You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வீட்டில் பேரீச்சம்பழம் சாப்பிட்ட கொலையாளிகள்' - வங்கதேசத்தில் ஓய்வுபெற்ற இந்து ஆசிரியர் குடும்பத்தில் 4 பேர் கொலை
வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரங்பூர் மாவட்டத்தில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவத்தை நிகழ்த்திய பின்னர், அந்த வீட்டின் மாடியில் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மிகக் குறுகிய காலத்திலேயே இந்தக் கொலை வழக்கின் மர்மத்தைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக ரங்பூர் காவல் ஆணையர் முகமது அப்துல் மபூத் தெரிவித்துள்ளார்.
ஆனால், உயிரிழந்தவரின் சகோதரர், இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்த பிறகு, அந்த வீட்டிலேயே 6 முதல் 7 மணி நேரம் தங்கியிருந்ததாக ஒப்புக்கொண்டனர் என்று ரங்பூர் மாநகர போலீஸ் துப்பறியும் பிரிவு தலைவர் சனாதன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.
"இரு சந்தேக நபர்களையும் காலையில் கைது செய்த பின்னர், அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தினோம். அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் விசாரித்ததன் மூலம் இதை உறுதி செய்துள்ளோம்." என்றார் அவர்.
இறந்த ஆசிரியரின் சகோதரர் கோபிநாத் சக்ரவர்த்தி, இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது புகார் அளித்துள்ளதாக ரங்பூர் மாநகர கோட்வாலி காவல் நிலைய அதிகாரி ஏ.கே.எம். நஸ்முல் குவாடர் தெரிவித்துள்ளார்.
"செய்தி அறிந்ததும் கிராமத்திலிருந்து இங்கு வந்தேன். புகார் அளித்துள்ளேன். போலீஸார் முறையாக விசாரணை நடத்தி, என்ன நடந்தது என்பதை கண்டறிவார்கள் என்று நம்புகிறேன்." என கோபிநாத் சக்ரவர்த்தி பிபிசி வங்க சேவையிடம் கூறினார்.
இந்தக் கொலை குறித்து மேலும் என்ன தெரியவந்துள்ளது?
சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில், ரங்பூர் மாவட்டத்தின் தஷ்பாரா மச்சுவாபாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஓய்வுபெற்ற ரங்பூர் மாவட்டப் பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்களை போலீஸார் மீட்டனர்.
ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
கணபதி சக்ரவர்த்தி, அவரது மனைவி பிரிதிலதா சக்ரவர்த்தி, மகள் ஆகாமி சக்ரவர்த்தி மற்றும் மகன் பிரியம் சக்ரவர்த்தி ஆகியோரின் உடல்களை போலீஸார் வீட்டில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக மீட்டனர்.
பிரிதிலதா சக்ரவர்த்தியின் சகோதரி பூஜா சக்ரவர்த்தி, பிரிதிலதா கடைசியாக வியாழக்கிழமை தன்னிடம் பேசியதாக ரங்பூரில் உள்ள உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதன்பிறகு, அவரது தொலைபேசி சனிக்கிழமை இரவு வரை அணைக்கப்பட்டிருந்ததால், அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றபோது, வீட்டின் பிரதானக் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர் போலீஸார் அங்கு வந்து, கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, உடல்களை ஒன்றன்பின் ஒன்றாக மீட்டனர்.
உயிரிழந்த ஆசிரியரின் மூத்த சகோதரர் கோபிநாத் சக்ரவர்த்தி பிபிசி வங்க சேவையிடம்,"என் சகோதரர் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருக்கு எதிரிகள் யாரும் இல்லை. அப்படியிருக்க, அவர் ஏன் இப்படி கொலை செய்யப்பட்டார்? உண்மையைத் தெரிந்துகொள்ள முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்றார்
எனினும், இந்தச் சம்பவத்தின் மர்மத்தைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக ரங்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய இருவரை ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யார்?
ரங்பூர் காவல் ஆணையர் முகமது அப்துல் மபூத், கணபதி சக்ரவர்த்தி மதிப்புமிக்க நபராக இருந்ததாகவும், அவருக்கு யாருடனும் எந்தத் தகராறும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மிகக் குறுகிய காலத்திலேயே கணபதி சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த முழுமையான விவரங்களை போலீஸார் கண்டறிந்ததாக அவர் கூறினார்.
முக்தா தாஸ் மற்றும் சித்தார்த் தாஸ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் உறவினர்கள் என்றும், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கைவினைஞராகப் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
"இருவர், அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் வழியாக கணபதி சக்ரவர்த்தியின் வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சத்தம் கேட்டு கணபதி மாடிக்குச் சென்றுள்ளார். அவரது கழுத்தில் ஒரு துண்டு இருந்தது.
அவர் இருவரையும் பார்த்துள்ளார். தொடர்ந்து அந்த இருவரும் துண்டால் அவரை கொலை செய்துள்ளனர். அவர் தப்பிக்க முயன்றபோது சத்தம் எழுந்துள்ளது. அந்தச் சத்தத்தைக் கேட்டு பிரிதிலதா சக்ரவர்த்தி மாடிக்கு வர முயன்றுள்ளார். அப்போது, படிக்கட்டில் வைத்து அவரையும் இருவரும் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, பிரிதிலதா சக்ரவர்த்தியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவரது மகள் ஆகாமி அங்கு வந்துள்ளார். அவரையும் இருவரும் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது இளைய சகோதரரான 12 வயது பிரியத்தையும் இருவரும் கொலை செய்துள்ளனர்'' என முகமது அப்துல் மபூத் கூறினார்.
"அதன்பிறகு, அவர்கள் இளைய மகன் பயன்படுத்திய குளியலறைக்குச் சென்று குளித்துள்ளனர். பின்னர், சாப்பாட்டு மேசையில் அமர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டுள்ளனர். அங்கேயே போதைப் பொருளையும் பயன்படுத்தியுள்ளனர். அதற்கான தடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதற்கிடையில், விடிந்த பிறகு தப்பிச் செல்லும் வாய்ப்புக்காக அவர்கள் காத்திருந்துள்ளனர். பொருட்களைக் கொள்ளையடித்த பின்னர், வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்து சென்றுள்ளனர்," என்று ரங்பூர் காவல் ஆணையர் முகமது அப்துல் மபூத் தெரிவித்தார்.
வீட்டை விட்டு வெளியேறும்போது, இருவரும் வேண்டுமென்றே வீட்டுக்குள் இருந்த பொருட்களை கலைத்ததாகவும் அவர் கூறினார். மேலும், இரண்டு செல்போன்களை சோப்பு கலந்த தண்ணீர் இருந்த வாளிக்குள் வீசியுள்ளனர்.
"சில தங்க நகைகளை எடுத்துச் சென்று, அவற்றை கோவிலுக்குப் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.
நான்கு பேரைக் கொலை செய்திருந்தபோதிலும், அவர்கள் எதுவும் நடக்காதது போல இயல்பாக நடந்துகொண்டதாக காவல் ஆணையர் கூறினார். கொலைக்குப் பிறகு, வீட்டின் ஃப்ரிட்ஜில் இருந்த வெள்ளரிக்காய்களை எடுத்துச் சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
போலீஸாரின் இந்தக் கூற்றுகள் குறித்து உயிரிழந்த கணபதி சக்ரவர்த்தியின் சகோதரர் கோபிநாத் சக்ரவர்த்தியிடம் பிபிசி வங்க சேவை கேட்டபோது, போலீஸார் முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு