You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் இருந்து சென்று நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 பேரின் நிலை என்ன?
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் 49 சுற்றுலா பணிகள் கடந்த 14-ஆம் தேதி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிறுவனம் மூலமாக பயணம் மேற்கொண்ட 49 பயணிகளின் நிலை பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் சத்யநாராயணன், பயணிகளுக்கு வழிகாட்டியாக சென்றுள்ளார்.
"நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இமிக்ரேஷன் அலுவலகத்தில் காத்திருந்த தனது மகன் மற்றும் பயணிகள் குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை," என பிபிசி தமிழிடம் பேசிய சத்யநாராயணின் தந்தை மாரவேல் நாகப்பன் தெரிவித்தார்.
சுற்றுலா நிறுவனம் தனது மகன் பெயரில் இயங்கி வருவதாகவும் பயணிகளுடன் அவ்வப்போது தானும் வழிகாட்டியதாக சென்று வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
புதன்கிழமை காலை சுமார் 8.40 மணியளவில் சத்யநாராயணன் தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறிய அவர், "காலை 7.30 மணியளவில் கிராங் என்ற பகுதிக்கு வந்துவிட்டனர். அங்கிருந்து இமிக்ரேஷன் அலுவலகம் சென்றனர். அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதாக என் மகன் கூறினார்." என்கிறார்.
"நேபாளம் - திபெத் எல்லையில் இருந்து கூட்டிச் செல்வதற்கு வாகனங்கள் தயாராக உள்ளதாக மட்டும் தெரிவித்தார். ஆனால், அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை," எனக் கூறுகிறார் மாரவேல் நாகப்பன்.
இந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். "இவர்களில் சென்னையில் இருந்து 10 பேர், கோவை, ஈரோடு, தேனி ஆகிய மாவட்டங்களில் 39 பேர் என சென்றனர்" என்கிறார்.
2018-ஆம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. "இதுவரை இப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தது இல்லை. அவர்கள் காணாமல் போய்விட்டதாக அறிகிறோம். சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது இமிக்ரேஷன் அலுவலகத்தில் வெள்ளம் சூழ்ந்த காட்சிகளைப் பார்க்க முடிந்தது. என் மகனின் நிலையை அறிய முடியவில்லை" எனக் கூறி அழுதார் மாரவேல் நாகப்பன்.
அரசு கூறியது என்ன?
கைலாஷ் மானசரோவர் யாத்திரையின்போது நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இவர்கள் கும்பகோணத்தில் இருந்து சென்ற மற்றொரு குழுவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவரது தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் மீட்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
''இவர்களில் 73 பேர் 'திரிசூலி-1' மின் உற்பத்தித் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தத் திட்டத்தின் தலைவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.''
ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராசுவா மாவட்டத்தின் திமுரே பகுதியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 பேர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை," என்றார்.
இந்த வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றுள்ள சுமார் 200 இந்தியர்கள் சீனப் பகுதியில் சிக்கியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு