ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை: பெண்கள் பற்றி மனுஸ்மிருதி கூறுவது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மகாராஷ்டிராவின் புனேவில் சனிக்கிழமை நடைபெற்ற "ஸ்கூல்ஸ் எக்கோஸ்' நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மனுஸ்மிருதி பற்றி குறிப்பிட்டார். இதனை பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது.

மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி உள்ள பத்தி ஒன்றை அவமானகரமானது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, "பெண்கள் யாருக்கும் அடிபணிந்தவர்களாக இருக்க முடியாது." என்றார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, "இதில் ஒரு பிரச்னை உள்ளது, அது மிகப்பெரிய பிரச்னை. நான் எப்போது ஆண்களிடம் பேசினாலும் பெண்கள் மகள், மனைவி அல்லது தாய் என்கிற மூன்று கட்டங்களிலே வைக்கப்படுகின்றனர்."

ஒரு தாயாக, மனைவியாக மற்றும் மகளாகப் பார்க்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறும் ராகுல் காந்தி, ஆனால் அது மட்டுமே ஒரே அடையாளமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் தொழில்முறை வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், படைப்பாளிகள், தொழில்முனைவோராக உள்ளனர். இருந்தபோதிலும் ஆண்கள் இந்த மூன்று அடையாளங்களை மட்டுமே கொடுக்கின்றனர். இந்த மூன்று அடையாளங்களுமே ஆண்களுடன் தொடர்புடையவை. அவை தாய், மனைவி அல்லது மகள் என எதுவாக இருந்தாலும் சரி." என்றார்.

மனுஸ்மிருதியை மேற்கோள் காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, "அது சிறுவயதில் பெண்கள் தந்தைக்கு அடிபணிந்தவராகவும், இளமைப் பருவத்தில் கணவருக்கு அடிபணிந்தவராகவும், கணவன் இல்லாதபோது மகன்களுக்கு அடிபணிந்தவராகவும் இருக்க வேண்டும் என்கிறது. ஒரு பெண் எப்போதுமே சுதந்திரமாக இருக்க முடியாது." எனத் தெரிவித்தார்.

இது நேரடியாக மனுஸ்மிருதியில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறிய ராகுல் காந்தி இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கவே கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில் மனுஸ்மிருதியில் பெண்கள் பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தொடர்பான கேள்விகள் எழுகின்றன.

பெண்கள் பற்றி மனுஸ்மிருதி கூறுவது என்ன?

மனுஸ்மிருதியின் ஐந்தாவது அத்தியாயத்தில் 148வது ஸ்லோகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், "ஒரு பெண் எப்போதும் அவளது தந்தையின் பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு அவரின் பாதுகாவலராக கணவர் இருக்க வேண்டும். அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு தனது பிள்ளைகளின் கருணையில் வாழ வேண்டும். எந்தச் சூழலிலும் ஒரு பெண் சுதந்திரமாக இருக்கக்கூடாது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுஸ்மிருதியில் ஆண்களின் நலன் ஏற்படும்போதே பெண்களின் நலன் ஏற்படும் என எழுதப்பட்டுள்ளதாக பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் வரலாற்று பேராசிரியராகப் பணியாற்றிய ராஜீவ் லோச்சன் கூறுகிறார்.

"பிராமணர்கள் எந்தச் சூழலிலும் மதிக்கப்பட வேண்டும் என இந்தப் புத்தகம் கூறுகிறது. ஆண்களின் நலன் சாத்தியமாகும்போது மட்டுமே பெண்களின் நலன் சாத்தியமாகும். ஒரு பெண்ணுக்கு எந்த மத உரிமைகளும் கிடையாது. தனது கணவருக்கு பணி செய்வதன் மூலம் அவர் சொர்க்கத்தை அடைய முடியும். இவை அனைத்தும் மனுஸ்மிருதியில் எழுதப்பட்டுள்ளது." என்றார் அவர்.

அவரது கூற்றுப்படி, பெண்களைப் பற்றியும் அவர்கள் எப்படி ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்பதையும் விவரிக்கும் சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.

தொடர்ந்து பேசிய அவர், "ஒருவரை இரண்டாம் நிலை ஆனவர் என்று அழைப்பது வேறு. ஆனால் அவர் இரண்டாம் நிலை ஆனவராக நிஜமாக இருப்பது வேறு. எனவே வீட்டின் ஒட்டுமொத்த கௌரவமும் மனைவியிடம் தான் உள்ளது என ஆண்கள் எச்சரிக்கப்பட்டனர்." என்றார்.

மனுஸ்மிருதி என்றால் என்ன? அதில் என்ன உள்ளது?

மனுஸ்மிருதிதியின் அர்த்தத்தை விளக்கிய வரலாற்றாசிரியர் நராஹர் குருந்த்கர், ஸ்மிருதி என்றால் மத நூல் என்று அர்த்தம் எனத் தெரிவித்தார்.

"இந்தச் சூழலில் மனுவால் எழுதப்பட்ட மத எழுத்துகள் மனுஸ்மிருதி என்று அழைக்கப்படுகிறது. மனுஸ்மிருதியில் மொத்தம் 2684 ஸ்லோகங்கள் கொண்ட 12 அத்தியாயங்கள் உள்ளன. சில பதிப்புகளில் 2964 ஸ்லோகங்கள் உள்ளன." என்றார்.

மனுஸ்மிருதி தொடர்பாக குருந்த்கர் தற்போது வரை மூன்று உரைகளை நிகழ்த்தியுள்ளார். இந்த மூன்று உரைகளும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன, அது மனுஸ்மிருதிக்கு உள் இருக்கும் உலகத்தை வெளிப்படுத்துகிறது.

மனுஸ்மிருதி பற்றிய தனது பார்வையை வெளிப்படுத்திய குருந்த்கர், "மனுஸ்மிருதியை எரிப்பதில் நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன்." என்று தெரிவித்தார்.

மனுஸ்மிருதி தொடர்பாக மேலும் விளக்கிப் பேசிய அவர், "இந்தப் புத்தகத்தைத் தொகுப்பது இயேசு பிறப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. முதல் அத்தியாயம் இயற்கையின் படைப்பு, நான்கு காலங்கள், நான்கு வர்ணங்கள் அவர்களின் தொழில்கள் மற்றும் பிராமணர்களின் மகத்துவம் போன்றவற்றை பேசுகிறது."

"இரண்டாவது அத்தியாயம் பிரம்மச்சாரியம் மற்றும் ஒருவரின் குருவுக்கான சேவை பற்றியது. மூன்றாவது அத்தியாயம் திருமண வகைகள், திருமண சடங்குகள் மற்றும் ஷ்ரத்தா, அதாவது மூதாதையர்களை நினைவுகூர்வது பற்றி குறிப்பிடுகிறது. நான்காவது அத்தியாயம் குடும்பத் தலைவரின் மதம் தொடர்பான கடமைகள், உண்ணத்தக்க மற்றும் உண்ணத்தகாதவை குறித்த விதிகள் மற்றும் 21 வகையான நரகங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது."

"ஐந்தாவது அத்தியாயம் பெண்களின் கடமைகள், தூய்மை மற்றும் தூய்மையின்மை ஆகியவை பற்றி விவரிக்கிறது. ஆறாவது அத்தியாயம் ஒரு சன்னியாசியின் கடமை பற்றியும் ஏழாவது அத்தியாயம் ராஜாவின் கடமை பற்றியும் குறிப்பிடுகிறது. எட்டாவது அத்தியாயம் குற்றம், நீதி, வாக்குறுதிகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் பற்றி பேசுகிறது."

"ஒன்பதாவது அத்தியாயம் பூர்வீகச் சொத்து பற்றியும் பத்தாவது அத்தியாயம் சாதிகள் கலப்பது பற்றியும், பதினோறாவது அத்தியாயம் பாவச் செயல்கள் பற்றியும் பன்னிரெண்டாவது அத்தியாயம் மூன்று நற்பண்புகள் மற்றும் வேதங்களின் புகழ்ச்சி பற்றி பேசுகிறது. இதுவே மனுஸ்மிருதி பற்றிய பொதுவான கட்டமைப்பு. மனுஸ்மிருதி உரிமைகள், குற்றங்கள், அறிக்கைகள் மற்றும் நீதி பற்றி பேசுகிறது." என்றார்.

மனுஸ்மிருதியை எரித்த அம்பேத்கர்

1927-ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று மகாராஷ்டிராவின் கொலாபா மாவட்டத்தில் (தற்போது ராய்கட்) உள்ள மகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் மனுஸ்மிருதியை பொதுவெளியில் எரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கர் தனது 'இந்து மதத்தின் தத்துவம்' (Philosophy of Hinduism) என்ற நூலில், "மனு நான்கு வர்ண முறையை ஆதரித்தார்" என்று எழுதியுள்ளார்.

மேலும் அவர், "இந்த நான்கு வர்ணங்களையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியதன் மூலம், சாதி அமைப்பிற்கான அடித்தளத்தை மனு அமைத்தார். இருப்பினும், மனுவே சாதி அமைப்பை உருவாக்கினார் என்று கூற முடியாது. ஆனால், இந்த அமைப்பிற்கான விதைகளை அவர் நிச்சயமாகத் தூவினார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு