இவர்கள் தங்கள் உடல் எடையை விட அதிக எடையை சுமக்க உதவும் 'நுட்பம்' என்ன தெரியுமா?

    • எழுதியவர், மோலி கோர்மன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சில சமூகங்கள் அதிக எடைகளைச் சுமந்து செல்வதற்கான சில நுட்பங்களை உருவாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை என்ன?

வியட்நாமின் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்கள் போலத் தோன்றலாம். தினமும், ஒரு கம்பின் இரு முனைகளிலும் அதிக எடையுள்ள பொருட்களைத் தொங்கவிட்டு, அவற்றைத் தோளில் சுமந்தபடி பல கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்து செல்கின்றனர்.

காய்கறிகள், கருவிகள் அல்லது பிற பொருட்கள் அடங்கிய அந்தப் பெரிய, அசௌகரியமான பொதிகள், பெரும்பாலும் அவர்களின் உடல் எடையைவிட அதிகமாக இருக்கும். ஆனாலும், அவர்கள் அந்தச் சுமையை எளிதாகச் சமாளிப்பது போலத் தெரிகிறது.

நம்மில் பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதற்கு மிகவும் சிரமப்படுவோம்.

நமது உடல் எடைக்குச் சமமான ஒன்றைத் தூக்குவதே கடினம். அதனுடன் நீண்ட தூரம் நடப்பது என்பது மிகவும் வலிமையான ஆண்கள் அல்லது பெண்களைத் தவிர மற்ற அனைவருக்கும் சவாலாக இருக்கும்.

ஆனால், வியட்நாமிய விவசாயத் தொழிலாளர்களிடம் ஒரு ரகசிய ஆயுதம் உள்ளது. அது அவர்களுடைய நீளமான, நெகிழும் மூங்கில் கம்புகள்.

கம்பின் இரு முனைகளிலும் இருக்கும் சுமைகள், அவர்கள் எடுத்து வைக்கும் அடிகளின் வேகத்துக்கு ஏற்ப மேலும் கீழும் அசையும் வகையில் தொழிலாளர்கள் தங்களது நடையைச் சரிசெய்துகொள்கின்றனர்.

விவசாயத் தொழிலாளர்களின் சுமை சுமக்கும் திறனை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களின் ஓர் ஆய்வின்படி, ஒவ்வொரு அடியிலும் அந்த எடையைத் தூக்கத் தேவைப்படும் முயற்சியை இது சுமார் 18% குறைக்கிறது.

ஆனால், இந்த நெகிழும் மூங்கில் கம்புகள் உதவியாக இருந்தாலும், பல ஆண்டுகளாக அதிக எடைகளைச் சுமந்து வந்ததன் மூலம் இந்த விவசாயத் தொழிலாளர்கள் மிகுந்த உடல் வலிமையைப் பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.

எனினும், அதிகமாகப் பொருட்களைத் தூக்கிச் சுமக்கும் வேலைகளைச் செய்யாத நம்மில் பலரும் வலிமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் பயனடையலாம்.

அப்படியானால், இதுபோன்ற வலிமையை வளர்த்து கொள்ள என்ன தேவை?

மனிதர்களுக்கு வலிமையின் மீது மிகுந்த ஆர்வம் இருப்பதில் சந்தேகமில்லை. பளுதூக்கும் விளையாட்டு 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதன் வரலாறு பண்டைய எகிப்து, கிரேக்கம் மற்றும் சீனா வரை செல்கிறது.

பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த எழுத்துகள், சிலைகள் மற்றும் 'ஹால்டீர்ஸ்' எனப்படும் பெரிய எறிகற்கள் போன்ற பொருட்கள், கிமு 557-ஆம் ஆண்டிலேயே எடைகளைத் தூக்குவது மற்றும் வலிமையைச் சோதிப்பது தொடர்பான போட்டிகள் பிரபலமாக இருந்ததைக் காட்டுகின்றன.

இந்த விளையாட்டு பெரிய அளவு முன்னேறியுள்ளது. 1920 ஆம் ஆண்டு ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இது ஒலிம்பிக்கில் நிரந்தரமான இடத்தைப் பெற்றது.

இதற்கு உதாரணமாக ஜார்ஜிய பளுதூக்கும் வீரர் லஷா தலாகாத்ஸேவைப் பார்க்கலாம்.

2021-ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் மூன்று உலக சாதனைகளைப் படைத்தார். அந்தச் சாதனைகளை அவர் இன்றும் தக்க வைத்துள்ளார்.

அந்தப் போட்டியில் 'க்ளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 267 கிலோ எடையைத் தூக்கினார். இது அவரது சொந்த உடல் எடையை விட இரண்டு மடங்குக்கும் அதிகம்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இவ்வளவு எடையைத் தூக்குவது என்ற எண்ணமே புரிந்துகொள்ள முடியாததாக இருக்கும்.

ஆனால், எடைகளைத் தூக்குவதன் மூலம் வலிமையை அதிகரிப்பது பல நன்மைகளைத் தரும். உதாரணமாக, வயதானவர்களிடம் வலிமைப் பயிற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் உடல் இயக்கத்தை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது விளையாட்டுத் திறனை வளர்க்க உதவுவதுடன், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகளால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவதுடனும் தொடர்புடையதாக உள்ளது. வலிமைப் பயிற்சி மனநலத்துக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வலிமையை அதிகரித்து அதிக எடையைச் சுமப்பதற்கான மிகத் தெளிவான வழி தசைகளை வளர்ப்பதாக இருக்கலாம்.

"பெரிய தசைகளை உருவாக்குவதும், அந்தத் தசைகளை நிலைப்படுத்துவதும் முக்கியம்" என்கிறார் கொலராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸில் இயந்திரப் பொறியியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜெஃப்ரி அக்கர்மேன். இவர் எடைகளைச் சுமப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

"நமது உடல், நமது சொந்த உடல் எடையைச் சுமப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

ஆனால், அதனுடன் அதிக எடையைச் சேர்க்கும்போது, அதிக எடையைச் சுமக்க உதவும் தசைகளை, குறிப்பாக உடலின் மையத் தசைகள் மற்றும் துணைத் தசைகளை வளர்க்க, தொடர்ந்து வலிமைப் பயிற்சி செய்ய வேண்டும். நாம் பொருட்களைச் சுமக்கும்போது உடலின் இயக்கத்துக்கு இவை ஆதரவளிக்கின்றன. இந்தத் தசைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான ஒரே வழி தீவிரமான, படிப்படியாக அதிகரிக்கும் வலிமைப் பயிற்சிதான்" என்கிறார் அவர்.

உடலில் உள்ள எலும்புத் தசைகளின் அளவு அதிகமாக இருப்பது பொதுவாக அதிக வலிமையுடன் தொடர்புடையதாக உள்ளது.

குறிப்பாக வயதாகும் போது, வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து இதில் வேறுபாடுகள் உள்ளன.

பெரிய தசைகளை வளர்ப்பது மட்டும் போதாது. அவற்றிலிருந்து சிறந்த பலனைப் பெற, தசைகளைச் செயல்படுத்தும் பயிற்சியும் முக்கியம்.

ஆனால், திடீரென அதிக எடைகளைத் தூக்கத் தொடங்குவது பரிந்துரைக்கப்படுவதில்லை.

அதற்குப் பதிலாக, நுட்பத்தில் கவனம் செலுத்தி, எளிதாகவும் வசதியாகவும் தூக்கக்கூடிய எடைகளில் தொடங்கி, பின்னர் படிப்படியாகப் பயிற்சியின் அளவை அதிகரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

படிப்படியான எடைப் பயிற்சி அல்லது படிப்படியான சுமை ஏற்றம் என்பது, உடலின் மீது செலுத்தப்படும் அழுத்தத்தை (எடையை) படிப்படியாக அதிகரிப்பதாகும்.

உடலுக்கு அதிக உடலியல் தேவையை ஏற்படுத்தும்போது, அதைச் சமாளிக்க அதிக விசையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

உதாரணமாக, வசதியான எடையில் நான்கு செட்களில் தலா எட்டு முறை எடையை எளிதாகத் தூக்க முடிந்தால், தசைகளின் வலிமையை தொடர்ந்து மேம்படுத்த எடையை, மீண்டும் செய்யும் எண்ணிக்கையை அல்லது தசைகளில் அழுத்தம் இருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

குறைவான எண்ணிக்கையில் அதிக எடையைத் தூக்குவதைப் போலவே, அதிக எண்ணிக்கையில் குறைந்த எடையைத் தூக்குவதன் மூலமும் அதே பலன்களைப் பெறலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

அதிக மற்றும் குறைந்த எடைகளைப் பயிற்சியில் இணைப்பது வலிமை மற்றும் சக்தியை மேம்படுத்தக்கூடும் என்றும், பல செட்களில் பயிற்சி செய்வது அதிக நன்மை தரும் என்றும் வேறு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகளின் ஒரு மதிப்பாய்வின்படி, ஒவ்வொரு செட்டுக்கும் இடையில் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு பல செட்களில் பயிற்சி செய்வது, வலிமை மற்றும் சக்தியை அதிகரிப்பதில் அதிக நன்மைகளைத் தருவதாகத் தெரிகிறது.

அதிக எடைகளைத் தூக்கும்போது ஒட்டுமொத்த வலிமையை அதிகரிக்க 'ஸ்க்வாட்' முறையைப் பயன்படுத்த பெரும்பாலான நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், முதுகு பகுதியின் ஆரோக்கியத்துக்கு இது சிறந்ததா என்பது குறித்து சில விவாதங்கள் உள்ளன.

ஆனால், உடற்பயிற்சிக் கூடத்தில் பல மணி நேரம் செலவிடாமல், ஒருவர் சுமக்கக் கூடிய எடையின் அளவை அதிகரிக்க வேறு வழிகளும் உள்ளன.

வியட்நாமிய விவசாயத் தொழிலாளர்களைப் போலவே, சில சமூகங்கள் அதிக எடைகளை, பெரும்பாலும் நீண்ட தூரத்துக்கு, சுமந்து செல்வதற்கான நுட்பங்களை உருவாக்கியுள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனில், லண்டனின் கோவென்ட் கார்டனில் சந்தையில் பொருட்களைச் சுமந்து செல்லும் தொழிலாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய கூடைகளைத் தலையில் சுமந்து சென்றனர்.

இதுபோன்ற பாரம்பரிய சுமை சுமக்கும் முறைகள் இன்றும் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, வளரும் நாடுகளில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வடகிழக்கு இந்தியாவில், நீண்ட தூரங்களுக்கும் கடினமான நிலப்பரப்புகளுக்கும் இடையே பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல மனிதர்களே சுமந்து செல்லும் முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணங்கள் போதுமான போக்குவரத்து உள்கட்டமைப்பு இல்லாததும், மலைப்பாங்கான நிலப்பரப்பும் ஆகும். பொருளாதாரக் காரணங்களும் இதில் உள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்காவில், லுவோ சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல் எடையில் 70% அளவுக்குச் சமமான சுமைகளைத் தலையில் சமநிலைப்படுத்தி, பல மணி நேரங்களுக்கும், சில நேரங்களில் பல நாட்களுக்கும் சுமந்து செல்கின்றனர்.

இத்தகைய சுமைகளைச் சுமப்பதற்குத் தேவையான தசைகளின் உழைப்பைக் குறைக்கும் வகையில், அவர்கள் நடக்கும் முறையில் ஆற்றலைச் சேமிக்கும் உத்தியை உருவாக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இமயமலைப் பகுதியில் உள்ள ஷெர்பாக்கள் தோளிலும் தலையிலும் சுமைகளைச் சுமந்து செல்வது பிரபலமானது. முதுகில் சுமை கட்டப்பட்டு, நெற்றியின் குறுக்கே செல்லும் பட்டை மூலம் அது தாங்கப்படும்.

அவர்கள் சுமக்கும் எடைகள் பெரும்பாலும் அவர்களது உடல் எடையைவிட அதிகமாக இருக்கும்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த தொழில்முறை சுமை தூக்கும் தொழிலாளர்கள், பல நாட்கள் நீடிக்கும் பயணங்களில் இந்தச் சுமைகளைச் சுமந்து செல்கின்றனர்.

கரடுமுரடான மலைப் பாதைகளில் சுமார் 60 மைல் (100 கி.மீ.) தூரம் பயணித்து, மொத்தமாக 26,000 அடி (8,000 மீட்டர்) உயரம் வரை ஏறிச் செல்லும் அளவுக்கு அவர்களால் இந்தச் சுமைகளைச் சமாளிக்க முடிகிறது.

ஆய்வாளர்கள் இன்னும் அதன் உடலியக்க நன்மைகளைப் புரிந்துகொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஷெர்பாக்களைப் போல அதிக எடையைச் சுமப்பது, அடிப்படையில் எடைப் பயிற்சி மற்றும் இதய-சுவாசப் பயிற்சி ஆகிய இரண்டின் கலவையாகும். நீண்ட நேரம் சுமைகளைச் சுமக்க இந்த இரண்டுமே முக்கியம்.

"பல ஷெர்பாக்கள் இதை பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் இதய-சுவாச சகிப்புத்தன்மையும், உடலின் மையத் தசைகளின் வலிமையும் அதிகரித்துள்ளன" என்கிறார் அக்கர்மேன்.

ஒரு ஆய்வில், ஷெர்பாக்களின் சுமை சுமக்கும் முறையை ஆய்வு செய்வதற்காக, உடல் தகுதி கொண்ட 10 விவசாயத் தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

அவர்கள் சாய்வான டிரெட்மில்லில் நடக்கும்போது, முதலில் தங்கள் உடல் எடையில் 10% சுமையையும், பின்னர் 40% சுமையையும் சுமந்தனர்.

இடுப்பு மற்றும் தோள்பட்டை பட்டைகள் போன்றவற்றை ஆதரவுக்காகப் பயன்படுத்திய போது, அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்ததைவிட, பங்கேற்பாளர்களின் இதயத் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் நுகர்வு கணிசமாகக் குறைந்தது.

அதாவது, இந்தப் பட்டைகள் ஷெர்பாக்கள் சுமைகளை வேகமாகவோ அல்லது அதிக தூரத்துக்கோ சுமந்து செல்ல உதவுகின்றன.

அதிக எடைகளைத் தூக்கும் திறன் வயது, பயிற்சி முறைகள், பாலினம், தசை வலிமை, உடல் அமைப்பு, காலநிலை, நிலப்பரப்பு மற்றும் உடலில் சுமை அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பல காரணிகளைச் சார்ந்திருப்பதாக சுமை சுமப்பது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சில பொறியாளர்கள், பின்புறம் மற்றும் தோள்களில் சுமை ஏற்படுத்தும் அழுத்தத்தைக் குறைத்து, நாம் நடக்கும்போது உடலுடன் இயல்பாக நகர அனுமதிக்கும் வகையில், ஸ்பிரிங் பொருத்தப்பட்ட அல்லது "மிதக்கும்" முதுகுப்பையை உருவாக்கும் யோசனையை ஆராய்ந்துள்ளனர்.

ராணுவத்தில் சுமைகளைச் சுமப்பதும், மனிதர்களால் எவ்வளவு அதிக எடையைத் தாங்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சுவாரஸ்யமான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

ராணுவ வீரர்கள் பெரும்பாலும் 45 கிலோவுக்கும் (99 பவுண்டுகள்) அதிகமான எடையை அணிந்தும் சுமந்தும் செல்கின்றனர்.

இதில் உடல் கவசம், வெடிமருந்துகள், ரோந்து பைகள் மற்றும் கனமான காலணிகள் போன்ற உயிர்வாழ்வதற்கும் பாதுகாப்புக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அடங்கும்.

நிலப்பரப்பு காரணமாகவோ அல்லது எதிரிகளால் கண்டறியப்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காகவோ மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்த முடியாத இடங்களில் இது குறிப்பாக முக்கியமானது.

எனவே, இத்தகைய எடையைச் சுமந்தபடி வீரர்கள் எவ்வளவு வேகமாக நகர முடிகிறது என்பது அவர்களின் உயிர்வாழ்வுக்கும், பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் பெரும்பாலும் முக்கியமானதாகிறது.

ராணுவச் சூழலில் சுமைகளைச் சுமக்கும் திறனை மேம்படுத்துவதில் உடற்பயிற்சியின் உடலியல் விளைவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மதிப்பாய்வு ஒன்று, பல்வேறு உடற்பயிற்சி முறைகளை இணைப்பது அதிக எடையைச் சுமக்கும் திறனை கணிசமாக மேம்படுத்தியதாகக் காட்டியது.

குறிப்பாக, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை, நான்கு வாரங்களுக்குப் படிப்படியாக அதிகரிக்கும், தசைகளுக்கு வலிமை சேர்க்கக் கூடிய பயிற்சியை ஏரோபிக் பயிற்சியுடன் இணைத்தபோது நல்ல பலன் கிடைத்தது.

சுவாரஸ்யமாக, 'ஹைப்ரிட் டிரெய்னிங்' எனப்படும் இதய-சுவாசப் பயிற்சி மற்றும் வலிமைப் பயிற்சியின் கலவை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளது.

ஓட்டப்பந்தய வீரர்கள் இரு வகையான உடற்பயிற்சிகளின் நன்மைகளையும் பெறுவதற்காக, தங்களது வழக்கமான பயிற்சியில் பளுதூக்கும் பயிற்சியையும் சேர்த்துக்கொண்டு வருகின்றனர்.

உண்மையில், உங்கள் உடற்பயிற்சி முறையில் வலிமைப் பயிற்சியைச் சேர்த்துக் கொள்ளுமாறு தேசிய அமைப்புகளும் சுகாதார நிறுவனங்களும் தற்போது பரவலாகப் பரிந்துரைக்கின்றன.

உதாரணமாக, ஒவ்வொரு வாரமும் 30 முதல் 60 நிமிடங்கள் தசை வலிமை பயிற்சி செய்வது இதயத்துக்கு நன்மை தரும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது.

பொதுவான சுகாதார வழிகாட்டுதலாக, அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வலிமைப் பயிற்சியை உங்கள் உடற்பயிற்சி முறையில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கின்றன. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையும் இதே பரிந்துரையை வழங்குகிறது.

நமது மக்கள் தொகை வயதாகி வரும் சூழலில் இந்த வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கர்களில் 20% பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.

வயதாகும் போது, இயற்கையாகவே தசை நிறை மற்றும் வலிமை குறைகிறது. ஆனால், வாரத்திற்கு பல முறை வலிமைப் பயிற்சி செய்வதன் மூலம் எலும்பின் அடர்த்தியைப் பாதுகாக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், நெகிழ்வுத்தன்மை, தூக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் முடியும்.

நீங்கள் ஒருபோதும் ஷெர்பாவைப் போல மலைகளைக் கடந்து சுமைகளைச் சுமக்க வேண்டியிருக்காது.

ஒலிம்பிக் பளுதூக்கும் வீரரைப் போல உலக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற விருப்பமும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவர்களின் அசாதாரண வலிமை உங்களை ஒரு டம்பெல்லை எடுத்து, உங்களால் எவ்வளவு எடையைத் தூக்க முடியும் என்று முயற்சி செய்யத் தூண்டலாம்.

முயற்சி செய்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு