33 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் - யார் இந்த சாரன்ஷ் ஜெயின்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்காக 33 வயதான புதிய ஆல் ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் அறிமுகமானார்.

டாஸ் போடுவதற்கு முன், அவருக்கு ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கேப்பை வழங்கினார். 33 வயதுக்குப் பிறகு சர்வதேச அணியில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் சாரன்ஷ். இதற்கு முன்பு, 1998-ஆம் ஆண்டு ராபின் சிங் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.

காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சாரன்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாரன்ஷ் ஜெயின் வலது கை ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர். மேலும், அவர் வலது கை பேட்டராகவும் உள்ளார்

கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அணிக்கு சமநிலையை வழங்கும் திறன் கொண்டவர்.

அந்தத் திறன்தான் அவரை வாஷிங்டன் சுந்தருக்கு பொருத்தமான மாற்று வீரராக ஆக்குகிறது.

கிரிக்இன்ஃபோவின் தகவல்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான ஆல் ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின், 54 முதல்தர போட்டிகளில் 31.75 சராசரியில் 2223 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 188 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அவர் 67 லிஸ்ட்-ஏ மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டே அவரது மிக வலுவான வடிவமாக இருந்து வருகிறது.

சாரன்ஷ் ஜெயின், ரவிச்சந்திரன் அஸ்வினை தனது மிகப் பெரிய முன்மாதிரியாகக் கருதுகிறார்.

2024-ல் கிரிக்இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில் "அஸ்வினிடம் இருந்து எனக்கு ஊக்கம் கிடைக்கிறது. நானும் அவரைப் போலவே முழு அர்ப்பணிப்புடன் என் கிரிக்கெட் பயணத்தை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன்" என கூறினார்.

இதுவரையிலான அவரது கிரிக்கெட் பயணம் எப்படி இருந்தது?

கிரிக்இன்ஃபோவின் தகவல்படி, முதல்தர கிரிக்கெட் வீரரான சுபோத் ஜெயினின் மகனான சாரன்ஷ், கடந்த சில சீசன்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

எனினும், அவரது கிரிக்கெட் வாழ்க்கை மெதுவாகவே முன்னேறியது. 2014-ல் அவர் ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். ஆனால், 2022-ல்தான் அதிக கவனம் பெற்றார். அதுவரை அவர் முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். அந்த ஆண்டில் ரஞ்சி கோப்பையின் நாக்-அவுட் சுற்றில், மத்தியப் பிரதேச அணிக்காக அவர் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஒரு அரைசதமும் அடித்தார். இதன் மூலம் அந்த அணி தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வென்றது.

அண்மையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை சீசன், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த சீசனாக அமைந்தது. அவர் 57.55 சராசரியில் 518 ரன்கள் எடுத்ததுடன், 20.43 சராசரியில் 30 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். துலீப் கோப்பையிலும் அவர் சிறப்பாக விளையாடினார். சென்ட்ரல் ஜோன் அணிக்காக விளையாடிய அவர், இரண்டு போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்ததுடன், 16 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இலங்கை சுற்றுப்பயணத்திற்காக அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அவரது தேர்வுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தன. காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் விளையாட முடியவில்லை.

மேலும், இலங்கை அணியில் பல இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், தேர்வாளர்கள் அணியில் ஓர் ஆஃப் ஸ்பின்னரை சேர்க்க விரும்பினர்.

அந்தச் சூழலில், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தவர் சாரன்ஷ்.

இலங்கை மைதானங்களை கருத்தில் கொண்டு, இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கத் திட்டமிட்டிருந்தது.

மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் இடத்திற்காக மாணவ் சுதார் மற்றும் சாரன்ஷ் ஜெயின் இடையே போட்டி இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் சுதாரும் சாரன்ஷும் இருவரும் விளையாடுகின்றனர்.

இலங்கை அணியில் பல இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பது, சாரன்ஷுக்கு சாதகமாக அமையக்கூடும்.

முதல் நாளில் என்ன நடந்தது?

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தேவ்தத் படிக்கல் சதம் அடித்துள்ளார். அவர் 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது துருவ் ஜூரெல் 7 ரன்களுடனும், சாரன்ஷ் ஜெயின் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் தேவ்தத் படிக்கல் 167 மற்றும் 44 ரன்கள் எடுத்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு