You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சாம்சன் இடத்தில் வைபவ் சூர்யவன்ஷி' - கிரிக்கெட் நிபுணர்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், பாரத் ஷர்மா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
"சஞ்சு சாம்சன் தொடர்பான முடிவைச் சுற்றியுள்ள சூழல் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது."
"அவருக்கு 'ஓய்வு' அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. நான் நீண்ட காலமாக இத்துறையில் இருப்பதால், 'ஓய்வு' என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்."
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம் பெறாதபோது, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஒரு காணொளியில் தனது அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.
"டி20 உலகக் கோப்பையில் செய்த அதே தவறைத்தான் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் செய்து வருகிறது. அப்போது அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்; எதிரணிகள் ஆஃப்-ஸ்பின்னர்களைப் பயன்படுத்தி அவர்களைக் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தன. தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு மாற்றம் ஏற்பட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது."
"இன்னிங்ஸைத் தொடங்க ஒரு வலது கை பேட்ஸ்மேன் கண்டிப்பாகத் தேவை, அந்தப் பணிக்குச் சஞ்சு சாம்சன் மிகச்சரியாகப் பொருந்துகிறார். வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் கொண்ட தொடக்க ஜோடி அவசியம்; எனவே அபிஷேக் அல்லது வைபவ் ஆகியோரில் ஒருவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டியிருக்கும்."
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் பேசிய முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைஃப் சமீபத்தில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
சஞ்சு சாம்சன் குறித்து மிகப்பெரிய விவாதம் நடைபெறுவது ஏன்?
இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் விளையாடப்பட்ட டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனின் ஆட்டத்துக்கு பிறகு, அவரை நீக்கிய முடிவின் மீது கேள்விகள் எழுவது இயல்பானதே.
அந்த உலகக் கோப்பையின் கடைசி மூன்று போட்டிகளில், அவர் முறையே 97* (ஆட்டமிழக்காமல்), 89 மற்றும் 89 ரன்கள் குவித்து ஆட்டத்தை வென்று தரும் இன்னிங்ஸ்களை விளையாடி, 'தொடரின் சிறந்த வீரர்' விருதை வென்றார். இதற்குப் பிறகு ஐபிஎல் தொடரிலும் இரண்டு சதங்களை விளாசினார்.
இருப்பினும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக 5, 0 மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்ததைத் தொடர்ந்து, அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு வைபவ்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன், இம்மாதம் ஜிம்பாப்வேயில் விளையாடப்பட உள்ள டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்திய அணி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் தோல்வியடைந்தது. இப்போது இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான நான்காவது தோல்விக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் சஞ்சு சாம்சன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "சஞ்சு சாம்சனுக்குத் தெளிவான விளக்கத்தை நான் வழங்கியுள்ளேன். இந்தப் பேச்சுவார்த்தை பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையிலான ஒன்று. இயல்பாகவே, அந்த உரையாடலின் விவரங்களை நாங்கள் உங்களிடம் வெளிப்படுத்த மாட்டோம்."
உலகக் கோப்பையின் போது சஞ்சுவின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தபோதிலும், ஒரு வீரரின் தற்போதைய ஆட்டத்திறனும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கம்பீர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட்டில் முடிவுகள் தான் முக்கியம். வெற்றியைப் பெறுவதற்குச் சரியானதென நாங்கள் கருதும் எந்தவொரு அணி அமைப்பையும் நாங்கள் களமிறக்குவோம். ஒவ்வொருவரும் தங்கள் இடத்தைத் தகுதியின் அடிப்படையில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.
உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை ஓரங்கட்டியும், 'தொடர் நாயகன்' விருதை வென்ற சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கிய பிறகும், எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
உலகக் கோப்பைக்குப் பிறகு விளையாடிய நான்கு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதில் அயர்லாந்திடம் பெற்ற 2-0 என்ற அதிர்ச்சித் தோல்வியும் அடங்கும். இதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்திடம் ஒருபோதும் தோற்றதே இல்லை.
சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் அவரது தலைமையின் தொடக்கத்திலேயே அணிக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அவரும் அணியின் மோசமான செயல்பாட்டினால் மிகவும் ஏமாற்றமடைந்தார்.
இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இந்த இரண்டு போட்டிகளிலும் முறையே 14 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
வைபவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், ஆனால் அவருக்கு இடமளிப்பதற்காக சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் மீனாட்சி ராவ் பிபிசியிடம், சஞ்சு சாம்சனை இங்கிலாந்து தொடரிலும் விளையாட வைத்திருந்திருக்க வேண்டும், மேலும் ஜிம்பாப்வே தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.
"ஒருவேளை அணி நிர்வாகம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தங்களின் மாற்று வீரர்களின் பலத்தை சோதிக்க விரும்பலாம். தற்போது இந்த அணி மாற்றத்திற்கான கட்டத்தைக் கடந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சஞ்சுவை ஜிம்பாப்வேயில் விளையாட வைத்திருந்திருக்க வேண்டும், அவருடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று இளம் வீரர்களை வைத்திருக்கலாம்" என மீனாட்சி ராவ் கருதுகிறார்.
அவர் மேலும், "சஞ்சுவிடம் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர் 1 முதல் 5 ஆம் எண் வரை எந்த இடத்திலும் பேட்டிங் செய்யக்கூடியவர். அவர் மிடில் ஆர்டரிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். மன உறுதி மற்றும் அனுபவம் ஆகிய இரண்டுமே அவரிடம் உள்ளன. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தோல்வியடையும் போது, மிடில் ஆர்டரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? இந்த வரிசையில் சஞ்சுதான் முதலிடத்தில் வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் போட்டிகளை வெல்லக்கூடிய அணியை உருவாக்குவதை விட, வீரர்களை சோதித்துபார்க்கும் முயற்சியே நடப்பதாக எனக்குத் தோன்றுகிறது."
மாற்று வீரர்களின் பலத்தை சோதிக்க நினைக்கும் போதோ அல்லது ஏதேனும் ஒரு புதிய வீரரை அணிக்குள் கொண்டு வர நினைக்கும் போதோ, ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சனின் பெயரே அணியில் இருந்து நீக்கப்படுகிறது, இது சரியல்ல என்று மீனாட்சி ராவ் கூறுகிறார். சஞ்சுவுக்குப் பதிலாக இஷான் கிஷனைக் கூட அணியில் இருந்து நீக்கியிருக்கலாம் என்றே அவர் நினைக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷி குறித்து மீனாட்சி ராவ் கூறுகையில், "அவர் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய வீரர். டி20 ஃபார்மட்டிற்கு ஏற்றவாறு அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டவராகவும் தெரிகிறார். ஆனால், அவரை அயர்லாந்து தொடரில் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்; அது அவருக்கு ஒரு சுலபமான தொடக்கமாக இருந்திருக்கும். வைபவ்வை நேரடியாக இங்கிலாந்திற்கு எதிராக, அதுவும் இங்கிலாந்து நாட்டின் ஆடுகளச் சூழலில் களமிறக்கியது அவருக்குப் பெரிய சவாலாகவே அமைந்தது" என்றார்.
"சாம்சன்: உள்ளே வெளியே..."
தற்போது அணியில் இடம்பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக சஞ்சுவைச் சேர்க்க வேண்டுமா அல்லது இருவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமா என்பது குறித்துப் பேசிய மீனாட்சி ராவ், "வைபவ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தால், அவரை இப்போது நீக்கக்கூடாது. அதே சமயம், சஞ்சு சாம்சனை அடிக்கடி அணியிலிருந்து நீக்குவதும் சேர்ப்பதுமாக இருக்கக்கூடாது; அவரை அணியிலேயே தக்கவைக்க வேண்டும். வைபவ்வுக்கு வாய்ப்பளிக்க வேறு ஏதேனும் ஒரு வீரரைக்கூட அணியில் இருந்து நீக்கியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு இடங்களிலுமே, இந்திய கிரிக்கெட் அணிக்கு பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாக இருந்தது.
முன்னணி விளையாட்டுப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அயாஸ் மேமன், அணியின் தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றார். ''அபிஷேக் ஷர்மா சில போட்டிகளில் நன்றாக விளையாடினார், அவரிடமும் சீரான ஆட்டத்திறன் காணப்படவில்லை.''
பிபிசியிடம் பேசிய மேமன், "இங்கிலாந்தின் ஆடுகளச் சூழல் முற்றிலும் மாறுபட்டது. அங்கு பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. இந்திய அணி இன்னும் நிலைபெறவில்லை. அயர்லாந்திடம் அடைந்த தோல்வி இதை உணர்த்துகிறது. பிரச்னைகள் அங்கிருந்தே தொடங்கின. இது அணியின் தன்னம்பிக்கையையும் பாதித்துள்ளது" என்றார்.
அவர் மேலும், "அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பது மற்றொரு சிக்கலாக உள்ளது; இதனால் யாராவது ஒருவர் கட்டாயம் வெளியே அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அயர்லாந்தில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்படாதபோது, அவர் ஏன் விளையாடவில்லை என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கூட, 'இப்போது விளையாட வைக்காவிட்டால், வேறு எப்போது விளையாட வைப்பீர்கள்?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்" என்றார்.
அணியில் ஏதேனும் மாற்றம் செய்யப்படும் போதெல்லாம், சஞ்சு சாம்சன் மட்டுமே அணியில் இருந்து வெளியில் தள்ளப்படுகிறார் என்ற கருத்தை மேமனும் ஏற்றுக்கொள்கிறார்.
"உலகக் கோப்பையில் தொடர் நாயகனாக இருந்த ஒரு வீரர் ஜிம்பாப்வே தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறந்த ஃபார்மில் இருக்கும்போது எந்தவொரு வீரரும் முடிந்தவரை விளையாடவே விரும்புவார்கள்." என்று அவர் கூறினார்.
இங்கிலாந்து அணி, இந்தியாவின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களையும் வீழ்த்துவதற்கு நல்ல தயாரிப்புடன் வந்துள்ளது என்றும், அது அவர்களின் பந்துவீச்சில் தெரிகிறது என்றும் அயாஸ் மேமன் கூறுகிறார்.
''ஐபிஎல் போட்டிகளில் விளையாடிப் பழகிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, அங்குள்ள ஆடுகளத் தன்மையும் சூழலும் மாறுபட்டதாக இருக்கும். அதே பாணியை இங்கிலாந்திலும் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இந்திய அணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது. ஆனால் வெவ்வேறு சூழல்களில் சிறப்பாகச் செயல்படும்போதுதான் ஒரு அணியின் உண்மையான வலிமை வெளிப்படும். எங்கு விளையாடினாலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே ஒரு சாம்பியன் அணியின் அடையாளம். மேலும், நாம் பேட்ஸ்மேன்களை மட்டும் விமர்சிக்கிறோம். ஆனால் பந்துவீச்சாளர்களும் மிக மோசமாகவே செயல்பட்டுள்ளனர். ரவி பிஷ்னோயின் செயல்பாட்டையே உதாரணமாகக் கொள்ளலாம்," என்று கூறினார்.
மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, இது இந்தியாவின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாகும். இங்கிலாந்தின் 201 ரன்களுக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் இந்திய அணி வெறும் 76 ரன்களுக்குச் சுருண்டது. 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, பேட்டிங் செய்ய ஹர்ஷித் ராணா களம் இறங்கினார்.
அப்போது வர்ணனையாளராகப் பணியாற்றிய தினேஷ் கார்த்திக், "உண்மையாகவா? ஷிவம் துபேவுக்கு முன்னதாக ஹர்ஷித் ராணாவா? இந்த இக்கட்டான நிலையில் துபேயை களமிறக்க அணியினருக்கு நம்பிக்கை இல்லையா? அவருக்குப் பதிலாக ஹர்ஷித்தை முன்னிலைப்படுத்தியது சரியான முடிவாக எனக்குத் தோன்றவில்லை" என்று கருத்து தெரிவித்தார்.
இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு பேட்டிங் செய்ய வந்த துபேயும் சோபிக்கத் தவறினார்.
ஹர்ஷித் ராணா குறித்து அயாஸ் மேமனிடம் கேட்டபோது, அணி அவரை ஒரு ஆல்-ரவுண்டராகப் பார்க்கிறது என்று கூறினார்.
''தற்போது அவர் தனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், அவரை மிகக் கடுமையாக விமர்சிப்பது நியாயமானதாக இருக்காது.'' என்றார்.
சஞ்சுவை அணியில் இருந்து நீக்கியது குறித்து ஹர்ஷா போக்லே ஒரு வீடியோவை வெளியிட்டு கேள்வி எழுப்பியதோடு, அவரே அதற்கான பதிலையும் அளித்துள்ளார்.
"சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டுமா? அதற்கான பதில், 'நிச்சயமாக இல்லை' என்பதுதான்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "டி20 உலகக் கோப்பையின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. சஞ்சு அணிக்குள் வந்து போட்டிகளை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்தார். அவர் ஒரு சிறந்த 'டீம் பிளேயர்', எந்தவொரு சூழ்நிலையிலும் அவர் தனது தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடவில்லை. அவர் உலகக் கோப்பையின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீரரை, வெறும் மூன்று போட்டிகளின் செயல்பாட்டை வைத்து அணியில் இருந்து வெளியில் தள்ள முடியாது" என்று கூறுகிறார்.
சாம்சனிடம் சீரான ஆட்டம் இல்லை என்ற வாதத்தை ஹர்ஷா போக்லே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
"வெறும் மூன்று போட்டிகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுப்பது சரியா? அவருக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளித்திருக்க வேண்டும்" என்று கூறுகிறார்.
''மூன்று போட்டிகளை வைத்து சஞ்சுவை அணியில் இருந்து நீக்குவது, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? தாங்களும் இரண்டு போட்டிகளில் சோபிக்கத் தவறினால், தங்களையும் அணியில் இருந்து தூக்கிவிடுவார்கள் என்ற பயம் கலந்த செய்தி அவர்களுக்குச் செல்லாதா?" என்றார்.
முகமது கைஃப் போலவே, ஹர்ஷா போக்லேவும் 'இடது-வலது' பேட்டிங் கூட்டணியை முன்வைத்து சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
"தொடக்க வரிசையில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இடது கை ஆட்டக்காரர்களாக இருக்கும்போது, எதிரணி அதற்கு ஏற்றவாறு உத்திகளை வகுத்து அவர்களைச் சிக்க வைக்க முயற்சிக்கும். இதனால்தான் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வந்து டாப் ஆர்டரில் விளையாட வைத்தனர். அந்த தர்க்கம் இன்றும் செல்லுபடியாகக் கூடியதாகவே இருக்கிறது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு