You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விமானத்தில் வந்த கொசு': ஜெர்மனியில் 2 விமான நிலைய ஊழியர்கள் மலேரியாவால் உயிரிழப்பு - என்ன நடந்தது?
- எழுதியவர், ஆண்ட்ரே ரோடன்-பால் மற்றும் ஜோ கோக்லன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஜெர்மனியின் மிகப் பரபரப்பான விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்ட அரிய மலேரியா பரவல் ஏற்பட்டது. கொசுக்களால் பரவும் இந்தக் கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளான ஆறு ஊழியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொசுக்கள் விமானம் ஒன்றின் மூலம் ஜெர்மனியின் மிகப் பரபரப்பான விமான நிலையத்துக்குள் வந்திருக்கலாம் என்று ஜெர்மன் பொது சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் ஏற்பட்ட நோய்ப்பரவல் முதன்முதலாக ஜூலை மாதத்தில் கண்டறியப்பட்டது.
விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஃப்ராபோர்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தத் தொற்றின் காரணமாக ஒரு ஊழியர் உயிரிழந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். பின்னர் புதன்கிழமை, பாதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகளும் தெரிவித்தனர்.
கொசுக்களை பிடிக்க விமான நிலையத்தில் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்படும் கொசுக்கள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படவுள்ளன. கொசுக்களின் இனம் மற்றும் அவை எந்தப் பகுதியில் இருந்து வந்தன என்பது கண்டறியப்படும்.
"அனைத்து ஊழியர்களுக்கும் விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர்களை ஊக்குவித்துள்ளோம்," என்று ஃப்ராபோர்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நோய்ப்பரவல் குறித்து ஃபிராங்க்ஃபர்ட் பொது சுகாதாரத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
விமான நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு ஆண் ஊழியர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி அறிந்துள்ளது. அவர்கள் ஒரே கொசுவால் பாதிக்கப்பட்டார்களா அல்லது ஆறு வெவ்வேறு கொசுக்களால் பாதிக்கப்பட்டார்களா என்பதை அறிய அதிகாரிகள் அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
புதன்கிழமை, ஃபிராங்க்ஃபர்ட் பொது சுகாதார அதிகாரிகள் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
"ஃபிராங்க்ஃபர்ட் நகர மக்களுக்கு இந்த நோயால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. இது எப்போதும் கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவுகிறது," என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுகளின் மூலத்தைக் கண்டறிவதற்கான ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்ப்பரவலால் நான்கு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜூலை மாதத்தில் தகவல் வெளியானது.
நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரத்துக்கான ஜெர்மனியின் மத்திய அரசு நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம், அந்த நான்கு ஊழியர்களும் ஜூலை 4 முதல் 6-ம் தேதிக்குள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், கொசுக்கள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் முன்பு தெரிவித்திருந்தது.
ஜெர்மனியில் பதிவாகும் மலேரியா பாதிப்புகள் பெரும்பாலும் மலேரியா பரவலாக உள்ள பகுதிகளுக்குச் சென்று திரும்பும் நீண்ட தூரப் பயணிகளிடமே காணப்படுகின்றன என்றும், ஜெர்மனிக்குள் உள்ள விமான நிலையத்தில் பரவும் மலேரியா மிகவும் அரிதானது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பயண வரலாறு இல்லாதது நோயைக் கண்டறிவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும். அந்தத் தாமதம் நோய் தீவிரமடையும் அபாயத்தை அதிகரிக்கிறது," என்று அந்த நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு விமான நிலைய மலேரியாவின் கடைசி சம்பவம் 2023-ஆம் ஆண்டில், இதே ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் பதிவாகியிருந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, மலேரியா என்பது சில வகை கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் பரவும் நோயாகும். இது பெரும்பாலும் வெப்பமண்டல நாடுகளில் காணப்படுகிறது.
தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும் இந்த நோய்த்தொற்று, கொசுவால் ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. எனினும், இதன் அறிகுறிகள் லேசானதாகவும் அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு தீவிரமானதாகவும் இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு