த பத்து ஆண்டுகளில் துருக்கி பாதுகாப்புத் துறையில் அதிகளவில் தன்னிறைவு அடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். துருக்கி உள்நாட்டிலேயே டிரோன்களை உருவாக்கி ஏற்றுமதி செய்வதையும், தற்போது போர் விமானங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளதையும் அவர் குறிப்பிடுகிறார்.

"அமெரிக்கா விதித்த ஆயுதத் தடைக்குப் பிறகு, 1970களின் இறுதியில் தொடங்கிய ராணுவ நவீனமயமாக்கல் கொள்கை, வெளிநாட்டு சார்பின்மையை நோக்கியதாக இருந்தது. அதன் பலனாக துருக்கி அதிக முன்னேற்றம் கண்டுள்ளது." என்கிறார் பேராசிரியர் மகாபாத்ரா.

துருக்கியுடன் நேரடி போர் நடத்துவதற்கு தேவையான வளங்கள் இஸ்ரேலிடம் போதுமான அளவில் இல்லை என்பது அவரது மதிப்பீடு.

"வான்படை திறனில் இஸ்ரேலுக்கு சில சாதகங்கள் இருக்கலாம். ஆனால் துருக்கி அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களைப் பெற்றுவிட்டால் அந்த இடைவெளியும் குறையும். துருக்கியின் கடற்படையும் மிகவும் வலிமையானது. இன்றைய சூழலில் இஸ்ரேலை விட துருக்கி பெரிய சக்தியாக கருதப்படுகிறது," என்கிறார் அவர்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பொது கண்ணோட்டத்தில் துருக்கி ஓர் உலகளாவிய ஆபத்தாக பார்க்கப்படவில்லை. அமெரிக்காவின் துருக்கி குறித்த நிலைபாடு, இரானுக்கான நிலைபாட்டை போன்று இருக்க முடியாது. அமெரிக்கா அதை விரும்பினாலும், எது எளிதாக இருக்காது.

துருக்கி எல்லை அருகே உள்ள சிரிய வான்தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை துருக்கி நாட்டிற்கான அமெரிக்க தூதர் டாம் பாரக் கண்டித்திருந்தார். அந்தப் பகுதியில் துருப்புகள் நிறுத்தப்படவில்லை என்று துருக்கி உறுதி அளித்த பிறகும் தாக்குதல் நடந்ததாக அவர் கூறினார்.

இஸ்ரேலின் அணுகுமுறைக்கு எதிரான விமர்சனங்கள்

இஸ்ரேலின் இடதுசாரி நாளிதழான ஹாரெட்ஸ், ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியிட்ட தலையங்கத்தில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்நாட்டு தேர்தல் அரசியலுக்காக துருக்கியுடன் தேவையற்ற புதிய மோதலை தொடங்க முயல்கிறார் என்று விமர்சித்தது.

டெல் அவிவ் நகரின் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள பெரிய பேனரில் நெதன்யாகுவின் தேர்தல் பிரசாரத்தின் மையமாக துருக்கியை குறிப்பிட்டிருந்தது.

அதாவது, துருக்கி அதிபர் எர்துவானை, இரான், ஹெஸ்பொலா, நியூ யார்க் மேயர் ஆகியோருடன் இஸ்ரேலின் எதிரியாக காண்பித்தது. அதில், "நெதன்யாகு தோற்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அவர்களை வெற்றியடைய விடாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கட்டுரையில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகள்:

"துருக்கியின் செல்வாக்கு அதிகரிப்பது குறித்து இஸ்ரேலுக்கு கவலைப்பட உரிமை உண்டு. ஆனால் ஒரு விமானத் தாக்குதல் மூலம் துருக்கியை பின்வாங்கச் செய்ய முடியுமா? அனைத்து ராஜதந்திர வழிகளும் உண்மையிலேயே பயன்படுத்தப்பட்டுவிட்டதா? துருக்கி நேட்டோ உறுப்பினரும் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியும் ஆகும். அது இஸ்ரேலுக்கு ஒரு காலத்தில் கூட்டாளியாக இருந்தது. இப்போதும் டெல் அவிவ் நகரில் துருக்கியின் தூதரகம் உள்ளது. துருக்கியுடன் போர் ஏற்பட்டால் அதன் விலை என்னவாக இருக்கும் என்பதை யாராவது கணக்கிட்டார்களா?"

"மத்திய கிழக்கில் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் புதிய கொள்கையை வகுக்க வேண்டும். வட சிரியாவில் தனது துல்லிய நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரத்தில், அதன் கண் முன்னாலேயே இஸ்ரேல் அல்லாத புதிய கூட்டணிகள் உருவாகி வருகின்றன.

வெறும் குண்டுவீச்சுகள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. ராஜதந்திரமும் நீண்டகாலத் திட்டமிடலுமே அதற்கான மாற்று. நெதன்யாகு ஆட்சிக் காலத்தில் இரண்டுமே அதன் முக்கியத்துவத்தை இழந்து வந்தன. அமெரிக்க தூதர் வழங்கும் எச்சரிக்கைகளை இஸ்ரேல் காது கொடுத்து கேட்டு துருக்கியுடனான மோதலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

நார்வே அரசியல் ஆய்வாளர் க்ளென் எரிக் ஆண்ட்ரே டைசனுடன் நடைபெற்ற உரையாடலில், சௌதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் சார்ல்ஸ் ஃப்ரீமேன், இஸ்ரேலுக்கு நீண்டகால இருப்பை உறுதி செய்யும் தெளிவான உத்தி இல்லை என்று கூறினார்.

ஃப்ரீமேன் கூறுகையில், "இஸ்ரேல் எப்போதும் மற்றவர்களை துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு வாழ முடியும் என்று கருதுகிறது. ஆனால் எந்த வகையிலும் அது நீண்டகால இருப்புக்கான ஒரு உத்தியாக இருக்க முடியாது. அதனால், ஓர் அரசாக இஸ்ரேல் நீண்டகாலம் நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து தீவிரமான சந்தேகங்கள் உள்ளன." என்றார்.

மேலும் அவர், "இஸ்ரேல் பல ஆண்டுகளாக சிரியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், தனது எல்லைகளை விரிவுபடுத்தவும் முயற்சித்து வருகிறது. தனது பாதுகாப்பிற்காக இது அவசியம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் விமர்சகர்கள், இஸ்ரேலுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகள் எதுவும் இல்லை; எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்கிறது என்று கூறுகின்றனர்.

துருக்கியில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் கடுமையான மக்கள் எதிர்ப்பு நிலவுகிறது. ஒரு கருத்துக்கணிப்பின்படி, சுமார் 97% துருக்கி குடிமக்கள் இஸ்ரேலுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னெட், துருக்கி இரானைவிடவும் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியிருந்தார்" என்றார்.

ஹாரெட்ஸ் பத்திரிகையின் மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் அமோஸ் ஹரெல், அமெரிக்க ஊடகமான சிஎன்என்னிடம், "உண்மையில், எர்துவானின் இஸ்ரேல் மீதான அணுகுமுறை மிகவும் விரோதமானதாக இருப்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன. துருக்கி சிரியாவில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சில, இஸ்ரேலிய ராணுவத்திற்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக, அந்த விமான நிலையம் தொடர்பான செயல்பாடுகளும் அதில் அடங்கும்." என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு