You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'முன்னால் சென்ற பேருந்தை சகதி மூடியது, பின்னால் இருந்த பேருந்தின் நிலை தெரியவில்லை' - நேபாளத்தில் உயிர்தப்பிய தமிழர் கண்டது என்ன?
- எழுதியவர், ப.சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"முன்னால் சென்ற பேருந்தை சுமார் 40 அடி உயரத்திற்கு எழுந்த சகதி மூடியது" என்று தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த கற்பகம் கூறினார்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் பயணம் மேற்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் 21 பேர் நேபாளத்தில் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதோடு, மீட்கப்பட்ட தமிழர்களின் பட்டியலையும் வெளியிட்டது.
அரசு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் சிலரை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. வெள்ளப் பாதிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறிய கருத்துகளை இங்கே தொகுத்துள்ளோம்.
நேபாளம் வெள்ள பாதிப்பு
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம் மூலம் 49 பேரும், கும்பகோணத்தைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலா நிறுவனம் மூலம் 57 பேரும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
உயிர் பிழைத்தது எப்படி?
"ஓட்டுநர் இருக்கை வழியாக இறங்கியதால் உயிர் பிழைத்தோம்" என்கிறார் வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கற்பகம்.
தமிழ்நாட்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர்களில் கற்பகமும் ஒருவர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கும்பகோணத்தில் உள்ள நிறுவனம் மூலம் பயணம் செய்த 57 பேரில் ஒருவர்.
"தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் மூன்று பேருந்துகளில் பயணம் மேற்கொண்டோம். இந்தப் பேரழிவு நடந்தபோது எங்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை சகதி மூடியதை நேரில் பார்த்தோம். பின்னால் இருந்த பேருந்தின் நிலை என்னவென்று தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
நடுவில் இருந்த தங்கள் பேருந்து மட்டுமே பாதுகாப்பாக இருந்ததாகக் குறிப்பிட்ட கற்பகம், தற்போது தூதரகத்தில் இருப்பதாக கூறினார்
"சுமார் 30 முதல் 40 அடி உயரம் வரை எழுந்த சேற்று சகதி அந்தப் பேருந்தை மூழ்கடித்தது," என்று கற்பகம் கூறினார். இதைக் கூறும்போது அவரது குரலில் சற்று நடுக்கத்தை உணர முடிந்தது.
தொடர்ந்து பேசிய அவர், "அந்தப் பேருந்தில் இருந்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை," என்றார்.
"நடுவில் இருந்த எங்கள் பேருந்தில் பயணம் செய்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு, ஓட்டுநர் இருக்கை வழியாக இறங்கி, அருகில் இருந்த காவல்துறை மீட்பு மையத்துக்குள் சென்றதால் உயிர் தப்பினோம்," என்று அவர் விவரித்தார்.
'இரண்டு நாட்களாக உணவு இல்லை'
"இரண்டு நாட்களாக உணவு எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் முழுமையாக மீட்கப்படவும் இல்லை," என்று நேபாளத்தின் திரிசூலி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றொரு தமிழரான சிவரஞ்சனி கூறினார்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திரிசூலி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழிடம் சிவரஞ்சனி பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாக வெள்ளப் பாதிப்பில் இருந்து நாங்கள் மீளவில்லை. எங்களுக்கு முதலில் ஓய்வு தேவை," என்று கூறினார்.
"நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால், முழுமையாக மீட்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் கிடைக்காததால், கிடைத்ததை உண்டோம். முகாமில் தங்கவைக்கப்பட்டதால், அவர்களால் என்ன முடியுமோ அதைச் செய்து கொடுத்தார்கள்," என்று விவரித்தார்.
தங்களை காத்மாண்டுவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருவதாக சிவரஞ்சனி குறிப்பிட்டார்.
'தொலைத்தொடர்பில் சிக்கல்'
இந்த 21 பேரில் சிதம்பரத்தைச் சேர்ந்த தியாகராஜனும் ஒருவர். நேபாளத்திலிருந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இங்கிருந்து எப்படியாவது இந்தியா வரவேண்டும் என்பது தான் எங்களது எண்ணம்" என்றார்.
மின்சார இணைப்பு மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், தகவல் பரிமாற்றத்தில் சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார்.
டெல்லி செல்லும் தமிழ்நாடு அமைச்சர்கள்
இந்த நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், தென்னரசு, வினோத், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் சதீஸ் ஆகியோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு