You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதுமலையில் 11 நாட்களில் 3 யானைகள் உயிரிழப்பு ஏன்?
- எழுதியவர், சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 11 நாட்களுக்குள் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில், வனப்பகுதிகளில் வறட்சி அதிகரித்து வருவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், உயிரிழந்த மூன்று யானைகளின் இறப்புக்கும் வறட்சி காரணமில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வயது முதிர்வு, காயங்கள் உள்ளிட்ட காரணங்களே முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட குதிரைப்பாறை பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது. இதேபோல் மாவனல்லா அருகே அரலட்டிக்கோட்டை வனப்பகுதியிலும் மற்றொரு பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முன்பாக, ஆகஸ்ட் 8-ஆம் தேதி சீகூர் பகுதியில் மற்றொரு பெண் யானை உயிரிழந்திருந்தது. இந்த 3 யானைகளும் 11 நாட்களுக்குள் இறந்துள்ளன.
முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், மூன்று யானைகளின் உயிரிழப்புக்கும் வறட்சி காரணம் என்ற தகவலை மறுக்கின்றனர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆர். வித்யாதர் பிபிசி தமிழிடம் பேசும்போது, உயிரிழந்த யானைகள் இருந்த இடங்களைச் சுற்றி நீராதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி உயிரிழந்த சுமார் 50 வயதுடைய பெண் யானை, சரிவான பகுதியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்திருக்கலாம் என்றும், வயது முதிர்வும் அதன் உடல்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறினார்.
மாயாறு அருகே உயிரிழந்த மற்றொரு யானை, மாயாறு ஆற்றிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார். அந்தப் பகுதியில் தண்ணீர் இருப்பதால், தண்ணீர் கிடைக்காமல் அந்த யானை உயிரிழந்ததாகக் கருதுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.
மூன்றாவது யானை சுமார் 30 வயதுடையதாகக் கருதப்படுகிறது. அதன் பின்னங்கால்களில் இரண்டு இடங்களில் காயங்கள் காணப்பட்டன. மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார் அவர்.
காயம் காரணமாக நீண்ட தூரம் நடக்க முடியாமல், போதிய உணவை எடுத்துக்கொள்ள முடியாமல் அந்த யானை உயிரிழந்திருக்கலாம் என அவர் கூறினார்.
மூன்று யானைகளில் குறைந்தது இரண்டு யானைகள் நீராதாரங்களுக்கு அருகிலேயே உயிரிழந்துள்ளன என்பதையே வனத்துறை முக்கியமாகச் சுட்டிக்காட்டுகிறது.
மாயாறு பகுதியில் உயிரிழந்த யானை கிடந்த இடத்திலிருந்து ஆறு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாவனல்லா பகுதியில் உயிரிழந்த யானை இருந்த இடத்துக்கு அருகிலும் ஆறு மற்றும் மரவக்கண்டி அணையின் நீர்வழி உள்ளிட்ட நீராதாரங்கள் உள்ளன.
இதனால், "தண்ணீர் இல்லாததால் யானைகள் உயிரிழந்தன" என்ற முடிவுக்கு தற்போதைய நிலையில் வர முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனினும், வறட்சி இல்லை என்று வனத்துறை கூறவில்லை.
மழைப்பொழிவு குறைந்துள்ளதால் வரும் மாதங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
'தண்ணீர் குறைந்து வருகிறது'
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லாததால், சீகூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்து வருகின்றன.
மசினகுடியைச் சேர்ந்த விவசாயி வர்க்கீஸ், தங்களது பகுதியில் சிறிய நீர்நிலைகளில் கூட தண்ணீர் குறைந்து வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தண்ணீர் மற்றும் உணவைத் தேடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
குடிநீர் குழாய்களில் இருக்கும் ஈரப்பதத்தை உணர்ந்து, யானைகள் சில நேரங்களில் அந்தப் பகுதிகளைத் தோண்டி குழாய்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
யானைகள் மட்டுமின்றி புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளும் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
"அக்டோபர், நவம்பரில் வறட்சி தீவிரமடையலாம்"
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, யானைகள் பருவநிலைக்கு ஏற்ப இடம்பெயரும் தன்மை கொண்டவை.
கோடைக் காலத்தில் சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்துவிட்டால், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி யானைகள் நகர்வது வழக்கம். மழை பெய்து மீண்டும் பசுமை திரும்பும்போது அவை பழைய வாழிடங்களுக்குத் திரும்பும்.
ஆனால் வயது முதிர்ந்த அல்லது காயமடைந்த யானைகளால் நீண்ட தூரம் இடம்பெயர முடியாமல் போகலாம். அத்தகைய யானைகள் தண்ணீரும் உணவும் அருகில் கிடைக்கும் பகுதிகளிலேயே தங்கிவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்திருப்பதால், குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் நீராதாரங்கள் வேகமாக வறண்டால் வனவிலங்குகளுக்கு பிரச்னை அதிகரிக்கலாம் என வனத்துறை எச்சரிக்கிறது.
முதுமலை மற்றும் சீகூர் பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள பகுதிகளை வனத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
குறிப்பாக சீகூர் மற்றும் வடகிழக்கு சரிவு பகுதிகளில் உள்ள சுமார் 15 முதல் 20 நீர்நிலைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக துணை இயக்குநர் வித்யாதர் தெரிவித்துள்ளார்.
ஊட்டி பகுதிகளில் உள்ள அணைகளிலிருந்து சீகூர் ஆற்றுக்கு தண்ணீர் வருவதுடன், வறட்சி காலங்களில் கூடுதல் தண்ணீரைத் திறந்துவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
'அசாதாரணம் அல்ல'
மூன்று யானைகள் குறுகிய காலத்தில் உயிரிழந்திருப்பது குறித்து பேசிய வித்யாதர், ஆண்டுக்கு 10 முதல் 15 யானைகள் வரை இயற்கையான காரணங்களால் உயிரிழப்பது வழக்கமானது என்கிறார்.
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 19 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் 18 உயிரிழப்புகள் இயற்கையான காரணங்களுடன் தொடர்புடையவை என்றும் வனத்துறை தரவுகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கரும், வறட்சியால் தற்போது யானைகள் உயிரிழந்ததாகக் கூறுவது தவறானது என பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
உடற்கூராய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பிறகே இறப்புக்கான இறுதி காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
'வறட்சியை மட்டும் காரணமாகக் கூற முடியாது' – வனவிலங்கு நிபுணர்
யானைகளின் உயிரிழப்பை வறட்சியுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வனவிலங்கு உயிரியல் துறைத் தலைவர் முனைவர் பி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
''முதுமலை, மசினகுடி, பந்திப்பூர், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் உணவுத் தேவை பருவநிலைக்கு ஏற்ப மாறுபடும். புல் கிடைக்கும் காலங்களில் யானைகள் புல்வெளிகளை அதிகம் பயன்படுத்துகின்றன. பருவம் மாறும்போது இலை, தழை உள்ளிட்ட வேறு வகையான உணவுகளைத் தேடி சத்தியமங்கலம், கொல்லேகால் போன்ற பகுதிகளுக்கும் அவை நகர்கின்றன.
ஆனால் சென்னா ஸ்பெக்டாபிலிஸ், லான்டானா உள்ளிட்ட அந்நிய களைச்செடிகள் வனப்பகுதிகளில் அதிகரிப்பது யானைகளுக்குக் கிடைக்கும் இயற்கை உணவு வளத்தை பாதிக்கக்கூடும்'' என அவர் கூறுகிறார்.
வனத்துறை மற்றும் சில அமைப்புகள் இணைந்து இந்த அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யானைகள் ஏன் உயிரிழக்கின்றன?
வயது முதிர்ந்த யானைகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், நோய்த்தொற்றுகள் ஏற்படுதல், பற்கள் தேய்ந்து உணவை முறையாக உட்கொள்ள முடியாமல் போதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பு ஏற்படலாம் என ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.
''காட்டில் யானைகளின் ஆயுட்காலம் சுமார் 60 ஆண்டுகள் வரை இருக்கக்கூடும். அதேபோல், ஆண் யானைகளுக்கு இடையே ஆதிக்கம் மற்றும் இணை சேர்வதற்கான போட்டி காரணமாக ஏற்படும் மோதல்களும் சில நேரங்களில் உயிரிழப்பில் முடிவடையலாம். தந்தங்களால் ஏற்படும் காயங்கள் தீவிரமடைந்து உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்'' என அவர் கூறுகிறார்.
ஒரு சில யானைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழப்பது மட்டும் வனத்தின் நிலை மோசமடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாகக் கருத முடியாது என ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
ஒரே காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உயிரிழப்பது, குறிப்பாக ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் பல உயிரிழப்புகள் ஏற்படுவது போன்ற சூழல்கள்தான் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
வறட்சி, உணவு வளம், வாழிடத்தின் தரம், நோய், வயது, காயம் உள்ளிட்ட பல காரணிகளை ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
மூன்று யானைகளும் வறட்சியால் உயிரிழந்துவிட்டன என்ற முடிவுக்கு இப்போதே வர முடியாது என்பதே வனத்துறையின் நிலைப்பாடு.
ஒரு யானை வயது முதிர்வு காரணமாகவும், மற்றொரு யானை காயங்களாலும் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவது யானையின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதன் இறப்புக்கான காரணத்தை உறுதி செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் வித்யாதர் கூறினார்.
எனவே, இறப்புக்கான இறுதி காரணத்தைத் தீர்மானிப்பது உடற்கூராய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள்தான் என அவர் கூறினார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு