You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலிய கடலில் கரை ஒதுங்கிய 6 மர்ம உருண்டைகள் - இவை என்ன? எங்கிருந்து வந்தன?
- எழுதியவர், யரோஸ்லாவ் லுகிவ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஆஸ்திரேலியாவின் விண்வெளி நிறுவனம் வடக்கு குயின்ஸ்லாந்தின் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான பெரிய உருண்டைகளின் சாத்தியமான மூலத்தைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டவுன்ஸ்வில்லின் வடக்கே உள்ள ஃபாரெஸ்ட் பீச் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு திடமான உருண்டைப் பொருட்கள் முதலில் விண்வெளிக் குப்பைகள் எனக் கருதப்பட்டன. அவை விண்கல ஏவுகணை வாகனத்தின் அழுத்தக் கலன்களாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.
மேலும், அவை எந்த விண்கல ஏவுதள வாகனத்திலிருந்து வந்தவை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
குயின்ஸ்லாந்து தீயணைப்புத் துறை, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் காண்பவர்கள் அவற்றைத் தொடக்கூடாது என்று எச்சரித்தது.
அத்தகைய பொருட்களைக் கண்டால், உடனடியாக அங்கிருந்து விலகிச் சென்று அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இணையத்தில், இந்த உருண்டைகள் விண்கலங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தொட்டிகளாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பரவின. அவற்றில் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வேதியியல் வினைபுரியக்கூடிய பொருட்களின் எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்தது.
ஆபத்தான வேதிப்பொருட்கள் இருக்கலாம் என்ற கவலையால், பாதுகாப்பு உடைகள் அணிந்த குழுவினர் அந்த உருண்டைகளை காவல்துறையின் கண்காணிப்பில் ஆபத்தான பொருட்களுக்கான சிறப்பு கொள்கலன்களில் வைத்து அகற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபாரெஸ்ட் பீச் உணவகத்தின் உரிமையாளரான லிசா ஸ்கோபி, இந்த மர்மமான உருண்டைகள் எங்கிருந்து வந்தன என்பதை அறிய உள்ளூர் மக்கள் ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.
''இங்கு பொதுவாக மிகவும் அமைதியாக இருக்கும். பெரிய அளவில் எதுவும் நடக்காது. அதனால் திடீரென இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது மக்களிடையே கொஞ்சம் உற்சாகத்தை உருவாக்கியது," என்று அவர் ஆஸ்திரேலியாவின் அரசு ஒளிபரப்பாளரான ஏபிசியிடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, "இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடமும் அவற்றின் தன்மைகளும், சமீபத்தில் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்த வெளிநாட்டு ராக்கெட்டின் பகுதிகளிலிருந்து வந்த குப்பைகளுடன் ஒத்துப்போகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மர்மமான பொருட்கள் ஆஸ்திரேலியக் கடற்கரையில் கரை ஒதுங்குவது இது முதல் முறை அல்ல.
2023ஆம் ஆண்டு, பெர்த் நகருக்கு அருகிலுள்ள மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரையில் கரை ஒதுங்கிய பெரிய உலோகக் குவிமாடம் போன்ற பொருள், இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி என்று இந்தியா உறுதிப்படுத்தியது.
பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் செய்தித் தொடர்பாளர், அது இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து வந்தது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டவற்றைப் போன்ற மற்றொரு உருண்டைப் பொருள், 2011ஆம் ஆண்டு தெற்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டின் தொலைதூர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது நிபுணர்கள், அது மனிதர்கள் இல்லாமல் இயக்கப்படும் ஒரு ராக்கெட்டிலிருந்து பிரிந்த ஹைட்ரசின் எனப்படும் மிகவும் எளிதில் ஆவியாகக்கூடிய மற்றும் ஆபத்தான எரிபொருளைக் கொண்ட எரிபொருள் தொட்டி அல்லது சேமிப்புத் தொட்டியாக இருக்கலாம் என்று கருதினர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு