You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலையில் 6,500 அடி உயரத்தில் 7 வயது மகனை தனியே விட்டுச் சென்ற தந்தை - என்ன நடந்தது?
- எழுதியவர், டேன் சேல்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஜப்பானின் உயந்த மலையான ஃபூஜியில் தனது குழந்தையை தனியாக விட்டுவிட்டு மலையேற்றத்தைத் தொடர்ந்த தந்தையை காவல்துறையினர் கண்டித்துள்ளனர். அந்தச் சிறுவன் ஒரு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டியுடன் தனியாக இருந்துள்ளார்.
மலையேற்றத்திற்குப் பிரபலமான ஃபூஜி மலை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகவும் இருந்து வருகிறது.
அந்த மலையில் 6,500 அடி உயரத்தில் ஏழு வயதான சிறுவன் பனி மற்றும் மழை பொழியும் சூழலில் ஒரு பலகை மீது அமர்ந்திருந்த நிலையில் காணப்பட்டார்.
சிறுவன் சோர்வாக உள்ளதாக தெரிவித்ததால், 48 வயதான அவருடைய தந்தை அவரை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு மூத்த மகனுடன் மலையேற்றத்தைத் தொடர்ந்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அந்தச் சிறுவனை மலையேற்றத்தின் ஆறாவது நிலையம் அருகே அவரைக் கண்டுபிடித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கிருந்து மூன்று மணி நேர பயண தூரத்தில் ஏழாவது மற்றும் எட்டாவது நிலையத்திற்கு இடையே அவருடைய தந்தை கண்டுபிடிக்கப்பட்டார்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை 07:30 மணிக்கு சிறுவன் தனியாக இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவருடைய தந்தை திரும்பியபோது அதிகாரிகள் அவரைக் கடுமையாக கண்டித்து சிறுவனை அவருடன் சேர்த்து வைத்தனர். எட்டு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு அந்தச் சிறுவன் "சோர்வுடன் இருப்பதாக" தெரிவித்தார்.
"மலையேற்றத்தை கைவிடும் சூழல் வந்தாலும் குழந்தையை விட்டுவிட்டு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது," என அதிகாரி ஒருவர் தந்தையிடம் கூறியதாக ஜப்பான் டுடே தெரிவிக்கிறது. இந்த "அவசர" முடிவுக்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையின் ஐந்தாவது நிலையத்திலிருந்து தொடங்கும் ஃபூஜிநோமியா பாதையில் அவர்கள் சென்றுள்ளனர். இந்த இடத்தை பொதுப் போக்குவரத்து மூலம் அடைய முடியும்.
அங்கிருந்து மலை உச்சியை அடைய ஐந்து மணி நேரமும் கீழே இறங்குவதற்கு மூன்று மணி நேரமும் ஆகும் என மலையேற்ற வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
12,389 அடி உயர ஃபூஜி மலையில் சமீப ஆண்டுகளில் மலையேற்றத்தின் போது பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜூலை மாதத்தில் மலையேற முயன்ற 99 வயது பெண் கீழே விழுந்தார். இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வ மலையேற்ற பருவம் அல்லாத காலத்தில் சென்ற 27 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நான்கு நாட்களில் இரண்டு முறை மீட்கப்பட்டார். தொலைந்து போன கைப்பேசியைத் தேடுவதற்காக அவர் இரண்டாவது முறை சென்றிருந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஃபூஜி மலைக்கு 2013-இல் உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
டேட் மலை மற்றும் ஹாகு மலையுடன் இந்த மலையும் "புனித மலைகள்" என்று அறியப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் மலையேறுகிறார்கள். கூட்ட நெரிசலைத் தவிர்க்க சில வழித்தடங்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு