You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்திய விமானம்' - விசாரணையில் என்ன நடக்கிறது? 5 விஷயங்கள்
கடந்த வாரம் ஏர் இந்திய விமானம் ஒன்று நடுவானில் சுமார் 300 அடி சரிந்த நிலையில் அந்த விமானத்தை இயக்கி விமானி தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த அந்த விமானத்தை இயக்கிய விமானிக்கு இரண்டாவது போதைப்பொருள் பரிசோதனையில் 'பாசிடிவ்' என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்துக்கள் விசாரணை பணியகம் (ஏஏஐபி) இந்தச் சம்பவத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இறுதி அறிக்கை வந்த பிறகுதான் தன்னால் உறுதியாக எதுவும் கூற முடியும் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக இருந்து, விதிகள் மீறப்பட்டுள்ளது எனத் தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தொழில்நுட்ப, செயல்பாட்டு, மருத்துவ மற்றும் மனித காரணிகளை ஏஏஐபி விசாரித்து வருகிறது.
ஏர் இந்தியாவின் பதவி விலக உள்ள தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சனை, புகெட்–டெல்லி விமானத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விமானப் போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 20 பயணிகளும் நான்கு பணியாளர்களும் காயமடைந்திருந்தனர்.
ஏர்பஸ் A320 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில், 137 பயணிகளும் எட்டு பணியாளர்களும் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
ஊடக செய்திகளின்படி, ஏஐ 2379 விமானத்தின் தலைமை விமானிக்கு இரண்டாவது முறையாக போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்படும் என இந்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
விமானிக்கு முதற்கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவு 'நெகடிவ்' என வந்திருந்தது. இது ஒரு முதற்கட்டப் விரைவுப் பரிசோதனை என்பதால், இதன் முடிவுகள் இறுதியானதாகக் கருதப்படாது.
இத்தகைய தீவிர சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும்போது, போதைப்பொருள்கள் அல்லது மனநிலையைப் பாதிக்கும் பிற பொருள்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்வது அவசியமான நடைமுறையாகும்.
இதற்கிடையே, விமானிக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பரிசோதனையின் முடிவு 'பாசிடிவ்' என வந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகமான புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
"விசாரணை முடிவுகள் ரகசியமானவை என்பதால் பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் அவர் பேசினார். விமானியின் போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார். ஏஏஐபி விசாரணைக்கு பிரான்சின் விமான விபத்து விசாரணை முகமை மற்றும் பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் தொழில்முறை நிபுணர்களும் உதவி வருகின்றனர்," என்று புளூம்பெர்க் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நிகழ்ந்த பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களால், இந்தியாவின் விரைவாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்தச் சம்பவம் மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது.
மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஏர் இந்தியா நிறுவனம் இதுவரையில் இல்லாத அளவு சுமார் 2.3 பில்லியன் டாலர் வரையிலான இழப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியான தெவோல்டே கெப்ரமரியாம் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
1. போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள் 'பாசிடிவ்' என வந்தால் என்ன நடக்கும்?
விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) விதிகளின்படி, போதைப்பொருள் பரிசோதனையில் முதன்முறையாக சிக்கி 'பாசிடிவ்' என முடிவு வரும் ஊழியர், போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவார்.
போதைப்பொருள் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதையும் 'பாசிடிவ்' முடிவுக்கு நிகரான கடுமையான குற்றமாகவே டிஜிசிஏ கருதுகிறது. முதன்முறையாக சிக்கினால், அந்த ஊழியர் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் போதைப்பொருள் பரிசோதனையை எதிர்கொண்டு அதில் தேற வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், அவரது உரிமம் ஓர் ஆண்டுக்கு ரத்து செய்யப்படும். மீண்டும் பணியில் சேர்வதற்கு முன் அவர் போதை மறுவாழ்வுப் பயிற்சியை முழுமையாக முடித்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு மீண்டும் திரும்புவதற்கு, அந்த ஊழியர் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 'நெகடிவ்' என வர வேண்டும். இரண்டாவது முறையாகவும் 'பாசிடிவ்' என வந்தால், அவரது உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். மூன்றாவது முறையும் 'பாசிடிவ்' என வந்தால், அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
2. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியது என்ன?
ஏர் இந்தியாவின் ஃபூகெட் - டெல்லி விமானம் தொடர்பான சம்பவத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன், விமான விபத்துக்கள் விசாரணை பணியகத்தின் விசாரணை அறிக்கைகாக காத்திருப்பதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தச் சம்பவத்தை விமான நிறுவனம் எவ்வாறு கையாண்டது, பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா, குறிப்பாக விமானிகளின் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விதிகளில் ஏதேனும் தொய்வு உள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள, பதவியிலிருந்து விலகும் ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி காம்ப்பெல் வில்சனுடன் அமைச்சகம் முதற்கட்டக் கூட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை பாதுகாப்புதான் என்றும், இதில் விமான நிறுவனங்களோ, ஒழுங்குமுறை அமைப்புகளோ அல்லது தொடர்புடைய எந்தவொரு தரப்போ எவ்வித சமரசமும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
விமானிகளின் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான டிஜிசிஏ விதிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சகம் தகவல்களைக் கேட்டுள்ளதாகவும், தற்போதைய விதிகள் போதுமானதாக இல்லை எனத் தெரிந்தால், மாற்றங்கள் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
3. இதற்கான விதிகள் என்ன?
விமானப் போக்குவரத்து ஊழியர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைச் சோதிப்பதற்கான 'சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகள்' வழிகாட்டுதல்களை டிஜிசிஏ செப்டம்பர் 2021-இல் வெளியிட்டது. இவை ஜனவரி 31, 2022 முதல் அமலுக்கு வந்தன.
இந்த விதிகள் முக்கியமாக விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை மையமாகக் கொண்டவை என்றாலும், விமானப் பராமரிப்புப் பொறியாளர்கள், சான்றளிக்கும் ஊழியர்கள், பயிற்சி விமானிகள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்புச் சார்ந்த பணிகளைச் செய்யும் பிற ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
விமான ஊழியர்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மட்டுமே ஆண்டுக்கு 10% கட்டாய சீரற்ற போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
பிற பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களும் பணியமர்த்தப்படும் போது அல்லது குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பிறகு சோதனைக்கு உட்படுத்தபடுகிறார்கள். வழக்கமான சோதனைகளைத் தவிர, ஆகஸ்ட் 4 அன்று ஏர் இந்தியாவின் ஃபூகெட் - டெல்லி விமானத்தில் நிகழ்ந்தது போன்ற பாதுகாப்புச் சம்பவங்களுக்குப் பிறகும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன.
4. பரிசோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது?
டிஜிசிஏ விதிகளின்படி, ஊழியர்களின் சிறுநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆம்ஃபெட்டமைன்கள், அபின் மற்றும் அதன் வழிப்பொருள்கள், டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (கஞ்சா), கொகைன், பார்பிட்யூரேட்ஸ் மற்றும் பென்சோடியாஸெபைன்கள் ஆகிய 6 வகையான மனநிலையைப் பாதிக்கும் போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனப் பரிசோதிக்கப்படுகிறது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விமானி அல்லது ஊழியரின் சிறுநீர் மாதிரி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி கொள்கலன்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். முதல் கொள்கலனில் உள்ள மாதிரியைக் கொண்டு உடனடி முதற்கட்டச் சோதனை தொடங்கப்படும்.
முதற்கட்டச் சோதனையின் முடிவு 'நான்-நெகடிவ்' (சந்தேகத்திற்குரியது) என வந்தால், அதாவது போதைப்பொருள் இருப்பதைக் காட்டினால், உறுதிப்படுத்தல் சோதனையின் முடிவுகள் வரும் வரை அந்த விமானி உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்படுவார்.
இரண்டாவது கொள்கலனில் உள்ள மாதிரி, அதிநவீனப் பரிசோதனை உபகரணங்களைக் கொண்ட ஆய்வகத்திற்கு உறுதிப்படுத்தல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
இதுகுறித்து சிஏஆர் விதிகள், "மாதிரி 'ஏ' நான்-நெகடிவ் என வந்தால், மாதிரி 'பி' ஆய்வகத்திற்கு உறுதிப்படுத்தல் சோதனைக்காக அனுப்பப்படும்" எனக் கூறுகிறது.
5. விமானிகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் என்ன?
ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, தற்போதைய சம்பவத்தைப் போல சோதனை முடிவு 'பாசிடிவ்' என வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருத்துவப் பொறுப்பாளர், மருத்துவ மறுஆய்வு அதிகாரியை கலந்தாலோசிக்க வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டினால் இந்த முடிவுகள் வந்ததா அல்லது சட்டப்பூர்வமான மருத்துவச் சிகிச்சை அல்லது பிற பொதுவான காரணங்களால் வந்ததா என்பதைத் தீர்மானிப்பதே இதன் நோக்கமாகும். உதாரணமாக, கொடேன் அடங்கிய வலி நிவாரணிகளை உட்கொள்வது, அபின் பரிசோதனையில் 'பாசிடிவ்' என்ற முடிவைத் தரக்கூடும்.
இந்திய விமானிகள் சங்கத்தின் அறிவுறுத்தலின்படி, விமானிகள் சுயமாக மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
புதிய மருந்துகளைத் தொடங்குவதற்கு முன் நிறுவனத்தின் மருத்துவப் பொறுப்பாளரிடம் ஆலோசனை பெற வேண்டும், தாங்கள் எடுத்துக்கொள்ளும் அனைத்து மருந்துகள் பற்றியும் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும், மருந்துச் சீட்டுகள் மற்றும் மருந்து வாங்கிய ரசீதுகளை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என இந்திய விமானிகள் சங்கம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு